வியாழன், 11 மார்ச், 2010
தில்லியில் உள்ள பள்ளிகள்
தில்லியில் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு தாய் தந்தையரும் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. சென்ற வருடம் எனது குழந்தையை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்கு வீட்டின் அருகில் உள்ள பள்ளிகளில் சிறந்தது என நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்ட பள்ளிகளுள், நான்கு பள்ளிகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தேன். ஒவ்வொரு விண்ணப்ப படிவமும் ரூபாய் 100 முதல் 150 வரை. ஏதோ வேலைக்கு விண்ணப்பிப்பது போல் பலவிதமான படிவங்களை நிரப்பி, எல்லோருடைய புகைப்படங்களையும் ஒட்டி, அதனுடன் தாய், தந்தையரின் படிப்புக்கான சான்றிதழ், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் என்று பல சான்றிதழ்களை கொடுக்க வேண்டி இருக்கிறது.
தில்லி அரசு ஒவ்வொரு வருடமும் பள்ளி சேர தகுந்த வயது பற்றி தனது புதுப்புது அறிவிப்புகளால் மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறது. ஒரு வருடம் ”3+”-ல் எல்.கே.ஜி என்று ஒரு அறிவிப்பு. அடுத்த வருடமே "இல்லை, இல்லை, ”4+”-ல் தான் சேர்க்க வேண்டும்!" என அடுத்த அறிவிப்பு. பள்ளிகளில் எல்லாவற்றிற்கும் ஏதோ மதிப்பெண்கள் வைத்திருக்கிறார்கள். அங்கே சேருவதற்கு முன்பே 100க்கு எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதைப் பொருத்துதான் உங்களது குழந்தையை அந்த பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். அப்பா-அம்மா படிப்புத் தகுதிக்கு இவ்வளவு மதிப்பெண்கள், வீட்டுக்கும் பள்ளிக்கும் உள்ள தூரத்திற்குத் தகுந்த சில மதிப்பெண்கள், அதே பள்ளியில் உங்களது மற்ற குழந்தைகள் படித்தால் அதற்காக தனியாக மதிப்பெண்கள், குழந்தை பெண்ணாக இருந்தால் கூடுதல் மதிப்பெண்கள், இது போன்று பல்வேறு தகுதிகளைப் பொருத்து மதிப்பிடுகிறார்கள். எத்தனை முறை முயன்றாலும் இந்த மதிப்பெண்களை எப்படி கணக்கிடுகிறார்கள் என்பது என்னுடைய சிற்றறிவுக்கு இன்னமும் புரியவில்லை!
உங்கள் குழந்தையை அவர்களது பள்ளியில் சேர்த்துக்கொள்கிறேன் என்று அவர்கள் திருவாய் மலர்ந்த பிறகு பலவிதமான தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல் ஆகியவை உங்களுக்கு வரும். தாய் தந்தையருக்கு தனித்தனியே சில வகுப்புகள், செய்ய வேண்டிய பணிகள் பற்றிய விவரங்களை உங்களுக்குத் தருவார்கள். அதில் மிக மிக முக்கியமானது நீங்கள் எத்தனை பணம் தர வேண்டும் என்பதே! Admission Fee, Caution Money, Annual Charges, Developmental Charges [யாரோட Development?], மூன்று மாத Tuition Fees [மாதம் ஒன்றுக்கு ரூபாய் 1800] எல்லாம் சேர்த்து 15000-20000 வரை வாங்கி விடுவார்கள். இது தவிர, புத்தகங்கள், ஸ்டேஷனரி எல்லாம் சேர்த்து ஒராயிரம். வெயில் காலத்திற்கும், குளிர் காலத்திற்கும் தனித்தனி உடைகள், காலணிகள் இதெல்லாம் ஒரு நாலாயிரம் வரை ஆகும். பள்ளிக்கு அனுப்ப போக்குவரத்து செலவாக, பள்ளியிலிருந்து உங்கள் வீடு இருக்கும் தொலைவை பொருத்து, மாதம் ஒன்றுக்கு ரூபாய் 500 முதல் 800 வரை வாங்குகிறார்கள். இது தவிர தினசரி வீட்டுப்பாடம், மற்ற செய்திகள் எஸ்.எம்.எஸ்./மெயில் மூலம் அனுப்ப மாதா மாதம் நாம் அவர்களுக்கு அழ வேண்டிய தண்டம் ரூ.150/-.
