திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஸ்பெஷல் மீல்ஸ்!

இரயில் பயணங்களில் – 4

சாதாரண ரயில் பயணத்தில் கிடைக்கும் உணவிற்கும் ராஜதானி விரைவு வண்டியில் கிடைக்கும் உணவிற்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. உணவு வகைகளை அலுமினியம் ஃபாயில் டப்பாவில் வைத்து அப்படியே கொடுப்பது சாதா ரயிலில். அதை ஒரு நெகிழி தட்டில் வைத்துக் கொடுத்தால் அது ராஜ்தானி! இதில் கிடைக்கும் உணவு வகைகளும் அதன் தொல்லைகளும் இந்தப் பதிவில் பார்க்கலாமா!

 படம்: நன்றி கூகிள்.....

வண்டியில் அமர்ந்து சரியான நேரம் கழித்து புறப்பட்டவுடன் “Welcome Drinks” தருவார்கள்! ஆஹா பரவாயில்லையே என தமிழ்க்குடிமகன்கள் ரொம்ப ஆசைப்பட வேண்டாம்! வெறும்ரயில் நீர்தான்! பிறகு ஒரு சமோசா, அதற்கு தொட்டுக்கொள்ள கெச்-அப், ஒரு சின்ன டப்பியில் சோன்பாப்டி, ஒரு சிறிய பாக்கெட் வறுத்த கடலை [கடலை மாவில் குளிப்பாட்டி பொறித்தது!], மற்றும் பால் பவுடர், சர்க்கரை, ஒரு டீ பேக்!

இதையெல்லாம் சாப்பிட்டு முடிப்பதற்குள் ஒரு சின்ன ஃப்ளாஸ்க்கில் வென்னீர் வர ப்ளாஸ்டிக் கப்பில் பால்பவுடர், சர்க்கரை போட்டு கலந்து கொஞ்சமாக வென்னீர் விட்டு கலந்து டீ பேக்-னை போட்டு ஆட்டிக் கொண்டே இருந்தால் தேநீர் வண்ணத்தில் வென்னீர் கிடைக்கும்! அதை தேமேன்னு குடிச்சுட்டு பக்கத்துல இருக்கற மற்ற பயணிகளை கவனிக்க ஆரம்பிச்சா கொஞ்சம் நேரம் போகும்!

அடுத்ததா ஒரு சிறிய தட்டில் ஒரு வெண்ணை பாக்கெட், இரண்டு ஸூப் ஸ்டிக்ஸ், ஒரு சிறிய பாக்கெட் மிளகுத் தூள் கொண்டு வந்து தருவார். பிறகு ஒரு கப் ஸூப் வரும்.  நிறைய பேருக்கு ஸூப் ஸ்டிக்ஸ் பார்க்கும்போதே நாய்க்கு போடும் எலும்புத்துண்டு நினைவுக்கு வர வெண்ணையில் முக்கிகடக், முடக்என்ற சப்தத்தோடு கடித்துச் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.  ஒரு சிலர், குறிப்பாக வட இந்தியர்கள், வெண்ணை மேல் மிளகுத் தூள் தூவி, ஸூப் ஸ்டிக் மூலம் வெண்ணையை எடுத்து சாப்பிடுவார்கள்இவர்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டால் கூட மசாலா தூவி சாப்பிடுவது வழக்கமாயிற்றே!

வெகு சிலரே ஸூப் வரும் வரை காத்திருந்து, ஸுப் ஸ்டிக் மூலம் வெண்ணையை எடுத்து ஸூப்பில் கலந்து தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து கலக்கி மெதுவாக அருந்துவார்கள்! என்னவோ தேவாமிர்தம் அருந்திய முகபாவனை வேறு காட்டுவார்கள்.  கொஞ்சம் சூடு குறைந்தால் அந்த ஸூப் என்று பெயர் கொண்ட திரவத்தினை வாயில் வைக்க முடியாது என்பது ரகசியம்!

