புதன், 30 செப்டம்பர், 2015

அந்த ஏழு நாட்கள்!

வாரத்திற்கு ஏழு நாட்கள்!

அட என்னமோ யாருக்கும் தெரியாத விஷயத்தை சொல்ல வந்துட்டான் பாரு!

யாருப்பா அது அடுத்த வரியை படிக்காம குரல் உட்றது!

வாரத்தின் முதல் நாள் ஞாயிறா இல்லை திங்களா?

உலகெங்கும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நம்பிக்கை. பைபிள் சபாத் அல்லது சனிக்கிழமையை வாரத்தின் கடைசி நாளாகச் சொல்வதால், ஞாயிறு தான் வாரத்தின் முதல் நாள் என கிறிஸ்தவர்களும் யூதர்களும் நம்புகிறார்கள். ஆனால் International Standards Organization 8601 படி திங்கள் கிழமை தான் வாரத்தின் முதல் நாள். ஞாயிறு வாரத்தின் கடைசி என்பதை இங்கே சொல்வது அவசியமில்லை!

சரி வாங்க திங்க..... அட திங்க இல்லைங்க திங்கள் கிழமைக்குப் போவோம்!


படம்: இணையத்திலிருந்து....

திங்கள்: இந்த திங்கள் கிழமைன்னாலே School-க்குப் போற குழந்தைகளுக்கு மட்டுமில்லை Office- போறவங்களுக்கும் மனசு பூறா வெறுப்பு! ஏண்டா இந்த திங்கக் கிழமை வருது.... வேண்டா வெறுப்பா இல்ல, போக வேண்டியதா இருக்கு! ஆனாலும் போய்த் தானே ஆகணும்.  ஒவ்வொரு திங்கக் கிழமையும் இந்த வயசுலயும் கொஞ்சம் அழுவாச்சியாதான் வருது! ஆறு நாள் Office-க்கு [சனிக்கிழமை பொதுவா விடுமுறைன்னாலும் எங்களுக்கு விடுமுறை இல்ல!] போகணுமேன்னு அழுவாச்சி! பாருங்க பல இடத்தில படத்துல இருக்கற மாதிரி தான் நடக்குது!


படம்: இணையத்திலிருந்து....

செவ்வாய்:  நம்ம ஊருல ஒரு பழமொழி உண்டு – “செவ்வாயே வெறும் வாயே அப்படின்னு.  பொதுவா செவ்வாய்க் கிழமைகளில் எந்த நல்ல விஷயத்தையும் தொடங்க மாட்டாங்க! செவ்வாய் தோஷம் இருக்கறவங்களுக்கு கல்யாணம் நடக்கறது கஷ்டம்னு சொல்றதயும் கேட்டு இருக்கோம்.  ஹிந்தியில் இந்த செவ்வாய் கிழமைக்கு பேரு மங்கள்வார்!  [B]பஜ்ரங்க்பலி என அழைக்கபடும் ஹனுமானுக்கு உகந்த நாளாக இங்கே சொல்லப்படுவது செவ்வாய் கிழமையைத் தான். ஹனுமான் கோவிலுக்கு போய் பூந்தி நைவேத்தியம் செய்வது வழக்கம்! எனக்கு அந்த பூந்தி சாப்பிடுவது மட்டும் வழக்கம்!


படம்: இணையத்திலிருந்து....

புதன்: இந்த புதன் கிழமை இருக்கே, இந்த நாள் வாரத்தின் நடுவுல வர நாள்னு சொல்லலாம்! ஒரு வாரத்தில் அதிகமாக வேலை இருக்கற நாள் இந்த புதன் கிழமைன்னு கூட சொல்வாங்க! இந்த நாளை America-Hump Day-ன்னு சொல்வாங்களாம்! இப்படி சொல்ற பழக்கம் 1965-ஆம் வருடத்துல ஆரம்பிச்சதா கூகுள் சொல்லுது! அதாவது புதன் கிழமை முடிஞ்சாலே வார இறுதி வரப்போகுதுன்னு மனசுல கொஞ்சம் சந்தோஷம் வருமாம்!  அட இந்த பதிவு வெளிவற இன்னிக்குக் கூட புதன் கிழமை தாங்க! பதிவு படிச்ச உங்களுக்கும் சந்தோஷமா இருக்குல்ல.....


 படம்: இணையத்திலிருந்து....

வியாழன்: 1997-ஆம் வருஷம்..... Geoff Rickly (vocals), Tom Keeley (guitar, vocals), Steve Pedulla (guitar, vocals), Tim Payne (bass guitar), Andrew Everding (keyboards, vocals), and Tucker Rule (drums) இவங்க எல்லோரும் சேர்ந்து ஒரு Band ஆரம்பிச்சாங்களாம்! அந்த Band பேர் தெரியுமா?  Thursday!  ஆனாலும் இவங்களோட முதல் Album-ஆன Waiting வெளிவந்தது 1999-ஆம் வருஷம் தான்! அதற்குப் பிறகு Full Collapse, War All the Time, A City by the Light Divided, Common Existence and No Devolución ஆகிய Albums வெளியிட்டாங்க! அதற்குப் பிறகு பிரிஞ்சுட்டாங்க! இந்த பெயரில் வந்திருக்கும் Album எதாவது கேட்கணும்னா Youtube-ல இருக்கு பாருங்க!

படம்: இணையத்திலிருந்து....

