சனி, 31 டிசம்பர், 2016

மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது…..



2016 இதோ முடிவுக்கு வந்துவிட்டது. 2017-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்க இன்னும் சில மணித்துளிகளே பாக்கி! 2016-ஆம் ஆண்டு நல்லதாகவே துவங்கி நல்லதாகவே முடியப் போகிறது.  சில பயணங்கள், நிறைய செலவு, உடல் ரீதியாக குடும்பத்தினருக்கு சில பிரச்சனைகள் என எல்லாம் கலந்த ஒரு வருடம். வாழ்க்கைப் பயணத்தில் பிரச்சனைகளும் வரத்தானே செய்கிறது.  அதை மாற்றுவது நம் கையில் இருந்தாலும், சமயங்களில் தவிர்க்க முடிவதில்லையே…..  முடிந்த வருடத்தின் நிகழ்வுகளைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் நமக்குத் தேவையில்லையே. நேர்மறை எண்ணங்கள் மட்டுமே இருந்தால் போதுமே.  ஒரு சின்ன கதையை, படித்ததில் பிடித்த ஒரு கதையை, இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு கணவன் – மனைவி….  கணவன் ஒரு பிரபல எழுத்தாளர் - வருடத்தின் கடைசி நாள் அன்று அந்த வருடத்தின் நிகழ்வுகளைப் பற்றிச் சிந்தித்து, ஒரு காகிதத்தில் இப்படி எழுதி வைத்தார்…..

இந்த வருடம் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. பித்த நீர் பையை எடுத்து விட்டார்கள். அதன் காரணமாக நான் பல நாட்கள் படுத்த படுக்கையாகவே இருக்க நேர்ந்தது.

இந்த வருடம் எனக்கு வயது 60 ஆகிவிட்டது.  முப்பது வருட காலம் நான் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து, எனக்குப் பிடித்த வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் அமர்ந்திருக்கும்படி ஆயிற்று!

இந்த வருடம் எனக்கு மிகவும் பிடித்த எனது பாசத்துக்குரிய தந்தையை இழக்க நேர்ந்தது.

இதே வருடத்தில் தான் எனது மகன் ஒரு வாகன விபத்தில் சிக்கி, அதனால் மருத்துவர் தேர்வில் தோல்வியுற்றான். கால்களில் அடிபட்டு பல மாதங்கள் மருத்துவமனை படுக்கையில் வீழ்ந்து கிடந்தான்.  விபத்துக்குள்ளான வாகனமும் முழுவதும் வீணாகி பெரிய இழப்பு.

இப்படி எல்லாம் எழுதி கடைசியில் “இந்த வருடம் எனக்கு ஒரு மோசமான வருடம்” என்று எழுதி இருந்தார்.

அந்த சமயத்தில் அவரது அறைக்கு வந்த அவரது மனைவி, தனது கணவர் சோகமே உருவாக எண்ணச் சிறையில் சிக்கி தன்னிலை மறந்து அமர்ந்திருந்ததைப் பார்த்தார்.  பின்னால் இருந்து காகிதத்தில் எழுதி இருந்ததைப் படித்துப் பார்த்த அவரது மனைவி சத்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறினார்.  சிறிது நேரம் கழித்து அறைக்குத் திரும்பி, கணவர் எழுதி வைத்திருந்த காகிதத்திற்குப் பக்கத்தில் வேறு ஒரு காகிதத்தினை வைத்தார். அந்த காகிதத்தில் எழுதி இருந்தது என்ன என்பதைப் பார்க்கலாம்!

என்னை நீண்ட நாட்களாகத் தொல்லைபடுத்திய, வலி தந்த, பித்த நீர்ப் பையை இந்த வருடம் அகற்ற முடிந்தது. இனி நான் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.

ஆஹா, எனக்கு 60 வயது ஆகிவிட்டது. தினம் தினம் அலுவலகத்திற்குச் செல்வதிலிருந்து விடுதலை. நல்ல உடல்நிலையோடு பணிஓய்வு பெற்று விட்டேன். எனக்குக் கிடைத்திருக்கும் இந்த நேரத்தில், நான் பல காலமாக எழுத நினைத்தவற்றை நல்ல விதத்தில், சிறப்பாகவும் முனைப்புடனும் எழுத முடியும்.

இதே வருடத்தில், இத்தனை வருடங்களாக, யாரையும் எதிர்பார்க்காமல் 95 வயது வரை இருந்த எனது தந்தை எந்த வித கஷ்டமும் படாமல் அவரை உருவாக்கிய கடவுளின் பாதங்களை அடைந்தார்.

எனது மகனுக்கு புது வாழ்வு கிடைத்தது.  அவன் பயணித்த வாகனம் முழுமையாகப் பழுதடைந்தாலும், மகன் எந்தவித குறைபாடும் இல்லாமல் நல்லபடியாக, உயிருடன் வீடு திரும்பினான்.

கடைசியாக “கடவுளின் கிருபையால், இந்த வருடம் நன்றாகவே முடிந்தது” என்று எழுதி இருந்தது.