அடுத்ததாய் உணவுஇரண்டு சப்பாத்திஓரங்கள் அப்படி ஒரு கூர்மை கொஞ்சம் பெரிய துண்டாக வாயில் போட்டால், உங்கள் தொண்டையை கிழித்தபடியே வயிற்றுக்குள் செல்லும் அபாயம் உண்டு! 50 கிராம் அளவிற்கு வேகவைத்த சாதம்அது என்ன பங்காளி சண்டையோ அதில் இருக்கும் சோற்றுப் பருக்கைகளுக்கு! தனித்தனியாகத் தான் காட்சி தரும்தண்ணீராக இருக்கும் “[Dh]தால் எனும் பதார்த்தத்தினை அதனுடன் கலந்த பிறகும்! அடுத்தது ஒரு பனீர் சப்ஜி! – மட்டர் பனீர், ஆலு பனீர், கடாய் பனீர் போல ஏதோ ஒன்று.

இந்த சாப்பாட்டிலேயே ரொம்பவும் சுகமானது, அலாதியானது என்று சொன்னால் அது சில சமயங்களில் அவர்கள் தரும் மதர் டைரி தயிர் தான்! பல சமயங்களில் வழியில் கிடைக்கும் சாதாரண தயிர்புளிப்போ புளிப்புஏதோ ஊறல்/டப்பா சோறு திறந்த ஒரு வாடை வரும் சில சமயங்களில்! ஒரு ஊறுகாய் பாக்கெட்! – அதை திறப்பதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்! சாப்பிடும் முன்னரே அதை திறந்து விடுவது நல்லது! இல்லையெனில் பல்லால் கடித்து அநாகரிகமாக திறக்க வேண்டியிருக்கும்! ஆனால் அந்த அநாகரீகம் தான் பலருக்குப் பிடித்திருக்கிறது என்பது கண்கூடு!

Lunch, Dinner என இதே மாதிரி சாப்பாடு தான்! சில சமயங்களில் மெனுவில் சிறு மாற்றங்கள் உண்டு! வட இந்திய உணவு வகைகளில் கோஃப்தா என்று ஒன்று உண்டுஅந்த கோஃப்தா பெரும்பாலும் உருளைக்கிழங்கு கொண்டு செய்தது தான் தருகிறார்கள் ரயிலில். சுரைக்காய், பருப்பு வகைகள் கொண்டும் இந்த கோஃப்தா செய்யலாம் என்பதை இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால் சுகம்!

ரொம்பவும் கொடுமையான விஷயம் என்றால் அது அவர்கள் தரும் ப்ரேக்ஃபாஸ்ட் தான்! வெஜிடேரியன் என்றால் ஒரு சிறிய கரண்டி அளவில் வெள்ளை கலரில் மொத்தையாக ஒன்று இருக்கும்அதன் பெயர் உப்புமா! அதன் மேல் பொன்னிறத்தில் ஒரு மொத்தைநடுவே ஒரு ஓட்டை இருப்பதால் அதன் பெயர் வடை என்று கொள்க! அந்த உப்புமா செய்தவருக்கு நள மஹாராஜா பட்டம் தரலாம்வெறுமே ரவையை வேக வைத்து கடுகு, மிளகாய், தாளிக்காது உப்புமா செய்கிறாரோ! கூடவே இரண்டு ஸ்லைஸ் Brown Bread. அதன் மேல் தடவ அமுல் பட்டர். ஒரு கப் லைம் ஜூஸ்.  கூடவே தேநீர் [] காப்பிWhat a combination! இப்படி ஒரு மெனு தயாரித்த மஹானுபாவர் யாரோ! அவருக்கும் ஒரு Special Award கொடுக்கலாம்!

இப்படி பயணத்தில் தொடர்ந்து கொடுத்து உங்களை அலுக்க வைத்தாலும் ஒரு சிலருக்கு இது ரொம்ப பிடித்திருக்கிறது! கதவைத் திறந்து சிப்பந்தி வரும்போதெல்லாம் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிகிறது சிலர் முகத்தில்அடுத்து என்ன வரும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடத்தில்! சமீபத்திய பயணத்தில் ஒரு மலையாள ஜோடிகதவைத் திறந்து அந்த சிப்பந்தி வரும்போது சேச்சியிடம் சந்தோஷ சாரல்! – “ஆயாளு வந்னு வந்னுஎன்று மகிழ்ச்சியோடு கூவினார்!