வெள்ளி: ராதா ரவி ஒரு படத்துல வெள்ளிக்கிழமை ராமசாமிஎன்ற பெயரோட ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது உங்களுக்கும் தெரியும்.  ஆனா ஆங்கிலத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரம் உண்டு! அது தாங்க Man Friday.  Robinson Crusoe எனும் நாவல் 1719 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. அதில் ராபின்சன் க்ரூசோ பயணம் செய்த கப்பல் உடைந்து விட, ஒரு கிளி, ஒரு நாய் மற்றும் ஒரு ஆடுடன் தீவில் இருப்பார். அப்போது அங்கே காட்டுவாசிகள் ஒருவரை உண்ணப் போகும்போது அவனைக் காப்பாற்றி தனது உதவியாளனாக வைத்துக் கொள்வார். விசுவாசி! அந்த நபரை முதன் முதலாக வெள்ளிக்கிழமை அன்று பார்த்ததால் அவருக்குப் பெயரே Man Friday! நம்பிக்கையான உதவியாளரை இந்த பெயரில் அழைப்பது வழக்கமாகி இருக்கிறது.

படம்: இணையத்திலிருந்து....

சனி: என் கண் முன்னாலே நிக்காதே, சனியனே ஒழிஞ்சு போ!அப்படின்னு சில பேர் திட்டுவதை பார்த்திருக்கிறேன்.  சில அம்மாக்கள் குழந்தைகளை “சனியனேன்னு திட்டுறது கூட உண்டு! இங்க பாருங்களேன் ஒரு அம்மா என்ன சொல்றாங்கன்னு! தமிழருவி ம. ரமேஷ் என்பவர் எழுதிய இந்த கவிதை!

அப்பாவுக்கு 4
அம்மாவுக்கு 3
அண்ணனுக்கு 2
பாப்பாவுக்கு 1
தின்னத்தின்ன ஆசை
இன்னும் கேட்டால் பூசை!

அரைமணி நேர இடைவெளியில் –
ஒரு தோசையைத் தின்ற குழந்தை
“அம்மா போதும்என்றது.

அம்மா:

சனியனே!
ஒண்ணே ஒண்ணு சாப்பிட்டா
எப்படி உடம்பு ஏறும்!

படம்: இணையத்திலிருந்து....

ஞாயிறு: அப்பாடா ஞாயிறு வந்தாச்சு! அதாங்க வாரத்தின் கடைசி நாள்.... திங்கள் துவங்கும் வாரத்தின் ஏழாம் நாள்!  இந்த ஏழாம் நாள் இருக்கே ரொம்பவே விசேஷம். பல பேர் இந்த ஏழாம் நாள் விடிகாலை பார்த்ததே இல்லை.  லீவு தானே.... மெதுவா எழுந்தா போதும்னு எட்டு எட்டரை மணிக்கு தான் எழுந்திருப்பாங்க! ஆனா நான் இப்ப சொல்லப் போறது அதைப் பத்தி இல்ல! இந்த ஏழு வேற விஷயம்!



ஆமாங்க, இந்த ஏழு வேற! “சந்தித்ததும் சிந்தித்ததும்எனும் எனது வலைப்பூவில் எழுத ஆரம்பித்து ஆறு வருடங்கள் முடிந்து ஏழாம் வருடத்தில் அடி எடுத்து வைக்கிறேன்! பதிவுலகத்திற்கு வந்து ஆறு வருடங்கள் முடிந்து விட்டன.  இந்த ஆறு வருடங்களில் எழுதிய பதிவுகள் எண்ணிக்கை 927.  இது 928-வது பதிவு! என்னைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 354!  பக்கப் பார்வைகள் கிட்டத்தட்ட 5 லட்சம்! சமீபத்தில் தான் எனது முதல் மின் புத்தகம் ஏரிகள் நகரம்-நைனிதால்வெளி வந்தது!

தொடர்ந்து நீங்கள் அனைவரும் எனக்கு அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பர்களே..... ஆர்வமும் ஆதரவும் இருக்கும் வரை நிச்சயம் பதிவுகள் தொடரும்....

நீங்க படிக்கலைன்னா படிக்க ஏதுவாய், ஒவ்வொரு வருட முடிவிலும் எழுதிய பதிவுகள் கீழே!






தொடர்ந்து சந்திப்போம்.....

என்றென்றும் அன்புடன்




செவ்வாய், 29 செப்டம்பர், 2015

சாப்பிட வாங்க: காச்ரி சட்னி!


காச்ரி சட்னி

செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் வட இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் கம்பு, கேழ்வரகு போன்றவற்றை சாகுபடி செய்யும் நிலங்களில் ஊடு பயிராக காச்ரி எனும் ஒரு காய்காய்க்கும் கொடியும் வளர்கிறது. வெள்ளரி வகையைச் சேர்ந்த இக்காய் சற்றே புளிப்பாக இருக்கும்.  இதனை சட்னியாகவும், பொடியாகவும் செய்து பயன்படுத்துவார்கள். பொதுவாக ராஜஸ்தானிய உணவுகளில் ஆம்சூர் பொடிக்கு பதில் இந்த காச்ரி பொடியும் பயன்படுத்துவார்கள். தக்காளி இல்லாத சமயங்களில் அதற்கு பதிலாக இந்த காச்ரியை சிறிய துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்வதும் உண்டு!

