சமீபத்தில் உழைப்பாளி என்ற பதிவில் ராஜதானி விரைவு
வண்டியில் படுக்கை விரிப்புகள் தரும் முகேஷ் குமார் எனும் 52 வயது நபரைப்
பற்றியும் அவரது பணிகள் பற்றியும் பகிர்ந்திருந்தேன். அது உங்களுக்கு நினைவிருக்கலாம். இன்றைய
பதிவில் அது போல இரண்டு உழைப்பாளிகள் பற்றிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள
நினைத்திருக்கிறேன்.
உங்களால், பீஹாருக்கும் கேரளத்திற்கும் ஏதேனும் சம்பந்தப் படுத்த முடியுமா? கிட்டத்தட்ட
2500 கிலோ மீட்டர் தூரம். மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள சம்பந்தம் தான்
பீஹார் மாநிலத்தில் உள்ள ரோஹ்தாஸ் மாவட்டத்திற்கும் கேரளத்திலுள்ள சபரிமலைக்கும்.
இருந்தும் அங்கிருந்து இங்கே வந்து பலூன் விற்கும் ஒருவரை சமீபத்திய சபரிமலை
பயணத்தின் போது சந்தித்தேன்.
ரோஹ்தாஸ் மாவட்டத்தினைச் சேர்ந்த மண்டூ [தமிழில் தப்பாக அர்த்தம் கொள்ள
வேண்டாம் நண்பர்களே! அவர் பெயர் MANTOO
SINGH] தனது கிராமத்தில்/மாநிலத்தில்
சம்பாதிக்க வழியில்லாது கேரளத்தில் வந்து பலூன் விற்றுக் கொண்டிருக்கிறார். சபரிமலையிலிருந்து கீழே வரும் சமயத்தில்
அவரிடம் இரண்டு மூன்று பலூன்களை வாங்கிக்கொண்டே பேசினேன். அவரது பேச்சிலேயே பீஹார்
மாநிலத்தவர் எனத் தெரிந்து “கௌன் ஜில்லா” எனக் கேட்டவுடனேயே அவருக்கு சந்தோஷம்.
ஒரு பலூன் 10 ரூபாய் என விற்கும் இந்த மண்டூ, அவ்வப்போது
கேரளா வந்து இப்படி பல பொருட்களை விற்கிறாராம். கேரளத்தின் சிகப்பரிசி சாதமும்
உணவும் இவருக்கு அத்தனை ஒத்துக் கொள்வதில்லை/பிடிப்பதில்லை எனக் கூறும் இவர்
தங்கியிருப்பது தமிழகத்தின் திருநெல்வேலியில். இங்கே தங்கிக் கொண்டு
கேரளத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கி வியாபாரம் பார்த்துவிட்டு மீண்டும்
தமிழகம் திரும்புவார்களாம் இவரும் இவருடன் தங்கியிருக்கும் இன்னும் சில பீஹார் மாநில
நண்பர்களும்.
தமிழும் மலையாளமும் பீஹாரியின் மைதிலி பாஷையில் பேசும் வருடத்தின்
பெரும்பாலான நாட்களில் இப்படி பலூன் வியாபாரமும் இன்னும் சில சில்லரை
வியாபாரங்களும் செய்து தான் பிழைப்பு நடக்கிறது எனும் இந்த மண்டூவின் உழைப்பை
பாராட்டி விட்டு மேலும் நடையைத் தொடர்ந்தேன்.
சரி தலைப்பில் சொன்ன பலூன் வியாபாரியின் கதையைப்
பார்த்தாயிற்று, அடுத்து படகோட்டியின் கதையைப் பார்க்கலாமா?
சென்னையை அடுத்த முட்டுக்காடு அனைவரும் அறிந்த ஒரு
சுற்றுலாத் தலம். சமீபத்திய சென்னைப் பயணத்தின் போது ஒரு நாள் பயணமாக மாமல்லபுரம்
வரைச் சென்று வந்தேன். அப்போது சென்ற இடங்களில் முட்டுக்காடு படகுத் துறையும்
ஒன்று. நாங்கள் மூன்று பேர் மட்டுமே என்பதால், விசைப் படகு வேண்டாமென, துடுப்பு
கொண்டு செலுத்தும் படகில் அரை மணி நேரம் சுற்ற சீட்டுப் பெற்றுக் கொண்டோம்.
அதற்கான ரசீதையும், ஒரு டோக்கனையும் எடுத்துக் கொண்டு படகு
நிறுத்தத்திற்குச் சென்றவுடன் எங்களிடமிருந்து பிளாஸ்டிக் டோக்கனைப் பெற்றுக்
கொண்டு எங்களுக்கான பாதுகாப்பு உடைகளை அணிவித்த படகோட்டி [அவர் பெயர் மறந்துவிட்டதே!
பெயர் மறப்பது எனக்கு பழக்கமாகிவிட்டதே! :(] படகில் பாதுகாப்பாக அமர வைத்து
படகினைச் செலுத்த ஆரம்பித்தார்.