எந்த விஷயத்தினையும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் இருக்கிறது நம் மகிழ்ச்சி. நேர்மறையான எண்ணங்களோடு இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

இன்னுமொரு சின்ன கதை…..

ஒரு கொசு முதன் முதலாக பறந்து சென்று திரும்பியது. கொசுவின் தந்தை, “மகனே, முதல் முறை பறந்து சென்றது எப்படி இருக்கிறது?” என்று கேட்க அதற்கு குட்டி கொசு சொன்ன பதில்……

“தந்தையே, முதல் முறை பறந்து சென்றது மிகவும் அற்புதமாக இருந்தது. எல்லா மனிதர்களும் நான் பறப்பதைப் பார்த்து கை தட்டினார்கள்!”

வாழ்க்கையில் மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்கட்டும்.  சிறு சிறு பிரச்சனைகள் வரும், போகும் அதற்காக கவலைப்படாது இருப்போம். எதிர்மறை எண்ணங்களை விடுத்து, நேர்மறைச் சிந்தனைகளோடு சிறப்பாக இருப்போம்.  கடந்த வருடத்தினை விட வரும் வருடம் எல்லோருக்கும் நல்லதையே கொடுக்கட்டும்…..

அனைத்து நண்பர்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

வியாழன், 29 டிசம்பர், 2016

WhatsApp திரட்டி – வலைப்பதிவர்களுக்கான குழு




தமிழ் மொழியில் வலைப்பதிவுகள் எழுதும் ஒவ்வொருவருக்கும் தங்களது எழுத்து பலரையும் சென்றடைய வேண்டும் என்பதில் விருப்பம் உண்டு. அதற்காகவே திரட்டிகளில் தங்களது பதிவுகளை இணைப்பது வழக்கம்.   இண்ட்லி, தமிழ் 10, தேன்கூடு, தமிழ்மணம் என பல திரட்டிகள் இருந்தாலும், பெரும்பாலானவை ஆரம்பித்த சில மாதங்களிலே காணாமல் போய்விட்டன.  சற்றே அதிக காலம் தாக்குப்பிடித்த தமிழ்மணம் திரட்டியும் சமீப காலமாக சிறப்பாகச் செயல்படுவதில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றின் தாக்கத்தினால் வலைப்பூவில் தொடர்ந்து எழுதுபவர்களும் குறைந்து வருகின்றனர். 

வலையுலகில் சற்றே சுணக்க நிலை தான். அந்த நிலையைப் போக்க அவ்வப்போது நல்ல முயற்சிகளை புதுகை வலையுலக நண்பர்கள் எடுத்து வருகிறார்கள்.  சென்ற வருடம் பதிவர் சந்திப்பு, அதற்கு முன்னர் நடந்த பயிற்சிப் பட்டறை, தொடர்ந்து சென்ற மாதமும் சுமார் 100 பேருக்கு இலவசமாக வலைப்பூ தொடங்குவது எப்படி என்பது பற்றியும் அதிலுள்ள நெளிவு சுளிவுகள் பற்றியும் ஒரு நாள் முழுவதும் சிறப்புப் பயிற்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். இது ஒரு பாராட்டத் தக்க முயற்சி.  இதே வழியில் புதுகை நண்பர்கள் முத்து நிலவன் ஐயா அவர்களும் செல்வகுமார் அவர்களும், திண்டுக்கல் தனபாலன் அவர்களுடன் சேர்ந்து மற்றுமொரு நல்ல விஷயத்தினை ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நல்ல விஷயம்….

வலைப்பதிவர்களுக்கான ஒரு WhatsApp திரட்டி. ”தமிழ் வலைப்பதிவகம்” என்ற ஒரு திரட்டியை ஆரம்பித்து தமிழில் வலைப்பதிவுகள் எழுதி வரும் அனைவரையும் கொஞ்சம் கொஞ்சமாக இணைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவகம் குழுவிற்கென்று சில கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம்….

காலை, மாலை, இரவு வணக்கங்கள், படங்கள், காணொளி/லி, தகவல்கள், விசாரிப்புகள், மற்றும் பல உரையாடல்கள் தவிர்க்க வேண்டும்.

முதல் கட்டுப்பாடு மிகவும் அவசியமான ஒன்று. பல குழுக்களில் வணக்கம் சொல்லி வரும் படங்கள் தான் அதிகம்! நான் WhatsApp குழுக்களில் அதிகம் இல்லை. சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு குழுவில் என்னைச் சேர்த்துவிட, இப்போது தினமும் காலை அலைபேசியினைத் திறந்தால் ஒவ்வொரு முறையும், வணக்கங்கள், காணொளி/லிகள், படங்கள் என நூறுக்கும் குறையாமல் இருக்கின்றன. குழு தமிழர்களுக்கான குழு என்றாலும், இக்குழுவில் வரும் பல செய்திகள், பஞ்சாபி, ஹிந்தி, ஹர்யான்வி என எல்லா மொழியிலும் வருகிறது! பெரும்பாலான நாட்களில் மொத்தமாய் Clear Chat! செய்ய வேண்டியிருக்கிறது! அத்தனையும் பார்க்க நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை.

