தலைநகர் தில்லிக்கு 10-15 வருடங்களுக்கு முன் வந்திருந்த நண்பர்களுக்கு இந்த ”ஃபட்-ஃபட்டியா” என்பது என்ன என்று தெரிந்திருக்கும்! மற்றவர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை! இதில் பயணம் செய்வது ஒரு சுகானுபவம்!
தில்லி மற்றும் மற்ற வட இந்திய நகரங்களில் “ஜுஹாட்” [Jugaad] என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பார்கள். எதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு செய்வது ஜுஹாட். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் தந்துவிட்டு தமது நாட்டுக்குச் செல்லும் முன்னர் அவர்கள் வைத்திருந்த ஹார்லே-டேவிட்சன் வாகனங்களை கிடைத்த விலைக்கு விற்றுச் சென்றுவிட்டனர். அப்போதைய இந்தியாவில் இருந்த போக்குவரத்துப் பற்றாக்குறையைச் சமாளிக்க இங்கிருந்த சர்தார்ஜிகள் இந்த இரு சக்கர வாகனங்களை வாங்கி தேவையான மாற்றங்கள் செய்து, பயணிகள் ஏற்றிச் செல்ல வசதியாக உருவாக்கிய ஜுஹாட் வண்டியே இந்த ஃபட்-ஃபட்டியா.
டீசலில் ஓடக்கூடிய இந்த வண்டியை இயக்க, ஜெனரேட்டர்கள் போல, அதற்கான கயிற்றை ஐந்தாறு முறை மெதுவாக இழுத்து, பின்னர் வேகமாக ஒரு இழு இழுத்தவுடன், “ஃபட்-ஃபட்-ஃபட்” என்ற சத்தத்துடன் இயங்க ஆரம்பிக்கும் இந்த வண்டியின் இன்ஜின். அதனால் இந்த வண்டியின் பெயர் ஃபட்-ஃபட்டியா! இன்ஜின் வேலை செய்யத் துவங்கியவுடன் அந்த கயிற்றினை அழகாய் சுறுக்குப் போட்டு வண்டியில் கட்டி விடுவார்கள் – அடுத்த முறை இழுக்க வேண்டுமே!
தில்லியின் பிரதான பகுதியான கன்னாட் ப்ளேஸில் இருந்து சாந்த்னி சௌக் செல்லும் வண்டிகளும், ஷிவாஜி ஸ்டேடியத்திலிருந்து கரோல் பாக் செல்லவும், செங்கோட்டையிலிருந்து காந்தி நகர் செல்வதற்கும் இந்த வண்டிகள் பயன்பட்டன. கட்டணம் 0.50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய் என அதிகரித்து கடைசியாக 5 ரூபாய் வரை வசூலித்துக் கொண்டிருந்தனர். இதில் 10 லிருந்து 12 பேர் வரை பயணம் செய்யலாம்!
வண்டியில் இருந்து வரும் ஃபட்-ஃபட் சத்தம் ஏரியா முழுதும் கேட்கும். இந்த ஒலி எப்படி இருக்கும் என்றால், என்ஃபீல்ட் புல்லெட் சாதாரணமாக ஓடினால் வரும் சத்தத்தின் மூன்று-நான்கு மடங்கு எப்படி இருக்குமோ அப்படி. வண்டியில் பயணம் செய்யும்போது ராஜ பவனி வருவது போல ஒரு உணர்வு வரும்! மேலே கூரையிருந்தாலும், இரண்டு பக்கங்களிலும் திறந்திருப்பதால் காற்றாட பயணிக்கலாம். எதிர்ப்புறமாய் வீசும் காற்று முகத்தில் அறைய ஓட்டுனரின் பின்னே உட்கார்ந்து இந்த வண்டியில் செல்வது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம்.
இந்த வண்டியை ஓட்டியவர்களில் பெரும்பாலானவர்கள் சர்தார்ஜிகள். சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது என்று தில்லியில் இது போன்ற வண்டிகளுக்குத் தடை விதித்து சுத்தமாக அப்புறப்படுத்தியபின் சாதாரண மஹிந்த்ரா ஜீப்புகள் ”ஃபட்-ஃபட் சேவா” என்ற பெயரில் இயங்கினாலும் பழைய ஹார்லே-டேவிட்சன் வண்டியில் போவது போன்ற ஆனந்தம் இதில் கிடைப்பதில்லை. ஒரு சில வண்டிகள் பக்கத்து நகரங்களுக்குச் சென்றுவிட்டாலும், பெரும்பாலானவை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு பயன்பாடு இல்லாமல் துருப்பிடித்து காயலான் கடைகளுக்குச் சென்று விட்டது என்பதில் எனக்கு மிக மிக வருத்தம்!
“பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே” என்பது உண்மையாக இருந்தாலும், இது போன்ற சிலவற்றை மறக்க முடிவதில்லை!
வேறு ஒரு பதிவில் மீண்டும் சந்திப்போம்.
வெங்கட்.