நேற்று ஹரியானா மாநிலத்தில் வசிக்கும் அலுவலக சிப்பந்தி ஒருவர் அவரது நிலத்தில் விளைந்தது என்று கொஞ்சம் காச்ரியை கொண்டு வந்தார்.  எனக்கு வேண்டாம் என்று மறுத்தாலும் கட்டாயப்படுத்தி கொடுத்து விட்டார். அவர் இங்கே தனியாக, அலுவலக விடுதியில் தங்குவதால் சமைக்க முடியாது என்றும் அதனால் என்னிடம் கொடுத்து சட்னி செய்து சாப்பிடச் சொல்ல, காச்ரி சட்னி செய்வது எப்படி என்று தெரியாது எனச் சொல்ல, செய்முறையும் சொல்லிக் கொடுத்தார்!


இதாங்க காச்ரி.... 

நேற்று மாலையில் வீடு வந்த பிறகு இந்த காச்ரி-யை ஒரு கை பார்த்து விடுவிது என்ற நோக்கத்துடன் களத்தில் இறங்கினேன்! செய்து முடித்து சுவைத்தால் நன்றாகவே இருந்தது. சப்பாத்தி, பூரி, என அனைத்துடனும் இச்சட்னியை ருசிக்கலாம்! பொதுவாக வறண்ட பூமியில் வளரும் என்று சொன்னாலும், நம் கிராமங்களிலும் இது கிடைக்கும் என நினைக்கிறேன்.  உங்கள் வசதிக்காக காச்ரி காய்களை படம் பிடித்து இப்பதிவில் இணைத்திருக்கிறேன். 

தேவையான பொருட்கள்:

காச்ரி – 250 கிராம்
பச்சை மிளகாய் – இரண்டு
பூண்டு – 10 பல்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்.
மிளகாய்த் தூள் – 1 ½ ஸ்பூன்.
தாளிக்க – ஜீரா ஒரு ஸ்பூன் மற்றும் எண்ணெய்.

எப்படிச் செய்யணும் மாமு?

காச்ரியை தோல் அகற்றி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.  பச்சை மிளகாயையும் ஒன்றிரண்டாக வெட்டிக் கொண்டு, பூண்டு தோல் உரித்து மூன்றையும் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, கொஞ்சம் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து ஜீராவை போட்டு பொரிந்ததும், மஞ்சள் பொடியை சேர்க்கவும்.  அதன் பிறகு அரைத்து வைத்த விழுதினை போட்டு, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கலந்து வாணலியை மூடி வைக்கவும். பத்து பதினைந்து நிமிடங்களில் காச்ரி சட்னி தயார்!

வேண்டுமெனில் மேலாக கொத்தமல்லி தழைகளை தூவி அழகு படுத்தலாம்! காச்ரி எல்லா நாட்களிலும் கிடைக்காது என்பதால் இதனை காய வைத்து பொடியாகவும் வைத்துக் கொள்வார்களாம்.  Kachri Powder என்ற பெயரிலேயே கடைகளிலும் கிடைக்கிறதாம். மேலும் விவரங்கள் தேவையெனில் இணையத்திலும் கிடைக்கிறது.  காச்ரி புரதச் சத்து நிறைந்தது என்பதும் இங்கே சொல்ல வேண்டிய விஷயம்!

என்ன நம்ம ஊர்ல கிடைக்குதான்னு பார்த்து செய்து பார்க்க தானே போறீங்க!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்


    

திங்கள், 28 செப்டம்பர், 2015

மின்சார தட்டுப்பாடும் காற்றாலைகளும்

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 9

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8



போர்பந்தர் நகரிலிருந்து துவாரகா செல்லும் வழியில் நாங்கள் பார்த்த காட்சி – எங்கே பார்த்தாலும் காற்றாலைகள். தனது இராட்ச இறக்கைகளை விரித்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் காற்றாலைகள். அதுவும் சாலையின் இரு மருங்கிலும் இயங்கிக் கொண்டிருக்கும் காற்றாலைகளைப் பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சோம்நாத் நகரிலிருந்து துவாரகா வரை செல்லும் பாதை கடற்கரை பகுதி என்பதால் இங்கே காற்றுக்குப் பஞ்சமில்லை.  இங்கே கிடைக்கும் காற்றின் மூலம் மின்சாரம் பெற இத்தனை காற்றாலைகள் இருக்கும் போது இம்மாநிலத்தில் மின்சாரத் தட்டுப்பாடு இருப்பதற்கு வாய்ப்பில்லை.



தமிழகத்திலும் கன்யாகுமரி, நாகர்கோவில் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது பல காற்றாலைகளை பார்த்ததுண்டு. போதுமான அளவு பராமரிப்பு இல்லாமலும், போதிய அளவு காற்றில்லாமலும் பல காற்றாலைகள் இயங்காது நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். குஜராத்தில் நான் பார்த்தவரை அங்கே இருந்த காற்றாலைகள் அனைத்துமே இயங்கிக் கொண்டிருந்தன. ஏதேனும் பழுது வந்தால் உடனடியாக அவை சரி பார்த்து விடுவார்கள் என அங்கே இருக்கும் நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது. 



போலவே சில வீடுகளின் மாடியில் சின்னச் சின்னதாய் Solar Panel அமைத்து மின்சாரம் பெறுவதையும் பார்க்க முடிந்தது. சில குடிசைகளில் கூட இப்படி அமைத்து இருந்ததைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.  குஜராத் மாநிலத்தில் மின்சார தேவையை விட உற்பத்தி அதிகமாக இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வருவதைப் பார்க்கும் போது நமது மாநிலத்தில் இருக்கும் மின்சாரப் பற்றாக்குறை நினைவில் வராமல் இருப்பதில்லை.



