தொகுப்புகள்

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

ஃப்ரூட் சாலட் – 127 – கழிவுகளும் செல்வம் தரும் – புல்லாங்குழல் – நவீன உடற்பயிற்சி


இந்த வார செய்தி:

கழிவுகளை செல்வமாக பாருங்கள்!



டென்மார்க் துாதரகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து, விருப்ப ஓய்வு பெற்று, வீடு வீடாக சென்று கழிவுகளை சேகரிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மங்களம் பாலசுப்ரமணியன்: நம்மை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வைத்துக் கொள்ள, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கணும். ஓய்வுக் காலத்தை உருப்படியாக கழிக்க, நல்ல வழி இதுதான் என, தோன்றியது. உடனடியாக நாங்கள் வசிக்கும் சென்னை, பம்மல் பகுதியில் இரண்டு, மூன்று பேருடன் களம் இறங்கினேன். ஒரு பிரபல குளிர்பான நிறுவனமும், எக்ஸ்னோராவும் எங்கள் முயற்சிக்கு ஊக்கம் தந்தன. என்னுடைய தலைமையில் இயங்கும், 'பசுமைத் துாதுவர்கள்' என்று சொல்லப்படும் குழுவினர், பம்மலை சுற்றியுள்ள சில தெருக்களில், வீடு வீடாகப் போய் குப்பைகளை சேகரிக்கின்றனர். அரசிடம் கடுமையாக முயற்சி செய்து பெற்ற இடத்தில், மக்கும் குப்பைகளை உரமாக்கும் பணி நடக்கிறது. கேரி பேக், ஷாம்பு பாக்கெட் போன்ற பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து, அவற்றை, 'ரீ-சைக்கிளிங்' செய்து, இயந்திரத்தின் மூலம் துணி போல் நெய்கிறோம். அதை மூலப் பொருளாக கொண்டு, 'வால் ஹேங்கிக், பென் ஸ்டாண்ட், ஸ்கிரீன் என, பல்வேறு பொருட்களை செய்து விற்கிறோம்.

மிக சமீபமாகத் தான், குப்பை - துாய்மைன்னு இந்த விஷயத்தில் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால், எங்கள் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன்பே, இதை துவங்கிவிட்டோம். ஆரம்பத்தில், கூட்டங்கள் போட்டு தான் மக்களுக்கும் புரிய வைக்க வேண்டி இருந்தது.

இப்போது பல வீடுகளில், மக்கும் குப்பை, மக்காத குப்பைன்னு அவர்களே பிரித்து கொடுத்து விடுகின்றனர். தங்கள் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள பழகி விட்டனர். நாம் துவங்கிய பணி, நல்ல முடிவை கொடுத்துள்ளதை நினைக்கும் போது, மனதுக்கு நிறைவாக உள்ளது. கலெக்டர், கவர்னர் என, பல தரப்பிலிருந்தும் எங்க களப் பணியை பார்த்து பாராட்டுகின்றனர். கழிவுகளை அருவருப்பாக பார்க்காமல், செல்வமாக நினைத்தது தான், இதற்கெல்லாம் காரணம். சுற்றுவட்டார ஓட்டல்களில் இருந்து, உணவுக் கழிவுகளை சேகரித்து நொதிக்க வைத்து, காஸ் தயாரிக்கிறோம். இதற்காக, பயோ காஸ் உற்பத்தி மையமும் செயல்படுகிறது. இங்கிருந்து பெறப்படும் காஸ் மூலம், ஜெனரேட்டர் இயக்கி அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தால், 50க்கும் மேற்பட்ட தெருவிளக்குகளை எரியச் செய்கிறோம். குரோம்பேட்டை ஏரியாவில், ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கிருந்து டன் கணக்கில் கழிவுகள் வெளியேற்றப்படும். அவற்றை ஒரே இடத்தில் சேமித்து, மறு சுழற்சி செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.

-          தினமலர் சொல்கிறார்கள் பகுதியிலிருந்து....

பாராட்டுக்குரிய விஷயம் இது.  இவர்கள் போல இன்னும் நிறைய பேர் நம் நாட்டுக்கு தேவை. அரசாங்கமும் இது போன்றவர்களை ஊக்குவித்தால் நல்லது!  இவர்களுக்கு இந்த வார பூங்கொத்து!



இந்த வார முகப்புத்தக இற்றை:



இந்த வார நகைச்சுவை:



இந்த வார இசை:

சமீபத்தில் இசைக்கலைஞர் ரோணு மஜும்தார் அவர்களில் பேட்டி ஒன்று காணும் வாய்ப்பு கிடைத்தது. புல்லாங்குழலில் மனிதர் கலக்குகிறார்...  அவரது வாசிப்பு ஒன்று இந்த வாரத்தில் ரசித்த இசையாக!



இந்த வார புகைப்படம்:



இந்தப் படமும் GARDEN OF FIVE SENSES-ல் எடுத்தது தான். இது ஒரு மொட்டு. என்ன பூ, என்ன தாவரம் என்பதை யாராவது சொல்ல முடியுமா? என்று பார்க்கவே இந்தப் பகிர்வு! ஒரு சின்னக் குறிப்பு வேணா தரவா? – மருத்துவ குணம் நிறைந்தது இச்செடி!

இப்ப பூ படமும் சேர்த்தாச்சு! :)

 



ராஜா காது கழுதைக் காது:

தில்லியிலுள்ள ஒரு பூங்கா GARDEN OF FIVE SENSES.  வருடா வருடம் இங்கே FLOWER SHOW/FESTIVAL என கொண்டாடுவது வழக்கம். இந்த வருடமும் நடந்தது. அங்கே நிறைய காதலர்களைப் பார்க்க முடிந்தது. Festival இல்லாத நாட்களில் அங்கே குழந்தைகளோடு செல்வது அவ்வளவு நல்லதல்ல! இது போன்ற Festival சமயங்களில் காதலர்கள் கூட்டம் குறைவாகத் தான் இருக்கும் என்றாலும் சில ஜோடிகளின் லீலைகளைப் பார்த்த ஒரு பத்து பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் சொன்னது –

“இங்கே வரணும்னா கல்யாணம் பண்ணிட்டு தான் வரணும் போல இருக்கு!


படித்ததில் பிடித்தது:



ஒரு கோப்பைத் தேநீருக்கு
அவளிடம் கெஞ்ச வேண்டும்.
மப்ளர் கட்டாமல் நடக்க
அவள் பார்வைக்குத் தப்பவேண்டும்.
இன்னொரு கரண்டி சாம்பார்
அவள் அறியாமல் எடுக்க வேண்டும்.
மொசைக் தரையில்
தவறி வீழ்ந்த மாத்திரை
அவள் பார்வைக்குத் தப்பாது.
எட்டு மணிக் கடிகாரம்
அவள் சொன்னால் மணியடிக்கும்..
சாப்பிட வரச் சொல்லி.
ராட்சசிதான்..
எமகாதகிதான்..
உயிரை வாங்குபவள்தான்..
மூலையில் ஒரு தீபமாகிப் போனபின்
உற்றார் உறவுகள் நகர்ந்து போனதும்
தனித்திருக்கிற ஹாலில்
எடுத்துப் போட ஆளின்றி..
பிளாஸ்க் டீ குடிக்காமல்..
காலை சாம்பார் ஜில்லிட்டு..
உள்ளே குளிரும் நடுக்கத்திற்கு
சால்வை போர்த்தி..
அம்மு..
வாயேன்.. வந்து திட்டேன். !

( அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது )

-   ரிஷபன்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 25 பிப்ரவரி, 2015

காதல் போயின் காதல்....





சில நாட்கள் முன்னர் வெளியான இக்குறும்படத்தின் டீசர் பார்க்கும்போதே முழு குறும்படத்தினைப் பார்க்கும் ஆவல் வந்தது! டீசர் பார்த்து அடடா என்ன ஆயிற்றோ என்ற பதட்டம் இருந்தது. ஒரு வாரத்தில் வந்து விடும் என நினைத்து கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன். 

திட்டமிட்டபடியே குறும்படத்தினை வெளியிட்டு, பதிவர் நண்பர்கள் பலரும் குறும்படம் பற்றிய தங்கள் கருத்துகளை வெளியிட்டாலும் படம் பார்க்குமுன்னர் படிக்க வேண்டாம் என்று இருந்தேன். நேற்று தான் படம் பார்க்க முடிந்தது. சிறப்பாக படத்தினை எடுத்திருக்கும் நண்பர் கோவை ஆவி, இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நண்பர் திடம் கொண்டு போராடும் சீனு, நண்பர்கள் துளசிதரன், குடந்தை சரவணன், கார்த்திக் சரவணன், அரசன், ரூபக் என பதிவுலக நண்பர் பட்டாளமே இப்படத்தில் பார்க்கும்போது மனதில் அளவில்லா மகிழ்ச்சி.   

காதலி கதாபாத்திரத்தினை ஏற்றிருக்கும் மதுவந்தி, சிறப்பாக நடித்திருக்கிறார்.  ஷைனிங் ஸ்டார் சீனு – கதாபாத்திரமாகவே மாறி விட்டார் போலும்! – படத்திற்காக தனது மீசையை எடுத்து ஒரு தியாகம் செய்து இருக்கிறார்! – குறும்படத்தில் வரும் ஒரு வசனத்திற்காக!

கவிதை ஒன்று சொல்லுது நெஞ்சமே – ஆவி மற்றும் கீதா அவர்களின் குரலில் பாடல் நன்று.  பாடலை எழுதியதும் நண்பர் ஆவி தான்.  படத்தின் ஆரம்பத்தில் வரும் வற்றாநதிபடைத்த கார்த்திக் புகழேந்தியின் குரலும் ஒரு எதிர்பார்ப்பினைத் தோற்றுவித்தது.

காதல் போயின் காதல் – ஒரு நல்ல குறும்படம். படத்தில் அவ்வப்போது வரும் Do not litter” செய்தியைச் சொன்னதற்கு ஆவிக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து! நம்ம மக்களுக்கு அப்பப்ப இப்படி சொல்லிக்கிட்டே இருக்கணும்!

கதை: காதல் சுகமானது – அதுவும் நம்ம நாயகன் சீனுவின் காதல் இலக்கியக் காதல் – காதலிக்கு “ஒரு புளியமரத்தின் கதைநாவல் பரிசளிக்கிறாரே! காதல் என்று சொல்லும்போதே அதற்கு தடைகளும் உண்டே. ஒரு நாள் காதலி தனக்குத் திருமணம் என பத்திரிகை கொடுக்க, மனம் உடைகிறார் காதலன். அவளின் நினைவாகவே அவளுடன் இருந்த நினைவுகளையும், சேகரித்த பொருட்களையும் பையில் வைத்துக்கொண்டு சோகமே உருவாக தாடியோடு இருக்கிறார். இப்படி இருக்கையில் ஒரு நாள் காதலியை மீண்டும் பார்க்கிறார் – அதன் பின் நடந்தது என்ன என்பது தான் “காதல் போயின் காதல்கதை.  முழுவதும் சொல்லி விட்டால் எப்படி பார்க்கும் ஸ்வாரசியம் இருக்கும்? படம் பத்து நிமிடம் மட்டுமே! பாருங்களேன். 




படம் உருவாகக் காரணமாக இருந்த, படத்தில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஷைனிங் ஸ்டார் சீனு விரைவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக பரிமளிக்கட்டும்!

நண்பர் கோவை ஆவி மேலும் பல படங்களைத் தரவும், முன்னேற்றப் பாதையில் செல்லவும் எனது வாழ்த்துகள்..... 

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

சாப்பிட வாங்க: ச்சீலா!



சமீபத்தில் அலுவலக நண்பர் ஒருவர் தனது மகன் திருமணம் ஹரியானாவில் நடக்க இருக்கிறது என்றும் அதற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்றும் சொன்னார். சற்றே தொலைவில் உள்ள ஊர் என்பதால் வருவது சிரமம் என்று சொல்ல, பரவாயில்லை தில்லியில் ரிஜப்சன் [அவர் சொன்னதை அப்படியே எழுதி இருக்கிறேன்!] உண்டு, அதற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று சொன்னார்.  சரி நிச்சயம் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்... [ஒரு மாலை வேளை, சமையலிலிருந்து விடுதலை ஆயிற்றே!]

பொதுவாகவே வட இந்திய திருமணங்களில் உணவிற்கு ரொம்பவும் முக்கியத்துவம் உண்டு. நிறைய சாப்பிடக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். நிறைய ஸ்டால்கள் மாதிரி வைத்து, ஒவ்வொரு இடத்திலும் ஏதோ ஒரு உணவு சுடச்சுடத் தயாரித்துக் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள்.  இந்நிகழ்ச்சியிலும் அப்படி நிறைய உணவுப் பொருட்களுக்கான ஸ்டால்கள் – [dh]தஹி [b]பல்லே பாப்டி, பானி பூரி, பாவ் [b]பாஜி, பன்னீர் டிக்கா, ஆலு டிக்கா, ஆலு ஃப்ரை, பனீர் ஃப்ரை, என தொடர்ந்து ஸ்டால்கள். இதைத் தவிர மக்கள் அமர்ந்திருக்கும் இடங்களுக்கே சுடச்சுட நொறுக்குத் தீனிகள் வந்த வண்ணம் இருந்தன.

அப்படி ஒரு ஸ்டாலில் எழுதி இருந்த உணவின் பெயரைப் பார்த்ததும் கொஞ்சம் புதிதாக இருக்க, அங்கே நின்றேன்! அந்த உணவின் பெயர் “மூண்ட் [dh]தால் [ch]ச்சீலா!  மூண்ட் [dh]தால் – இது தெரியாத பருப்பாக இருக்கிறதே என யோசிக்க, உடன் வந்திருந்த நண்பர் எனது சந்தேகத்தினை நிவர்த்தி செய்தார் – மூங்க் [dh]தால் என்பதைத் தான் தவறாக எழுதி இருக்கிறார்கள் – பாசிப்பருப்பினைத் தான் ஹிந்தியில் மூங்க் [dh]தால் என்று சொல்வார்கள்.  சரி இதிலிருந்தே ஆரம்பிக்கலாம் என முடிவு செய்தேன்!

அது என்ன ச்சீலா என்று உண்டு பார்த்தேன். நன்றாகத் தான் இருந்தது! தோசை போன்று செய்து அதன் மேலே பச்சைச் சட்னி தடவி அதற்கும் மேல் Stuff செய்து, தொட்டுக்கொள்ள, பச்சை சட்னியும், சிகப்புச் சட்னியும் தர வாங்கிக் கொண்டு உண்டபடியே நகர்ந்தேன்! வாவ்.... நல்ல சுவை! அதை எப்படிச் செய்வது என்று என் உடன் வந்த வட இந்திய நண்பரிடம் கேட்டேன் – அவர் சொன்னது எப்படி என்று பார்க்கலாமா!

தயாரிக்க ஆகும் நேரம்: 1 முதல் 1.5 மணி நேரம்.
சமைக்க ஆகும் நேரம்: சுமார் 30 நிமிடங்கள்.

தேவையான பொருட்கள்:

பாசி பருப்பு – 1 கப், இஞ்சி – ஒரு சிறு துண்டு, பூண்டு – 6 பற்கள், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – மூன்று, சிகப்பு மிளகாய்த் தூள் – கொஞ்சம், பனீர் – கொஞ்சம், பச்சைச் சட்னி [கொத்தமல்லி தழைகள், புதினா தழைகள் ஆகியவற்றை அரைத்துச் செய்தது] ஆகியவை.

எப்படிச் செய்யணும் மாமு?

