புதன், 3 மார்ச், 2010

போவோமா குருத்வாரா?



தலைநகர் தில்லியில் இந்தியாவின் எல்லா மாநில மக்களும், பலவிதமான மொழி பேசுபவர்களும் வாழ்கிறார்கள். ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்ஸி போன்ற பல மதத்தவர்களையும் இங்கே நீங்கள் காணலாம்.

பொதுவாக எல்லா மதத்தினர்களும் அவரவர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் போது சில விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் ஒரு மதத்தினரின் விதிமுறைகள் மற்ற மதத்தினருக்கும் தெரிந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை.

ஒரு முறை அலுவலகத்தில் உள்ள சீக்கிய நண்பர் க்ருபால் சிங் என்பவர் என்னையும் மற்றொரு தமிழ் நண்பரையும் அவர்களது வழிபாட்டுத் தலமான “குருத்வாரா”விற்கு வருமாறு அழைத்தார். எங்களுக்கோ அவர்களது வழிபாட்டு முறையோ, விதிமுறைகளோ சுத்தமாகத் தெரியாது. அவரிடம் அதை நாங்கள் எடுத்துரைக்க, அவரோ ”அதைப் பற்றிய கவலையே வேண்டாம், எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று சொல்ல, நாங்கள் ஒருவித கலக்கத்துடனே அங்கு சென்றோம்.

சர்தார்கள் என்றாலே முட்டாள்கள் என்பது போல அவர்களை வைத்து பலப்பல ஜோக்குகள் புழக்கத்தில் இருந்தாலும் அவர்களில் பலர் மெத்தப்படித்து நல்ல நிலையில் இருப்பவர்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள். எந்த ஒரு சர்தாரையும் நீங்கள் பிச்சைக்காரராக பார்க்கமுடியாது. அந்த அளவுக்கு உழைப்பவர்கள். அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாவிடினும் குருத்வாரா வாசலில் ஒரு கடைவைத்து கை வளையாவது விற்றுக்கொண்டு இருப்பார்கள். உணவுக்குக் கவலையே இல்லை. எத்தனை பேர் வந்தாலும் குருத்வாராவில் உணவு உண்டு.

குருத்வாரா வாசலை நாங்கள் சென்றடைந்ததும் அதன் உள்ளே காலணிகளை இலவசமாக வைக்க ஒரு இடம் இருந்தது. க்ருபால் காலணி மற்றும் காலுறைகளை கழற்றி கொடுக்க நாங்களும். பக்கத்திலேயே ஒரு மேடையில் மூன்று நான்கு தண்ணீர் குழாய்கள் (நம் ஊர் ஹோட்டல் மற்றும் கல்யாண மண்டபங்களில் கை கழுவும் இடம் போல). அதில் கையைக் கழுவிக்கொண்டு முன்னேறினோம். எங்கள் தலைமுடியை மறைக்க ஒரு கைக்குட்டையைக் கட்டிக்கொள்ளச் சொன்னார். அவர் முன்னே செல்ல பின்னே நாங்களும். இன்னுமொரு பத்து படி ஏறினால் மேலே குருத்வாரா. நான்கைந்து படிகள்தான் ஏறியிருப்போம், திடீரென க்ருபால் கீழே குனிய, நாங்களும். பார்த்தால் அவர் காலை சொரிந்து கொண்டார். "ஓ.. ஒரு வேளை நாலு படி ஏறினா உடன் காலை சொரியணுமா?" குழப்பத்தில் நான் எனது தமிழ் நண்பரை பார்க்க அவர் என்னைப் பார்க்க, சரி எதற்கும் சொரிந்து வைப்போம் என்று சொரிந்து கொண்டோம்.

