திங்கள், 29 மார்ச், 2010

தலை நகரிலிருந்து – பகுதி 7:

சில நாட்களே பாக்கி இருக்கிறது மார்ச் மாதம் முடிய . அதற்குள்ளேயே தகிக்கிறது வெயில் தில்லியில். “ஏப்ரல் மேயில பசுமையே இல்லை காய்ஞ்சு போச்சுடா!” என்று இப்போதே பாடத்தோன்றுகிறது. இந்த கடும் வெயிலிலும் தில்லி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை என்னவோ குறைவதில்லை. சரி இந்த வார விஷயங்களைப் பார்க்கலாம்.



பார்க்க வேண்டிய ஒரு இடம்: Garden of Five Senses: தில்லி சுற்றுலா மற்றும் வளர்ச்சிக்கழகத்தினால் ஃபிப்ரவரி 2003-ஆம் வருடம் திறக்கப்பட்ட ஒரு அருமையான இடம். ஏறாத்தாழ 20.5 ஏக்கர் பரப்பளவில் தில்லியின் மெஹ்ரோலி பகுதியில் உள்ள இப்பூங்கா நடை பாதைகளுடன் அழகான பகுதிகளாக பிரிக்கப்பட்டு நறுமணம் கமழும் பூச்செடிகள், மரங்கள் நடப்பட்டு, ஆங்காங்கே வண்ணமயமான நீருற்றுகள் அமைக்கப்பட்டு உள்ளது. எவர் சில்வரால் செய்யப்பட்ட பிம்பங்கள் பாறைகளுக்கு நடுவே இருந்து எட்டிப் பார்க்கின்றன. அன்பர்கள் ஐம்புலன்களினாலும் மகிழும் விதமாக இது அமைக்கப்பட்டுள்ளதுதான் பெயர்க் காரணம்! புகழ்மிகு குதுப்மினாரின் மிக அருகில் தினமும் காலை 08.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை திறந்து இருக்கும் இந்தப் பூங்காவுக்கு நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறுவர் முதியோர்களுக்கு 10 ரூபாயும்.. காண அரிதான ருத்ராக்ஷம், கடம்பம், கல்பவிருக்ஷம், கற்பூரம் போன்ற மரங்களை கண்டு மகிழவே ஒரு முறை இப்பூங்காவிற்கு சென்று வரலாம்!



சாப்பிட வாங்க: ”சுஸ்கி” [Chuski]: தில்லியில வெய்யில் அதிகமாயிட்டே வரவர அதற்குத் தகுந்த பலவித உணவு வகைகளும் கிடைக்க ஆரம்பிச்சாச்சு! “சுஸ்கி” அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு வித ஐஸ் இப்ப நிறைய கிடைக்கும். “Dry Ice”- ல கலர் கலரா ”சிரப்” மேலே ஊற்றி கொடுப்பாங்க டி.வி. விளம்பரத்தில் காட்டற மாதிரி. அதை உறிஞ்சி உறிஞ்சி ஆனந்தமா சாப்பிடறாங்க எல்லாரும்! ”டிரை ஐஸ் சுத்தமான தண்ணீரால செஞ்சதா இல்லையா?” என்கிற சந்தேகம் சுத்தமா இல்லாம ரசிச்சு சாப்பிடறாங்க இந்த ஊருல! ”சிரப்”போட சுவை குறைந்தால் திரும்ப அந்த ஐஸ் குச்சியை விக்கிறவரிடம் நீட்டினால் திரும்பவும் கொஞ்சம் சிரப் மேலே கொட்டி கொடுத்த உடனே திரும்ப அதை ரசிச்சு சுவைக்கிறதை பார்க்கும்போது நமக்கும் ஆசை வராம இருக்காது!

இந்த வார ஹிந்தி சொல்: இந்த ஊர்ல கரும்பை “கன்னா” [Ghannaa] என்று அழைக்கிறார்கள். இப்போ எங்க பார்த்தாலும் கரும்பு ரசம் கிடைக்கும். நாலைந்து கரும்பைப்பிழிந்து சில ஐஸ் கட்டிகளைப்போட்டு மேலே ஒரு தேக்கரண்டி கறுப்பு உப்பைப்போட்டு ஒரு டம்ளர் ”கன்னா ரஸ்” குடிச்சா குளிர்ச்சியோ குளிர்ச்சி!

இன்னும் வரும்….

வெள்ளி, 19 மார்ச், 2010

தலை நகரிலிருந்து – பகுதி 6

இது ஆரவாரமான ஆறாவது வாரம்ம்ம்ம்ம்…. தில்லியில் மரங்கள், செடிகள் எல்லாம் பூத்துக்குலுங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற இடம் பற்றித்தான் இப்போ பார்க்கப் போகிறோம்.



