வட இந்திய கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வட இந்திய கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 12 செப்டம்பர், 2018
வியாழன், 31 மே, 2018
யார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…
”நிறுத்துங்க!”
”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின்
உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப்
பார்க்கிறார்கள்.
Labels:
அனுபவம்,
காணொளி,
பொது,
வட இந்திய கதை
புதன், 27 ஜூலை, 2016
முதல் கலப்பை – பீஹார் மாநில கதை
”முண்ட கலப்பை” என்று சிலர் திட்டுவார்கள். ஏன் அப்படி திட்டுகிறார்கள் என்று யாரும்
யோசித்ததில்லை. எப்படி வந்தது இந்த வாக்கியம்?
ஆனால் இன்று பார்க்கப் போகும் கதைக்கும் இந்த வாக்கியத்திற்கும் எந்த
சம்பந்தமும் இல்லை. இது முதல் கலப்பை உருவான கதை!
பீஹார் மாநிலத்தில்
[தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தில்] முண்டா எனும் பழங்குடியினர்கள் உண்டு. பீஹார்,
ஜார்க்கண்ட் தவிர மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, மத்தியப் பிரதேசம் மற்றும்
ஒடிசா மாநிலங்களிலும் முண்டா பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். நமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்களுள்
ஒருவரான பீர்சா முண்டா பற்றி நீங்கள் படித்திருக்கலாம். இந்த முண்டா பழங்குடியினர்
கதை ஒன்று தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.
மனிதனைப்
படைத்து அவனுக்கு உயிரூட்டிய பிறகு கடவுள் நிலத்தை உழுது பயிரிட்டு அவன்
வாழ்வதற்கு உகந்ததோர் கருவியும் கொடுக்க உளம் கொண்டார். எனவே கடவுள் கலப்பை
உருவில் அதை அளிக்கும் முயற்சியில் வெகுகாலம் ஈடுபட்டார். ஒரு பெரிய மரத்தை
எடுத்து அதை ஒரு கலப்பையாக, உழுமுனை, பற்றும் பகுதி, பிடி எல்லாம் கொண்ட ஒரே
பகுதியாகச் செதுக்கினார். அவர் மும்மரமாக இதில் ஈடுபட்டிருந்ததால் வீடு திரும்பி
மனைவியைப் பார்க்கவும் மறந்து போனார்.
அவர் துணைவி
ஒரு கொசுவை அவரை அழைத்துவர ஏவினாள். கொசு அவரிடம் சென்று காதைச் சுற்றி
ரீங்காரமிட்டது. ஆனால் கடவுள் அசைந்து கொடுக்காமல் வேலையில் மூழ்கிப்
போயிருந்தார். இதனால் மிகவும் சினம் கொண்டு ஒரு புலியை அனுப்பினாள். புலி அவரருகில்
சென்று இலைகளை அசைத்துச் சல சலக்கச் செய்து அவரைக் கவர்ந்தது. கடவுள் சிறு
செதுகுத் துண்டை அதன் மீது எறிந்து, “ஓடிப் போ காட்டு நாயே!” என்றார். அந்தச் செதுக்குத் துண்டு உடனே காட்டு நாயாக மாறிப்
புலியைத் துரத்திற்று. அதன் காரணமாகவே இன்றும் புலி காட்டு நாய்க்கு அஞ்சுகிறது.
கடவுள்
வெகு நாட்கள் சென்றபின் கலப்பையை முடித்துக் கொண்டு வீடு சென்று மனைவியிடம்
பெருமையுடன் அதைக் காட்டினார். மனைவி நகைத்து, அவர் அதைச் செய்து முடிக்கப் பல
நாட்கள் ஆனதால் மக்களுக்கு அது உதவாது என்றாள். அவர் காரணத்தை விளக்கக் கோரியபோது,
அது போல் கலப்பை செய்வதற்குகந்த பெரிய மரத்தைத் தேடுவது கடினம் என்றும், அதை ஒரே
துண்டாக எல்லாப் பகுதிகளுமுள்ள கலைப்பையாகச் செய்வதும் கடினம் என்றும், மேலும்
அதற்காக இவ்வளவு காலம் எடுத்துக் கொள்வது இயலாததென்றும் மொழிந்தாள்.