சுற்றுப்புறத்தில் உள்ள காட்சிகளையும் அருகே இருக்கும்
பறவைகளையும் ரசித்தபடியே அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். மூன்று பேர் உட்காரும் படகுக்கு
படகுத்துறைக்கு செலுத்திய பணம் ரூபாய் 160/- அதில் ரூபாய் 125/- அரசு எடுத்துக்
கொள்ளும். நாங்கள் கொடுத்த பிளாஸ்டிக் டோக்கன்களை மாலையில் திருப்பிக்
கொடுக்கும்போது படகோட்டிக்கு ரூபாய் 35/- கிடைக்குமாம். ஒரு நாளைக்கு ஒவ்வொரு
படகோட்டிக்கும் 7 முதல் 8 முறை வாய்ப்பு கிடைக்கும் எனச் சொல்கிறார் எங்களது
படகோட்டி. விசைப்படகைச் செலுத்தினால் ரூபாய் 30 மட்டுமே கிடைக்கும் எனச்
சொன்னபோது, தனது வியர்வை சிந்தி துடுப்பு போட்டு படகைச் செலுத்துவதற்கு வெறும்
ஐந்து ரூபாய் மட்டுமே அதிகம் எனக் கேட்டபோது பரிதாபமாக இருந்தது.
பிறகு சொன்ன விஷயம் கொஞ்சம் நிம்மதியைத் தந்தது. எல்லா
படகோட்டிகளும் துடுப்பு போடும் படகையும், விசைப் படகையும் செலுத்துவார்களாம். அதனால்
அனைத்து படகோட்டிகளுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும். சாதாரண நாட்களில் 7 அல்லது
8 முறை தான் வாய்ப்பு கிடைக்கும் என்றாலும் விடுமுறை நாட்களில் 10 முறை வாய்ப்பு
கிடைக்கும் என்றும் நாள் ஒன்றுக்கு 150 முதல் 250 ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது
என்றும் சொன்னார்.
அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்தபோது தான்
முட்டுக்காடைச் சேர்ந்தவர் என்றும் போதிய படிப்பில்லாததால் இத்தொழில் செய்வதாகவும்
சொன்னார். அவருக்கு இரண்டு மகன்கள் என்று சொன்ன அவரிடம், எப்போதாவது முட்டுக்காடு
அழைத்து வந்து அவர்களை படகில் ஏற்றிக்கொண்டு பயணம் செய்ததுண்டா எனக் கேட்க, “இல்லை” என்ற பதிலே கிடைத்தது. என்றாவது
ஒரு நாள் அழைத்து வாருங்கள் என்று சொல்லி, இயற்கையையும் ரசித்துக் கொண்டிருந்த
எங்களுக்கு அரை மணி நேரம் கடந்ததும் படகு கரைக்கு அருகே வந்ததும் தெரியவில்லை.
கரையில் வந்து படகுத் துறையில் படகைக் கட்டி வைத்து, தனக்கு
எதாவது கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கேட்ட படகோட்டிக்கு என்னால் ஆனதைக்
கொடுத்துவிட்டு வந்தேன்.
இரண்டு வித்தியாசமான உழைப்பாளிகள். தனது ஊரிலேயே படகோட்டி
பிழைக்கும் படகோட்டி, தனது ஊரிலிருந்து வெளி மாநிலத்திற்கு வந்து பிழைப்பு நடத்தும்
மண்டூ என இருவரிடம் பேசியதை உங்களுக்கும் பகிர்ந்து கொண்டேன்.
இன்னும் நான் சந்தித்த சில மனிதர்களைப் பற்றி வேறொரு
பகிர்வில் பார்க்கலாம்!
அதுவரை......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
நல்ல அறிமுகங்கள் சார்..
பதிலளிநீக்கு// “கௌன் ஜில்லா” எனக் கேட்டவுடனேயே அவருக்கு சந்தோஷம்.//
ஒரு வேலை விஜய் ரசிகரா இருப்பாரோ??
பீஹாரிகளுக்கு அவர்கள் எந்த மாவட்டத்தினைச் [கௌன் ஜில்லா] சேர்ந்தவர் எனக் கேட்டால் ஒரு சந்தோஷம்..... :)
நீக்குவிஜய் ரசிகரோ? கேட்டுருவோம்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.
மாறுபட்ட வித்தியாசமான பதிவு உழைப்பாளிகளை பற்றி அதை உங்கள் எழுத்தில் படிக்கும் போது ஒரு மாறுபட்ட உணர்வு தோன்றுகிறது. வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குtha.ma 2
நீக்குதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!
நீக்குமாறுபட்ட இரு உழைப்பாளிகள் பற்றிய
பதிலளிநீக்குசுவாரஸ்யமான பகிர்வு மனம் கவர்ந்தது
ஏய்த்துப்பிழைக்காமல் இப்படி உழைத்துப்
பிழைப்பவர்களே பாராட்டுக்குரியவர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஇந்த முறை இரண்டு வித்தியாசமான உழைப்பாளிகள்.... பகிர்வுக்கு நன்றி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை. சரவணன்.
நீக்குஉழைப்பாளிகள் பேட்டி அருமை...
