கதைமாந்தர்கள் எனும் தலைப்போடு நான் சந்தித்த,
சந்திக்கும் மனிதர்கள் பற்றி சில பதிவுகள் எழுதி இருப்பது உங்களுக்குத் தெரியும்.
அந்த வரிசையில் இன்று ஒரு ஸ்வாரசியமான மனிதர் பற்றி பார்க்கப் போகிறோம். இந்த
மனிதர் ஒரு CRPF ஜவான்.
மதுராவினை அடுத்த [B]பர்சானா கிராமத்தினைச் சேர்ந்தவர். வெள்ளந்தியான மனிதர். அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம்
கொண்டவர்.
பட உதவி: இணையம்....
எளிமையான இவருக்கு உணவு உண்பதில் அலாதி பிரியம். சர்வ
சாதாரணமாக பல சப்பாத்திகளை எந்தவிதமான சப்ஜிகளோடும் உள்ளே தள்ளுவார். சப்பாத்தி
சாப்பிடும் போது இவருக்கு எண்ணிக்கை எல்லாம் ஒரு பொருட்டில்லை. கொண்டு வந்து
வைக்கும்போதே தனது கையால் அளந்து ஒரு ஜான் அளவு உயரத்திற்கு சப்பாத்திகள்
இருந்தால் அந்த வேளைக்கு அது போதும் என்று சொல்பவர்! தொட்டுக்கொள்ள ஒரு சப்ஜியும்
இல்லை எனில், வெங்காயம், ஊறுகாய், தயிர் போன்றவை இருந்தால் கூட போதும்!
ஒரு முறை அலுவலக நண்பர் வீட்டு திருமணத்திற்குச்
சென்றிருந்தோம். பெரும்பாலான வட இந்திய
திருமணங்கள் இரவு நேரத்தில் தானே! [B]பராத் என்று
அழைக்கப்படும் மாப்பிள்ளை ஊர்வலம் வந்து சேர்ந்து சில நிகழ்வுகளுக்குப் பிறகு தான்
இரவு உணவு. நாங்கள் அனைவரும் உணவு உண்ணச்
செல்லும்போது நள்ளிரவு 12 மணிக்கும் மேல்! பல சப்பாத்திகளை உள்ளே தள்ளிய பிறகு இவருக்குப்
பிடித்த அனைத்து சப்ஜிகளும் காலியாகி இருக்க, தொட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை.
ஆனாலும் இவரது பசி அடங்க மறுக்க, ஐஸ்க்ரீம் பார் ஒன்றில் பாதியை ஸ்லைஸ் செய்து அதனைத்
தொட்டுக்கொண்டு இரண்டு மூன்று சப்பாத்திகளை உள்ளே தள்ளினார்!
ஒரு நாள் அலுவலகத்தில் சற்றே வியர்த்துக் கொட்டி,
படபடவென்று வர இவரை உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்றார்கள். அங்கே மருத்துவர்கள்
இவருக்கு இருதய சிகிச்சை செய்து Pacemaker பொருத்தி இருக்கிறார்கள். உணவு முறைகளில்
கட்டுப்பாடு தேவை என்று சொல்லி அனுப்ப, ஆனாலும் இவரது உணவு பழக்கங்களில் எந்தவித
மாற்றமும் இல்லை. சிகிச்சை முடிந்து
நான்கு வருடங்களாகிவிட்டாலும் அதே அளவு உணவு தான்! எந்தவித தொந்தரவும் இல்லாது
உலவுகிறார்.
செவ்வாய்க்கிழமைகளில் “பாலாஜி” என்று
அழைக்கப்படும் ஆஞ்சனேயருக்கு வட இந்தியாவில் லட்டு படைப்பது வழக்கம். அலுவலகத்தில்
ஒவ்வொரு செவ்வாயும் எங்கள் அறையிலேயே ஒருவர் லட்டு கொண்டு வந்து ஆஞ்சனேயருக்கு
படைத்துவிட்டு அனைவருக்கும் லட்டு தருவார்.
இவர் ஒரு தீவிர ஆஞ்சனேய பக்தர்.
தான் படைக்கும் லட்டுகளில் ஆஞ்சனேயர் படத்திற்கு முன் வைக்கும் நான்கைந்து
லட்டுகளும் உண்ண இந்த ஜவானைத் தான் அழைப்பார்! அவரும் சர்வ சாதாரணமாக அனைத்து
லட்டுகளையும் சில நொடிகளில் கபளீகரம் செய்து விட, பக்தருக்கு ஆஞ்சநேயரே நேரே வந்து
சாப்பிட்ட மகிழ்ச்சியோடு இருப்பார்.
