”அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
அன்ன நடை, சின்ன இடை எல்லாம் மறந்தாரா”
என்று ஒரு பாடல் “பணக்காரக் குடும்பம்” படத்தில் சரோஜா தேவி பாடுவது போல வரும். இந்த மாதிரி பல படங்களில் ஒரு பெண்ணின் நடையை அன்னத்தின் நடையோடும், வீரமான ஒரு ஆண்மகனின் நடையை, “சிங்கம்போல நடந்து வரான் பாரு” என சிங்கத்தின் நடையோடும் ஒப்பிட்டு பல கவிஞர்கள் பாடல்கள் எழுதி உள்ளனர்.
ஆனா இந்த ஃபேஷன் உலகம் என்னடான்னா நவநாகரிக யுவதிகளையும், இளைஞர்களையும் பின்னணியில் இசை ஒலிக்க, வெட்டி வெட்டி ஒரு நடையை நடப்பதற்கு ”பூனை நடை” ன்னு பேர் வச்சிருக்காங்க. அது ஏன்னு தெரியலை… தெரிஞ்சவங்க சொல்லுங்க.
இந்த பூனை நடை மோகம், இப்போது பள்ளிக்கூடங்களையும் விட்டு வைக்கவில்லை. இந்த வருடம் என் மகள் படிக்கும் பள்ளியில் டிசம்பர் 12, ஞாயிறு அன்று “வைப்ரேஷன்ஸ் 2010” என்ற நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் இந்த பூனை நடையும் இருந்தது. எல்.கே.ஜி முதல் பன்னிராண்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளிக் குழந்தைகள் மேடையில் பூனை நடை நடக்கிறார்கள். பங்கு பெற விரும்பும் குழந்தைகளிடமிருந்து கட்டணமாய் ரூபாய் 50 பள்ளியிலிருந்து வசூலிக்கிறார்கள். இதைத் தவிர, உடை வாடகை மற்றும் அலங்காரச் செலவும் குழந்தைகளுடையது.
பூனை நடை நடக்க வைப்பதாய்ச் சொல்லி பள்ளி நிர்வாகம் காசு சம்பாதிக்கும் வசூல் ராஜாக்களாக இருக்கிறது. தில்லியில் உள்ள பெரும்பாலான பள்ளி நிர்வாகிகள், வருடத்திற்கு இது போல இரண்டு மூன்று விழாவினை ஏற்பாடு செய்து, அதற்கான ரசீது புத்தகத்தினை ஒவ்வொரு குழந்தையிடமும் கொடுத்து விடுகிறார்கள். ஒரு புத்தகத்தில் உள்ள மொத்த ரசீதுகளின் மதிப்பு ரூபாய் 100. படிக்கும் அத்தனை குழந்தைகளிடமும் கொடுத்து வசூலிக்கச் சொல்கிறார்கள். நம் குழந்தையை எங்கே இதைக் கொண்டு போய் வசூலிக்க வைக்கிறது? அதனால், நாமே 100 ரூபாய் கொடுத்து அனுப்பிட வேண்டியது தான். இது போன்ற விழாக்கள் மூலம் பள்ளி நிர்வாகம் சம்பாதிக்கும் பணம் கணக்கிலே வரப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
தேசப்பிதா மகாத்மா காந்தி நிறைய பேருக்கு ரோல் மாடல். ஆனால் அவரைக்கூட ஒரு கற்பனாவாதி விட்டு வைக்கவில்லை, “FALL WINTER COLLECTION” மற்றும் “FALL SUMMER COLLECTION’-க்கு மாடலாக்கி விட்டார். கீழே பாருங்க அவரை.