சாலை விளக்குகள் கூட சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் மின்சாரம் மூலம் இயங்குகின்றன.  ஒவ்வொரு சாலைவிளக்கு கம்பத்தின் மேலும் ஒரு சிறிய Solar Panel வைத்து அதனை ஒரு Battery-உடன் இணைத்து மின்சாரம் சேமிக்கிறார்கள். தமிழகத்திலும் இப்படி தொடர்ந்து இயங்கும் காற்றாலைகளும், சோலார் மின்சாரமும் கிடைத்தால் நன்றாக இருக்கும். அனைத்திலும் அரசியலும், பணம் சம்பாதிப்பதும் பிரதானமாக இருக்க, மக்களின் குறைகளை யாரும் கவனிப்பதில்லை என்பது தானே நிதர்சனம்.

இப்படி இருக்கும் பல வசதிகளைப் பார்த்தவாறே பயணித்துக் கொண்டிருந்தோம்.  போர்[B]பந்தர் நகரிலிருந்து துவாரகா கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர்.  ஒன்றரை மணி நேரத்தில் இத் தொலைவினை கடந்து துவாரகாவை நீங்கள் அடைய முடியும். இப்படி பயணிக்கும்போது கடற்கரை ஓரமாகவே செல்லும் பாதையும், வேறு வழிகளும் உண்டு.  நாங்கள் பயணித்தது கடற்கரை வழியே அல்ல! ஓட்டுனர் வசந்த் [B]பாய் தனக்கென்று சில கொள்கைகளை வைத்துள்ளார் – எல்லா ஓட்டுனர்களைப் போலவே! ரஜினிகாந்த் போல இவருக்கும் ஒரு கொள்கை! “என் வழி தனி வழி!

வழியில் அவருடன் பேச்சுக் கொடுத்தபடியே இருப்பது எனது வழக்கமாகி இருந்தது. எத்தனை தான் ஓய்வெடுத்தாலும் அவருக்கு அவ்வப்போது தூக்கம் வந்து விடுகிறது எனத் தோன்றியது.  வண்டியின் டேஷ்போர்ட் திறந்தால் ஒரு பெரிய பை நிறைய மாவா மசாலா புடியா வைத்திருக்கிறார்.  நடுநடுவே வண்டியை நிறுத்தி அர்தி சாய்குடிக்கலாமா என்று கேட்கிறார். அர்தி சாய்என்றால் என்ன என்று கேட்பவர்களின் வசதிக்காக, முன்பே வலைச்சரத்தில் எழுதியதை மீண்டும் இங்கே தந்திருக்கிறேன்!


Courtesy: www.trekearth.com

நமது ஊர் போல கண்ணாடி டம்ளரிலோ, அல்லது மண் குடுவைகளிலோ இவர்கள் தேநீரை தருவது இல்லை இந்த அர்[dh]தி [ch]சாய்.  இங்குள்ள பலரும் தேநீர் கடைக்குச் சென்றவுடன் தனக்கு ஒரு அர்[dh]தி [ch]சாய் என்று சொல்ல, அவர்கள் கையில் ஒரு சாசரை [Saucer] கொடுத்து விடுகிறார் கடைக்காரர்.  ஏற்கனவே தயாரித்து கெட்டிலில் வைத்திருக்கும் தேநீரை, சாசரில் முழுவதும் விடுகிறார்.  அவரும் அதைக் குடித்து முடிக்கிறார்!  இது தான் அர்[dh]தி [ch]சாய். முதல் முறை தேநீர் என்று கேட்ட எனக்கு கையில் சாசரைத் தர நான் விழித்தேன்! அக்கம் பக்கத்தில் பார்த்த பிறகு எனக்கு கப்பில் அதுவும் முழு கப் வேண்டும் எனச் சொல்ல, என்னை மேலும் கீழும் பார்த்து ஒரு டம்ப்ளரில் விட்டுக் கொடுத்தார்.  அவரின் பார்வை, என்னைப் பார்த்து தம்பி ஊருக்குப் புதுசோ!என்று கேட்பது போல இருந்தது!

நாங்கள் துவாரகா சென்ற நாள் அன்று ஈகைத் திருநாள் பண்டிகை வேறு. முதல் நாள் இரவு சோம்நாத்திலிருந்து பயணிக்கும் போது வழியில் ஒரு கிராமத்துச் சந்தை பார்த்தோம். அளவுக்கதிகமான மக்கள் கூட்டம் அங்கே இருந்தது. சாதாரண சந்தை அல்ல – ஆட்டுச் சந்தை. பல வியாபாரிகள் நூற்றுக்கணக்கில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.  ஆடுகளை வாங்கியதும், அவற்றை தத்தமது வீட்டிற்கு அழைத்துச் செல்ல பெரிதாய் கஷ்டப்பட வேண்டியதில்லை!  நடத்தி அழைத்துக் கொண்டு போக வேண்டாம் – இருக்கவே இருக்கிறது [ch]சகடா – ஆல் இன் ஆல் அழகு ராஜா!



