சனி, 10 டிசம்பர், 2016

மேகாலயா – Living Root Bridges



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 76

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


Double Decker Living Root Bridge

பூங்காவிலிருந்து நாங்கள் புறப்பட்டுச் சென்ற இடம் பற்றி பார்க்கும் முன்னர் மேகாலயா சென்றால் பார்க்கத் தவறவிடக்கூடாத ஒரு இடம் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். நாங்கள் அந்த இடத்தினைப் பார்க்கத் தவறிவிட்டோம் என்றாலும் அடுத்து பயணிக்கப் போகும் நீங்கள் பார்க்கத் தவறிவிடக்கூடாது எனும் நோக்கில் அந்த இடம் பற்றிய தகவல்கள் இந்தப் பகுதியில்.



மேகாலயா – வடகிழக்கு சகோதரி மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் அதிக அளவில் பெய்யும் மழைக்கு எப்படி சிரபுஞ்சி பிரபலமோ அது போலவே மிகவும் பிரபலமான ஒரு விஷயம் Living Root Bridges! இயற்கை கொடுத்த சீதனமான மரங்களின் வேர்களைக் கொண்டு பாலங்கள் அமைப்பது, அதுவும், அவற்றை வெட்டாமல், வேர்களை, ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு பரவ வைத்து அவற்றை பாலமாக்கி சிற்றோடைகளையும் கால்வாய்களையும் கடக்க பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு பாலமும் அமைக்க/வளர்க்க சுமார் 15 வருடங்கள் வரை ஆகிறது.



சிரபுஞ்சியை அடுத்து இருக்கும் கிராமம் Tyrna. இந்த கிராமத்தின் அருகே நிறைய பாலங்கள் இருக்கிறது – Ummunoi Root Bridge, Umkar Root Bridge, Ritymmen Root Bridge, Umshiang Double Decker Root Bridge, Mawsaw Root Bridge என அழைக்கப்படும் ரப்பர் மரத்தின் வேர்களால் அமைக்கப்படும் பாலங்கள் இருக்கின்றன.  இந்தப் பாலங்களைப் பார்க்க கொஞ்சம் மெனக்கட, நடக்க, Trek செய்ய வேண்டும். இல்லை முடியாது என்பவர்கள் பங்க்ளாதேஷ் எல்லை அருகே Mawlynnong Living Root Bridge சென்று பார்க்கலாம். 



Ummunoi Root Bridge:  Laitkynsew எனும் கிராமத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த பாலம் சுமார் 54 அடி நீளம் கொண்டது. சுமார் 1400 அடி கீழ் நோக்கி நடக்க வேண்டியிருக்கும். Ummunoi ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலம் தான் இப்பகுதியில் இருப்பதிலேயே பழைய பாலம்.  மூன்று முதல் நான்கு மணி நேரங்களில் இங்கே சென்று பார்த்து திரும்பிவிடலாம் [நடக்கும் நேரம், பாலம் பகுதியில் இருக்கும் நேரம் எல்லாம் சேர்த்து].

Umkar Root Bridge: Siej கிராமத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்தப் பாலம். ஆனால் காட்டுவெள்ளத்தில் பாலத்தின் ஒரு பகுதி அடித்துக் கொண்டு போய்விட, கிராம வாசிகள் இதனை மீண்டும் வளர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தப் பாலத்தின் அருகே ஒரு நீர்வீழ்ச்சியும் உண்டு. அரை கிலோமீட்டர் தான் நடக்க வேண்டும் என்பதால் நெடுந்தூரம் நடக்க, ட்ரெக் செய்ய இயலாதவர்கள் இந்தப் பாலத்தினைப் பார்க்கலாம்.

Ritymmen Root Bridge: Tyrna கிராமத்திலிருந்து, இந்தப் பாலம் அமைந்திருக்கும் Nongthymmai கிராமத்திற்கு நடந்து செல்ல வேண்டும். சென்று திரும்ப சுமார் இரண்டு மணி நேரமாகலாம். இருப்பதிலேயே அதிக நீளம் கொண்ட பாலம் சுமார் 100 அடி நீளம் கொண்டது இந்தப் பாலம்.