பார்க்க வேண்டிய ஒரு இடம்: முகல் கார்டன்ஸ்: குடியரசுத்தலைவர் மாளிகையினுள் உள்ள ஒரு அழகான தோட்டம்தான் அது. வருடத்தில் சுமார் ஒரு மாதம் தான் அதைக்காண அனுமதிக்கப்படுகிறார்கள் பொது மக்கள். இந்த வருடம் பிப்ரவரி 13 முதல் மார்ச் 11 வரை பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டிருந்த இந்த தோட்டத்தில் பலவிதமான மலர்களைப் பார்த்து ரசிக்கலாம். கூடுதல் ஏற்பாடாக மார்ச் 12 அன்று உடல் ஊனமுற்றவர்களுக்காகவும், 13 அன்று இராணுவ வீரர்களுக்கும், 14-ஆம் தேதி உழவர்களுக்காகவும் திறந்து இருந்தது. 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தோட்டம் முதலில் செவ்வக வடிவில் ஒரு தோட்டம், அப்பால் வட்ட வடிவில் ஒரு தோட்டம், பிறகு நீளமான [பர்தா] தோட்டம் என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. ரோஜா, அல்லி, டேலியா, போன்ற பலவிதமான பூக்களை பலப்பல வண்ணங்களில் கண்டு, கவலை மறக்கலாம். பூக்களைத் தவிர மான்கள், முயல்கள் போன்ற விலங்குகளுடைய தரிசனமும் கிடைக்கும். இந்த வருட சிறப்பம்சம் “கேக்டஸ் மற்றும் போன்சாய் மரங்கள். ஆக, கண்களுக்குக் குளிர்ச்சியூட்டும் மனதுக்கு மலர்ச்சியூட்டும் இந்தப்பூங்காவை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும்.



சாப்பிட வாங்க:சிங்காடா” [Singhada] அப்படின்னு ஒண்ணு இங்க கிடைக்குதுங்க. பச்சைக்கலர்ல இருக்குற மேல்புற தோலை உரிச்சுப் பார்த்தீங்கன்னா உள்ளே வெள்ளையாக பருப்பு போன்ற ஒன்று இருக்கும். அதை பச்சையாகவே சாப்பிடலாம். இல்லை என்றால் வேக வைத்தோ, ஊறுகாய் போட்டோ சாப்பிடுகிறார்கள். குளம் குட்டைகளில் தண்ணீருக்கு அடியில் உள்ள மண்ணில் வளர்கிற இதை கிலோ-கிலோவா வாங்கி சாப்பிடறாங்க இந்த ஊர்ல! பிழைச்சீங்கடா! என்று தப்பித்து வந்தோம்...

இந்த வார ஹிந்தி சொல்: பேரிக்காயை இந்த ஊர்ல “நாஸ்பதி”ன்னு சொல்றாங்க. கல்யாணம் ஆன புதுசுல ஹிந்தி தெரியாத என்னோட மனைவியை மார்கெட் அழைத்துச்சென்ற போது ஒரு கடைக்காரர் “நாஸ்பதி நாஸ்பதி – கிலோ தஸ் ருப்யா” என்று கத்திக்கொண்டு இருந்தார். அதைக்கேட்ட என் மனைவி ”என்னங்க இது, ராஷ்டிரபதியை கூவிக் கூவி வித்துட்டு இருக்கான் இவன்?” என்று கேட்டார் – அவர் காதுல “நாஸ்பதி” – ராஷ்டிரபதியா கேட்டு இருக்கு!

இன்னும் வரும்…

திங்கள், 15 மார்ச், 2010

சிக்கனம் சின்(னு)னி

”சிக்கனம் சின்னு”ன்னு ஒரு ஆசாமிக்கு உருவம் கொடுத்து அவரை வைத்து நிறைய சிரிப்பு வெடிகள் பல வருடங்கள் ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்தது. அதற்கு "மதன்" வரையும் படங்களைப் பார்த்தாலே சிரிப்பு வரும்.

அவரை ஞாபகப் படுத்துவது போலவே பக்கத்து வீட்டுல ஒரு குடும்பம். கணவன் – மனைவி இருவரும் ரொம்பவே சிக்கனம். அவர்களுக்கு பைசாவிற்கு ஒன்றும் குறைவில்லை. எனினும் "எனக்கு எதுக்கு வேஸ்டா இரண்டு கைலி? ஆஃபீஸ் போகும்போது பேண்ட் போட்டுட்டுதானே போகிறேன்!" என்று வாங்கியிருந்த ஒரே ஒரு கைலியைத்தான் கட்டுவார். "இவரு ஒண்ணும் இதை நாள் பூரா கட்டறது இல்லையே, வீட்டுல இருக்குற நேரத்தில் தானே கட்டறாரு! என்பதால் வாரத்துல ஒரு நாள் தான் அதை அவரது மனைவி போனால் போகிறதென்று தோய்ப்பார்.