தங்கள் வலைப்பதிவின் இணைப்பு மட்டுமே கொடுக்க வேண்டும். புதிதாக இணைபவர்கள் பதிவின் இணைப்பினை கொடுப்பதோடு, தங்கள் பெயர் மற்றும் ஊர் விவரங்களை கொடுத்தால் அவரவர் அலைபேசியில் விவரங்களைச் சேமித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

புதியவர்களின் தளத்திற்குச் சென்று Followers-ஆக இணைந்து அவர்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்து ஊக்கம் அளிக்கவும் இந்த திரட்டி பயன்படும்.

வலைத்தளம் பற்றிய சந்தேகங்கள்/பிரச்சனைகள் ஆகியவற்றை இங்கே தெரிவித்தால் தீர்வு தர நண்பர் தனபாலன் காத்திருக்கிறார். பிரச்சனைக்கான தீர்வு தெரிந்த மற்றவர்களும் உதவிட வசதியாக இருக்கும்.  

இது போன்ற சில கட்டுப்பாடுகள் தவிர வேறு சில விஷயங்களும் நண்பர் தனபாலன் தனது பதிவில் சொல்லி இருக்கிறார். அதற்கான இணைப்பு இதோ!


இது ஒரு நல்ல விஷயம். இந்த திரட்டியை நல்ல விதமாகப் பயன்படுத்துவது பதிவர்களின் கையில் தான் இருக்கிறது. இப்போது தான் தொடங்கப்பட்டிருக்கிறது என்பதால் சிலர் கட்டுப்பாடுகளை படிக்காமல் வணக்கங்கள், காணொளி/லி என இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நேற்று காலை அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்னர் எல்லா இற்றைகளையும் பார்த்துவிட்டுச் சென்றேன். இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு வந்து அலைபேசியை உயிர்ப்பிக்க, தமிழ் வலைப்பதிவகம் குழுவிலிருந்து மட்டும் 77 இற்றைகள்! – அதில பல தவிர்க்க வேண்டிய செய்திகள்! மற்ற குழுவிலிருந்து 50 இற்றைகள்! இதைத் தவிர குடும்ப குழுமத்திலிருந்தும் சில இற்றைகள். அத்தனையும் படிக்க முடியுமா?

இந்த நல்லதோர் வசதியை சிறப்பாகப் பயன்படுத்துவது, பதிவர்களான நம் கையில் தான் இருக்கிறது. குழுவில் இணைபவர்கள் இதைக் கருத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன்.  புதிது புதிதாக வலைப்பதிவர்களை உருவாக்கி, சீரிய பல செயல்களைச் செய்து வரும் புதுகை நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்…..

இக்குழுவில் எனது முதல் இணைப்பும் இந்தப் பதிவாகத்தான் இருக்கப் போகிறது! நல்லதோர் திரட்டியை நல்ல விதமாகப் பயன்படுத்துவோம். நமது ஆக்கங்கள் பலரையும் சென்றடைய இந்த திரட்டியைப் பயன்படுத்துவோம்!

தொடர்ந்து ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

திங்கள், 26 டிசம்பர், 2016

திரிபுரா – எல்லைக் காட்சிகளும் இரவு உணவும்….



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 84

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


எல்லைக்கு அப்பால் வங்க தேசம்....

இந்திய எல்லையில் அமைக்கப்பட்ட முள்கம்பி வேலிக்கருகே சென்று சிறிது தூரம் நடந்தபடியே இந்திய வீரர்களிடம் பேசினோம். ஹரியானாவினைச் சேர்ந்த ஒருவர் தில்லியிலிருந்து நான் அங்கே வந்திருப்பது தெரிந்து என்னிடம் வந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அது என்னவோ, அவருக்கு தானே தில்லி வந்த உணர்வு. தலைநகர் வந்தால் உங்களைச் சந்திக்க வருவேன் என்று சொல்லி தொடர்புக்கு தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டார். நானும் அவரது எண்களை வாங்கிக் கொண்டேன்.

வங்க தேச வீரர்களும் எங்களுடன் முகமன்களை பரிமாறிக்கொண்டு சில விஷயங்களைப் பேசினார்கள்.  இந்திய எல்லை அகர்தலாவில் இருக்க, வங்க எல்லைப் பகுதியில் சில கிலோமீட்டர் தூரம் வரை கிராமங்கள் எதுவும் இல்லை. பொருட்களை எடுத்து வரும் லாரிகள் தான் அங்கிருந்து வருகின்றன.  எதாவது வாங்க வேண்டுமென்றால் சில கிலோமீட்டர் தொலைவு சென்று தான் வாங்க வேண்டியிருக்கிறதாம் அந்த வங்க தேச வீரர்களுக்கு!

வங்க தேச எல்லையில் வரவேற்பு அறை....