கடவுள்
ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது மனைவி, “கலப்பையைப் பூமியில் போடுங்கள். என்ன
ஆகிறதென்று பார்ப்போம்” என்றாள். அதை அவர் பூமியில் போட்டதும்
அது துண்டுகளாக உடைந்து போயிற்று. கடவுள் கலப்பை உடைந்தது கண்டு மிகுந்த கோபம்
கொண்டார். ஆனால், மனைவி தான் அதைவிட நல்ல கலப்பை செய்ய முடியும் என்றும், பெரிய
மரம் அதற்குத் தேவை இல்லை என்றும், நிலத்தில் விழுந்தால் அது உடையாது என்றும்
கூறி, அவரை அமைதி கொள்ளச் செய்தாள். கடவுள் அதற்கு இசைய, வானுலகத் துணைவி, கலப்பை
செய்யத் தொடங்கினாள். அவள் கலப்பையைச் செய்தாள். உழுமுனைப்பிடி – பற்றுப் பகுதி
எனத் தனித்தனிப் பகுதிகளாகச் செய்து கலப்பையில் துளைகள் அமைத்து, மிகக் குறுகிய
காலத்தில் அவற்றை ஒன்றாகப் பொருத்தி விட்டாள்.
கலப்பை
தயாரானதும் அவள் கணவனை விளித்து அதைத் தரையில் போட்டதும் உடைகிறதா என்றும்
பார்க்கும்படி கோரினாள். பூமியிலுள்ள மனிதன் அதை எடுத்துக் கொண்டு உடனே உழத்
தொடங்கிவிட்டான். கடவுள் மனைவியிடம், “நீ என்னை வென்று விட்டாய். ஆனால்
இன்றிலிருந்து எந்தப் பெண்ணும் கலப்பை செய்யும் பணியை மேற்கொள்ளலாகாது. ஆணே
செய்வான். பெண் அதைத் தொடவும் கூடாது” என்று
விதித்தார். அந்நாளிலிருது பெண்கள் கலப்பையைத் தொடவும் தகாதவர்களாயினர்.”
முண்டா பழங்குடியினரின்
நம்பிக்கையான இந்த முதல் கலப்பை உருவான கதை மட்டுமல்லாது பல பீஹார் மாநிலக் கதைகளை
வாசித்து ரசித்தது ஒரு புத்தகத்தில் தான். தில்லியின் புத்தகக் கண்காட்சி ஒன்றில்
வாங்கிய புத்தகத்திலிருந்து இக்கதை இங்கே. புத்தகம் பற்றிய மற்ற தகவல்கள்
கீழே......
புத்தகத் தலைப்பு –
பீகார் மாநில நாட்டுக் கதைகள்.
ஆங்கிலத்தில்
தொகுப்பு – திரு பி.சி. ராய் சௌத்ரி.
தமிழாக்கம் –
திருமதி ராஜம் கிருஷ்ணன்.
வெளியீடு: சாகித்ய அக்காதெமி.
முதல்
பதிப்பு – 1979. இரண்டாம் பதிப்பு – 1994.
விலை
ரூபாய் 65.