உள்ளே சீக்கியர்களின் புனித நூலான ”குரு க்ரந்த் சாஹிப்” ஒரு மேடையில் வைக்கப்பட்டு அதன் இருபுறமும் வெள்ளை உடை அணிந்த சீக்கியர்கள் சாமரம் வீசிக்கொண்டு இருந்தனர். வேறொருவர் அப்புனிதநூலில் இருந்து ஏதோ ஓதிக்கொண்டு இருந்தார். அவர் முன்னே ஒரு பெரிய பாத்திரம். க்ருபால் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து அந்தப் பாத்திரத்தில் போட, ”என்னடா இது? ரொம்ப செலவு வைக்கிற இடமா இருக்கே! என்று நாங்கள் முழிக்க, க்ருபால் எங்களைப் பார்த்து "உங்களால என்ன முடியுமோ அதை போடுங்க!” என்றவுடன் – ஒரு பத்து ரூபாயை அதில் போட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

அடுத்தபடியாக அவர் எங்களை அழைத்து சென்ற இடம் குருத்வாராவின் பின்புறம். அங்கே திரும்பவும் கை கழுவிக்கொண்டு உள்ளே சென்றால் – முதலில் ஒரு இடத்தில் நிறைய தட்டு, ஸ்பூன் போன்றவை இருந்தது. க்ருபால் அவருக்கு எடுத்துக்கொண்டு எங்களுக்கும் எடுத்துக் கொடுத்தார். அங்கே வரிசையாக பலர் அமர்ந்திருக்க நாங்களும் அமர்ந்தோம். முதலில் ஒருவர் வந்து தண்ணீர் கொடுத்தார். பின்னே சாலட், “டால்”, உருளைக்கிழங்கில் ஒரு சைட் டிஷ் என கொடுத்தார்கள். அதன் பின்னர் ஒருவர் கையில் ஒரு கூடை நிறைய சப்பாத்தி எடுத்துக்கொண்டு வந்தார். வந்த உடன் க்ருபால் இரண்டு கைகளையும் நீட்டிக்காட்ட இரண்டு சப்பாத்திகளை கையில் போட்டார். போடும் போது “ப்ரசாதா, ப்ரசாதா” என்று குரல் கொடுக்கிறார் அவர். இரண்டு கையையும் நீங்கள் நீட்டினால் தான் உங்களுக்கு ரொட்டி கிடைக்கும். உங்கள் தட்டில் போடுவதில்லை. ஏனெனில் “ப்ரசாதா”-விற்கென்று ஒரு மதிப்பு இருக்கிறது. இப்படி உணவு அளிப்பதை அவர்கள் “லங்கர்” என்று கூறுகிறார்கள். சாப்பிட்டுவிட்டுத் தட்டினை எடுத்துக்கொண்டு போய் சுத்தம் செய்யும் இடத்தில் வைத்தால் சில சீக்கியர்கள் அவற்றை சுத்தம் செய்து விடுகிறார்கள். எல்லாம் குருவிற்கு செய்யும் ஒரு சேவையாக அவர்கள் செய்கிறார்கள்.

இப்படியாகத்தானே எங்களது குருத்வாரா பயணம் நல்ல படியாக முடிந்தது. (ஏதோ காலட்சேபம் கேட்கிற இடத்துக்கு வந்துட்ட மாதிரி கடைசியில் ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்ப்பட்டதில்ல?)

10 கருத்துகள்:

  1. //ஏதோ காலட்சேபம் கேட்கிற இடத்துக்கு வந்துட்ட மாதிரி கடைசியில் ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்ப்பட்டதில்ல?//


    அட ஆமா! எப்படிங்க இது?

    ரேகா ராகவன்.