கொடியிறக்க விழா நடந்த பிறகும் அங்கே இருந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த பிறகு தான் நாங்கள் புறப்பட்டோம்.  பல வருடங்கள் கழித்து பார்த்துக் கொண்ட நண்பர்களுக்கு பிரிய மனதில்லை.  எல்லைப் பகுதியில் பார்த்த நண்பர், எங்களுடன் வந்த நண்பர் சசியை சில மாதங்கள் கழித்து திருவனந்தபுரத்தில் வந்து பார்த்திருக்கிறார் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்!  தொடர்ந்து நட்பில் இருக்கும் அவர்களுக்கு வாழ்த்துகள்… நட்பு தொடர்வது தானே அனைவருக்கும் மகிழ்ச்சி.

அங்கிருந்து ஓட்டுனர் ஷாந்தனு வண்டியுடன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து அங்கிருந்து புறப்பட்டோம்.  மதியமே ஒழுங்காக சாப்பிட முடியாததால் அறைக்குச் சென்று கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு இரவு உணவு சாப்பிட வேண்டும் என முடிவு எடுத்தேன்.  ஷாந்தனுவிடமும், தங்கிய இடத்தின் நிர்வாகியிடமும் இரவு உணவு பற்றிக் கேட்க, சைவ உணவுக்கென்று தனி உணவகங்கள் இங்கே கிடைப்பது கடினம் என்று சொன்னார்கள்.  சரி சப்பாத்தி கிடைக்குமா என கேட்க, பக்கத்திலேயே Foodies என ஒரு உணவகம் இருப்பதைச் சொல்லி அங்கே சாப்பிடச் சொன்னார்.  வட இந்திய உணவு நன்றாக இருக்கும் என்பதையும் சொல்ல, அங்கே தான் இரவு உணவு!


அகர்தலா மார்க்கெட் பகுதியில்.....

தவா ரொட்டி, ஆலு ஜீரா, வெஜ் ராய்த்தா என எனக்கு நான் உணவினைச் சொல்ல, நண்பர்கள் சப்பாத்தியுடன் அசைவ உணவு வாங்கிக் கொண்டார்கள்.  தங்குமிட நிர்வாகி சொன்ன மாதிரியே உணவு நன்றாகவே இருந்தது. மதியம் ஒழுங்காகச் சாப்பிடாததால் இரண்டு ரொட்டி அதிகம் உள்ளே போயிற்று! வயிறும் கொஞ்சம் வாழ்த்தியது! என்னதான் Adjust செய்து கொள்ளலாம் என்றாலும் சில நாட்களில் முடிவதில்லை!

நாங்கள் தங்கிய இடமும், சாப்பிட்ட உணவகமும் இருந்த சாலையின் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது – Motor Stand Road! எதற்காக அந்தப் பெயர் வந்தது என்று பார்த்தால், அந்தப் பகுதியில் தான் பேருந்து நிலையம் – முன் நாட்களில் சிற்றுந்ந்துகள் நிற்குமிடம் இருந்திருக்கிறது. அகர்தலாவின் Motor Stand Road ரொம்பவே பிரபலமாம்!

இரவு உணவு சாப்பிட்ட பிறகு அகர்தலா நகரின் சாலைகளில் சில நிமிடங்கள் நடந்து கொண்டிருந்தோம்.  கடைத் தெருக்கள், உணவகங்கள் என பார்த்துக்கொண்டு ஆங்காங்கே கிடைக்கும் காட்சிகளை பார்த்தபடியே சென்று திரும்பினோம். அன்றைய தினம் பார்த்த இடங்களைப் பற்றி பேசியபடியே தங்குமிடம் திரும்பினோம்.  அடுத்த நாள் அகர்தலாவின் மற்ற இடங்களைப் பார்க்க வேண்டும் – அதனால் கொஞ்சம் சீக்கிரமாகவே உறங்கி சீக்கிரமாகவே எழுந்திருக்க எண்ணம்.  கொஞ்சம் தூங்கிவிட்டு வருகிறோம். அது வரை காத்திருங்கள்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

வட இந்திய நடனங்கள் – புகைப்படங்கள்



இந்த ஞாயிறில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவது சில புகைப்படங்கள் – வழக்கம் போல ஞாயிற்றுக் கிழமை என்றால் புகைப்படங்கள் தானே! இந்த புகைப்படங்கள் எடுத்து சில மாதங்கள் ஆகிவிட்டன என்றாலும் இப்போது தான் பகிர்ந்து கொள்கிறேன். தலைநகர் தில்லியில் நடந்த இரண்டாவது கலாச்சாரத் திருவிழா சமயத்தில் தினமும் மாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பதைப் பற்றி சில பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்தப் புகைப்படங்களும் அத் திருவிழாவில் எடுக்கப்பட்டவையே. நடனங்கள் பெரும்பாலும் உத்திரப் பிரதேசம், உத்திராகண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவை.  நடனங்களின் பெயர்கள் மறந்து விட்டாலும் நடனம் மறக்க வில்லை! நடனத்தின் போது எடுத்த சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு!


