தொகுப்புகள்

திங்கள், 30 செப்டம்பர், 2013

ஐந்து ஐந்து ஐந்து......



பிரபஞ்சத்தில் உள்ள சகல வஸ்துக்களையும் அநுபவிப்பதற்காக மனிதனுக்குக் கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகிய ஐந்து இந்த்ரியங்கள் இருக்கின்றன. பஞ்சேந்த்ரியங்கள் என்று இவற்றைச் சொல்வார்கள். ரூபத்தினை கிரகிப்பது கண்; சப்தத்தைக் கிரகிப்பது காது; ரஸத்தை [சுவை] கிரகிப்பது நாக்கு; கந்தத்தை [மணம்]  கிரகிப்பது மூக்கு; ஸ்பரிஸத்தைக் கிரகிப்பது சருமம்.

-          நன்றி: தெய்வத்தின் குரல்.



5S என்பது ஜப்பானியர்களால் உருவாக்கபட்டுப் பயன்படுத்தபட்டு வரும் ஒரு வழிமுறையாகும். ஜப்பானியப் பொருள்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று. அது என்ன 5SSort, Stabilize, Shine, Standardize and Sustain.

  நன்றி: விக்கிபீடியா.....



ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்என்று சொல்வார்கள். உண்மையில் இது ஐந்து விஷயங்களைப் பற்றியது என்றாலும், ஐந்து பெண்களை பெற்றவன் ஆண்டி ஆவான் என்று கொள்வது வழக்கமாக இருக்கிறது. ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள் – ஆடம்பரமாய் வாழும் தாய்; பொறுப்பில்லாமல் வாழும் தந்தை; ஒழுக்கமற்ற மனைவி; ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர்; சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும். இந்த ஐந்து விஷயங்களையும் கொண்டிருப்பவன் அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற அர்த்தத்திலேயே ஆண்டி என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.  
  

சங்ககாலத் தமிழர், மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான வரண்ட பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். தொல்காப்பியம் காடு, நாடு, மலை, கடல் என நான்கு வகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. தமிழ் இலக்கணத்தில் இவை ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவை நிலத்திணைகள் எனப்படுகின்றன.

  1. மலையும் மலை சார்ந்த நிலமும் - குறிஞ்சி
  2. காடும் காடுசார்ந்த நிலமும் - முல்லை
  3. வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம்
  4. கடலும் கடல் சார்ந்த நிலமும் - நெய்தல்
  5. மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் - பாலை


ஐந்திலே ஒன்று பெற்றான்ஐந்திலே ஒன்றை தாவி
ஐந்திலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
ஐந்திலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலார் ஊரில்
ஐந்திலே ஒன்றை வைத்தான்அவன் எம்மை அளித்து காப்பான்


பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். இக்கம்ப ராமாயண பாடலின் மூலம் அனுமானின் பெருமையும், தமிழின் பெருமையும் அறியலாம். இது சுந்தரகாண்டத்தில் அனுமன் இலங்கைக்கு தீ வைத்து திரும்பும் பொழுது எழுந்த பாடல். கம்ப ராமாயணத்தில் 5-வது காண்டம் இது. பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று (வாயு பகவான்) பெற்ற மகன், பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரை (கடல்) தாவி, இராமருடன், லக்ஷ்மண், பரதன், சத்ருக்ன், சீதாவுடன் சேர்ந்து அறுவரான அனுமன், இராமருக்காக பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தில் பறந்து சென்று, பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமியில் பிறந்த சீதாவை காக்க, பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கையில் வைத்தான், அவன் நம்மை எல்லா சுகங்களையும் அளித்து காப்பான்.

என்ன நண்பர்களே, ஐந்து ஐந்து ஐந்து என்ற தலைப்பினைப் பார்த்து சமீபத்தில் வந்த திரைப்படம் பற்றிய ஏதோ பதிவு என நினைத்து வந்தீர்களா? அடாடா?