அவங்க வீட்டுல தினம் தினம் எதாவது ஒரு கூத்து அரங்கேறிக் கொண்டிருக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை அவர்களது வீட்டிலிருந்து “அத்தான்!”ன்னு அப்படி ஒரு பயங்கர அலறல் சத்தம். என்னவோ ஏதோ என்று பதறிய அத்தான் பாதி குளியலில் சோப் போட்ட உடம்பிலேயே கைலிய சொருகிக்கிட்டு வெளிலே ஓடி வந்து பார்த்தா, ஒரு கையில துடப்பம், இன்னொரு கையைத் தூக்கிய நிலையில சிலை மாதிரி நின்னுட்டு இருக்காங்க அம்மிணி. நாங்களும் சத்தம் கேட்டு அவங்க வீட்டுக்கு அலறியடிச்சு ஓடினோம். அதிர்ச்சியில் இருந்த அவங்கள ரெண்டு தட்டு தட்டி, “என்ன புள்ள! என்ன ஆச்சு?” என்று அத்தான் கேட்க, அதற்கு அம்மிணி சொன்ன பதில்தான் சிக்கனத்தின் ஹைட்!

“வீடு பெருக்கிட்டு இருந்தேனா, கீழே ஒரு ஆணி கிடந்துச்சு. சரி பத்திரமா எடுத்து வைப்போமே என்று அதை இந்த Power Point-ல சொருகினேன்”--னு அத்தானிடம் இன்னமும் பீதியிலிருந்து விடுபடாமலே சொன்னாங்க. அவங்க 15-ஆம்பியர் பவர் பாயிண்ட்டில் ஆணியை வைக்கப் போக அது கொடுத்த ஷாக்கில் அம்மணி அப்படியே சிலையா நின்னுட்டாங்க! இப்ப கூட நாங்களெல்லாம் ஆணி வேணும்னா அம்மிணிகிட்டத்தான் போய் கேக்கறோம், இல்லைன்னா அவங்க வீட்டு பவர் பாயிண்ட்ல தேடறோம்!.

இன்னொரு நாள் அவங்க வீட்டுல உட்கார்ந்து எல்லோரும் பேசிக்கிட்டுருந்தோம். அப்ப அம்மிணியிடம் அத்தான் “நான் வெளியிலே போயிட்டு வரேன், தலை வார சீப்பு வாங்கணும், இப்போ இருக்கறதுல நிறைய பல்லு போயிடுச்சுன்னு!” சொன்னாரு. அதுக்கு அந்த அம்மிணி சொன்னாங்க – “எதுக்குங்க, உங்க தலைல இருக்கற முடியை எண்ணினா பத்தோ பதினைஞ்சோதான் வரும். அதுக்கு நாலு பல்லு இருக்கற சீப்பு போதாதா?--ன்னு" ஒரு போடு போட்டாங்க. நீங்களே சொல்லுங்க சிக்கனம் சின்னி கேட்டதில் என்னங்க தப்பு?

வியாழன், 11 மார்ச், 2010

தில்லியில் உள்ள பள்ளிகள்



தில்லியில் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு தாய் தந்தையரும் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. சென்ற வருடம் எனது குழந்தையை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்கு வீட்டின் அருகில் உள்ள பள்ளிகளில் சிறந்தது என நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்ட பள்ளிகளுள், நான்கு பள்ளிகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தேன். ஒவ்வொரு விண்ணப்ப படிவமும் ரூபாய் 100 முதல் 150 வரை. ஏதோ வேலைக்கு விண்ணப்பிப்பது போல் பலவிதமான படிவங்களை நிரப்பி, எல்லோருடைய புகைப்படங்களையும் ஒட்டி, அதனுடன் தாய், தந்தையரின் படிப்புக்கான சான்றிதழ், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் என்று பல சான்றிதழ்களை கொடுக்க வேண்டி இருக்கிறது.

தில்லி அரசு ஒவ்வொரு வருடமும் பள்ளி சேர தகுந்த வயது பற்றி தனது புதுப்புது அறிவிப்புகளால் மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறது. ஒரு வருடம் ”3+”-ல் எல்.கே.ஜி என்று ஒரு அறிவிப்பு. அடுத்த வருடமே "இல்லை, இல்லை, ”4+”-ல் தான் சேர்க்க வேண்டும்!" என அடுத்த அறிவிப்பு. பள்ளிகளில் எல்லாவற்றிற்கும் ஏதோ மதிப்பெண்கள் வைத்திருக்கிறார்கள். அங்கே சேருவதற்கு முன்பே 100க்கு எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதைப் பொருத்துதான் உங்களது குழந்தையை அந்த பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். அப்பா-அம்மா படிப்புத் தகுதிக்கு இவ்வளவு மதிப்பெண்கள், வீட்டுக்கும் பள்ளிக்கும் உள்ள தூரத்திற்குத் தகுந்த சில மதிப்பெண்கள், அதே பள்ளியில் உங்களது மற்ற குழந்தைகள் படித்தால் அதற்காக தனியாக மதிப்பெண்கள், குழந்தை பெண்ணாக இருந்தால் கூடுதல் மதிப்பெண்கள், இது போன்று பல்வேறு தகுதிகளைப் பொருத்து மதிப்பிடுகிறார்கள். எத்தனை முறை முயன்றாலும் இந்த மதிப்பெண்களை எப்படி கணக்கிடுகிறார்கள் என்பது என்னுடைய சிற்றறிவுக்கு இன்னமும் புரியவில்லை!