படம்-1:  நம்மளா இருந்தா கைகளை விழாமல் பார்க்கவே சிரமப்பட்டிருப்போம்! இவர் பத்து கைகளோடு ஆடினார் - அதுவும் பாட்டுப் பாடியபடியே!



படம்-2:  உத்திரப் பிரதேசத்தின் ஒரு நடனம்.. 
ஆண்களின் உடை சாதாரணமாக இருக்க, பெண்களுக்கு மட்டும் ஜிகுஜிகு உடைகள்!



படம்-3:  நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.....



படம்-4:  வட இந்திய நடனம் என்றாலே கைகளில் ஒரு துணியைக் கொடுத்து விடுவது ஏன்!


படம்-5:  ஒயிலாய் ஒரு நடை....


படம்-6:  முன்னும் பின்னும்! 


படம்-7:  என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா....


படம்-8:  சுற்றிச் சுற்றி நடனம்....


படம்-9:  குச்சிகளில் நின்று நடனமும் புல்லாங்குழல் வாசிப்பும்!


படம்-10:  ஒரு வித பிரமீடு! கொஞ்சம் அசைந்தாலும் விழ வேண்டியது தான்!


படம்-11:  மலையால் ஒரு குடை - காட்சி!


 படம்-12:  மேலே ஒருவரைச் சுமந்தபடி, குச்சிகளின் மீது நின்று கொண்டு குச்சியால் நடக்கவும் செய்கிறார்! என்ன ஒரு திறமை!


படம்-13:  மனிதர்கள் கொண்டு ஒரு வண்டி!


படம்-14:  ஓட்டமாய் ஓடும் வண்டி...


படம்-15:  தோகை விரித்தாடும் மயில்....

என்ன நண்பர்களே, படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

வெள்ளி, 23 டிசம்பர், 2016

ஃப்ரூட் சாலட் 188 – கடவுள் எங்கே - டிஜிட்டல் உலகம் - இரண்டாம் அழகி


இந்த வார செய்தி:

டிசம்பர் 5 ம் தேதி மாலை, முதல்வர் தன் இறுதி மூச்சுகளில் வாழ்ந்து கொண்டிருந்த தருணம், பிரளயத்தை முன்கூட்டியே அறிந்துகொண்ட பறவைகள் போல மொத்த மக்களும் தத்தம் கூடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். என் கூட்டை நோக்கி விரையும் முன், என் கூட்டு பறவைகளுக்கான அடுத்தநாள் அத்தியாவசிய உணவை வாங்க கே.கே.நகர் அய்யப்பன் கோயில் அருகில் கிரேஸ் பல்பொருள் அங்காடியில் நுழைந்தேன். ஆனால் உள்ளே நிற்கக்கூட இடமில்லாமல் கலவரமும் கவலையும் ஒரு சேர அங்காடியின் ஒவ்வொரு அங்குலமும் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்தது. நானும் சில உணவு பொருட்களை தேடி அதில் நீந்த தொடங்கினேன். தீடிரென ஒரு குரல் அயர்ச்சியும் அன்புமாக என்னை நோக்கி ஒலித்தது.

"அண்ணே, இது உங்களுதா ?" என கையில் ஒரு தங்க பிரேஸ்லெட் சகிதம் பணியாளர் சீருடையில் ஒரு பெண்.

"ஐயயோ, இவன் என் ஓனர் இல்லை, கொடுத்திறாதே" என அவள் கையில் கத்தி கதறிய ப்ரேஸ்லெட்டை பார்த்தேன், கண்டிப்பாக மூன்று பவுனுக்கு குறையாமல் இருக்கும்.

“இல்லைம்மா, என்னுது இல்லை ! ஏன் என்ன ஆச்சு ?”

"யாரோ இதை கீழ போட்டாங்கன்னே, யார்னே தெரில!!" என தங்கம் தொலைத்து விட்ட அதன் உரிமையாளரை தேடி அந்த கூட்டத்தில் தானும் தொலைந்து போனாள். எட்டி பார்த்தேன், இன்னொரு அண்ணனிடம் விசாரித்து கொண்டிருந்தாள் , இப்படியே பல அம்மாக்கள், தம்பிகள் என அவைவரிடமும் விசாரணை நடந்தேறியது, ஆனால் அடுத்தவர் தங்கத்தை தத்தெடுக்க யாரும் தயாராய் இல்லை.