மிதமான வேகத்தில் பயணித்து துவாரகாவினை நெருங்கி விட்டோம்.  வழியெங்கும் த்வாரகாதீஷ்  என அழைக்கபடும் கிருஷ்ணரின் புகைப்படங்கள் உள்ள பல கடைகளையும் பதாகைகளையும் பார்க்க முடிந்தது. எங்கும் கிருஷ்ணர் எதிலும் கிருஷ்ணர்! துவாரகா நகரின் மன்னர் அல்லவா? அதனால் அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதில் வியப்பென்ன?  வாருங்கள் அடுத்த பகுதியில் த்வாரகாநாதனை தரிசிக்க அழைத்துச் செல்கிறேன்!


நட்புடன்




ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

நாளைய பாரதம் – 7

நாளைய பாரதம் – முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6

பயணம் செல்லும் வேளைகளில் நான் சந்திக்கும் குழந்தைகளின் புகைப்படங்கள் எடுப்பது எனக்கு வழக்கம்.  அவ்வப்போது அப்புகைப்படங்களை எனது வலைப்பூவில் வெளியிட்டு வருவதும் உண்டு. இது வரை அப்படி 6 பதிவுகளை “நாளைய பாரதம்எனும் தலைப்பில் எனது வலைப்பூவில் வெளியிட்டு இருக்கிறேன். கடைசியாக அப்படி ஒரு பதிவு வெளியிட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது! படங்கள் எத்தனையோ இருந்தும் இது வரை வெளியிடவே இல்லை! இப்படி இடைவெளி வருவது தவறாயிற்றே!  இதோ இந்த ஞாயிறில் நான் எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு!

இப்படங்கள் அனைத்துமே என்னுடைய வட கிழக்கு மாநில சுற்றுப்பயணத்தின் போது எடுத்தவை.  குழந்தைகளுக்கு எந்த வித கவலையுமில்லை. குளிரோ, மழையோ, வெய்யிலோ அது பற்றிய கவலை அவர்களுக்கில்லை. அவர்கள் தான் உண்டு தன் விளையாட்டு உண்டு என சந்தோஷமாக இருக்கிறார்கள்! தொடர்ந்து சந்தோஷமாக இருக்கட்டும்!



”கையில என்னமோ வைச்சு இருக்காரே அது என்ன?” என்று கேள்வியுடன் பார்க்கும் சிறுவன் - படம் எடுத்த இடம் அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா 


அண்ணனின் தோள்களில் இருப்பது சுகமாய் இருக்கிறதோ இவருக்கு! - படம் எடுத்த இடம் தேஸ்பூரிலிருந்து சிங்ஷூ எனும் இடத்திற்குச் செல்லும் வழியில் இருந்த ஒரு உணவகம்.


கள்ளமில்லாத சிரிப்பு - இப்படமும் சிங்ஷூ செல்லும் வழியில் எடுத்த படம் தான்!


இது மூவர் அணி....  உணவகத்தின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்.....


செல்லும் வழியிலிருந்த சிறு கிராமம் ஒன்றில் - சாலையோர வீட்டில் வசிக்கும் சிறுமி - ஓட்டமும் நடையுமாக!


குளிருக்கான உடையில் ஒரு கிராமிய சிறுமி - இப்படமும் பயணித்தபடியே எடுத்த படம் தான்!



அருணாச்சல் மாநிலத்தில் சிமிதாங்க் எனும் இடத்தில் அம்மாவின் தோளில் இருந்த குழந்தை.....


இவர் பெயர் இனிதன்.....  நம்ம ஊர்க்காரர் - இருப்பது அதே சிமிதாங்க்!


கடல்மட்டத்திலிருந்து 16000 அடியில் ஒரு புகைப்படம் - இது எடுத்தது சீன எல்லையில்...


ஃபோட்டோ புடிச்சா இப்படித்தான் ஸ்டைலா போஸ் குடுக்கணும்! எடுத்த இடம் ஒரு புத்தர் கோவில்!



அருணாச்சலப் பிரதேசம் - தேஸ்பூர் திரும்பும்வழியில் ஒரு உணவகத்தின் முன் அண்ணாவும் தங்கையும்!


தங்கை இங்கே தனியாக!


பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் - மேகாலயா மாநில சாலையில்!


சுற்றுலா வந்தால் இப்படி சில டம்பப் பைகள் அவ்சியம் - மேகாலயா சிறுமி!


அம்மாவின் இடுப்பில் ஒய்யாரமாய் - திரிப்புரா மாநிலத்தின் அகர்தலா நகரம்.


கொல்கத்தா - காளி [G]காட் அருகே குங்குமம் விற்பவரின் மகள்!

புகைப்படங்களை நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்




சனி, 26 செப்டம்பர், 2015

காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது!



கமல்ஹாசன் நடித்த படத்தில் இப்படி ஒரு பாட்டு இருப்பதை நான் சொல்லியா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.....  ஆனாலும் இப்ப சொல்லித் தான் ஆகணும்....  ஆமாங்க காசு மழை கொட்டப் போகுது.  உங்களுக்கும் இந்த காசு மழையில் நனைந்து கொஞ்சம் காசு சேர்க்க ஆசை இருக்குமே!  ஆசை யாருக்குத் தான் இருக்காது சொல்லுங்க!

பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளினால் தான் பலருக்கும் துன்பம் ஏற்படுகிறது என்று சொல்வார்கள்.  “ஆசையே துன்பத்திற்கு காரணம்என்று சொன்னார் புத்தர் பெருமான். இருப்பினும் தற்காலத்தில் நாம் அடிக்கடி கேட்கும் ஒரு விஷயம் சத்குரு சொல்லும் “அத்தனைக்கும் ஆசைப்படு!

