திங்கள், 8 மார்ச், 2010

தலை நகரிலிருந்து – பகுதி 5:

இப்போதுதான் ஆரம்பித்த மாதிரி இருந்தது, அதற்குள் நான்கு வாரங்கள் ஓடிவிட்டன. இந்த நான்கு வாரங்களில் தில்லியின் சில இடங்கள், உணவு வகைகள் பற்றி பார்த்தோம். இந்த வாரமும் தொடர்வோம்.



பார்க்க வேண்டிய ஒரு இடம்: National Rail Museum – பிப்ரவரி 1, 1977-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த காட்சியகம் தில்லியின் சாணக்யபுரியின் அருகில் உள்ளது. பதினோரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் போக்குவரத்து சம்பந்தப்பட்ட பொருட்கள் வைத்துள்ளார்கள். அங்கே உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் இந்திய ரயில்வே துறை ஆரம்பித்தது முதல் தற்காலம் வரை உள்ள பலவித ரயில் பெட்டிகள், என்ஜின்கள் ஆகியவற்றின் மாதிரிகள், பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள், ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்த்துவிட்டு வெளியே வந்தால், பலவிதமான உண்மையான ரயில் இன்ஜின்கள், “Royal Saloon” என்று அழைக்கப்படும் மஹாராஜாக்கள் பயன்படுத்திய ரயில் பெட்டிகள் போன்றவற்றைக் காணலாம். 1887 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட "ஃபேரி க்வீன்" என்ற ரயில் இன்ஜின் தற்போதும் உபயோகிக்கூடிய நிலையில் உள்ளது. உலகிலேயெ பழமையான இந்த ரயில் வண்டி மூலம் தில்லியிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ”அல்வர்” என்ற இடத்திற்கு முன்கூட்டியே பதிவு செய்து வைத்துள்ள பயணிகளை அழைத்துச் செல்கிறார்கள். வாரத்தின் திங்கட்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களிலும் காட்சியகம் திறந்து இருக்கும். குழந்தைகளுடன் நீங்களும் இங்குள்ள “Toy Train” மூலம் இதை ஒரு சுற்று சுற்றி வாருங்களேன்.



சாப்பிட வாங்க: வட இந்தியாவின் பல பகுதிகளில் கிடைக்கும் ஒரு உணவு வகை – ”கச்சோடி”. மைதாவில் சிறிதளவு கோதுமை மாவு அரை சிட்டிகை உப்பு மற்றும் தண்ணீர் கலந்து சிறு சிறு உருண்டைகள் செய்து கொள்ளவும். வேகவைக்கப்பட்ட பாசிப் பருப்பு [அல்லது உளுத்தம் பருப்பு], கடலை மாவு, மிளகு, மிளகாய்ப் பொடி, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை கலந்து கொள்ளவும். உருண்டைகளை சிறுசிறு சப்பாத்திகளாக இட்டுக்கொண்டு மேலே சொன்ன கலவையை அப்படி இட்ட இரண்டு சப்பாத்திகளுக்குள் வைத்து ஒரு கடாயில் எண்ணைய் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பல வகையான வகைகளில் இந்த கச்சோடிகள் கிடைக்கின்றன. இரண்டு கச்சோடி மற்றும் கொண்டைக்கடலை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சைட் டிஷ்ஷோடு சாப்பிட்டால் ஒரு மணி நேரத்திற்கு வேறு எந்த உணவும் தேவை இருக்காது. ”கச்சோடி” இங்குள்ள எல்லா உணவகங்களிலும் கிடைக்கும்.

இந்த வார ஹிந்தி சொற்கள்: ”ஆம்” – என்ன நான் "சரி" என்று சொல்வதாக நினைத்தீர்களா? மாம்பழத்தைத் தான் ஹிந்தியில் "ஆம்" என்று சொல்கிறார்கள். புளியம்பழத்தை “இம்லி” என்று சொல்கிறார்கள். மசக்கையாக இருக்கும் மனைவி கமலியிடம் "கம்லி" இந்தா "இம்லி" என்று ஒரு கணவன் கொடுத்தால் எவ்வளவு ஆசையோடு மனைவி அதை வாங்கி சாப்பிடுவார்?

இன்னும் வரும்…

2 கருத்துகள்:

  1. தில்லித் தமிழ்ச் சங்கத்திலே போய் "கச்சேரி" கேட்கப் போகலாம் என்று இருந்தேன். இப்போ பிளான் எல்லாம் மாறிப் போச்சு. முதல்ல "கச்சோரி". அப்புறம்தான் "கச்சேரி".

    //மசக்கையாக இருக்கும் மனைவி கமலியிடம் "கம்லி" இந்தா "இம்லி" என்று ஒரு கணவன் கொடுத்தால் எவ்வளவு ஆசையோடு மனைவி அதை வாங்கி சாப்பிடுவார்?//

    யாரது கமலி? சொல்லவே இல்லை.

    "கம்லி" - க்கு "இம்லி" மட்டுமல்ல. "கச்சா" "ஆம்" கொடுத்தா, "பச்சா" - க்கும் புடிக்கும்.

    பதிலளிநீக்கு
  2. ஆமாங்க இந்தக் கச்சோடியுடன் சாஸ் அல்லது கொஞ்சம் பானிபூரித்தண்ணீர் விட்டு சாப்பிடுவது வழக்கம். இம்ம் இப்ப அது எல்லாம் இங்க எங்க கிடைக்குது?. அப்படியே கொஞ்சம் போல்பூரி,பானிபூரி படமும் போடுங்க படத்துலயாவது பார்த்துக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....