Umshiang Double Decker Root Bridge: Tyrna கிராமத்திலிருந்து தான் இந்தப் பாலத்திற்கும் நடக்க வேண்டும்.  சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டும்.  படிகளும் நிறைய ஏறி இறங்க வேண்டியிருக்கும். உம்ஷியாங்க் ஆற்றின் குறுக்கே Nongriat கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம் இரண்டு அடுக்குகளைக் கொண்டது என்பது இதன் சிறப்பு.  சுமார் 65 அடி நீளம் கொண்ட இந்த இரட்டைப்பாலம் வரை நடப்பது கடினமான பயணம் என்றாலும் பார்க்க வேண்டிய ஒரு இடம்.  முதலில் இங்கேயும் ஒரு பாலம் தான் இருந்திருக்கிறது. ஒரு முறை வெள்ளத்தின் போது தண்ணீர் பாலம் வரை வந்துவிட, கிராமத்தினருக்கு இரண்டாம் அடுக்குப் பாலமும் அமைக்கும் எண்ணம் தோன்ற, இரண்டடுக்கு பாலமும் வளர்க்கத் துவங்கிவிட்டார்கள்.  இப்போது அந்த இடத்தில் மூன்றாம் அடுக்கும் வளர்க்க திட்டமிருக்கிறதாம்!

Mawsaw Root Bridge: இரட்டைப் பாலத்திலிருந்து இன்னும் அரை மணி நேரம் நடந்து சென்றால் இந்தப் பாலத்தினை அடைந்து விடலாம். இங்கே இயற்கையாகவே சில குளங்கள் அமைந்திருக்கின்றன. விருப்பமிருந்தால் இங்கே குளிக்கலாம். மழைக்காலங்களில் அதைத் தவிர்ப்பது நல்லது.

உங்களுக்கு இந்த இடங்கள் சென்று வர விருப்பம் இருந்தால் முந்தைய பகுதியில் சொன்ன Cherrapunjee Holiday Resort –ல் தங்கிக் கொண்டு அவர்கள் மூலமாகவே இந்தப் பகுதிகளுக்குச் சென்று வரலாம்.  மேல் விவரங்கள் வேண்டுபவர்கள் மேலே உள்ள சுட்டியில் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

என்ன நண்பர்களே, உங்கள் அடுத்த பயணத்தில் இங்கே சென்று வர திட்டம் போட ஆரம்பித்து விட்டீர்களா?  அங்கே சென்று மகிழ்வுற எனது வாழ்த்துகள்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  2. கொடிப்பாலம் மிக அருமை.கிராமவாசிகளின் வளர்ப்பு வியக்க வைக்கிறது.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  3. இதுவரை அறிந்திராதது
    மரப்பாலத் தகவல்
    அற்புதமான படங்களுடன்
    பகிரத் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  4. இயற்கையின் அழகும் மனிதர்களின் சாதுர்யமும் ஒருங்கே பாலம் போல் இணைந்திருக்கின்றன.. அழகிய படங்களுடன் இனிய பதிவு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. உங்கள் மூலமாக பல புதிய இடங்களைக் காணும் வாய்ப்பு. அடுக்கடுக்காக பாலம் அமைக்கும் அரிய பணியைப் பற்றி படிக்கும்போது வியப்பாக இருநதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. அழகான இடங்கள் ஜி! ஆனால் என்னால் போக முடியும் என்று தோன்றவில்லை. இங்கேயே கண்டு களித்துக் கொள்கின்றேன்.

    கீதா: படங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன் வெங்கட்ஜி! எல்லாவற்றையும் குறித்துக் கொண்டுவிட்டேன். கண்டிப்பாகப் பார்த்துவிட வேண்டிய இடம். விரிவான தகவல்களுக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  7. இயற்கை பாலம் பார்க்கவே அருமை ,நடந்து பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறதே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....