அது வேறொன்றுமில்லை.... மகிழ்ச்சியான விஷயம் தான் – 2009-ஆம் வருடம் இதே நாள் தான் எனது வலைப்பூவினை ஆரம்பித்து எனது முதல் பதிவினை வெளியிட்டேன். நேற்றோடு நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது எனது இந்த வலைப்பூ. 

இத்தனை நாட்களும் என்னுடைய பதிவுகளைப் படித்து நீங்கள் எல்லோரும் கொடுத்து வந்த ஆதரவு மேலும் தொடர்ந்து கிடைக்குமென நம்புகிறேன்.

நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாம் ஆண்டு தொடங்கும் இந்த நாளில், ஒரு விஷயம் – எனது எழுத்து ஏதோ மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்ற நம்பிக்கையிலும் சந்தோஷத்திலும் தான் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். :)

மேலும் தொடர்ந்து இந்த வலைப்பக்கத்தில் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

பூவாசம் புறப்படும் பெண்ணே.....

ஞாயிற்றுக் கிழமைகளில் நான் எடுத்த புகைப்படங்களையோ அல்லது ரசித்த புகைப்படங்களையோ எனது வலைப்பூவில் பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்த வழக்கத்தை கடந்த சில வாரங்களாக தொடர முடியவில்லை. இன்று மீண்டும் ஒரு புகைப்படத் தேரோட்டம்.

சமீபத்தில் சென்னையில் ஒரு திருமணத்திற்காக வந்தபோது எனது சித்தப்பாவும் பதிவருமான திரு ரேகா ராகவன் அவர்களது வீட்டில் தான் தங்கினேன். அவரது பொழுது போக்கில் ஒன்று தோட்டத்தினைப் பராமரிப்பது. அவரது வீட்டில் இருக்கும் பூச்செடிகளிலிருந்து சுட்ட [பூக்கள்] படங்கள் இன்றைய ஞாயிறில் – உங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாய்.....

இதோ பூக்கள்.....  வாசத்துடன் உங்களுக்காக....



பாரிஜாதம்: இந்தப் பூவினை பாரிஜாதம் என்று தான் சொல்கிறார்கள் – ஆனால் இணையத்தில் பாரிஜாதம் என்று தேடினால் பவளமல்லியைக் காண்பிக்கிறது. பதிவர் கீதா சாம்பசிவம் கூட இதே பூவினை தனது ஒரு பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். :) சந்தேகம் தீர்த்து வைப்பவர்களுக்கு ஆயிரம் பூக்கள் பரிசு!



செம்பருத்தி: இந்த பேர்ல ஒரு சினிமா படம் வந்தது – அதுல ரோஜா நடிச்சாங்கஅப்படின்னு உடனே சொல்லக் கூடாது! இந்த பூவிற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொல்வார்கள். இரத்த அழுத்தம், முடி உதிர்தல், இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு செம்பருத்தி ஒரு அருமருந்து.....



செவ்வரளி: செவ்வரளி தோட்டத்திலே உன்னை நினைச்சேன்அப்படின்னு ஒரு பாட்டு கேட்டுருக்கீங்களா? கேட்க நல்லா இருக்கும்....  :)



விருட்சிப் பூ: இட்லி பிரியர்களுக்கு இந்த பூவையும் பிடிக்கலாம் – ஏன்னா இதை இட்லிப் பூ என்றும் சிலர் சொல்வார்கள்......



கனகாம்பரம்: நெய்வேலியில் இருந்தவரை எல்லா நாட்களும் பூக்கள் வாசம் தான். கனகாம்பரம் செடிகள் – ஒவ்வொரு செடியிலும் வேறு வேறு வண்ணங்களில் கனகாம்பரம் பூ பூக்கும். தொடுத்து வைத்தால் பார்க்கவே அழகு. அதுவும் பெண்களின் தலையில் அடர்த்தியாகத் தொடுத்த அந்த பூக்களை வைத்துக் கொண்டால் பேரழகு....  இப்பல்லாம் கிடைக்குதோ தமிழகத்தில்?