என் போன்ற சிலருக்கு அவரைப் பார்க்கும்போதே மனதில் கிலி! என்ன கொண்டு வந்தாலும், பசி இல்லையெனில் வேண்டாமென்று சொல்லி விடுவேன்! Lunch/Dinner முடிந்த பிறகு தரும் ஐஸ்க்ரீம் மட்டும் வேண்டாமெனச் சொல்வதில்லை! :)

இப்படியாக உணவினைப் பார்க்கும்போதே ஒரு வெறுப்பு உண்டாக்குவது தான் ராஜ்தானி விரைவு வண்டி! எப்போது வீட்டுக்கு வருவோம் என்று பல சமயங்களில் தோன்றி விடுகிறது! வீட்டிற்குச் சென்றதும் பழைய சாதத்தில் தயிர் விட்டு பிசைந்து ஒரு மோர் மிளகாயோ அல்லது வடு மாங்காயோ வைத்து சாப்பிட்டால்ஆஹா தேவாமிர்தம்!”

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

57 கருத்துகள்:

  1. சூப்பரா சொல்லிருக்கீங்க சார். மெனு வை விட நீங்கள் அவைகளை சொல்லியிருப்பதை ரசித்தேன். இன்னும் ராஜ்தானியில் பயணம் செய்யவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

      விரைவில் ராஜ்தானியில் பயணம் செய்ய வாழ்த்துகள்! :)

      நீக்கு
  2. ஹஹஹா.. நாங்களே பயணித்து ராஜதானி உணவை ருசித்தது போல் ஒரு அனுபவம்.. ஒவ்வொரு சுவை ஒவ்வொருவருக்கு பிடிக்கும் இல்லையா? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

      நீக்கு
  3. பொதுவாக ரயில் பயணத்தின்போது எதுவும் சாப்பிடுவதில்லை, ஆனால் நீண்ட தூரம் எனும்போது சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்.... இவர்கள் எப்போதுதான் நல்ல உணவு கொடுப்பார்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  4. // அதை தேமேன்னு குடிச்சுட்டு பக்கத்துல இருக்கற மற்ற பயணிகளை கவனிக்க ஆரம்பிச்சா கொஞ்சம் நேரம் போகும்!//

    உண்மையிலேயே நீங்கள்தான் பயணத்தை ரசிக்கத் தெரிந்தவர். சிலர் வீட்டில் படிக்க வேண்டியவற்றை பயணங்களின் போது எடுத்து வைத்துக் கொண்டு ஜன்னல் பக்கம் கூட திரும்புவதில்லை.

    // வீட்டிற்குச் சென்றதும் பழைய சாதத்தில் தயிர் விட்டு பிசைந்து ஒரு மோர் மிளகாயோ அல்லது வடு மாங்காயோ வைத்து சாப்பிட்டால் “ஆஹா தேவாமிர்தம்!” //

    உண்மையிலேயே தேவாமிர்தம்தான் சார்! நான் பழைய சாதம்,கெட்டித் தயிர் மாங்காய் ஊறுகாய்., கார வடகம் காம்பினேஷன் விரும்புபவன்.

    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  5. தேநீர் வண்ணத்தில் வெந்நீர்! :))))

    இவர்களுக்கு வாழைப்பழம் சாப்பிட்டால் கூட அம்சாலா தூவி சாப்பிடுவது வழக்கமாயிற்றே - ஐயே... இதைப் படித்த வுடன் நீங்கள் எங்கள் தோசைப் பதிவில் சொன்ன ஐஸ் க்ரீம் தோசை நினைவுக்கு வருகிறது!

    இன்னும் எவ்வளவு வரிகளை எடுத்து டுத்துப் போட்டுச் சிரிப்பது வெங்கட்? பங்காளிச் சண்டை, மொத்தை வர்ணனைகளும் சிரிக்க வைக்கின்றன.

    வீட்டுச் சாப்பாட்டைக் குறை சொல்பவர்களைத் திருத்த அரசாங்கம் ராஜதானி வழியாக பாடம் புகட்டுகிறது போல...