வலைப்பதிவர்களான நமக்கும் ஆசை இருக்கணுமே... அதுவும் பரிசு பெறும் ஆசை யாருக்குத் தான் இல்லை. நாம் எழுதும் எழுத்துகள், பாராட்டுகளைப் பெறும்போதே மனதில் மகிழ்ச்சி ததும்புகிறதே. பாராட்டுகள் மட்டுமல்லாது பரிசுத் தொகையும் கிடைத்தால்.....  அது இன்னும் அதிக மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகமில்லை!

இப்படி ஒரு வாய்ப்பு பதிவர்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது.  புதுகையில் நடக்கப்போகும் பதிவர் சந்திப்பு பற்றி அனைவரும் அறிவீர்கள். புதுகை பதிவர் சந்திப்பினை ஒட்டி தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் உலகளாவிய மின் தமிழ் இலக்கியப் போட்டிகளை நடத்துகிறது.  மொத்தம் ஐந்து வகைப் போட்டிகள். போட்டிகளுக்கான முதல் பரிசு ரூபாய் 5000/- இரண்டாம் பரிசு ரூபாய் 3000/- மூன்றாம் பரிசு ரூபாய் 2000/.  ஐந்து போட்டிகளுக்குமான மொத்த பரிசுத் தொகை ரூபாய் 50000/-. 



போட்டிகளுக்கான விவரங்கள் கீழே.... 

வகை-(1) கணினியில் தமிழ் வளர்ச்சி - கட்டுரைப் போட்டி
(கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன)

கணினியில் தமிழ், அறிவியல் தமிழ், இணையத்தில் தமிழ், கையடக்கக் கருவியில் தமிழ் (கணினி பற்றியவை மட்டுமல்ல நவீனகாலத்தில் தமிழ் வளர்ந்துள்ள அனைத்துப் புதிய துறையும் அடக்கம்) போன்ற வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி

சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி

பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு...

வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...


போட்டிக்கான விதிமுறைகள் :


(1) படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.

(3)“இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

(4) வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும். போட்டிக்கான கட்டுரையைத் தற்போதே வெளியிட விரும்பாதவர்கள் அதைத் தெரிவித்து, தங்கள் கட்டுரையை மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுங்கள். போட்டிக்கான இறுதிநாள் முடிந்தவுடன் இணையத்தில் கட்டாயம் வெளியிட்டு இரு தினங்களில் இணைப்பை அனுப்பினால் மட்டும் சேர்த்துக்கொள்ளப்படும்.

(5) படைப்பு வந்துசேர இறுதிநாள், 30-9-2015 (இந்திய நேரம் இரவு 11.59க்குள்)

(6)11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் “வலைப்பதிவர் திருவிழா- 2015”இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.

(7) உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே. மின்னஞ்சல் – bloggersmeet2015@gmail.com

(8) தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது, பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.

(9) வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.

(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.



என்ன நண்பர்களே....  போட்டி பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா?  இன்னும் என்ன தயக்கம்? திறவுங்கள் உங்கள் கணினியை.... உங்கள் சிறப்பான எண்ணங்களை விரல்கள் மூலமாக விசைப்பலகையில் நடனமாட விடுங்கள்.  சிறப்பானதோர் படைப்பை உருவாக்குங்கள்....  வெற்றி உங்களுடையதாகட்டும்.....

இன்னும் ஐந்தே நாட்கள் - இன்றையும் சேர்த்து ஐந்து நாட்கள் தான் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.  தலைப்பிற்கொன்றாய் பதிவுகளை வெளியிட்டு போட்டிகளில் வெல்லும் வாய்ப்பை பெறுங்கள்.....

பதிவர் விழா சிறக்கட்டும்.....

நட்புடன்


வெள்ளி, 25 செப்டம்பர், 2015

ஃப்ரூட் சாலட் – 145 – குடிசையிலிருந்து மருத்துவர் – 12000 தேங்காய் – நாயுடு ஹால்

இந்த வார செய்தி:

சமீபத்தில் ஓய்வு பெற்ற டாக்டர் விஜயலக்ஷ்மி தேஷ்மானே எனும் மருத்துவரைப் பற்றிய செய்தியை சமீபத்தில் படித்தேன். மருத்துவம் வியாபாரமாகிவிட்ட இக்காலத்தில் இப்படியும் ஒரு மருத்துவர்.  சாதாரண குடும்பத்தில் பிறந்து மருத்துவ துறையில் சிறப்பான இடம் பிடித்த இவரைப் பற்றிய முழு செய்தியும் ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.


டாக்டர் விஜயலக்ஷ்மி அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து. 

இந்த வார முகப்புத்தக இற்றை:

சிக்கல்கள் என்பவை ஓடும் ரயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். அவற்றைக் கடந்து சென்றால் அது சிறிதாகி விடும்!


இந்த வார குறுஞ்செய்தி:



டெங்கி:

தொடர்ந்து டெங்கி ஜூரம் உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான மருந்தினை Serum Institute of India கண்டுபிடித்துவிட்டதாக சில செய்திகள் படித்தேன். ஒரே தடுப்பு ஊசி  மூலம் டெங்கி வராமல் தடுக்க முடியும் என்றும், தற்போது கடைசி கட்ட சோதனைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் அடுத்த வருடத்திற்குள் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.  அது வரை கொசுக்கள் உற்பத்தியாகமல் இருக்கட்டும்... இருக்கும் கொசுக்களும் நம்மை கடிக்காமல் இருக்கட்டும்! 

மணலில் சிற்பங்கள் செய்யும் ஒருவர் செய்த சிற்பம் உங்கள் பார்வைக்கு!  சிற்பிக்கு உங்கள் சார்பிலும் என் சார்பிலும் பாராட்டுகள்!



இந்த வார காணொளி:

ஒரு தேங்காய் உடைக்கவே கத்தியையும் கல்லையும் தேடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.  இங்கே வட இந்தியாவில், தேங்காயின் மேல் சுத்தியால் கொஞ்சம் கொஞ்சமாக தட்டி, ஓட்டை மட்டும் உடைத்து எடுப்பார்கள். ஒரு தேங்காய் உடைக்க இவர்கள் படும் கஷ்டம் பார்க்க சிரிப்பை வரவழைக்கும்! இப்படி இருக்க ஒரே சமயத்தில் 12000 தேங்காய் உடைக்கும் பழக்கம் பட்டாம்பி எனும் இடம் கேரளத்தில் இருக்கிறது.  இது வித்தியாசமான ஒரு வழிபாடு! ஒரே ஒருவர் 12000 தேங்காய்களை அசறாது உடைக்கிறார். கைகளும், தோள்களும் என்ன வலி வலிக்குமோ! பாருங்களேன்! ஒரு வேண்டுகோளும்: முழுவிவரங்களை துளசிதரன் ஜி முடிந்தால் பதிவிடலாமே!




படித்ததில் பிடித்தது:

மன்னை மைனர் RVS.  இவரது வலைப்பூ தீராத விளையாட்டுப் பிள்ளை.  முகப் புத்தகத்தில் மூழ்கி விட்டதால் வலைப்பூவில் எழுதுவதே இல்லை என்ற நிலை.  சிறப்பான எழுத்துக்குச் சொந்தக்காரர்.  முகப்புத்தகத்தில் நேற்று எழுதிய நாயுடு ஹால் அனுபவம் இங்கே படித்ததில் பிடித்ததாய்!  வலைப்பூவில் எழுதுங்கள் மைனரே!