இது தவிர அவ்வப்போது வரும் பண்டிகைகளைப் பொருத்து உங்கள் குழந்தையை ராதையாகவோ, ராமனாகவோ, கிறிஸ்துமஸ் தாத்தாவாகவோ வேடம் தரித்து அனுப்ப வேண்டும். அந்தந்த உடைகளை அவர்கள் சொல்லும் கடையிலேயே வாடகைக்கு எடுக்க/வாங்க வேண்டும் என்ற பணிவான வேண்டுகோள் வேறு [உங்களுக்குத் தெரிந்த கடையில் வாங்கினால் அவர்களுக்கு வரவேண்டிய கமிஷன் அம்பேல் ஆகிவிடுமே என்ற நல்லெண்ணம்தான்!]. ஹோலி என்றால் கலர் பொடி, இனிப்புகள்; ”ரக்ஷா பந்தன்” என்றால் ராக்கி, இனிப்புகள்; வசந்த பஞ்சமி என்றால் மஞ்சள் உடை அணிந்து, மஞ்சள் நிற உணவு, சுதந்திர தினம்/குடியரசு தினம் என்றால் மூவர்ண உணவு கொடுத்து அனுப்பவும் என்றெல்லாம் வகைவகையான விஷயங்களை நாட்குறிப்பில் எழுதி அனுப்பி விடுவார்கள்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக நேற்று எழுதி அனுப்பிய குறிப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது! - “Please send Rs.150/- for the Graduation Day Ceremony”. குழந்தை எல்.கே.ஜியில் இருந்து யு.கே.ஜி-க்கு செல்வதை கொண்டாட இந்த Graduation Day! இந்த விழாவில் எனது மகளை ஒரு ”லக்னோயி” உடையில் நன்றாக அலங்கரித்து அனுப்ப வேண்டுமாம். என்ன செய்யப் போகிறார்கள் என்பதை கேட்டு நான் ஆடித்தான் போனேன். அவளுடன் பயிலும் ஒரு பையனுடன் “கேட் வாக்” செய்ய போகிறாள். வகுப்பு ஆசிரியரிடம் கேட்ட போது " அவளது வகுப்பில் பயிலும் எல்லா மாணவ மாணவியரும் ஜோடி-ஜோடியாக, அவரவர் பார்ட்னர்களுடன் கேட் வாக் செல்லப் போகிறார்கள் " என்று சொன்னார்!. பள்ளியின் பெயர் “Vivekanand Public School”. "அரே பக்வான், என்னையும் விவேகானந்தரையும் காப்பாத்துப்பா ப்ளீஸ்!" என்று மனசுக்குள் பிரார்த்தித்துக்கொண்டே ஸ்கூலை விட்டு வெளியே ஓடினேன்.
Labels:
பொது
தில்லியிலே மட்டுமா? எல்லா ஊரிலேயும் இதே அலப்பரை தான்! இப்படியே போச்சுன்னா, ஓட்டுப்போடுற வயசுலே தான் எல்.கே.ஜி. அட்மிஷன் கிடைக்கும்போலிருக்கு! நல்ல பதிவு!
பதிலளிநீக்கு'அபியும் நானும்' சினிமாவின் ஆரம்பம் போல் இருக்கிறது!! அது சரி அவர்கள் ஏதேனும் போட்டிகள் நடத்தி பரிசுகள் தருவார்களா? இருந்தாலும் LKG குழந்தைக்கு graduation day டூ மச்.
பதிலளிநீக்குஇப்பதான் ப்ளான் பண்ணினேன், இன்னொன்னு பெத்துக்கலாம்னு. உங்கள் புலம்பலை (எல்லோருடைய புலம்பலும்தான்) படிச்சதும் எல்லாம் கேன்சல்.
பதிலளிநீக்குஒருவேளை இது அரசாங்கத்தோட திட்டமிட்ட சதியாக இருக்குமோ? "We Two! Our Two!" "One is Fun" அப்படி இப்படின்னு என்னமெல்லாமோ சொல்லிப் பார்த்தாங்க. ஒருத்தரும் கேட்கிற மாதிரி தெரியல்ல. அதனாலே, இந்த மாதிரி பிரைவேட் ஸ்கூல்காரங்க கூட கூட்டு சேர்ந்து சதி பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன். இப்போ ஒண்ணுக்கு அப்புறம் இன்னொன்னுக்கு யோசிக்க வேண்டி இருக்கில்ல. இப்போல்லாம் இரண்டு குழந்தைகள் என்றால் "Luxury"-ன்னு ஆகிப்போச்சு.
என் இரண்டாவது குழந்தைய எல்கேஜி சேத்துட்டு கடமை முடிச்சேன்னு பதிவு போட்டிருக்கேன்...
பதிலளிநீக்குஅவனுக்கு ப்ளே ஸ்கூலிலேயே தொப்பி கவுனெல்லாம் மாட்டி க்ராஜுவேசன் முடிச்சதா சொன்னாங்களே.. :)
\\இப்போல்லாம் இரண்டு குழந்தைகள் என்றால் "Luxury"-ன்னு ஆகிப்போச்சு.// ரொம்ப ரொம்ப உண்மை.
சேட்டைக்காரன் சொன்னாப்ல இந்த தலைவலி எல்லா ஊர்லயும்.. பரிசு கிடைக்காத ‘காந்தி’ வேஷம் போட்ட பக்கத்து வீட்டு குழந்தை கதறிக் கதறி அழுதப்ப.. அஹிம்சை மறந்து.. ஹிம்சை!
பதிலளிநீக்கு