பீஹார் மாநிலத்தின் நாடோடிக்
கதைகள், விலங்குக் கதைகள், தந்திரசாலிகளின் கதைகள் என பல கதைகள் இந்தப்
புத்தகத்தில் உண்டு. பல கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. உங்களுக்கும் பிடிக்கலாம்.... விரும்பியவர்கள் வாங்கிப் படிக்கலாம்.... இன்னும் சில ஸ்வாரஸ்யமான கதைகளை பிறிதொரு
சமயத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
நாளை வேறொரு
பகிர்வில் சந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
Labels:
படித்ததில் பிடித்தது,
பொது,
வட இந்திய கதை
திங்கள், 27 ஜூலை, 2015
சப்பாத்தி – வட இந்திய கதை
வட
இந்தியாவில் உள்ள சிறு கிராமம். கிராமத்திலிருக்கும் வீட்டில் உள்ள பெண் தனது
குடும்பத்தினர் அனைவருக்கும் சப்பாத்தி செய்த வண்ணமே இருப்பார். எப்போது சப்பாத்தி
செய்தாலும், குடும்பத்தினர் அனைவருக்கும் செய்வது மட்டுமல்லாது ஒரு சப்பாத்தியை
அதிகமாகவே செய்து, அவற்றை தனது வீட்டு ஜன்னலின் திட்டுகளில் வைத்து விடுவாள்.
அவ்வழியே செல்லும் வழிப்போக்கர்கள் யாருக்காவது தேவையெனில் எடுத்துக் கொள்ளட்டும் என அப்படி வைப்பது வழக்கம்.
அந்த
கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு முதியவர் – அவருக்கென யாரும் கிடையாது.
தள்ளாடும் வயது. கூடவே கூன் முதுகு வேறு.
கையில் குச்சியை வைத்துக் கொண்டு தரையில் ஊன்றியபடியே கூன் முதுகோடு, தலையை
மட்டும் தூக்கியபடியே நடந்து செல்வார்.
ஒவ்வொரு நாளும் அந்தப் பெண்மணி வைத்திருக்கும் சப்பாத்தியை எடுத்துக்
கொண்டு ”தீவினை
செய்தால், உங்களுடனேயே அது தங்கிவிடும்....
நல்வினை செய்தால், அது உங்களுக்கே திரும்பி வரும்”
ஒவ்வொரு
நாளும் இப்படி பெண்மணி சப்பாத்தி வைப்பதும் அந்த முதியவர் அதை எடுத்துக் கொள்வதும்
தொடர்ந்து நடந்தது. அது போலவே அந்த
முதியவர் சப்பாத்தியை எடுத்துக் கொண்ட பின் ”தீவினை செய்தால், உங்களுடனேயே அது
தங்கிவிடும்.... நல்வினை செய்தால், அது
உங்களுக்கே திரும்பி வரும்” என்று சொல்வதும் தொடர்ந்தது. இப்படிச் சொல்வது தவிர வேறு ஒரு வார்த்தை பேச
மாட்டார் அந்த முதியவர்.
பல நாட்கள் இப்படி தொடர்ந்து நடக்க, சப்பாத்தி வைக்கும்
பெண்மணிக்கு மனதில் கோபம் உண்டாயிற்று. “நானும் தினம் தினம் இப்படி சப்பாத்தி
செய்து வைக்கிறேன். இந்த முதியவரும் அதை எடுத்துக் கொள்கிறார். ஆனாலும், அவருக்கு
கொஞ்சமாவது நன்றியுணர்ச்சி இருக்கிறதா? வாயைத் திறந்து நன்றி என ஒரு வார்த்தை கூட
சொல்லாமல், ஏதோ ’தீவினை
செய்தால், உங்களுடனேயே அது தங்கிவிடும்....
நல்வினை செய்தால், அது உங்களுக்கே திரும்பி வரும்’ என்று சொல்லிப்
போகிறாரே?” என்று யோசிக்கத் துவங்கினாள்.
அந்த யோசனை அவளுக்கு இன்னும் அதிக கோபத்தினை வரவைத்தது. அதிக கோபம் ஆபத்தான விளைவினை உண்டாக்குமே! அப்பெண்ணுக்கு அப்படி
கொடுமையான யோசனை உண்டாயிற்று.