உங்கள் குழந்தையை அவர்களது பள்ளியில் சேர்த்துக்கொள்கிறேன் என்று அவர்கள் திருவாய் மலர்ந்த பிறகு பலவிதமான தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல் ஆகியவை உங்களுக்கு வரும். தாய் தந்தையருக்கு தனித்தனியே சில வகுப்புகள், செய்ய வேண்டிய பணிகள் பற்றிய விவரங்களை உங்களுக்குத் தருவார்கள். அதில் மிக மிக முக்கியமானது நீங்கள் எத்தனை பணம் தர வேண்டும் என்பதே! Admission Fee, Caution Money, Annual Charges, Developmental Charges [யாரோட Development?], மூன்று மாத Tuition Fees [மாதம் ஒன்றுக்கு ரூபாய் 1800] எல்லாம் சேர்த்து 15000-20000 வரை வாங்கி விடுவார்கள். இது தவிர, புத்தகங்கள், ஸ்டேஷனரி எல்லாம் சேர்த்து ஒராயிரம். வெயில் காலத்திற்கும், குளிர் காலத்திற்கும் தனித்தனி உடைகள், காலணிகள் இதெல்லாம் ஒரு நாலாயிரம் வரை ஆகும். பள்ளிக்கு அனுப்ப போக்குவரத்து செலவாக, பள்ளியிலிருந்து உங்கள் வீடு இருக்கும் தொலைவை பொருத்து, மாதம் ஒன்றுக்கு ரூபாய் 500 முதல் 800 வரை வாங்குகிறார்கள். இது தவிர தினசரி வீட்டுப்பாடம், மற்ற செய்திகள் எஸ்.எம்.எஸ்./மெயில் மூலம் அனுப்ப மாதா மாதம் நாம் அவர்களுக்கு அழ வேண்டிய தண்டம் ரூ.150/-.

இது தவிர அவ்வப்போது வரும் பண்டிகைகளைப் பொருத்து உங்கள் குழந்தையை ராதையாகவோ, ராமனாகவோ, கிறிஸ்துமஸ் தாத்தாவாகவோ வேடம் தரித்து அனுப்ப வேண்டும். அந்தந்த உடைகளை அவர்கள் சொல்லும் கடையிலேயே வாடகைக்கு எடுக்க/வாங்க வேண்டும் என்ற பணிவான வேண்டுகோள் வேறு [உங்களுக்குத் தெரிந்த கடையில் வாங்கினால் அவர்களுக்கு வரவேண்டிய கமிஷன் அம்பேல் ஆகிவிடுமே என்ற நல்லெண்ணம்தான்!]. ஹோலி என்றால் கலர் பொடி, இனிப்புகள்; ”ரக்‌ஷா பந்தன்” என்றால் ராக்கி, இனிப்புகள்; வசந்த பஞ்சமி என்றால் மஞ்சள் உடை அணிந்து, மஞ்சள் நிற உணவு, சுதந்திர தினம்/குடியரசு தினம் என்றால் மூவர்ண உணவு கொடுத்து அனுப்பவும் என்றெல்லாம் வகைவகையான விஷயங்களை நாட்குறிப்பில் எழுதி அனுப்பி விடுவார்கள்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக நேற்று எழுதி அனுப்பிய குறிப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது! - “Please send Rs.150/- for the Graduation Day Ceremony”. குழந்தை எல்.கே.ஜியில் இருந்து யு.கே.ஜி-க்கு செல்வதை கொண்டாட இந்த Graduation Day! இந்த விழாவில் எனது மகளை ஒரு ”லக்னோயி” உடையில் நன்றாக அலங்கரித்து அனுப்ப வேண்டுமாம். என்ன செய்யப் போகிறார்கள் என்பதை கேட்டு நான் ஆடித்தான் போனேன். அவளுடன் பயிலும் ஒரு பையனுடன் “கேட் வாக்” செய்ய போகிறாள். வகுப்பு ஆசிரியரிடம் கேட்ட போது " அவளது வகுப்பில் பயிலும் எல்லா மாணவ மாணவியரும் ஜோடி-ஜோடியாக, அவரவர் பார்ட்னர்களுடன் கேட் வாக் செல்லப் போகிறார்கள் " என்று சொன்னார்!. பள்ளியின் பெயர் “Vivekanand Public School”. "அரே பக்வான், என்னையும் விவேகானந்தரையும் காப்பாத்துப்பா ப்ளீஸ்!" என்று மனசுக்குள் பிரார்த்தித்துக்கொண்டே ஸ்கூலை விட்டு வெளியே ஓடினேன்.