பதிலளிநீக்குநீங்களும் ஆரம்பித்து விட்டீர்களா...? நன்று... தொடர வாழ்த்துக்கள்...
நீங்களும் ஆரம்பித்து விட்டீர்களா....
நீக்குமுன்னரே இது போன்ற பதிவுகள் எழுதியிருக்கிறேன் தனபாலன்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிவு நன்றாக இருந்தது..
பதிலளிநீக்குஒரு சிறு திருத்தம். தப்பாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
கௌன்சா ஜில்லா என்றால்தான் எந்த ஜில்லா
கௌன் ஜில்லா என்றால் யார் ஜில்லா
கௌன்சா புக் என்றால் எந்த புக்
பீஹாரிகளிடம் எனக்கு கிட்டத்தட்ட 22 வருடப் பழக்கம் திருமதி அபயா அருணா.....
நீக்குஅவர்கள் பேசும் ஹிந்தியில் “கௌன் ஜில்லா” என்றால் தான் “எந்த ஜில்லா!”
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
பல மனிதர்கள் பலவித உழைப்புகள் எல்லாம் ஒரு ஜான் வயிற்றுக்காக இல்லையா அண்ணே ?
பதிலளிநீக்குதொடருங்கள் வித்தியாசமான மனிதர்களை சந்திக்கலாம்....!
ஒரு ஜான் வயிற்றுக்குத் தானே இத்தனை பாடும்..... உண்மை தான் மனோ.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.
உழைப்பாளிகள் பற்றி பகிர்வு அருமை. படங்களும் ஜோர் ஜோர். நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குசாதாரண சந்திப்புகளைக் கூட மனதைக் கவரும் விதத்தில் எழுதும் உங்கள் பாணி மிகவும் பிடிக்கிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப்.
நீக்குமான்ட்டூ சிங் மற்றும் படகோட்டி பற்றிய தகவல்கள் சிறப்பு. நீங்களும் பார்ப்பவர்களை எல்லாம் பேட்டி எடுக்கத் தொடங்கி விட்டீர்கள், மோகன் குமார் போல! :)
பதிலளிநீக்குகோவை ஆவி கமெண்ட் ரசித்தேன்!
மோகன் குமார் போல :) அது சரி....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
Nalla pakirvu aarvathudan padika thoondukiradhu.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லதா முரளி.
நீக்குநாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் அழகாகப் பதிவு செய்கிறீர்கள் வெங்கட்.
பதிலளிநீக்குஉழைப்பவர்கள் எங்கிருந்தாலும் வெற்றி பெறட்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குமுன்பெல்லாம் அகில இந்திய மற்றும் அகில உலக குத்தகையில் கேரளம் முதலிடத்தில் இருந்தது. இப்போது அதை பிஹாரிகள் கைப்பற்றுவார்கள் போல் இருக்கிறது. அவர்களிடம் உள்ள நல்ல பழக்கங்களை (?) நாம் எடுப்போம். நம்மிடமுள்ள நல்ல பழக்கங்களை (??) அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குDead ear Kittu,
பதிலளிநீக்குUnnudaya pagirvu oru kadai padithadhu pol irundhadhu.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குDear Kittu,
பதிலளிநீக்குUnnoda pagirvu oru kadai padithadhu pol irundhadhu.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குவித்தியாசமான பகிர்வு அதுவும் சபரிமலை சீசனில் பலரும் வியாபாரத்துக்கு வருவதை கொஞ்சம் அறிந்தாலும் பீஹார் புதுமை தொடரட்டும் சார்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.
நீக்குஒரு காலத்தில் தென்னகத்து மக்கள் வட நாட்டுக்கு வேலை தேடிச் செல்வார்கள்...இப்போதெல்லாம் வட இந்திய மக்கள் தென்னகத்தை நாடி வருவது அதிகமாகிவிட்டது......இதை வளர்ச்சி என்பதா? உழைப்பின் தேக்கம் என்பதா?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
நீக்குஅவருக்கு இரண்டு மகன்கள் என்று சொன்ன அவரிடம், எப்போதாவது முட்டுக்காடு அழைத்து வந்து அவர்களை படகில் ஏற்றிக்கொண்டு பயணம் செய்ததுண்டா எனக் கேட்க, “இல்லை” என்ற பதிலே கிடைத்தது.//
பதிலளிநீக்குமனதை நெகிழ வைத்த பதிவு!நன்றி!
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குமிகவும் வித்தியாசமான இரண்டு நேர்முகங்கள். பிரபலங்களின் நேர்முகங்களை படித்து படித்து சலித்த எங்களுக்கு ஒரு புதிய அனுபவம் உங்களது இந்தப் பதிவு. தொடரட்டும் உங்கள் வித்தியாசமான பணி. பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....
நீக்குமிக அருமையான இரண்டு உழைப்பாளிகளின் அறிமுகம் + பேட்டி, வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜலீலா கமல்.
நீக்குபீகாரிலிருந்து கேரளாவுக்கு வந்து தொழில்புரியும் அவரை வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குவாழ்க! உழைப்பாளிகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு