திங்கள், 11 மே, 2015

அட்ட்ரா புஜி தேவி – கண்ணீர் சிந்தும் பைரவர்

தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 14

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

சென்ற பகுதியில் காங்க்டா நகரில் குடிகொண்டிருக்கும் வஜ்ரேஷ்வரி தேவி பற்றியும் அக்கோவில் பற்றியும் பார்த்துக் கொண்டிருந்தோம். தொடர்ந்து இந்த வாரமும் கோவில் பற்றிய இன்னும் சில தகவல்களும் அனுபவங்களும் பார்க்கலாம். வஜ்ரேஷ்வரி அன்னையை தரிசித்து கையில் பிரசாதத் தட்டுகளுடன் வெளியே வந்தோம்! அது தவறென வெளியே வந்த பிறகு தான் தெரிந்தது! கோவில் பிரகாரம் முழுவதும் முன்னோர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எங்கள் குழுவில் இருந்தவர்களில் ஒருவரிடமிருந்து பிரசாதம் பறிபோனது!

அட்ட்ரா புஜி தேவி....
பதினெட்டு கைகளுடன் காட்சியளிக்கும் தேவி

கோவிலின் பிரகாரத்தில் இன்னும் சில சன்னதிகளும் உண்டுமகா காளிக்கு என ஒரு மூலையில் சன்னதி. சன்னதியின் வெளியில் அட்ட்ரா புஜி தேவி – பதினெட்டு கைகளுடன் தேவியின் உருவம் இருக்கிறது.  முன் நாட்களில் அங்கே ஆடு, கோழி போன்ற விலங்குகளை பலி இடுவது வழக்கமாக இருந்திருக்கிறதுசில வருடங்களாக பலி இடுவது முற்றிலும் தடை செய்யப்பட, இப்போது காளியின் பலி பீடத்தில் இரத்தம் சிந்துவதில்லை! காளியை மனதில் நிறுத்தி வேண்டிக்கொண்டு அங்கிருந்து குரங்குகளை வேடிக்கை பார்த்தபடியே முன்னேறினோம்


மேளம் கொட்டி பிரார்த்தனை...

இக்கோவிலிலும் உங்கள் பெயரைச் சொல்லி, ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ கொடுத்தால், மேளத்தினை தட்டி, ”இன்னாருக்கு நல்லதையே கொடுஎன்று தேவியிடம் அவர்களும் பிரார்த்திக்கிறார்கள். பெரும்பாலான ஹிமாச்சலப் பிரதேசக் கோவில்களில் இந்த வழக்கம் இருக்கிறதுநமது கோவில்களில் இப்படி ஒரு வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லைநம் சார்பாக வேண்டிக் கொண்டு, அவர்களும் தங்களது பிழைப்பைக் கவனித்துக் கொள்கிறார்கள்!

பிரகாரத்தில் இருந்த புறாக்கள்....

தொடர்ந்து பிரகாரத்தைச் சுற்றி வருவோம். அடுத்து நாம் பார்க்கப் போவது மிகப் பழமையான ஒரு சிகப்பு பைரவர் சிலை. கிட்டத்தட்ட 5000 வருடம் பழமையான சிலை என்று எழுதி வைத்திருக்கிறார்கள். முக்கியச் சன்னதி மட்டும் திறந்திருக்க, பிரகாரத்தில் இருக்கும் சன்னதிகள் வெளியே கம்பிக் கதவுகள் போட்டு மூடி இருக்கிறது. கம்பிக் கதவுகள் வழியே இந்த சிகப்பு பைரவரை வேண்டிக்கொண்டோம்இந்த சிகப்பு பைரவர் சிலைக்கு ஒரு கதை உண்டு. அது என்ன கதை? பார்க்கலாமா?
பிரகாரத்தில் இருந்த சிறு கோவில்களில் ஒன்று....

ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு இயற்கைச் சீற்றத்தின் காரணமாகவோ, அல்லது அன்னிய நாடுகளின் தாக்கத்தினாலோ ஆபத்து வருவதற்கு முன்னதாகவே சிகப்பு பைரவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதோடு, மேனியும் வியர்த்து விட ஆரம்பித்து விடுமாம். 1905-ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்தினை தாக்கிய நில நடுக்கத்திற்கு முன்னரும் இப்படி நடந்ததாக குறிப்பிடுகிறார்கள்சிகப்பு பைரவரிடம் அப்படி ஒரு அழிவு வந்து விடாது காப்பாற்ற பிரார்த்திக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

செடிக்கும் பூஜை...

அடுத்ததாக ஒரு சிறிய அறைஅதிலும் வெளியே கம்பிக் கதவுகள். உள்லே ஒரு சிறிய செடி. பக்கத்திலேயே தரையிலே ஒரு கொப்பரை பதிக்கப் பட்டிருக்கிறது. இதற்கும் ஒரு கதை உண்டு. தேவிக்குப் பூஜை செய்ய நினைப்பவர்கள் இங்கே பூஜை செய்யலாம். நல்ல மனதோடு சிறிய பாத்திரத்தினால் தான்யங்களை போட்டால் கூட அந்தக் கொப்பரை நிறைந்து விடுமாம். போதும் என்ற மனதில்லாது மூட்டை மூட்டையாக தானியங்களை அந்தக் கொப்பரையில் கொட்டினாலும் நிறையவே நிறையாது என்று சொல்கிறார்கள்.

நல்ல மனம் இருந்தால் நான் நிறைவேன்....

[dh]த்யானு பக்த் என்பவரின் கதையும் உண்டு. அவரது சிலையை தேவியின் சிலைக்கு நேர் எதிரே வைத்திருக்கிறார்கள். தேவியின் பிரத்யக்ஷமான தரிசனம் வேண்டி தவமிருக்க, அவர் வராது போகவே தனது தலையை வெட்டி தேவிக்கு பலியாக கொடுத்தாராம் த்யானு பக்த். அதன் பின்னர் அவருக்குக் காட்சி தந்த வஜ்ரேஷ்வரி தேவி, த்யானு பக்த் அவர்களை உயிர்பித்து அவருக்கு ஒரு வரமும் கொடுத்தாராம்த்யானு பக்த் என்ன வரம் கேட்டாராம் தெரியுமா?


[dh]த்யானு பக்த் - தலையைக் கொய்து கொடுத்தவர்...

எனக்கு தரிசனம் தர இத்தனை காலம் தாழ்த்தி என் தலையை கொய்து பலி தந்த பிறகு வந்த மாதிரி காலம் தாழ்த்தாது, உனது பக்தர்கள் அனைவருக்கும் நல்ல தரிசனம் தர வேண்டும் எனச் சொல்ல, அன்னையும் அங்கே எழுந்தருளி வரும் பக்தர்கள் அனைவருக்கும் காட்சி தருவதாக ஒரு கதை.

ஸ்ரீராம் பரிவார்.....

இப்படி விதம் விதமான கதைகளைச் சொல்லியபடியே எங்களுடன் நண்பர் மனீஷ் வந்து கொண்டிருந்தார். அவர் எங்களுடன் வந்ததால் இந்தக் கதைகளைக் கேட்டுக் கொள்ள முடிந்தது. சாதாரணமாக கோவில்களில் இப்படி இருக்கும் கதைகளை தெரிந்து கொள்ள அங்கே இருப்பவர்களின் உதவி தேவையாக இருக்கிறது. பல கோவில்களில் சிறப்பம்சங்களைச் சொல்ல யாருமே இருப்பதில்லை! நம் ஊர் கோவில்களில் இருக்கும் ஒவ்வொரு தூண்களுக்குள்ளும் ஒரு கதை ஒளிந்திருக்குமே!


சீறும் சிங்கங்கள்......

கோவிலில் இருக்கும் அனைத்து தேவதைகளையும் பார்த்து பிரகாரத்தில் மூன்று சுற்றுகள் சுற்றி வந்து அனைத்து கதைகளையும் கேட்டு மனதில் ஒரு நிம்மதியோடு வெளியே வந்தோம். ஒவ்வொரு கோவிலிலும் அனுபவங்கள், சில கதைகள், பழக்க வழக்கங்கள் என்று எத்தனை எத்தனை விஷயங்கள் நமக்குக் கிடைக்கின்றனஇதையெல்லாம் யோசித்தபடியே வெளியே வந்தோம். கோவிலின் வாயிலிலும் இரண்டு பொம்மைச் சிங்கங்கள்பக்கத்திற்கு ஒன்றாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவற்றையும் பார்த்தபடியே வெளியே கடை வீதிக்கு வந்தோம்.

எனக்கும் அலங்காரம் உண்டு!

மாலையில் கடை வீதிக்கு வர வேண்டும் என பேசியபடியே அனைவரும் தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். அடுத்து காலை உணவை முடித்துக் கொண்டு அன்றைய தினம் பார்க்க வேண்டிய இடங்களுக்குப் பயணிக்க வேண்டும். என்ன இடங்கள் பார்த்தோம், அங்கே கிடைத்த அனுபவங்கள் என்னென்ன என்பதை வரும் பகுதிகளில் பார்க்கலாம்!

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து


44 கருத்துகள்:

  1. //நமது கோவில்களில் இப்படி ஒரு வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை//

    கேரளத்தில் ஆட்டுக்கல் பகவதி அம்மன் ஆலயத்தில் வெடிப் பிரார்த்தனை உண்டு. காசு கொடுத்தால் அந்த மதிப்புக்கு வெடி போட்டுப் பிரார்த்தனை செய்வார்கள்.

    இனியும் சிகப்பு பைரவரின் கண்ணிலிருந்து கண்ணீர் வழியாதிருக்கட்டும்.

    தானியம் நிறையும் கொப்பரையை முயற்சி செய்து பார்க்கவில்லையா? :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொப்பரை இருந்த அறை பூட்டி இருந்தது :) அதனால் முயற்சிக்கவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஒவ்வொரு கதையும் இறைவனுடன் நம்மை நெருங்குவதற்காக கூறப்படுகின்ற கதைகளே. புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைகளுக்கு காரணம் இருக்கத் தான் செய்கிறது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  3. ஒவ்வொரு கதையும் சுவாரஸ்யம்...

    வியப்பை அளிக்கும் கொப்பரை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    ஒவ்வொன்றையும் பற்றி மிக அருமையாக விளக்கம்கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்... ஐயா. த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  5. அருமை ஐயா
    புகைப்படங்கள் நேரில் பார்ப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றன
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் - சேகண்டி இசைத்து நமக்காகப் பாடி வேப்பிலையால் வருடி விடுவார்கள்.. மற்றபடி தமிழகத்தில் வேறு கோயில்களில் கண்டதில்லை..

    சபரி மலையில் யக்ஷி மற்றும் நாக வழிபாடு செய்ய கொடுகொட்டித் தாளத்துடன் நமக்காகப் பாடுவார்களே!..

    மாளிகைப் புறத்தம்மன் கோயிலுக்குப் பின்னால் சர்ப்பக்காவு எனும் நாகப் பிரதிஷ்டையின் அருகில் கொடுகொட்டி தாளத்துடன் பாட்டு பாடப்படும்..

    பயணக் குறிப்புகள் அருமை.. வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  7. அங்கு மேளத்தினைத் தட்டி நமக்காகப் பிரார்த்திக்கிறார்கள். இங்கு நம்மூர் கோவிகளில் குருக்கள் நமக்கு சங்கல்பம் செய்வித்து நமக்காகப் பிரார்த்திக்கிறார். இத்தனை விவரங்களையும் குறிப்பெடுத்துக் கொண்டு எழுதுகிறீர்களா? இல்லை நினைவிலிருந்தா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் நினைவில் வைத்து தான் எழுதுவது. எடுத்த புகைப்படங்களைப் பார்க்கும் போது எடுத்த போது கிடைத்த தகவல்களும் நினைவுக்கு வரும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு

  8. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு கதை உண்டு. நீங்கள் சொல்வதுபோல் நம் ஊர் கோவில்களில் இதுபோன்று விளக்கம் தர யாரும் இல்லை என்பது வருத்தம் தரக்கூடியதே. செடிக்கும் பூஜை என நீங்கள் குறிப்பிட்டிருக்கும் செடிக்கு
    Poinsettia என்று பெயர். இதனுடைய தாவரப்பெயர் Euphorbia pulcherrima. இந்த செடியின் சிறப்பு என்னவென்றால் நமக்கு பூ மாதிரி தெரிவது அதனுடையே இலையே என்பதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலையே பூ போல..... தில்லியில் இச்செடிகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக தில்லியின் பூங்காக்களில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  9. தங்கள் பயணமும் அதில் கிடைக்கும் அனுபவமும் அருமை. தொடர்ந்து வருகிறோம்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  10. அருமையான புகைப்படங்களும், விளக்கவுரைகளும் தொடர்கிறேன்
    தமிழ் மணத்தில் நுழைக்க 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. வணக்கம்
    பயணங்கள் தொடரட்டும் ..
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  14. சுவாரஸ்யமாய் இருக்கிறது...தொடர்கிறேன்...தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      நீக்கு
  15. //கேரளத்தில் ஆட்டுக்கல் பகவதி அம்மன் ஆலயத்தில் வெடிப் பிரார்த்தனை உண்டு - ஸ்ரீராம். //

    ஆற்றுக்கால் பகவதி - கின்னஸ் சாதனை படைத்த ஒரு கோவில்.

    நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் குழித்துறை அருகில் உள்ள ஐய்யப்பன் கோவிலில் வெடி வழிபாடு உண்டு. பஸ்ஸில் செல்லும் போதே காசு செலுத்தினால் உடனே வெடி வெடிப்பார்கள். முன்பு சபரி மலை செல்வோர் விலங்குகளை விலக்க வெடி வைத்து, வெடி வைத்து சென்றனர். இப்போது விலங்குகள் இல்லை. ஆனால் வெடிகள் உண்டு. அதாவது சாமிக்கு ஒரு "உள்ளேன் ஐயா!" .

    (நீங்கள் இமயம் பற்றி குறிப்பிடும் பொது குமரியும் கொஞ்சம் இருக்கட்டுமே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் குமரியும்! :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  16. புதிய தகவல்களுடன் கூடிய கோயில்! ஶ்ரீரங்கம் வந்தாச்சா? நல்வரவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      திருவரங்கம் வந்தாச்சு...அடுத்த வாரம் புறப்படணும்..

      நீக்கு
  17. படங்களும் செய்திகளும் பிரமிக்க வைக்கின்றன. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  18. எத்த்னை எத்தனைக் கதைகள்! ஒவ்வொரு கோயிலுக்கும், அதன் பூஜைகளிலும். நிறைய தகவல்கள். தங்களின் பயணக் குறிப்புகள் ஒரு பொக்கிஷம்.

    திருவனந்தபுரம் ஆட்டுக்கல் பகவதி அம்மன் கோயிலில் வெடிப்பிரார்த்தனை உண்டு. அந்த பகவதிக்கு பொங்கல் வைக்கும் அன்று ஹப்பா ஊரே நிறைந்து விடும். வண்டிகள் எதுவும் போக முடியாது. இப்போது அது மெயின் ரோடுகள் வரையும் பரவி இருப்பதாகக் கேள்விப்பட்டதுண்டு.

    ஹப்பா இப்போதெல்லாம் ரத்தம் சிந்தவில்லை என்பது மனதிற்கு இதமாக இருக்கின்றது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் ரத்தம் சிந்தவில்லை என்று கேட்டவுடன் எனக்கும் மனதில் இதம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  19. அட பின்னூட்டம் இட்டு விட்டு வந்தால் நண்பர் ஸ்ரீராமும் , ஈஷ்வரன் அவர்களும் ஆட்டுக்கல் பகவதி பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி.

      நீக்கு
  20. அந்த ஊரில் மேளம் கொட்டுபவர்களுக்கும் ,கதை சொல்லிகளுக்கும் நல்லாவே பொழப்பு ஓடும் போலிருக்கிறதே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  21. அருமையான கோயில்! கோயிலைப்பற்றிய கதைகள் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  22. கோவில்களில் கதைக்குப் பஞ்சமா என்ன? நீங்க சொல்றது போல், அந்தக் கதை சொல்ல சரியான ஆள் கிடைக்கணும் :-) அதுக்குத்தான் உள்ளுர்காரர்களிடம் பேச்சுக்கொடுக்கணும்!

    தாய்லாந்து ப்ரம்மா கோவிலிலும் கூட நடனம் ஆடுவது பிரார்த்தனைகளில் ஒன்னு. அதுக்குண்டான பணம் கட்டிட்டால் சாமிக்கு முன் ஆடுவாங்க. இதுலேயும் எத்தனை நடனமோ அதுக்கேத்த காசு கொடுக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளூர்காரர்களிடம் பேச்சுக் கொடுத்தால் தான் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. பயணம் போகும்போது கேள்விகள் கேட்பது மிக முக்கியம்! :) அதுவும் நம்மைப் போன்று பதிவாக எழுதுபவர்களுக்கு!

      தாய்லாந்து பிரம்மா கோவிலில் நடனம் - அட இது கூட நல்லா இருக்கே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....