    பதிலளிநீக்கு
  2. வெங்கட், நல்ல பதிப்பு. வலது காலா அல்லது இடது காலா? எதை சொரிய வேண்டும் என்று சொல்லவில்லையே? மற்றபடி ஒரு புதுமையான, சீக்கிய கோவிலை பற்றிய விவரம் தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்லா ஃபாலோ செய்தீங்க போங்க :))அமிர்தசரஸ் போயிருந்தபோது நானும் அங்கே ப்ளேட்டுகளை கழுவினேன்.. கைகளை நீட்டி வாங்குவதும் ,சேவைகளும் நம்மை பணிவுகொள்ள வைக்கும் நல்ல பழக்கம்.. தரை துடைப்பதையோ துடைப்பத்தால் ரோடை கூட்டுவதோ எது என்றாலும் இளைஞர்கள் கூட அம்மதத்தை சேர்ந்தவர்கள் செய்வது ஆச்சரியம் உண்டாக்குவதே..

    பதிலளிநீக்கு
  4. முற்றிலும் வித்தியாசமான ஒரு பதிவு...

    குருத்வாரா பற்றி நான் படிக்கும் முதல் பதிவு.... நல்லா எழுதி இருக்கீங்க...

    குறிப்பாக இந்த விஷயங்கள் :

    //சீக்கியர்களின் புனித நூலான ”குரு க்ரந்த் சாஹிப்” ஒரு மேடையில் வைக்கப்பட்டு அதன் இருபுறமும் வெள்ளை உடை அணிந்த சீக்கியர்கள் சாமரம் வீசிக்கொண்டு இருந்தனர்//

    //”என்னடா இது? ரொம்ப செலவு வைக்கிற இடமா இருக்கே! என்று நாங்கள் முழிக்க, க்ருபால் எங்களைப் பார்த்து "உங்களால என்ன முடியுமோ அதை போடுங்க!” என்றவுடன் – ஒரு பத்து ரூபாயை அதில் போட்டு விட்டு //

    //இரண்டு கையையும் நீங்கள் நீட்டினால் தான் உங்களுக்கு ரொட்டி கிடைக்கும். உங்கள் தட்டில் போடுவதில்லை. ஏனெனில் “ப்ரசாதா”-விற்கென்று ஒரு மதிப்பு இருக்கிறது//

    //இப்படி உணவு அளிப்பதை அவர்கள் “லங்கர்” என்று கூறுகிறார்கள்//

    பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  5. க்ருபால் சிங்குடன் நீங்கள் மட்டுமல்ல, நாங்களும் குருத்வாராவிற்க்குள் சென்று வந்த மாதிரி இருக்கிறது. Singh is King.

    (அது சரி. தலைப்பைப் பார்த்தால் தம்பி இன்னும் "சின்னதம்பி" குஷ்பு ஞாபகமாகவே இருக்கிற மாதிரி இருக்கே! இருக்கட்டும்! இருக்கட்டும்!)

    பதிலளிநீக்கு
  6. உங்கள் பதிவுகளில் பல புது விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  7. " நான்கைந்து படிகள்தான் ஏறியிருப்போம், திடீரென க்ருபால் கீழே குனிய, நாங்களும். பார்த்தால் அவர் காலை சொரிந்து கொண்டார். "ஓ.. ஒரு வேளை நாலு படி ஏறினா உடன் காலை சொரியணுமா?" குழப்பத்தில் நான் எனது தமிழ் நண்பரை பார்க்க அவர் என்னைப் பார்க்க, சரி எதற்கும் சொரிந்து வைப்போம் என்று சொரிந்து கொண்டோம்"...மிகவும் சிரிப்பை வரவழைத்த வரிகள்...புதிய, புரியாத இடத்துக்கு செல்லும் பொது இதைப் போன்ற நிலை ஏற்படும்....

    பதிலளிநீக்கு
  8. நல்ல வர்ணனை குருத்வாரா போய்வந்த திருப்தி அளிக்கிறது.தொடர்ந்து எழுதவும்

    பதிலளிநீக்கு
  9. . எல்லாம் குருவிற்கு செய்யும் ஒரு சேவையாக அவர்கள் செய்கிறார்கள்.
    பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  10. சீக்கியர்கள் மனதும் வார்த்தையும் மிகவும் சுத்தமாக இருக்கிறது.நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....