    கஷ்டங்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லி இருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. நான் என்னவெல்லாமோ நினைத்திருந்தேனே... ருசியான விமரிசனம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு

  7. //கொஞ்சம் சூடு குறைந்தால் அந்த ஸூப் என்று பெயர் கொண்ட திரவத்தினை வாயில் வைக்க முடியாது என்பது ரகசியம்!//\

    சூப்பா அது! டொமொட்டோ சாஸில் வெந்நீர் ஊற்றிச் சூடு பண்ணிட்டுக் கொடுப்பாங்க. :(

    //ஒரு ஊறுகாய் பாக்கெட்! – அதை திறப்பதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும்! சாப்பிடும் முன்னரே அதை திறந்து விடுவது நல்லது!//

    நாங்க தான் மு.ஜா. மு.அ.க்களாச்சே. கையிலே சின்னக் கத்திரி அல்லது ப்ளேடு வைச்சிருப்போம். ரயில் என்பதால் பரவாயில்லை. இப்போ மும்பையிலிருந்து விமானத்தில் வந்தப்போ ரங்க்ஸோட ஷேவிங் செட்டில் இருந்த ப்ளேடைக் கூட எடுக்கச் சொல்லிட்டாங்க. ஸ்கானிங்கில் ஜம்ம்னு தான் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து துரோகம் செய்தது அந்த ப்ளேட். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. முதல்முறை கமென்ட் போச்சானு தெரியலை. மு.ஜா. மு.அக்காவா கமென்டைச் சேமித்துக் கொண்டு மறுபடி கொடுத்திருக்கேன். போயிருக்கானு அப்புறமாத் தான் பார்க்கணும். :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      கமெண்ட் வந்திருக்கு....

      நீக்கு
  9. ஹிஹிஹி, கமென்டை ட்ராஃப்டிலும் போட்டு வைச்சுட்டேன். ஆபத்துக்கு உதவுமே! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா என்ன ஒரு முன் ஜாக்கிரதை உணர்வு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. ஆயுளில் ஒரே முறை மட்டுமே சாப்பிட நேர்ந்தால் பிடிக்குமோ என்னமோ! அதிலும் சென்ற முறை எமிரேட்ஸ் விமானத்தில் கொடுத்த புலாவ்.. மிக அதிக சூட்டில் கொடுத்தால் ருசி தெரியாது என்ற 'எல்லா விமானங்களுக்கும் பல நம் ஊர் ஓட்டல்களுக்கும்' பொதுவான விதிப்படி கொடுத்தார்கள். இருந்தாலும், எந்த ருசியுமே தெரியாமல் மண்ணை தின்பது போல் எப்படி சாப்பிடுவது? கம்ப்ளைன்ட் பண்ணிவிட வேண்டியது தான் என்று பக்கத்தில் பார்த்தால்.. பக்கத்தில் ஒரு குடும்பம் அதை மிக ரசித்து காலி பண்ணிக் கொண்டிருந்தது! சரிதான்! நமக்கு தான் நாக்கு நீளம் என நினைத்துக் கொண்டேன்.. அது சரி.. விமானத்தில் ஏன் மோர் சாதமும் மாவடும் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமானத்தில் மோர் சாதமும் மாவடுவும் கொடுத்தால்..... நல்ல கேள்வி. ஆனால் கொடுக்க மறுப்பது ஏனோ என்று புரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி [B]பந்து ஜி!.

      நீக்கு
  11. // வீட்டிற்குச் சென்றதும் பழைய சாதத்தில் தயிர் விட்டு பிசைந்து ஒரு மோர் மிளகாயோ அல்லது வடு மாங்காயோ வைத்து சாப்பிட்டால் “ஆஹா தேவாமிர்தம்!” //

    அதற்கொரு ஈடும் இணையும் உண்டோ!.. இந்த வையகத்தில்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  13. பயணம் முடியும் தருவாயில் அவர்கள் கேட்கும் டிப்ஸ்! ( மாமூல் / சில்லறை) பற்றி சொல்லத் தவறியதேன், நண்பரே ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமூல் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் சொன்ன நினைவு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்.

      நீக்கு
  14. ரயில் சாப்பாட்டின் நகைச்சுவை கலந்த வர்ணனை வரிகள் ரொம்ப ரசித்தோம்....அயோ ராஜதானி சாப்பாட்டை அல்ல...உங்கள் அனுபவ வரிகளை! "வெள்ளையாக மொத்தையாக" ஹாஹாஹா....

