இந்த வார
செய்தி:
நேஹா
மெஹந்திரத்தா – 18 வயது பெண் – சமீபத்தில் வெளியான CBSE Class XII தேர்வில்
50.26 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 95 சதவீதத்திற்கும் மேல் பலர்
மதிப்பெண் பெறும் இந்நாட்களில் இந்த தேர்ச்சி என்ன பெரிய விஷயம் என
நினைக்கிறீர்களா! மேலே படியுங்கள்.
நேஹாவிற்கு ஒரு
வினோதமான சுவாசம் சம்பந்தமான பிரச்சனை – ஆங்கிலத்தில் இதை Old
Pulmonary Koch’s disease with bronchitis, bronchial hyper-reactivity with type
II respiratory failure எனச் சொல்கிறார்கள். இந்தப் பிரச்சனை
இருப்பவர்களுக்கு இயற்கையாக பிராண வாயு கிடைப்பதில்லை – செயற்கையாக அவர்களுக்கு
பிராண வாயுவை ஒரு உபகரணம் மூலம் கிடைக்கச் செய்தால் தான் அவர்களால் சீராக
சுவாசிக்க முடியுமாம்.
செயற்கையாக
பிராண வாயு இருந்தும் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் தேர்வு எழுத முடியாது. உடலில் ஏற்படும் பலவீனம் அவர்களை ரொம்பவே
படுத்தும் எனவும், அதன் காரணமாக தேர்வில் ரொம்பவும் சிரமப்பட்டு 60 சதவீத
கேள்விகளையே அவரால் எழுத முடிந்தது எனச் சொல்கிறார் நேஹா. படிப்பதில் ஆர்வமும் மனோ
பலமும் கொண்ட காரணத்தினாலேயே இவர் விடா முயற்சியுடன் தேர்வு எழுதி தேர்ச்சி
பெற்றிருக்கிறார்.
இவரது
தேர்ச்சிக்கு இவரை மட்டுமே பாராட்டுவதும் சரியல்ல – இவரது தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுனர்
– நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் தலைவர். தனது மகளின் நிலை கண்டு தளர்ந்து
விடாது தொடர்ந்து உழைத்து தனது மகளுக்குத் தேவையான உபகரணத்தினை வாங்கி தனது
வீட்டிலே வைத்திருக்கிறார். உபகரணத்தின் விலை – 38000/-. ஒவ்வொரு முறையும்
பிராணவாயு சிலிண்டர் நிரப்ப இவருக்கு ஆகும் செலவு 180/- ரூபாய். ஆகவே தொடர்ந்து
செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
நேஹா பத்தாம்
வகுப்பு படிக்கும்போது ஆரம்பித்த பிரச்சனை – பல்வேறு மருத்துவமனைகள் – பல்வேறு
மருத்துவர்கள் என தொடரும் சிகிச்சை – இப்போது வாழ்நாள் முழுதும் இப்படி செயற்கையாக
பிராணவாயு கிடைத்தால் தான் உயிர் வாழ முடியும் எனும் நிலை – இருந்தாலும் மனோபலத்துடன்
மேலும் படிக்க ஆசைப்படுகிறார் இவர். மேலும் படித்து ஒரு ஆசிரியராகவோ அல்லது
காவல்துறையிலோ பணி புரியவேண்டுமென்ற உத்வேகம் இருக்கிறது இவரிடம்.
இவரது
மனோபலத்தினையும் இவரது தந்தையின் விடாமுயற்சியையும் நிச்சயம் பாராட்டத்தான்
வேண்டும்......
இந்த வார முகப்புத்தக இற்றை:
மூன்று விஷயங்கள் நமக்கு வேண்டும் – உணர்வதற்கான இதயம்,
சிந்தனைத் திறனுள்ள மூளை மற்றும் வேலை செய்யக்கூடிய கைகள் – ஸ்வாமி விவேகானந்தர்.
இந்த
வார குறுஞ்செய்தி:
மன அழுத்தத்தினையும்,
கவலைகளையும் சேர்த்து வைக்கும் கூடையல்ல உங்கள் இதயம்! மகிழ்ச்சியை
சேமித்து வைக்கும் தங்க பெட்டகம் உங்கள் இதயம்.... உங்கள் இதயத்தினை என்றும்
சந்தோஷமாகவே வைத்திருங்கள்....
ரசித்த T-SHIRT வாசகம்
திருவரங்கத்தில் ஒரு கடையில் இருக்கும்போது
சமீபத்தில் கல்யாணம் ஆன தம்பதிகள் – பையனுக்கு இருபத்தியோரு வயதிருக்கலாம் – அவர் அணிந்திருந்த
T-SHIRT-ல் இருந்த வாசகம் –
“I DON’T NEED GOOGLE, MY WIFE KNOWS EVERYTHING’ – அதை உண்மையாக்கவோ என்னமோ
எல்லாவற்றிற்கும் மனைவியைக் கேட்டுக் கொண்டிருந்தார்!
ராஜா
காது கழுதை காது:
திருவரங்கத்தில் “ரங்கா ரங்கா”
கோபுரத்தினை புகைப்படம்
எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மூதாட்டி வந்து யாசகம் கேட்டார் –
எப்போதும் இருக்கும் மக்கள் கடலில் நின்று தத்தளித்தபடியே புகைப்படம் எடுத்துக்
கொண்டிருந்ததால் அவரைக் கவனிக்காது இருந்தேன். இரண்டு முறை யாசகம் கேட்டபிறகு ஒன்றும்
தராததால் புகைப்படம் எடுப்பதிலேயே முனைப்போடு இருந்த என்னைப் பார்த்து அவர்
சொல்லிச் சென்றது – “பாவி, பாவி, படுபாவி!”
ரசித்த காணொளி:
இந்தக் காணொளியைப் பாருங்களேன் –
நீங்களும் நிச்சயம் உங்கள் குழந்தைப் பருவத்திற்குச் செல்வீர்கள்!
என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
டிஸ்கி: ஏனோ
என்னுடைய சென்ற இரு பதிவுகளுமே என்னைத் தொடர்பவர்களின் டாஷ்போர்டில் அப்டேட்
ஆகவில்லை! இருபதிவுகளின் சுட்டி கீழே.