என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் பூக்களின் வாசம் புறப்பட்டதா?

மீண்டும் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

சனி, 28 செப்டம்பர், 2013

நெய்வேலியின் ஏலச் சந்தை.....

[மனச் சுரங்கத்திலிருந்து......]

மனச் சுரங்கத்திலிருந்து எழுதி ரொம்ப நாளாயிற்று நண்பர்களே.....  இன்று காலையிலேயே நண்பர் சே. குமார் எழுதிய கிராமத்து நினைவுகள் : உப்பு வண்டி படித்தவுடனே எனது நெய்வேலி நினைவுகள் மனதில் கும்மியடித்தன. 

நெய்வேலியில் மூன்று நாட்களில் வார சந்தை உண்டு செவ்வாய் கிழமை அன்று வட்டம் பத்தொன்பதிலும், வியாழன் அன்று வட்டம் மூன்றிலும், ஞாயிறன்று திடீர் குப்பத்திலும் சந்தை உண்டு. காய்கறி மட்டுமல்லாது, அசைவ பதார்த்தங்களும், பழ வகைகளும் எல்லாமே மலிவாக கிடைக்கும். இப்போதைய நாட்கள் போல வீட்டின் அருகிலேயே காய்கறிக் கடைகளோ, தள்ளு வண்டிகளோ நெய்வேலியில் கிடையாது.  காய்கறிகள் வாங்க வேண்டுமென்றால் சந்தைக்குத் தான் செல்ல வேண்டும்.

நாங்கள் இருந்த பதினொன்றாம் வட்டத்திலிருந்து செவ்வாய் சந்தைக்குச் செல்ல நெய்வேலியின் பேருந்தில் எனக்குத் தெரிந்து பதினைந்து பைசா கொடுத்திருக்கிறேன் [1990-களில் இருபத்தி ஐந்து பைசா]. அப்பா, அம்மா ஐந்து பைசாவிற்குச் சென்றிருப்பதாகச் சொல்வார்கள். அதுவும் சில சமயங்களில், ஒரு கையில் அக்காவைப் பிடித்துக் கொண்டு, வயிற்றில் என்னையும் சுமந்து கொண்டு, ஐந்து பைசா மிச்சம் பிடிக்க மறு கையில் காய்கறி பையைச் சுமந்தபடி அந்த நீண்ட தூரத்தினை நடந்தே வருவாராம்.....

சந்தையில் பல சந்துகள், ஒவ்வொரு சந்திலும் காய்கறிக் கடைகள், கடைசி சந்துகள் மீன், கருவாடு போன்ற அசைவ வகைகளுக்கு.  அதைத் தாண்டி மளிகை வகைகளான புளி, மிளகாய், போன்றவற்றிற்கு. அம்மா ஒரு கையில் என்னைப் பிடித்துக் கொண்டு, காய்கறிப் பையை தோளில் மாட்டிக்கொண்டு மறு கையால் மூக்கை மூடிக்கொண்டு மீன், கருவாடு சந்தினைத் தாண்டி புளி வாங்க ஓடியது இன்னும் நினைவில்........

முதலில் எல்லா சந்துகளிலும் சென்று என்ன என்ன காய்கறி என்ன என்ன விலையில் விற்கிறது என காதால் கேட்டபடியும், விசாரித்தபடியும் ஒரு ரவுண்டு.....  பிறகு எங்கு மலிவாக என்ன காய் கிடைக்கிறது என்பதை முடிவு செய்து அங்கே சென்று காய்கறிகளை வாங்கிக் கொண்டு அங்கிருந்து வாழைப்பழம் ஏலத்தில் கொடுக்கும் சந்திற்கு வருவோம்.....