பூர்வ ஜென்மத்தில் மடி பெருத்த நாலு காராம் பசுக்களை சிணுங்காமல் தானம் செய்திருந்தால் மட்டுமே பாண்டி பஜார் நாயுடு ஹால் வாசலில் கார் பார்க்கிங் கிடைக்கும். நான் செய்திருக்கிறேன் என்று இன்று ருசுவானது. திருவிழாக்கோலம் பூண்டிருந்த கடைக்குள் வெட்கம் பிடிங்கித் திங்க காலால் கோலம் போட்டபடி தூணோடு தூணாக சர்வ ஜாக்கிரதையாக நின்றுகொண்டிருந்தேன். அறியாப் பெண் யாராவது தனக்குத் தேர்வாகாத நைட்டியைத் தோளில் மாட்டிவிடும் அபாயம் இருந்தது. அதனால் அவ்வப்போது குனிந்த தலை நிமிராமல் பெண்டுலமாய் சிரசாடிக்கொண்டிருந்தேன். நடுநடுவே ரெவ்வெண்டு நொடிக்கொருதரம் இனிய இம்சையாக கட்டைவிரலை கெட்டவிரலாக்கி ஃபேஸ்புக் ஸ்க்ரால்.
ஹாஹ்ஹா..என்ற அதிர்வேட்டுச் சிரிப்பு என்னுடைய முகப்புஸ்தகத் தவத்தைக் கலைத்தது. ஆம்பிளைச் சிரிப்பாக இருந்ததால் மனதில் தெகிரியத்தை வரவழைத்துக்கொண்டு நிமிரலாம்என்று நிமிர்ந்தேன்.
பல்வரிசையில் பாதி காலியாகி டெண்டல் கேர்ஆசுபத்திரிக்குக் கிடைத்த பொக்கிஷமாக, பூர்ணாயுசை எக்கிப் பிடிக்கும் வயதில் ஒரு பெரியவர். திடகாத்திரமாகத்தான் இருக்கிறார். கொள்ளுப் பேத்தி கல்யாணத்திற்கு சீர் முறுக்கு சாப்பிடமுடியாது என்கிற குறையைத் தவிர சம்பூர்ணமாக இருந்தார். எதிரில் பெர்முடாஸ் மற்றும் குறுந்தாடியில் மேதாவிலாசம் காட்டும் அமெரிக்க ஆக்ஸண்ட் மாமா. மீனம்பாக்கத்திலிருந்து இறங்கி நாயுடு ஹால் தள்ளுபடிக்காக வந்து இறங்கியிருக்கும் மோஸ்தரில் பளபளத்தார்.
நாம இங்கதான் அடிக்கடி பார்த்துக்கிறோம்...என்று பெ.மாமா என்னமோ இருவரும் அந்த ஃப்ளோரில்தான் அனுதினமும் சந்தித்து கைகுலுக்கிக்கொண்டு உள்ளாடை வாங்கி மாட்டிக்கொள்வது போல வெற்றிச் சிரிப்பில் தேமேன்னு நைட்டி பார்த்துக்கொண்டிருந்த நான்கு குடும்ப ஸ்த்ரீகளை தன் பக்கம் பார்க்க வைத்தார். சுவாரஸ்யமாக ஏதும் ஆம்புடும் என்று காதைத் தீட்டிக்கொண்டு தீனிக்காக காத்திருந்தேன்.
போன வாரம் வந்தீங்கல்ல...பெரிசு ஆரம்பித்தது.
ஆமா... நீங்க வாசல்ல மல்லிப்பூ வாங்கிக்கிட்டிருந்தீங்க...ஷார்ப் மெமரி.
உங்களைப் பார்த்தேன்.. நீங்க திடுதிப்பு மேலே ஏறிட்டீங்க....
ஆமாமா... துப்பட்டாவுக்கு மேட்ச்சிங்கா பாட்டம் வாங்கணும்னு வீட்ல சொன்னாங்க... அதான்..
ஓ.. நீங்க நைட்டி வாங்கதான் வரீங்கன்னு நினைச்சேன்..
யோவ் பெர்ஸு! நைட்டி என்ன மாசாந்திர சாமானா?” என்கிற லுக் விட்டார் பெர்முடாஸ். பெரியவர் லேசில் விடுவதுமாதிரி இல்லை.
லோகத்துல துப்பட்டாவே யாரும் போட்டுக்கிறதில்லை.. அதுக்கு ஏன் பாட்டம் வாங்கணும்?” என்கிற க்ரூப் ஒண் கேள்வி மூலம் கிடுக்கிப்பிடி போட்டார்
பெர்முடாஸ் சிரிப்பதை நிறுத்திவிட்டு எங்க வீட்ல போட்டுப்பாங்க சார்...என்று காமெடிக்காட்சியிலிருந்து நழுவி க்ளைமாக்ஸ் காட்சியாய் சீரியஸானார்.
எங்க வீட்ல நாந்தான் போட்டுப்பேன்என்று ஒரே போடாய்ப் போட்டார் பெரிசு. ஏதாவது மரணக்கடியாக ரம்பம் போடுவாரோ என்று அச்சப்பட்டேன்.
இப்படி வாராவாராம் நாயுடுஹால் வந்ததன் பலனாக (கோயில்...குளம்னு பிரதக்ஷிணம் வந்தால் கிட்டும் பலன் போல) அவர் துப்பட்டாவும் இவர் ஃப்ரீ சைஸ் நைட்டியும் மாட்டிக்கொள்வதற்கு சித்திக்கும் என்று நினைத்துக்கொண்டேன். பெர்முடாஸ்காரருக்கு புதிரில் கண்கள் இரண்டும் கோலிக் குண்டாகி இரு புருவங்களை மேலே உயர்த்தி தேர்ந்த பரதநாட்டியக் கலைஞரின் ஆஸ்ச்சரிய பாவஅபிநயத்தோடு என்ன சொல்றீங்க?” என்று பதறிக் கேட்டார்.
தோளில் சுற்றியிருந்த துண்டை படையப்பா ரஜினி போல சுழற்றி எடுத்து இதைச் சொன்னேன்... இதில்லாம நான் வெளிய வர்றது இல்லை...என்றார். அவர் அடித்த அந்த மொக்கை ஜோக்குக்கு பெர்முடாஸ் சிரித்த சிரிப்பில் நாயுடு ஹால் அஸ்திவாரம் பலவீனமாகி எந்தநேரமும் உட்கார்ந்துவிடும் என்று நினைத்தேன். எங்கள் குலதெய்வம் திருவேங்டமுடையானின் அனுக்கிரஹத்தால் அப்படியாகப்பட்ட அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை.
சிறிது மேயட்டும் என்று அவரை விட்டுவிட்டுப் போன திருமதி போலாமா...என்று முதுகைத் தட்டிக் கூப்பிட்டார். அது என் காதில் மன்னையில் வெங்கடாசலம் தனது ஒற்றை மாட்டு வண்டி ஓட்டுவது போல ஹை..ஹை...என்று டிகோட் ஆகி விழுந்தது. வரேன்...என்று பெரிவரை க்ஷண நேரத்தில் அறுத்துக்கொண்டு பெண்டாட்டியின் கையைப் பிடித்துக்கொள்ளாத குறையாகக் கிளம்பிவிட்டார். பார்ட்டிக்கு மந்திரம் அப்படி அனுபூதி ஆகியிருக்கிறது.
இப்போது பெரியவரின் நிலை என்ன என்று பார்க்க என்னை விட என் கண்ணுக்குள் ஆர்வம் முட்டியது. பெரியவர் பட்டிணம் பொடி ஆசாமி போல. ஹச்என்று நிலமதிரத் தும்மி நான்கடி சதுரத்துக்குள் இருந்த அனைவருக்கும் ஜலதோஷத்தை பரிசாகக் கொடுத்துவிட்டு துண்டால் புர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று மூக்கை துடைத்துக்கொண்டார். சாரி.. அவரது வெள்ளை துப்பட்டாவால் துடைத்துக்கொண்டார்...
ஆனால் வீடு வரும் வரை ஒரே ஒரு கேள்வி மட்டும் மூளையை ஓவர் டைம் செய்யச்சொல்லி வற்புறுத்தியது. அவஸ்தையை அடக்கமுடியாமல் தர்மபத்னியிடம் இந்த இராமாயணத்தைச் சொல்லி விளக்கம் கேட்டேன்.
மெனக்கெட்டு எல்லா வீட்டு வேலையையும் விட்டுட்டு இவங்க ரெண்டு பேரும் ஏன் கடமையாய் அடிக்கடி நாயுடு ஹால் வர்றாங்க?”
நான் கப்சிப்!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.