'இதென்னடா எனக்கு வந்த சோதனை என தங்கம் இவளை பார்க்க, கண்டுபிடிச்சிடலாஞ்சாமி, கவலைப்படாத' என இவளும் ஒன்றாக தங்க வேட்டையை தொடர்ந்தனர். அப்போதுதான் 'முதல்வர் இறந்துவிட்டார்' என்ற தந்தி டிவியின் வதந்தி பலபேருக்கு பயத்தில் வாந்தி பேதியை வர வைத்தது. வாங்கியதை அப்படியே போட்டுவிட்டு மக்கள் வீட்டுக்கு விரைய தொடங்கினர், தொலைதொடர்பு நெருக்கடியால் ‘பில்லிங்’ நிறுத்தப்பட்டு கடையின் ஷட்டர் பாதி சாத்தப்பட்டது. அப்போதும் விடா முயற்சியாய் தக்காளி மூட்டைக்கு பக்கத்தில் நின்று தங்கம் யாருதுங்க என கேட்பவளை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியுமாய் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது, "என்னுதுங்க.. ஏங்க அது என்னுதுங்க” என்ற ஒரு மெல்லிய குரலுடன் நன்றியும், நாணமுமாய் அதன் உரிமையாளர் தங்கத்தை நோக்கி விரைந்தார். சிறு விசாரணைக்கு பின் அவரிடம் ப்ரேஸ்லெட்டை கொடுத்துவிட்டு அவரைவிட அளவற்ற மகிழ்ச்சியுடன் திரும்பிய பெண்ணிடம் சில கேள்விகள் கேட்டேன்.

“இவ்வளவு களேபரத்திலும் அந்த தங்கத்தை கொடுத்தே ஆகணும்னு எப்படிம்மா உனக்கு தோணுச்சு ?”

"இல்லைண்ணே, ஒரு குண்டுமணி தங்கம் வாங்கிறது எவ்வளவு கஷ்டம்னு யாருக்கு தெரியுமோ இல்லையோ, எனக்கு நல்லா தெரியும்" என தன் வெறும் கைகளை ஆட்டி சொன்னபோது கண்களில் கண்ணீர் பனிக்க ஒன்றை உணர்ந்தேன், வறுமையில் நேர்மை என்பது தங்கத்தை விட விலைமதிப்பற்றது, பிரகாசமானது, பரிசுத்தமானதும் கூட..

“சரி தவற விட்ட தங்கத்தை இவ்வளவு நேர்மையா, சாதாரணமா திருப்பி கொடுத்திருக்கியே! உன் பேரு என்னம்மா ? "

“செல்வகுமாரி' ண்ணே”.


நல்ல மனம் கொண்ட செல்வகுமாரிக்கு இந்த வாரத்தின் பூங்கொத்து. முகப்புத்தகத்தில் இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்ட திரு ஹரி அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

”ஓடாத, விழுந்துடுவ” என எச்சரிக்கப்படும் குழந்தையை விட, ‘கவனமாக ஓடு’ என ஊக்கப்படுத்தப்படும் குழந்தையே, வாழ்க்கையை சரியான கோணத்தில் பார்க்க கற்றுக் கொள்கிறது.   

இந்த வார குறுஞ்செய்தி:

பழகும் வரை உண்மையாய் இரு. பழகிய பின் உயிரையும் கொடு….

இந்த வார WhatsApp Message:



சோகமே உருவாய் ஒரு தாய் அமர்ந்திருக்க, அவரது சிறு பெண், அம்மாவைப் பார்த்து சொன்னாள் – “அம்மா, இந்த உலகத்திலேயே நீ தான் ரெண்டாவது அழகி!” 

அம்மா கேட்டாள் – “செல்லம், யாருடா அந்த முதலாவது அழகி?”

அதற்கு மகள் சொன்ன பதில் – “அதுவும் நீ தான்மா…  ஆனா சோகமா இருக்காம, சந்தோஷமா இருக்கும்போது!”

இந்த வார கார்ட்டூன்:

இந்த வாரத்திற்கு இரண்டு கார்ட்டூன்! இரண்டுமே ஒருவிதத்தில் சம்பந்தப்பட்டவை தான் – ஒன்று தமிழில் மற்றது ஹிந்தியில்….



ஹிந்தி தெரியாதவர்களின் வசதிக்காக…. அதன் மொழிபெயர்ப்பு – ”கட்டணக் கழிவறை – Digital Payment தான்! உரிமையாளர் சொல்கிறார் – “நெட் ஒர்க் வரல, அது வர வரைக்கும் கொஞ்சம் தடுத்து நிறுத்தி வை!” எதை என்பதை சொல்ல வேண்டுமா!

இந்த வார காணொளி:




காமிரா கண்கள் வழியாகவே பார்த்துப் பார்த்து இயற்கையாக பார்க்க மறந்து விடுகிறோம்!


படித்ததில் பிடித்தது:

கடவுள் எங்கே? எப்படி?

ஒரு குளத்தில் ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ''அம்மா! நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கிறாய்.

அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது ? எனக்குக் காட்டு'' எனக் கேட்டது. உடனே தாய் மீன் இதுதான் தண்ணீரென்று தண்ணீரைக் காட்டியது. குட்டி மீனுக்கு ஒன்றும் புரியவில்லை.

''அம்மா!நீ தண்ணீரைக் காட்டு'' என மீண்டும் சொல்லியது. மீண்டும் தாய் மீன் தண்ணீரைக் காட்டியது.

அப்போதும் குட்டிமீனுக்கு தண்ணீர் தெரியவில்லை.