அந்த சந்தில் பல மாட்டு வண்டிகள் முழுவதும் வாழைப்பழங்களோடு நிறுத்தி வைத்திருப்பார்கள். வண்டியின் மேலே, பின்புறத்தில் நின்று கொண்டு வாழைப் பழங்களை சீப்பு சீப்பாக ஏலம் விடுவார். ஒரு சீப்பு பழத்தினை கையிலெடுத்து மூன்று ரூபாயில் ஆரம்பித்து ஐம்பது ஐம்பது பைசாவாக குறைத்துக் கொண்டே வருவார். எடு ஒரு ரூபாய் ஐம்பது பைசா! என ஒரு கூவு....  எல்லாரும் இன்னும் குறைப்பார் என நினைத்துக் கொண்டிருக்கும் போது இன்னுமொரு கூச்சல் “எடு ஒன்றரை ரூபாய்! ஏதோ குறைத்து விட்டார் என சில கைகள் நீளும்! உடனே காசு வாங்கிக் கொண்டு பழங்கள் கை மாறும்.

அம்மாவின் கைபிடித்துக் கொண்டு போன காலம் போய், நான் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த பிறகு நானே சந்தைக்குச் செல்லும் காலம் வந்த பின் இந்த ஏலம் இடும் இடத்தில், பழம் வாங்குகிறேனோ இல்லையோ இந்த விளையாட்டைப் பார்ப்பதற்கே நின்றதுண்டு! வண்டிக்காரர் மேலே நின்று கொண்டிருப்பதால், அங்கிருக்கும் அத்தனை மனிதர்களின் தலைகளும் அண்ணாந்து பார்த்தபடியே சாமி வரம் எப்போ கொடுப்பார் என பார்த்தபடி நிற்பதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான்!



செவ்வாய் சந்தைக்குச் செல்லும் பல வண்டிகள் எங்கள் வீடு இருந்த திருச்சி சாலை [இப்போது சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் சாலை] வழியாகத் தான் செல்லும்.  சில சமயங்களில் வழியிலேயே வண்டி சென்று கொண்டிருக்கும்போதே பின்னாடியே ஓடி கீரைக்கட்டுகள் வாங்கியதுண்டு. பல சமயங்களில் மிகவும் சல்லிசான விலையில் கொடுத்ததுண்டு.

அரைக்கீரை, முளைக்கீரை போன்றவற்றை சந்தைக்குப் போகுமுன் வாங்கினால் ஒரு லாபம் சந்தைக்குச் சென்றதும் கட்டுகள் சின்னதாகி விடும்!. வண்டியில் பெரிய கட்டுகளாக இருக்கும். அதனால் மாட்டு வண்டியின் பின்னாலேயே ஓடிப்போய் கீரைகளை வாங்குவோம். என்னைப் போலவே லூசாக இருக்கும் அரை ட்ராயரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையில் காசு வைத்துக் கொண்டு ஓடுவோம்! கீரைக்கட்டைக் கையில் வாங்கி வீடு திரும்பும்போது அப்படி ஒரு மகிழ்ச்சி நடுவே அரை ட்ராயர் கீழே விழுந்திருந்தால் கூட தெரிந்திருக்காது!

அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அந்த வழியே சைக்கிளில் வரும்போது, கையில் காய்கறி பையோடு அம்மா நடந்து வருவதைப் பார்த்தால், பைகளை வாங்கி சைக்கிள் ஹாண்டில் பாரில் மாட்டிக் கொண்டு வீட்டில் வந்து கொடுத்து விடுவார்கள். இப்போது போல பக்கத்து வீட்டில் இருப்பவர் யாரென்று தெரியாத நிலை இல்லையே அப்போது!

இனிய நினைவுகள்....  இப்போது தில்லியில் ஒரு கிலோ காய்கறி நாற்பதிற்கும் எண்பதுக்கும் வாங்குகிறேன். அதில் பத்தில் ஒரு பங்கு விற்கும்போது பேரம் பேசியது மனதில்.....  இனிய நினைவுகளை மீண்டும் மீட்டெடுக்க வைத்த சே. குமார் அவர்களுக்கு நன்றி.

மீண்டும் வேறொரு பகுதியில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.