திங்கள், 8 மார்ச், 2010

தலை நகரிலிருந்து – பகுதி 5:

இப்போதுதான் ஆரம்பித்த மாதிரி இருந்தது, அதற்குள் நான்கு வாரங்கள் ஓடிவிட்டன. இந்த நான்கு வாரங்களில் தில்லியின் சில இடங்கள், உணவு வகைகள் பற்றி பார்த்தோம். இந்த வாரமும் தொடர்வோம்.



பார்க்க வேண்டிய ஒரு இடம்: National Rail Museum – பிப்ரவரி 1, 1977-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த காட்சியகம் தில்லியின் சாணக்யபுரியின் அருகில் உள்ளது. பதினோரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் போக்குவரத்து சம்பந்தப்பட்ட பொருட்கள் வைத்துள்ளார்கள். அங்கே உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் இந்திய ரயில்வே துறை ஆரம்பித்தது முதல் தற்காலம் வரை உள்ள பலவித ரயில் பெட்டிகள், என்ஜின்கள் ஆகியவற்றின் மாதிரிகள், பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள், ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்துவிட்டு வெளியே வந்தால், பலவிதமான உண்மையான ரயில் இன்ஜின்கள், “Royal Saloon” என்று அழைக்கப்படும் மஹாராஜாக்கள் பயன்படுத்திய ரயில் பெட்டிகள் போன்றவற்றைக் காணலாம். 1887 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "ஃபேரி க்வீன்" என்ற ரயில் இன்ஜின் தற்போதும் உபயோகிக்கூடிய நிலையில் உள்ளது. உலகிலேயெ பழமையான இந்த ரயில் வண்டி மூலம் தில்லியிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ”அல்வர்” என்ற இடத்திற்கு முன்கூட்டியே பதிவு செய்து வைத்துள்ள பயணிகளை அழைத்துச் செல்கிறார்கள். வாரத்தின் திங்கட்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களிலும் காட்சியகம் திறந்து இருக்கும். குழந்தைகளுடன் நீங்களும் இங்குள்ள “Toy Train” மூலம் இதை ஒரு சுற்று சுற்றி வாருங்களேன்.



சாப்பிட வாங்க: வட இந்தியாவின் பல பகுதிகளில் கிடைக்கும் ஒரு உணவு வகை – ”கச்சோடி”. மைதாவில் சிறிதளவு கோதுமை மாவு அரை சிட்டிகை உப்பு மற்றும் தண்ணீர் கலந்து சிறு சிறு உருண்டைகள் செய்து கொள்ளவும். வேகவைக்கப்பட்ட பாசிப் பருப்பு [அல்லது உளுத்தம் பருப்பு], கடலை மாவு, மிளகு, மிளகாய்ப் பொடி, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை கலந்து கொள்ளவும். உருண்டைகளை சிறுசிறு சப்பாத்திகளாக இட்டுக்கொண்டு மேலே சொன்ன கலவையை அப்படி இட்ட இரண்டு சப்பாத்திகளுக்குள் வைத்து ஒரு கடாயில் எண்ணைய் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பல வகையான வகைகளில் இந்த கச்சோடிகள் கிடைக்கின்றன. இரண்டு கச்சோடி மற்றும் கொண்டைக்கடலை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சைட் டிஷ்ஷோடு சாப்பிட்டால் ஒரு மணி நேரத்திற்கு வேறு எந்த உணவும் தேவை இருக்காது. ”கச்சோடி” இங்குள்ள எல்லா உணவகங்களிலும் கிடைக்கும்.

இந்த வார ஹிந்தி சொற்கள்: ”ஆம்” – என்ன நான் "சரி" என்று சொல்வதாக நினைத்தீர்களா? மாம்பழத்தைத் தான் ஹிந்தியில் "ஆம்" என்று சொல்கிறார்கள். புளியம்பழத்தை “இம்லி” என்று சொல்கிறார்கள். மசக்கையாக இருக்கும் மனைவி கமலியிடம் "கம்லி" இந்தா "இம்லி" என்று ஒரு கணவன் கொடுத்தால் எவ்வளவு ஆசையோடு மனைவி அதை வாங்கி சாப்பிடுவார்?

இன்னும் வரும்…

வியாழன், 4 மார்ச், 2010

டீலா - நோ டீலா?