உடனே அது இந்த அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லிக் கொண்டே, அப்பா மீனிடம் இதே கேள்வியைக் கேட்டது. அப்பாவும் அதே மாதிரி தண்ணீரைக் காட்ட அப்பாவுக்கும் ஒன்றும் தெரியாது எனத் தீர்மானித்து விட்டது. பிறகு உறவினர்களிடம் போய் இதே கேள்வியைக் கேட்டது. எல்லோரும் ஒரே பதிலையே சொன்னார்கள். திருப்தி அடையாத மீன் யாருக்குமே ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்து இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் வந்து தண்ணீரைக் காட்டச் சொன்னது.
உடனே திமிங்கலம் குட்டி மீனை தன் முதுகில் ஏறச் சொன்னது. குட்டி மீனும் முதுகில் ஏறியது. கரை நோக்கிச் சென்ற திமிங்கலம் குட்டி மீனை கரையில் எறிந்தது. குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிருக்குப் போராடியது. அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது. அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது.

அதுபோல்தான் கடவுளும் உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு உருவில் நிரம்பி இருந்தாலும் பலருக்கும் அவர் தெரிவதில்லை. எல்லோரும் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தனக்கு உள்ளே இருக்கும் கடவுளை யாரும் உணர்வதே இல்லை. கடவுளை அனுபவித்துதான் அறிய முடியும்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

வியாழன், 22 டிசம்பர், 2016

திரிபுரா – பகோடா – நண்பர்கள் சந்திப்பும் மகிழ்ச்சியும்….



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 83

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


படம்-1: அகர்தலா - வங்க தேச எல்லையில் கொடியிறக்கம்...

அகர்தலாவில் உள்ள வங்க தேச எல்லையில் மாலை நேரத்தில் நடக்கும் கொடி இறக்க விழாவினைக் காணச் சென்ற போது எங்கள் குழுவில் வந்திருந்த நண்பரைப் பார்த்த உடனே “நீ சசி தானே?” என்று கேட்டார் அங்கே இருந்த கேரளத்தினைச் சேர்ந்த BSF வீரர் ஒருவர்!  அவர் அப்படிக் கேட்டவுடன் எங்களுக்கு மட்டுமல்ல நண்பர் சசிக்கும் அதிர்ச்சி. முகத்தில் கொஞ்சம் பயமும் கூட! இவருக்கு என்னை எப்படித் தெரியும் என்ற கேள்வி அவர் மனதிலும் இருக்க, கேட்டுவிட்டார். நாங்களும் அந்த வீரர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ளக் காத்திருந்தோம்.

படம்-2: அகர்தலா - வங்க தேச எல்லையில் இரு நண்பர்கள்...

நண்பர் சசி பற்றி அவருடைய கேரள நண்பர்களுக்கே தெரியாத விஷயம் ஒன்று அந்த எல்லைப் பகுதிக்குச் சென்ற போது தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த விஷயம், நண்பர் சசி தன்னுடைய இள வயதில் சில மாதங்கள் – அதாவது இரண்டு மாதங்கள் BSF-ல் பணி புரிந்தது. கேரள அரசாங்கத்தில் பணி கிடைப்பதற்கு முன்னர் இங்கே இருந்தாராம். அவருக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட இடம் ஹரியானாவில்! கேரளத்திலிருந்து ஹரியானா வந்த சசிக்கு மொத்தமாய் இந்த வேலை பிடிக்காமல் போக, எப்படியாவது வேலையை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்று புலம்பிய காலம் அது!

 படம்-3: அகர்தலா - வங்க தேச எல்லை - மீசைக்கார நண்பா......

அந்த இரண்டு மாத காலம் சசியும் நாங்கள் சந்தித்த BSF வீரரும் ஒரே பிரிவில் இருந்திருக்கிறார்கள். அதை இன்னமும் நினைவில் வைத்திருந்து அந்த வீரர் இவரைப் பார்த்த உடனே கண்டுபிடித்திருக்கிறார்! அவர் ஒவ்வொரு விஷயமாக எடுத்துவிட எங்கள் அனைவருக்குமே ஆச்சரியம். அந்த விஷயங்கள் நடந்தது பல வருடங்களுக்கு முன்னர்! அத்தனை விஷயங்களையும், இரண்டே மாதம் ஒன்றாய் ஒரு பிரிவில் பணி புரிந்ததையும் நினைவு வைத்திருந்தார் அந்த வீரர்.

படம்-4: அகர்தலா - வங்க தேச எல்லை - நிகழ்வினைப் பார்க்க நின்று கொண்டிருக்கும் வங்க தேச மக்கள்...

எல்லையில் BSF நடத்தும் அந்தச் சிறிய கடையினை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த வீரர். பணியை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அதற்குள் நிறைய வீரர்கள் – தமிழகம், கேரளம், ஹரியானா, பஞ்சாப் என எல்லா மாநில வீரர்களும் அடக்கம் – அனைவரிடமும் நண்பரையும் எங்களையும் அறிமுகம் செய்து வைத்து எங்களுக்கு இன்னும் ஒரு முறை தேநீர் கொடுத்து உபசரித்தார். 