நன்றியில்லாத
இந்த முதியவருக்கு ஒரு முடிவு கட்டுவோம் என நினைதாள். அடுத்த நாள் சப்பாத்தி
செய்யும் போது அந்த முதியவருக்காக தயாரித்த சப்பாத்தியில் விஷத்தினைக் கலந்து
தயாரித்தாள். ஜன்னல் திட்டில் வைக்கப் போகும்போது அவளது கைகள் நடுங்க ஆரம்பித்தன. மனதின்
ஓரத்தில் ஒரு சிந்தனை. ”என்ன
காரியம் செய்கிறோம். இதை வைத்தால் அந்த முதியவர் இறந்து விடுவாரே?” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு சப்பாத்தியை நெருப்பில் போட்டுவிட்டு,
வேறொரு சப்பாத்தியை ஜன்னல் திட்டில் வைத்தாள்.
அன்றைக்கும்
அந்த முதியவர், சப்பாத்தியை எடுத்துக் கொண்டு ”தீவினை செய்தால், உங்களுடனேயே அது
தங்கிவிடும்.... நல்வினை செய்தால், அது
உங்களுக்கே திரும்பி வரும்” என்று சொல்லியபடி சென்றார். பெண்மணியின் மனதில் நடந்த
மாற்றங்களோ, தடுமாற்றமோ அப்பெரியவருக்கு தெரியாது. பெரியவர் ஏன் இப்படிச் சொல்லி
விட்டுப் போகிறார் என்பதும் புரியாமலே இருந்தது.
அன்று மாலை அவளது வீட்டின் வாயில் கதவு தட்டப்படும் ஓசை
கேட்கிறது. வாயிலில் அவளது மகன் நின்று கொண்டிருக்கிறான். ஆறு மாதங்களுக்கு
முன்னர் வேலை தேடி வெளியூர் சென்ற மகன் – திரும்ப வந்திருக்கிறான். கிழிந்து போன
உடை, மெலிந்த தேகம், என பஞ்சத்தில் அடிபட்டவன் போல காட்சி தருகிறான். உள்ளே வந்ததும்
அன்னையிடம் சொல்கிறான் “இன்னிக்கு நான் இங்கே உயிரோட வந்ததே பெரிய விஷயம்.
இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் முன் நான் பசியில் துவண்டு விழ இருந்தேன். அங்கே ஒரு
கூன் முதுகு பெரியவர் இருந்தார். அவரிடம் ஏதாவது உணவு தரச் சொல்லிக் கேட்டேன்.
அவர் ”நான் தினமும் சாப்பிடுவது ஒரு சப்பாத்தி மட்டும் தான்.
இன்றைக்கு என்னை விட அதிகமாய் உனக்குத் தான் தேவை. நீ சாப்பிடு” எனக் கொடுத்தார். அவர் கொடுக்காவிடில் அங்கேயே எனது உயிர் பிரிந்திருக்கும்
என்று சொல்ல, பெண்மணிக்கு பயங்கர அதிர்ச்சி.
தான் மட்டும் அந்த பெரியவருக்கு விஷம் வைத்த
சப்பாத்தியைக் கொடுத்திருந்தால், நம் மகன் அல்லவா இன்று அதை சாப்பிட்டு
இருப்பான். என்ன காரியம் செய்ய இருந்தேன்
என்று தன்னையே திட்டிக் கொண்டார்.
அப்போது தான் அந்தப் பெரியவர் தினமும் சொல்லும் வாசகத்திற்கான அர்த்தமும் புரிந்தது!
நாம்
செய்யும் நல்ல விஷயத்திற்கான பாராட்டு கிடைக்கிறதோ இல்லையோ, தொடர்ந்து நல்லதே
செய்வோம். நமக்கும் நல்லதே நடக்கும்!
டிஸ்கி: ஹிந்தி மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.....
Labels:
பொது,
வட இந்திய கதை