சனி மற்றும் ஞாயிறு இரவு 08.30 மணிக்கு ஒளிபரப்பாகும் டீலா - நோ டீலா? நிகழ்ச்சி பற்றி சன் டீவி நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார்கள் - "Deala No Deala, the biggest game show in South Indian Television history and one of the most successful shows ever in television history globally.” இது உண்மையா அல்லது பொய்யா என்று அலசுவதற்காக எழுதப்பட்டது அல்ல இந்த பதிவு.

ரிஷி அவர்களால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியினால் ஒரு நண்பரின் குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகளைப் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

ஒரு சனிக்கிழமை நண்பரின் வீட்டுக்குச் சென்றபோது தொலைக்காட்சி பெட்டியில் ”டீலா நோ டீலா” ஓடிக்கொண்டு இருந்தது. நிகழ்ச்சி ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகியிருக்கலாம். நண்பரின் வீட்டில் நான்கு பேர் – நண்பர், அவரது இல்லத்தரசி, இரண்டு குழந்தைகள். ஒவ்வொரு பெட்டி திறந்ததும் ஒரே இரைச்சல் வீட்டில். நடப்பது எதுவும் எனக்குப் புரியவில்லை. நண்பரிடம் விசாரித்தபோது அவர் சொன்ன பதில் வித்தியாசமாக இருந்தது. மொத்தம் இருபத்தி ஆறு பெட்டிகள் நிகழ்ச்சியில் திறந்து அதில் உள்ள மதிப்பு காட்டப்படுகிறது. நண்பரின் வீட்டில் உள்ள நால்வருடைய பிறந்த தேதி உள்ள பெட்டிகளை அவர்களது பெட்டியாக எடுத்துக்கொள்கிறார்கள். அந்த எண் உடைய பெட்டியில் உள்ள பணத்தின் மதிப்பை அவர்களுடையதாக எண்ணிக்கொள்கிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில் அந்த நாலு பெட்டியில் உள்ள மதிப்புகளில் எவருடைய பெட்டியில் அதிக மதிப்பு உள்ளது அந்த பெட்டி எண் – அந்த தேதியில் பிறந்தவர் ஜெயித்துவிட்டதாக அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

இத்தோடு முடிந்துவிட்டால் பரவாயில்லை – எல்லா சூதாட்டங்களைப் போலவே இவர்களது ஆட்டமும் தகராறிலேயே முடிந்தது. தோற்றவர் ஜெயித்தவர்களிடம் தான் தோற்றதற்காக சண்டை போடுகிறார். இதில் இன்னுமொரு வருந்தத்தக்க விஷயம் இந்த சண்டை எல்லா வாரமும் நடைபெறும் நிகழ்ச்சியாம்.

சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக வீட்டில் இத்தனை சண்டையும் சச்சரவும் தேவையா என்றே எனக்குத்தோன்றியது. நல்ல வேளை இவர்கள் நால்வரில் எவருடைய பிறந்த தேதியும் 27-31 தேதிகளில் இல்லை. அப்படி இருந்திருந்தால் சன் தொலைக்காட்சியிடம் சண்டைக்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

புதன், 3 மார்ச், 2010

போவோமா குருத்வாரா?



தலைநகர் தில்லியில் இந்தியாவின் எல்லா மாநில மக்களும், பலவிதமான மொழி பேசுபவர்களும் வாழ்கிறார்கள். ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்ஸி போன்ற பல மதத்தவர்களையும் இங்கே நீங்கள் காணலாம்.

பொதுவாக எல்லா மதத்தினர்களும் அவரவர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் ஒரு மதத்தினரின் விதிமுறைகள் மற்ற மதத்தினருக்கும் தெரிந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை.

ஒரு முறை அலுவலகத்தில் உள்ள சீக்கிய நண்பர் க்ருபால் சிங் என்பவர் என்னையும் மற்றொரு தமிழ் நண்பரையும் அவர்களது வழிபாட்டுத் தலமான “குருத்வாரா”விற்கு வருமாறு அழைத்தார். எங்களுக்கோ அவர்களது வழிபாட்டு முறையோ, விதிமுறைகளோ சுத்தமாகத் தெரியாது. அவரிடம் அதை நாங்கள் எடுத்துரைக்க, அவரோ ”அதைப் பற்றிய கவலையே வேண்டாம், எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று சொல்ல, நாங்கள் ஒருவித கலக்கத்துடனே அங்கு சென்றோம்.