படம்-5: அகர்தலா - வங்க தேச எல்லையில்... 
இரு தேச வீரர்கள் சந்திப்பு..

அதற்குள் கொடியிறக்க விழாவும் துவங்க, நாங்கள் இந்தியப் பகுதியில் நின்று கொண்டு [உட்காரும் வசதி வெகு குறைவு – வா[g]கா அளவு இங்கே நடக்கும் விழா அத்தனை பிரபலம் இல்லை என்பதால் வசதிகள் குறைவு] கொடி இறக்க விழாவினைப் பார்த்தோம். வீரர்கள் நடப்பதும், கொடியை இறக்குவதும், BSF Band இசைப்பதும் அத்தனை அழகு. நமது வீரர்களிடம் இருந்த மிடுக்கும், கம்பீரமும் ஏனோ வங்க வீரர்களிடம் இல்லை என்று தோன்றியது! நமது வீரர் ஒருவருடைய மீசை இந்தியப் பகுதியில் இருந்த பலருக்கும் பிடித்திருந்தது!

படம்-6: அகர்தலா - வங்க தேச எல்லையில்...
இந்திய வீரர்கள் அணிவகுப்பு...

கொடியிறக்கத்திற்குப் பிறகு கொடியினை அழகாக மடித்து ஒரு வீரர் அதிகாரியிடம் கொடுக்க, இரண்டு பக்க வீரர்களும் இனிப்புகளைப் பகிர்ந்து கொள்ள, இரண்டு பக்கத்திலிருந்தும் மக்களும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டு விழா இனிதே முடிந்தது. அதிகாரிகள் சென்ற பிறகு வங்க தேச வீரர்களிடமும் இந்திய வீரர்களிடமும் நாங்கள் பேசினோம். எல்லைப் பகுதி என்றாலும் பாகிஸ்தான் எல்லை போல, இங்கே அத்தனை பதட்டமோ, கெடுபிடிகளோ இல்லை. ஆனாலும், இந்த எல்லை வழியாகவும் நிறைய ஊடுருவல்கள் – வேலை தேடி வருபவர்கள் உண்டு!

படம்-7: அகர்தலா - வங்க தேச எல்லையில்....
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு!...

எல்லைப் பகுதி பற்றியும், வீரர்களின் அன்றாட வாழ்வு பற்றியும், அவர்களது பிரச்சனைகள் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  எல்லையில் இருப்பதால் பல சமயங்களில் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. பணியும் ரொம்பவே கடினமான ஒன்று. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடிவதில்லை. பாகிஸ்தான் எல்லையை விட இந்த எல்லைப் பணி கொஞ்சம் சுலபமானது என்றாலும் அதிக வருடங்கள் இங்கே இருக்க முடியாது. ஒன்றிரண்டு வருடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள் இவர்கள் – பணிமாற்றம் ஆகிவிடும்.

படம்-8: அகர்தலா - வங்க தேச எல்லையில்....
தொப்பி...  தொப்பி....

அந்த வீரர் மற்றும் வேறு சில வீரர்களிடம் பேசிக் கொண்டிருந்த பிறகு, நாங்கள் புறப்படுவதற்கான நேரமும் வந்து விட்டது.  பல வருடங்கள் கழித்துப் பார்த்த அந்த கேரள நபரிடம் அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  அதெல்லாம் சரி தலைப்பில் பகோடா என எழுதிவிட்டு, அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று நீங்கள் கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன்! அந்த வார்த்தை ஒரு ஹிந்தி வார்த்தை!

படம்-9: அகர்தலா - வங்க தேச எல்லையில்.... 
தேசியக்கொடி அதிகாரியிடம் கொடுக்கப்படுவதற்கு முன்பு...

ராணுவம், பாதுகாப்புப் படைகள் ஆகியவற்றில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அது பிடிக்காமலோ அல்லது அதன் கடுமையான உழைப்பு தரும் அயர்ச்சியாலோ, சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிடுவது வழக்கம்.  அப்படி ஓடிவிடுபவர்களைக் குறிக்க பயன்படுத்தும் வார்த்தை – [B]பகோ[D]டா! Baagnaa என்றால் ஓடுவது – அதிலிருந்து உருவான வார்த்தை தான் இந்த பகோடா! நண்பர் சசியைப் பார்த்தவுடன் அந்த கேரள வீரர் சொன்ன வார்த்தை தான் பகோடா! 

படம்-10: அகர்தலா - வங்க தேச எல்லையில்...
வங்கதேச வீரர்கள்...

ஏதோ, வங்க தேச எல்லையில் நாங்கள் வெங்காய பகோடாவோ, காலி ஃப்ளவர் பகோடாவோ சாப்பிட்டதாக எண்ணியிருந்தால் கம்பெனி பொறுப்பேற்க முடியாது! சரி நண்பர்களே, அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன, என்ன செய்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.