    சூப் எல்லாம் ரெடி மேட் பௌடர்தானே கலக்கி விக்கறாங்க...அதுல நிறைய வென்னீர் கலந்து...சூப் "சூப்புங்கனு" சொல்லித் தர்ராங்க....

    கடைசி வரிகள் வந்த உடனே தான் சார் சொர்கத்தின் நினைவு!

    ரொம்பவே ரசிச்சோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      ரெடி மேட் பௌடர் கூட இல்லை - ”கெட்ச் அப்” வென்னீரில் கலந்தால் சூப்!

      நீக்கு
  15. தண்டம்.தூக்கி எறியும் லட்சணத்தில் தான் இருக்கு.இதுக்கு சேர்த்து காசு வாங்கி உயிரை வாங்குது ரயில்வே துறை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

      நீக்கு
  16. ஒவ்வொரு உணவையும் விவரித்த பாங்கு மிக அருமை! நல்ல வேளை இந்த கொடுமையை அனுபவிக்கும் வேளை எனக்கு இன்னும் வரவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  17. ரா.ஈ. பத்மநாபன்25 ஆகஸ்ட், 2014 அன்று 5:27 PM

    அஃஹஹா! நம்ம ஊரு ரயில் வண்டிச் சாப்பாட்டை சூப்பரா ருசிச்சிருங்களே(???). பக்கத்திலே உட்கார்ந்து சாப்பிட்டவங்களையும் நல்லா ரசிச்சிருக்கீங்க! நல்ல ரசிகரய்யா நீர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  18. நமக்குப் பிடிக்காததை சிலர் மிக விரும்பிச் சாப்பிடுவது உண்டு என்பதால் அதை ஒட்டு மொத்தமாகக் குறை கூறலாமா? எழுதிய விதம் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  19. மிகவும் ரசனையுடன் சொல்லியிருக்கிறீர்கள் வெங்கட்! நானும் மிகவும் ரசித்துப்படித்தேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

      நீக்கு
  20. அந்தப் படத்தில் உள்ளது தான் இரயில் சாப்பாடா......

    ம்ம்ம்..... பசியுடன் இருந்தால் கூட பிடிக்குமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  21. ஆகா
    உணவை உண்பத்ற்கே ஒருவித சகிப்புத் தன்மை வேண்டும் போலிருக்கிறது
    வேறு வழி
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  23. அடடா,என்ன ஒரு ருசியான வர்ணனை, தேனில் ஊறிய பலா ச்சுளையினை விண்டு வாயில் போட்டால் இனிக்குமே, அந்தமாதிரி இருந்தது உமது ராஜதானி ரயில் பயணத்தில் சாப்பாட்டு அனுபவம். உமது , சாப்பாட்டு வகைகளில் இருந்த ஒவ்வொரு பதார்த்தங்களின் யதார்த்தமான, உண்மையான நிலையினை படம் பிடித்து காட்டி உங்கள் விசிறிகளை மகிழ்ச்சி கடலிலில் மூழ்க அடித்துவிட்டீர்கள் . உள்ளம் சோர்ந்திட்ட போதெல்லாம் , உமது சிரிப்பின் சிகரத்தினை தொட்டுவிட்ட கட்டுரையின் எழுத்துக்களை அசைபோட வைத்து ஒரு புத்துணர்வை வரவழைக்கும் என்பது திண்ணம். பொன்னியில் செல்வனில் திரு கல்கியின் வர்ணனையை உமது எழுத்து மிஞ்சி விட்டது என்றால் மிகையாகாது என்பது எமது கருத்தாகும்."பசி வந்திட்டால் பத்தும் பறந்து போகும் என்பது ஆன்றோர்" உரைத்திட மொழி . மனையாட்டியின் கை மணத்தினை அங்கீகரிக்க மறுக்கும் கனவான்களுக்கு உமது உண்மை கட்டுரை ஒரு பாடமாக அமையட்டும். எமது ஓட்டு, கரம் பிடித்திட்ட மங்கை நல்லாளின் தயிர் சாதமும் தொட்டுக்கொள்ள மா வடுவும்தான். வாழ்க உமது எழுத்துப் பணி, ஓங்குக உமது புகழ்.