சர்தார்கள் என்றாலே முட்டாள்கள் என்பது போல அவர்களை வைத்து பலப்பல ஜோக்குகள் புழக்கத்தில் இருந்தாலும் அவர்களில் பலர் மெத்தப்படித்து நல்ல நிலையில் இருப்பவர்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள். எந்த ஒரு சர்தாரையும் நீங்கள் பிச்சைக்காரராக பார்க்கமுடியாது. அந்த அளவுக்கு உழைப்பவர்கள். அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாவிடினும் குருத்வாரா வாசலில் ஒரு கடைவைத்து கை வளையாவது விற்றுக்கொண்டு இருப்பார்கள். உணவுக்குக் கவலையே இல்லை. எத்தனை பேர் வந்தாலும் குருத்வாராவில் உணவு உண்டு.

குருத்வாரா வாசலை நாங்கள் சென்றடைந்ததும் அதன் உள்ளே காலணிகளை இலவசமாக வைக்க ஒரு இடம் இருந்தது. க்ருபால் காலணி மற்றும் காலுறைகளை கழற்றி கொடுக்க நாங்களும். பக்கத்திலேயே ஒரு மேடையில் மூன்று நான்கு தண்ணீர் குழாய்கள் (நம் ஊர் ஹோட்டல் மற்றும் கல்யாண மண்டபங்களில் கை கழுவும் இடம் போல). அதில் கையைக் கழுவிக்கொண்டு முன்னேறினோம். எங்கள் தலைமுடியை மறைக்க ஒரு கைக்குட்டையைக் கட்டிக்கொள்ளச் சொன்னார். அவர் முன்னே செல்ல பின்னே நாங்களும். இன்னுமொரு பத்து படி ஏறினால் மேலே குருத்வாரா. நான்கைந்து படிகள்தான் ஏறியிருப்போம், திடீரென க்ருபால் கீழே குனிய, நாங்களும். பார்த்தால் அவர் காலை சொரிந்து கொண்டார். "ஓ.. ஒரு வேளை நாலு படி ஏறினா உடன் காலை சொரியணுமா?" குழப்பத்தில் நான் எனது தமிழ் நண்பரை பார்க்க அவர் என்னைப் பார்க்க, சரி எதற்கும் சொரிந்து வைப்போம் என்று சொரிந்து கொண்டோம்.

உள்ளே சீக்கியர்களின் புனித நூலான ”குரு க்ரந்த் சாஹிப்” ஒரு மேடையில் வைக்கப்பட்டு அதன் இருபுறமும் வெள்ளை உடை அணிந்த சீக்கியர்கள் சாமரம் வீசிக்கொண்டு இருந்தனர். வேறொருவர் அப்புனிதநூலில் இருந்து ஏதோ ஓதிக்கொண்டு இருந்தார். அவர் முன்னே ஒரு பெரிய பாத்திரம். க்ருபால் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து அந்தப் பாத்திரத்தில் போட, ”என்னடா இது? ரொம்ப செலவு வைக்கிற இடமா இருக்கே! என்று நாங்கள் முழிக்க, க்ருபால் எங்களைப் பார்த்து "உங்களால என்ன முடியுமோ அதை போடுங்க!” என்றவுடன் – ஒரு பத்து ரூபாயை அதில் போட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

அடுத்தபடியாக அவர் எங்களை அழைத்து சென்ற இடம் குருத்வாராவின் பின்புறம். அங்கே திரும்பவும் கை கழுவிக்கொண்டு உள்ளே சென்றால் – முதலில் ஒரு இடத்தில் நிறைய தட்டு, ஸ்பூன் போன்றவை இருந்தது. க்ருபால் அவருக்கு எடுத்துக்கொண்டு எங்களுக்கும் எடுத்துக் கொடுத்தார். அங்கே வரிசையாக பலர் அமர்ந்திருக்க நாங்களும் அமர்ந்தோம். முதலில் ஒருவர் வந்து தண்ணீர் கொடுத்தார். பின்னே சாலட், “டால்”, உருளைக்கிழங்கில் ஒரு சைட் டிஷ் என கொடுத்தார்கள். அதன் பின்னர் ஒருவர் கையில் ஒரு கூடை நிறைய சப்பாத்தி எடுத்துக்கொண்டு வந்தார். வந்த உடன் க்ருபால் இரண்டு கைகளையும் நீட்டிக்காட்ட இரண்டு சப்பாத்திகளை கையில் போட்டார். போடும் போது “ப்ரசாதா, ப்ரசாதா” என்று குரல் கொடுக்கிறார் அவர். இரண்டு கையையும் நீங்கள் நீட்டினால் தான் உங்களுக்கு ரொட்டி கிடைக்கும். உங்கள் தட்டில் போடுவதில்லை. ஏனெனில் “ப்ரசாதா”-விற்கென்று ஒரு மதிப்பு இருக்கிறது. இப்படி உணவு அளிப்பதை அவர்கள் “லங்கர்” என்று கூறுகிறார்கள். சாப்பிட்டுவிட்டுத் தட்டினை எடுத்துக்கொண்டு போய் சுத்தம் செய்யும் இடத்தில் வைத்தால் சில சீக்கியர்கள் அவற்றை சுத்தம் செய்து விடுகிறார்கள். எல்லாம் குருவிற்கு செய்யும் ஒரு சேவையாக அவர்கள் செய்கிறார்கள்.

