பிரபஞ்சத்தில் உள்ள சகல வஸ்துக்களையும் அநுபவிப்பதற்காக மனிதனுக்குக் கண்,
காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகிய ஐந்து இந்த்ரியங்கள் இருக்கின்றன.
பஞ்சேந்த்ரியங்கள் என்று இவற்றைச் சொல்வார்கள். ரூபத்தினை கிரகிப்பது கண்; சப்தத்தைக்
கிரகிப்பது காது; ரஸத்தை [சுவை] கிரகிப்பது நாக்கு; கந்தத்தை [மணம்] கிரகிப்பது மூக்கு; ஸ்பரிஸத்தைக் கிரகிப்பது
சருமம்.
-
நன்றி: தெய்வத்தின் குரல்.
5S என்பது ஜப்பானியர்களால் உருவாக்கபட்டுப் பயன்படுத்தபட்டு வரும் ஒரு வழிமுறையாகும்.
ஜப்பானியப் பொருள்கள் தரவரிசையில்
முதல் இடத்தில் இருப்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று. அது என்ன 5S – Sort, Stabilize, Shine,
Standardize and Sustain.
– நன்றி: விக்கிபீடியா.....
”ஐந்து பெற்றால் அரசனும்
ஆண்டி ஆவான்” என்று சொல்வார்கள்.
உண்மையில் இது ஐந்து விஷயங்களைப் பற்றியது என்றாலும், ஐந்து பெண்களை பெற்றவன்
ஆண்டி ஆவான் என்று கொள்வது வழக்கமாக இருக்கிறது. ஐந்து பெற்றால் என்பதில் வரும்
அந்த ஐந்து விஷயங்கள் – ஆடம்பரமாய் வாழும் தாய்; பொறுப்பில்லாமல் வாழும் தந்தை;
ஒழுக்கமற்ற மனைவி; ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர்; சொல்
பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும். இந்த ஐந்து விஷயங்களையும் கொண்டிருப்பவன்
அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற அர்த்தத்திலேயே
ஆண்டி என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.
சங்ககாலத் தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன.
- மலையும் மலை சார்ந்த நிலமும் - குறிஞ்சி
- காடும் காடுசார்ந்த நிலமும் - முல்லை
- வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம்
- கடலும் கடல் சார்ந்த நிலமும் - நெய்தல்
- மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் - பாலை
ஐந்திலே ஒன்று பெற்றான்ஐந்திலே ஒன்றை தாவி
ஐந்திலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
ஐந்திலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலார் ஊரில்
ஐந்திலே ஒன்றை வைத்தான்அவன் எம்மை அளித்து காப்பான்”
பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். இக்கம்ப ராமாயண பாடலின் மூலம் அனுமானின் பெருமையும், தமிழின் பெருமையும் அறியலாம். இது சுந்தரகாண்டத்தில் அனுமன் இலங்கைக்கு தீ வைத்து திரும்பும் பொழுது எழுந்த பாடல். கம்ப ராமாயணத்தில் 5-வது காண்டம் இது. பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று (வாயு பகவான்) பெற்ற மகன், பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரை (கடல்) தாவி, இராமருடன், லக்ஷ்மண், பரதன், சத்ருக்னன், சீதாவுடன் சேர்ந்து அறுவரான அனுமன், இராமருக்காக பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தில் பறந்து சென்று, பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமியில் பிறந்த சீதாவை காக்க, பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கையில் வைத்தான், அவன் நம்மை எல்லா சுகங்களையும் அளித்து காப்பான்.
என்ன நண்பர்களே, ஐந்து ஐந்து ஐந்து என்ற தலைப்பினைப் பார்த்து சமீபத்தில் வந்த
திரைப்படம் பற்றிய ஏதோ பதிவு என நினைத்து வந்தீர்களா? அடாடா?
அது வேறொன்றுமில்லை.... மகிழ்ச்சியான விஷயம் தான் – 2009-ஆம் வருடம் இதே நாள் தான் எனது வலைப்பூவினை ஆரம்பித்து எனது முதல் பதிவினை வெளியிட்டேன். நேற்றோடு நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது எனது இந்த வலைப்பூ.
இத்தனை நாட்களும் என்னுடைய பதிவுகளைப் படித்து நீங்கள் எல்லோரும் கொடுத்து வந்த ஆதரவு மேலும் தொடர்ந்து கிடைக்குமென நம்புகிறேன்.
நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாம் ஆண்டு தொடங்கும் இந்த நாளில், ஒரு விஷயம் –
எனது எழுத்து ஏதோ மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்ற நம்பிக்கையிலும்
சந்தோஷத்திலும் தான் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். :)
மேலும் தொடர்ந்து இந்த வலைப்பக்கத்தில் சந்திப்போம்!
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.