சமீபத்தில்
திருப்பாவை பற்றிய ஒரு பிரசங்கம் நண்பரது வீட்டில் இருந்தது. தில்லியில் சமஸ்கிருத
பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஒரு பேராசிரியர் திருப்பாவையின் பாசுரங்களில்
பொதிந்திருந்த அர்த்தங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலான அவரது
பிரசங்கத்தில் சொன்ன விஷயங்கள் நிறையவே.
அதிலிருந்து ஒரு பகுதி மட்டும் என்னுடைய இப்பகிர்வுக்கு பயன்படுத்த
நினைத்திருக்கிறேன்.
நன்றி: கூகிள்
கடந்த
சில வாரங்களாகவே சில வலைப்பூக்களில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் இந்த
வருடத்தில் தாங்கள் கடந்த பாதையை சற்றே திரும்பிப் பார்த்து அந்த நினைவுகளைப்
பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாது, அதை தொடர் பதிவாகவும் ஆக்க முடிவு செய்து ஐந்து
ஐந்து பேராய் அழைத்து இருந்தார்கள்.
முந்தைய
தொடர் பதிவுகள் போல ஏனோ இத் தொடர் பதிவுக்கு அத்தனை ஆதரவு இல்லாதது போலத்
தோன்றுகிறது. தொடர்ந்து எழுதிய பதிவர்கள்
மிக மிகக் குறைவே என்பது எனது எண்ணம். வலைப்பூவில் எழுதும் பலருக்கும் தொடர்ந்து
எழுதும் ஆர்வம் சற்றே குறைந்து விட்டது போலத் தோன்றுகிறது. தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த சில பதிவர்கள்
இப்போதெல்லாம் மாதத்திற்கு இரண்டு மூன்று பதிவுகள் எழுதுவதே பெரிய விஷயமாக
இருக்கிறது.
நன்றி: கூகிள்
இப்படி
இருக்க, நான் கடந்த இரண்டு மாதமாக, அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு
மாதங்களிலும் தினம் ஒரு பதிவு எழுதி வந்திருக்கிறேன். இது எனக்கே கொஞ்சம் அதிகமாகத்
தான் தோன்றுகிறது. எழுத வேண்டிய, எழுத
நினைத்திருக்கும் பதிவுகள் நிறையவே இருக்கின்றன, என்றாலும், இந்த புத்தாண்டு முதல்,
தினம் தினம் பதிவுகள் எழுதுவதை குறைத்துக் கொள்ள நினைத்திருக்கிறேன்.
தற்போது
வெளிவந்து கொண்டிருக்கும் ஓவியக் கவிதைகள் முடிந்த பின் தினம் ஒரு பதிவுகள்
வெளிவருவதைக் குறைத்துக் கொண்டு, முன் போலவே வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு
பதிவுகள் மட்டுமே எழுத நினைத்திருக்கிறேன். எழுதுவதிலும், வலைப்பூக்களைப்
படிப்பதிலும் அதிகமாக நேரம் போவது போல தெரிகிறது. செய்ய வேண்டிய வேலைகள் சில செய்ய
முடிவதில்லை.
சற்றே
திரும்பிப் பார்த்தால், இந்த வருடத்தில் மட்டும் நான் எழுதிய பதிவுகள் 245 –
இப்பதிவு உட்பட. அதாவது வருடத்தின் 365
நாட்களில் 120 நாட்கள் மட்டுமே பதிவுகள் எழுதாது விட்டிருக்கிறேன். இத்தனை
பதிவுகள் எழுதி விட்டது மலைப்பாக இருந்தாலும், இது கொஞ்சம் அதிகம் என்றே
தோன்றுகிறது.
சரி
திரும்பிப் பார்க்கிறேன் எனச் சொன்னதும், முதல் பத்தியில் சொன்ன திருப்பாவை
விளக்கம் மனதுக்குள் வந்து அதைப் பற்றிச் சொல்லவில்லை என்பதை
நினைவுபடுத்துகிறது.