குடும்பத்தினர் அனைவரும் அவரது கிராமமான [B]பர்சானாவில் இருக்க, இவர் மட்டும் இங்கே இருக்கிறார். தில்லியின் ஒரு காவல்
நிலையத்தின் அருகே இருக்கும் காவலாளிகளுக்கான கொட்டகையில் இரவு நேரப் படுக்கை.
அங்கேயே கிடைக்கும் உணவு தான். அலுவலக நேரத்தில் அலுவலக உணவகத்தில் தான். ஒரு நாள்
மாலை, இவரது மேலாளர் இவரிடம் இரவு நேர உணவுக்கு உணவகத்தில் சொல்லச் சொல்ல, இவர்
சொன்னது இருபத்தி ஐந்து சப்பாத்தி மற்றும் சப்ஜி. மேலாளர் அதைக் கேட்டு மயங்காத
குறையாக, எதுக்கு இத்தனை என்று கேட்க, உங்களுக்கு மூன்று, மற்றவை எனக்கு! என்று
சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் இவர்!
எப்போது எங்களது அறைக்கு வந்தாலும், கைகளைப் பிடித்து,
ஒவ்வொரு விரலாக மஸாஜ் செய்து விடுவார். பத்து நிமிடத்தில் கைகள் இரண்டிலும்
புத்துணர்ச்சி தந்துவிடுவார்! வாரத்தில் ஒரு நாளாவது இவரிடம் இப்படி கைகளை நீட்டி
விடுவது எனக்கும் வழக்கமாகிவிட்டது!
எத்தனை வெயிலடித்தாலும், குளிர் அடித்தாலும், ஒரு சட்டை
மட்டுமே அணிவார். பனியன் போடும் பழக்கமே இல்லை.
தில்லியின் கடும் குளிர் நாட்களில் மட்டுமே ஒரே ஒரு ஸ்வெட்டர் மேலே அணிந்து
கொள்வார். அதுவும் அலுவலகம் வந்தபின்னர் கழற்றி வைத்துவிடுவார். குளிரும் வெயிலும்
இவரை ஒன்றுமே செய்வதில்லை!
அலுவலகத்திற்கு வருவதும் திரும்புவதும் நடைப்பயணம் தான்!
பேருந்துகளைப் பயன்படுத்துவதில்லை.
வழியெங்கும் இருக்கும் போக்குவரத்து/காவல் துறையினர் அனைவரும் இவருக்கு
நண்பர்கள். அனைவருக்கும் வணக்கம் சொல்லி, அவர்களிடம் அளவளாவியபடியே செல்வது இவரது
வழக்கம்.
சமீபத்தில் அலுவலகத்தில் வேலை செய்து
கொண்டிருக்கும்போதே ஒருவருக்கு நெஞ்சு வலி வர அவரை அப்படியே அலாக்காகத் தூக்கிக்
கொண்டு வாயில் வரை வந்து இருந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரை மருத்துவமனையில்
உரிய நேரத்தில் சேர்த்து காப்பாற்றினார். சமயோசிதமாகச் செயல்பட்ட இவருக்கு அலுவலகத்தில்
Cash Award கொடுத்து பாராட்டுகளும் வழங்கினார்கள்.
இவரைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்! இருந்தாலும் இவரது
மகன் திருமணம் பற்றிய ஒரு விஷயத்தினை மட்டும் சொல்லி முடிப்பது சரியாக இருக்கும்
என்பதால் அதைச் சொல்லி முடிக்கிறேன்! மகனுக்கு திருமணத்திற்காக பெண் பார்த்துக்
கொண்டிருந்தார். அவருக்கு பெண் வீட்டார்
கார் கொடுக்கப் போவதாய்ச் சொல்ல, கிராமத்தில் கார் எதற்கு, அதற்கு பதிலாக
ட்ராக்டர் கொடுங்கள், வயல் வேலை செய்ய தோதாக இருக்கும் என்று ட்ராக்டர் வாங்கிக்
கொண்டார்!
இப்போதும் அலுவலக விடுமுறை நாட்களில் தனது வயலில்
கடுமையாக உழைக்கும் இவருக்கு, எத்தனை சாப்பிட்டாலும் சுலபமாக ஜீரணித்துவிடுவது
ஆச்சரியம் இல்லை!
இப்படி ஒரு கதைமாந்தரை உங்களுக்கு அறிமுகம் செய்து
வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி. உங்களுக்கு?
மீண்டும் சந்திப்போம்!
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.