இப்படியாகத்தானே எங்களது குருத்வாரா பயணம் நல்ல படியாக முடிந்தது. (ஏதோ காலட்சேபம் கேட்கிற இடத்துக்கு வந்துட்ட மாதிரி கடைசியில் ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்ப்பட்டதில்ல?)

செவ்வாய், 2 மார்ச், 2010

தலை நகரிலிருந்து – பகுதி 4:

இந்த வாரம் முதல் தலைநகரில் பார்க்க வேண்டிய ஒரு இடம், சாப்பிட ஒரு உணவு வகை, அறிந்து கொள்ள ஒரு ஹிந்தி சொல் என வெரைட்டியாக கொடுக்கலாம் என்று தீர்மானித்துள்ளேன். சென்ற மூன்று பகுதிகள் பெற்ற நல்ல வரவேற்பை போலவே வரும் பகுதிகளும் பெறும் என்று நம்புகிறேன்.



பார்க்க வேண்டிய ஒரு இடம்: தில்லியின் நேரு பிளேஸ் பகுதியில் அமைந்துள்ளது "The Bahai Mashriqul Adhkar". Lotus Temple என்ற பெயரில் இது மிகப் பிரபலமானது. தாமரை வடிவில் அமைக்கப்பட்ட இந்த அழகிய பிரார்த்தனைக் கூடம் 24.12.1986 அன்று திறக்கப்பட்டது.. நவீன கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் இது கனடா நகரின் Mr. Fariburz Sabha என்கிற கட்டிட கலைஞரால் வடிவமைக்கப்பட்டது. இதனை கட்ட ஆறு வருடம் எட்டு மாதம் ஆனது. இருபதாம் நூற்றாண்டின் ”தாஜ் மஹால்” என்று அழைக்கப்படும் இந்த கட்டிடத்தை சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் எல்&டி நிறுவனத்தின் ஈ.சிசி. குழுமம் கட்டியது. கட்டுவதற்குத் தேவையான மார்பிள் கற்கள் க்ரீஸ் நகரத்திலிருந்து இத்தாலி நகருக்கு அனுப்பப்பட்டு அங்கே தேவையான அளவுகளில் வெட்டி பிறகு தில்லிக்கு அனுப்பப்பட்டது. வாரத்தின் திங்கள் கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் திறந்திருக்கும் இந்த பிரார்த்தனைக் கூடம் தில்லிக்கு சுற்றுலா வரும் எல்லோராலும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.


சாப்பிட வாங்க: தில்லியில் எந்த நடைபாதையானாலும் அதில் கண்டிப்பாக ஒரு “கோல்-கப்பா” கடை இல்லாமல் இருக்காது. தமிழ்நாட்டில் கூட இப்போதெல்லாம் பானி-பூரி எனப்படும் இந்த “கோல்-கப்பா” கிடைக்கிறது என்றாலும் இங்கே கிடைப்பதைப் போல் இருக்காது. நம்ம ஊரு மசால் தோசையை ஒரு சர்தார் செய்தால் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கும். அதிலும் இங்கு கோதுமை, மைதா, மக்காசோள மாவு போன்றவற்றில் செய்யப்படும் மூன்று நான்கு விதமான கோல் கப்பா கிடைக்கும். ஒரு கோல் கப்பாவை எடுத்து அதன் நடுவில் ஒரு ஓட்டைப்போட்டு அதில் புளித்தண்ணீர் விட்டு கொடுத்துக்கொண்டே இருக்க நாம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். அதிலும் இங்குள்ள பெண்கள் வெளியே சென்றால் கோல்-கப்பா சாப்பிடாமல் வீடு திரும்புவதே இல்லை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பிரசித்தி பெற்றது.. சாப்பிட்டுவிட்டு கடைசியில் ஒன்று-இரண்டு தொன்னை அந்த புளித்தண்ணீரையும் குடித்துவிட்டு சப்புக்கொட்டிக் கொண்டே வரும் அவர்கள் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம். நீங்கள் சாப்பிடும் எண்ணிக்கையை பொருத்து கடைக்காரரிடம் காசு கொடுத்துவிட்டு வர வேண்டியது தான்.

வாரம் ஒரு ஹிந்தி சொல்: அனார் – மாதுளம்பழத்தை ஹிந்தியில் "அனார்" என்று சொல்கிறார்கள். தில்லியில் இது நிறைய கிடைக்கிறது. ஒரு கிலோ மாதுளை சீசனை பொருத்து ரூபாய் 20 முதல் 60 வரை விற்கப்படுகிறது

இன்னும் வரும்…