    வேளச்சேரி நடராஜன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேளச்சேரி நடராஜன் ஐயா....

      நீக்கு
  24. ஐயோ:( ரயில் பயணமுன்னா வேற எந்த ஸ்டேஷனில் நல்லதா எதாவது கிடைக்கலாம். சில விமானப்பயணத்துலே மோசமான சாப்பாடு தர்றாங்க பாருங்க....... எங்கெ போய்ச் சொல்வேன்?

    ஒரு சமயம் சென்னையிலிருந்து பெண்களூர் ஷதாப்தியில் போய் வந்தப்ப... தின்னக்கொடுத்தே நம்மைக் கொன்னுட்டாங்க. ஏன் இப்படி அரைமணிக்கொருதடவை தீனி?

    உங்களுக்கு பொழுதன்னிக்கும் ரயில் பயணம், இதே சாப்பாடுன்னு பயங்கர அனுபவமா இருக்குதே:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  25. 50 கிராம் அளவிற்கு வேகவைத்த சாதம் – அது என்ன பங்காளி சண்டையோ அதில் இருக்கும் சோற்றுப் பருக்கைகளுக்கு! தனித்தனியாகத் தான் காட்சி தரும் //

    குழைவாய் சாதம் சாப்பிட்டு பழகிவிட்டு ரயிலில் கொடுக்கும் சாதம் தண்டனை.
    கஷ்டத்தையும் நகைசுவையாக சொல்லி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  26. ராஜதானியில் செல்லும் நாட்கள் அதிகமோ.கொடுமைதான். விமானப் பயணங்களில் அவர்கள் தரும் வெஜிடேரியன் மீல்ஸ் கதைதான். நான் இப்போதெல்லாம் வீட்டிலிருந்தே இரு வேளை உணவு எடுத்து வருகிறேன். ஐரோப்பிய விமானங்களின் வெண்ணேய் ரொட்டி எல்லாம் சுகமாக இருக்கிறது. சாதம் மட்டும் வாயில் வைக்க முடியாது. உங்கள் உணவு நகைச்சுவை கலந்த கதம்பம். இதை நீங்கள் அடிக்கடி அனுபவிக்க வேண்டி வருகிறதே என்று வருத்தமாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  27. நகைச்சுவையான உணவு. பயணங்கள் வாழ்க! :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  28. ரயிலில் இப்படியெல்லாம் மெனு இருப்பதை உங்க பதிவின் மூலம்தான் தெரிந்துகொண்டேன்.

    நானும் ஃப்ளைட்ல தயிர் டப்பாவை மட்டுமே காலி செய்வேன். ஐஸ்க்ரீம் வாங்க மறக்கமாட்டேன். எப்போடா வீட்டுக்குப் போயி ஒரு டீயைப் போட்டுக் குடிப்போம்னு இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      நீக்கு
  29. இந்த வருட மே மாதத்தில் முதல் முறையாக ராஜதானியில் சென்றோம். உணவைப் பற்றித் தெரியாமல், இட்லி மி.பொடியும், தயிர் சாதமும் எடுத்துக்கொண்டு சென்றிருந்தோம்.

    வரிசையா நீங்க சொல்லியிருப்பது போலத்தான் உணவு வருது. உண்மையா நான் ரசித்த ஒரே ஒரு பொருள் அந்த //அவர்கள் தரும் மதர் டைரி தயிர் தான்!//. அப்புறம் ஐஸ்க்ரீமும் (ஆனால் ஒரு சில நேரங்களில் அதனை உருக்கினாற்போல் இருக்கும்)

    மத்தபடி, எனக்குப் பிடிக்கவில்லை. அதிலும் எந்த மாதிரி இடங்களில் செய்ததோ என்ற எண்ணம் வருமாறுதான் இருக்கிறது. அரை வேக்காட்டில் சாதத்தை ஃபாயிலுக்குள் வைத்துவிடுவார்கள் போலிருக்கு. சூட்டில் முக்கால் வேக்காட்டில் வேகுவதால் தனித் தனியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....