விலங்குகளில்
ஒரே ஒரு விலங்குக்கு மட்டும் தான் இப்படி திரும்பிப் பார்க்கும் வழக்கம்
உண்டாம். ஒவ்வொரு பத்து அடி நடந்ததும்
சற்றே நின்று அப்படியே திரும்பிப் பார்க்குமாம் அவ்விலங்கு. எதற்கு என்றால் தன்னை
யாராவது பின்புறத்திலிருந்து தாக்க வருகிறார்களா என்பதைப் பார்க்கவும், தான்
பயணித்து வந்த பாதை சரியானதுதானா என்பதைத் தெரிந்து கொள்ளவும் திரும்பிப்
பார்க்குமாம் அந்த விலங்கு! அந்த விலங்கு என்ன என்று தானே கேட்கப்
போகிறீர்கள்....... அவ்விலங்கு காட்டின்
ராஜா சிங்கம்.
நன்றி: கூகிள்
அந்தச்
சிங்கத்தினைப் போல நான் திரும்பிப் பார்ப்பதாகவோ, என்னை பதிவுலக சிங்கம் என்றோ
யாரும் நினைத்து விடவேண்டாம்! எனக்குத் தெரிந்து சிங்கம் தவிர வேறு சில
மிருகங்களும் திரும்பிப் பார்ப்பதுண்டு...... :)
திரும்பிப்
பார்த்தபோது இவ்வருடத்தில் மட்டுமே முன் பத்தியில் சொன்னது போல வெளியிட்ட பதிவுகள்
245, அதில் ”கல்லும்
முள்ளும் காலுக்கு மெத்தை”
என்ற தலைப்பில் வெளியிட்ட சபரிமலைப் பயணம் பற்றிய பதிவுகள் – 13, ”ரத்த பூமி” என்ற தலைப்பில் வெளியிட்ட குருக்ஷேத்திரப் பயணம்
பற்றிய பதிவுகள் – 10, அலஹாபாத் நகரில் நடைபெற்ற மஹா கும்பமேளா போது அங்கே சென்று
வந்த நினைவுகள் பற்றிய பயணக் கட்டுரைகள் – 8 என பயணக் கட்டுரைகள் வெளியிட்டது தவிர
சென்ற பயணங்கள் இன்னும் உண்டு.
எனது பதிவுகளில் எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஃப்ரூட்
சாலட் பதிவுகள், அவ்வப்போது வெளியிடும் மனச் சுரங்கத்திலிருந்து, தலைநகரிலிருந்து
தொடர்கள், குறும்படங்கள், ”படித்ததில் பிடித்தது” என்ற தலைப்பில்
எழுதிய புத்தக வாசிப்பு அனுபவங்கள், சாலைக் காட்சிகள் என சில பகுதிகள்
இவ்வருடத்திலும் தொடர்ந்து வரும்.
வருடத்தில் சந்தித்த மனிதர்களும் கிடைத்த அனுபவங்களும்
என்னை நிறையவே பாதித்த சில விஷயங்களும் என நிறையவே இருக்கிறது. நல்லதை மட்டும்
நினைவில் வைத்திருப்போம் என்ற எண்ணத்துடன் அவ்வப்போது கெட்ட விஷயங்களை மறந்து
விடுவது நல்லது. அதனால் அவற்றை அங்கங்கே விட்டு விடுகிறேன்.
செப்டம்பர் மாதத்தில் சென்னை பதிவர் சந்திப்பில் நிறைய
பதிவர்களை சந்தித்த்தில் மகிழ்ச்சி. என்ன ஒரு வருத்தம் – நிறைய பேருடன் பேச
முடியவில்லை – கேமரா கையோடு அலைந்ததில்!
அடுத்த சந்திப்பின் போது படங்கள் எடுப்பதை விட்டு, எல்லோருடனும் பேச
வேண்டும்!
வருடம் முழுவதும் எனது பதிவுகளைப் படித்து கருத்திட்ட
அனைவருக்கும் அவ்வப்போது நன்றி சொல்லி இருந்தாலும், மீண்டும் ஒரு முறை இங்கே
வருடத்தின் முடிவில் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது.
இவ்வருடம் முழுவதும் எனைத் தொடர்ந்து படித்து,
பின்னூட்டங்கள் மூலம் ஊக்கமளித்து வந்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. புத்தாண்டில் புத்துணர்வோடு சந்திப்போம்......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.