இந்த வார செய்தி:
செங்கல்லுக்கு
பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் சுவர்
கரூர் : வெளிநாட்டில் உள்ள ஒரு
தனியார் நிறுவனம் “டிசைன் பார் சேஞ்ச்” என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் போட்டி
நடத்துகிறது. இப்போட்டிகள், எதிர்கால உலகை தரமானதாகவும், சுகாதாரமானதாகவும், மாசில்லாத வகையிலும் உருவாக்கும்
அடிப்படையில் இருக்கும். இப்போட்டியில் கரூர் மாவட்டம் தாந்தோணிமலை ஒன்றியம்
ஆட்சிமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் - மாணவர்கள்
கலந்து கொண்டனர் என்பதை விட அவர்கள் செய்த போட்டிக்கான பணி சிறப்பானது!
கட்டிடத்துக்கு மிக முக்கியமான
அடிப்படை தேவையான செங்கல்லுக்கு பதிலாக ஏன் பிளாஸ்டிக் பாட்டிலைகளை பயன்படுத்தக்
கூடாது என இவர்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினர்.
பள்ளியை சுற்றிலும் குறிப்பிட்ட து£ரம் வரை சுற்றுச்சுவர் இல்லாமல் இருக்க,
சுற்றுச்சுவர் கட்ட முடிவு செய்திருக்கிறார்கள்.
இதற்காக, நான்கு நாட்களாக, மாணவர்கள் தங்களின் வீடுகளில்
இருந்தும், மற்ற வீடுகளுக்கு சென்றும் 1,300 குடிநீர் மற்றும் குளிர்பான காலி பாட்டில்களை சேகரித்தனர். முதல்கட்டமாக இந்த
பாட்டில்களில் மணல் நிரப்பப்பட்டது. பின்னர், வழக்கம் போல் கொஞ்சம் தண்ணீர், மண் கலவையை வைத்து, அதன் மேல் செங்கலுக்கு பதிலாக இந்த
மணல் நிரப்பிய பாட்டில்களை வரிசையாக அடுக்கி வைத்து,
அதன் மேல் மீண்டும் மண் கரைசலை வைத்து சுற்றுச்சுவரை 3 நாட்களில் உருவாக்கினர். இந்த பள்ளியில் பயிலும் ஒரு மாணவனின் தந்தை
கொத்தனராக இருப்பதால் அவர் தனது குடும்பத்துடன் வந்து சுற்றுச்சுவர் எழுப்ப
உதவியாக இருந்தார். மொத்தம் ஸீ5500 செலவில்,
25 அடி நீளம், 4 அடி அகலத்தில் ஒரு
சுற்றுச்சுவரும், மற்றொரு பகுதியில் 4 அடி நீளம், 4 அடி அகலத்தில் மற்றொரு சுவரும்
உருவாக்கப்பட்டது.
இதே அளவு சுற்றுச்சுவர் செங்கல்
கொண்டு கட்டப்படும் பட்சத்தில் ஒரு சதுர அடிக்கு ரூ.200
என்ற அடிப்படையில் ரூ.23ஆயிரத்துக்கும் அதிகமான செலவு
பிடிக்கும். ஆனால், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை
செங்கலுக்கு பதிலாக பயன்படுத்தியதால் ரூ.5500ல் பணிகள் முடிவடைந்தது. நான்கில்
ஒரு மடங்கு செலவு செய்தாலே போதும். நீண்ட ஆயுளும் கிடைக்கும். சுற்றுச்சூழல்
மாசுபடாத வகையில் மக்காத பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களும், நகரை மாசுப்படுத்தாமல், பாதுகாப்பு அரணாக திகழ்ந்து
விளங்கும் என்றனர்.
நன்றி:
தினகரன்.
இந்த வார முகப்புத்தக இற்றை:
THE ABILITY
TO SPEAK SEVERAL LANGUAGES IS AN ASSET, BUT THE ABILITY TO KEEP YOUR MOUTH SHUT
IN ANY LANGUAGE IS PRICELESS.
இந்த வார குறுஞ்செய்தி:
எழுந்து
நடந்தால் இமய மலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும்
நம்மை சிறை பிடிக்கும்...
ரசித்த விளம்பரம்:
சரக்கடித்து
விட்டு வாகனங்களை ஓட்டும் மனிதர்களை தங்களது நிறுவனத்தின் ஓட்டுனர்களை
அமர்த்திக்கொள்ள சிபாரிசு செய்யும் இந்த விளம்பரம் சமீபத்தில் பார்த்தேன். விளம்பரம் சோமபானம் அருந்தியவர்களை திருத்தி
இருக்குமோ இல்லையோ, என்னை நிச்சயம் கவர்ந்தது! நீங்களும் பாருங்களேன்!
ரசித்த பாடல்:
தங்க மீன்கள்
படத்திலிருந்து ”ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாடல் இந்த வார ரசித்த பாடலாய். சில
நாட்கள் முன்னர் தான் முதல் முறையாகக் கேட்டேன். அதன் பின்னர் பலமுறை! நீங்களும்
கேட்க!
இந்த வார புகைப்படம்:
ஒரு
தீப்பெட்டியில் இருக்கும் தீக்குச்சிகளை வைத்து என்ன செய்யலாம்? ”அடுப்பு/விளக்கு பத்த
வைக்கலாம்” என்று தான் இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தேன்! இல்லை என்கிறது இப்படம்! தீக்குச்சி
எதிலிருந்து வந்ததோ அதையே செய்யலாம் என்கிறது படம்! பாருங்களேன்....
படித்ததில் பிடித்தது:
இன்றைக்கு ”படித்ததில் பிடித்தது” பகுதியில் ஒரு கவிதை! கவிதை எழுதியவர்
”ஸ்ரீ”.
உன்
மௌனத்தை ஒரு கரையாகவும்
என் எழுத்தை [ஏக்கத்தை]
மறுகரையாகவும் கொண்டு
நகர்கிறது
வாழ்க்கை நதி
உன் மௌனம்
உன்னை எனக்கு
உணர்த்துவதை விட
என்னை
எனக்கு
அதிகமாய் உணர்த்துகிறது
நீ
என்னை என்னவாக
உணர்கிறாய் என்பது
உள்பட!
உன் மௌனங்களின் வெளியில்
என் எண்ணங்கள்
இப்போது நடக்கத்தொடங்கிவிட்டன!
நல்ல பயிற்சிக்குப் பின்பு!
எல்லையற்ற அந்த பரந்தவெளியில்
தொன்ம கனவுகளையும்
தொல்லை தரும் நினைவுகளையும்
விடவும் முடியாத,
அடையவும் முடியாத,
அவஸ்தையுடன் என்
அலைச்சல்கள்!
-
ஸ்ரீ
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.