பாசிப்பருப்பை நல்லா நாலைந்து முறை கழுவி அதற்குப் பிறகு பருப்பு மூழ்கும் அளவு தண்ணீரில் ஊற வைச்சுக்கோங்க! ஒரு மணி நேரம் ஊறினாலே போதும். அதுக்குள்ள நம்ம மத்த வேலையைக் கொஞ்சம் பார்க்கலாம்! வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி எல்லாத்தையும் எவ்வளவுச் சின்னதா கட் பண்ண முடியுமோ அவ்வளவு சின்னதா கட் பண்ணிக்கணும்! சின்னதா கட் பண்றேன் பேர்வழின்னு கைவிரலைக் கட் பண்ணிக்கிட்டீங்கன்னா கம்பெனி பொறுப்பு ஏத்துக்காது சரியா!

இதையெல்லாம் செஞ்சு முடிச்சு, நடுவுல கொஞ்சம் லாலா எல்லாம் பாடிட்டு, கொஞ்சம் பராக்கு பார்க்கறதுக்குள்ள, பருப்பு நல்லா ஊறி இருக்கும்! ஊறின பிறகு தண்ணீரை வடித்து எடுத்துட்டு, அதை மிக்ஸில போட்டு – மிக்ஸி ஜார்ல தாங்க! – கொஞ்சமா மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு இரண்டையும் போட்டு, வெட்டி வைச்சு இருக்க வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாத்தையும் போட்டு, மிக்ஸில நல்ல மைய அரைச்சுக்கோங்க!  

அடுப்புல தோசைக்கல்லை போட்டு [அடடா மேலே இருந்து போட்டு, காஸ் ஸ்டவ்வ உடச்சிட போறீங்க!....  தில்லில ஒரு நண்பர் வீட்டுக்கு போனப்ப, அவங்க மனைவி, அடைக்கு அரைச்சு வச்சுருக்கேன்.... நீங்க வந்ததும் கல்லைப் போடலாம்னு உட்கார்ந்திருக்கேன்னு சொல்ல,  எங்க தலை மேலே கல்லைப் போட்டுடுவாங்களோ... அப்படியே எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா, எங்க பின்னாடி கடோத்கஜன் மாதிரி நண்பர் நிக்கறார்...  அப்புறம் தான் தெரிஞ்சுது தோசைக்கல்லை அடுப்பில் போடப் போறார்னு!] சூடாகும் வரைக்கும் காத்திருங்க....

தோசைக்கல் சூடான பிறகு, ஒரு கரண்டி மாவு எடுத்து கல்லில் விட்டு தோசை மாதிரி பரப்புங்க! ஒரு ஸ்பூன் எண்ணையை அப்படியே சுத்தி விட்டு வேகும் வரைக்கும் லாலாலாலின்னு பாட்டு பாடுங்க! அப்புறம் தோசைத் திருப்பி கொண்டு பொறுமையா திருப்பி போட்டு அப்படியே எண்ணையை மேலே ஸ்ப்ரே பண்ணுங்க!

அப்புறம் ஒரு ஸ்பூன் பச்சை சட்னியை அதன் மேல் பரப்புங்க! பனீர் இருக்கே, அதை கொஞ்சம் துருவி அதன் மேலே தூவுங்க! அப்படியே மடிச்சு சுடச் சுட தட்டுல போட்டு, பச்சைச் சட்னியோடு சாப்பிடக் கொடுங்க! இல்லைன்னா சாப்பிடுங்க! ச்சீலா செம டேஸ்ட் தான்!

 படம்: இணையத்திலிருந்து...

இது ஆந்திராவில் செய்யும் பெசரட்டு மாதிரி இருந்தாலும், இந்த ஸ்டஃப்ஃபிங் விஷயம் எல்லாம் வடக்கிற்கே உரித்தானது! எதையும் குண்டாக்கித் தான் நம்மாளுங்களுக்கு பழக்கம்!

என்ன நண்பர்களே....  ச்சீலா செய்து ருசிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்களேன்!

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: ரிசப்ஷன் முடிஞ்ச இரண்டு நாள் கழிச்சு ஒரு தடவை செஞ்சு பார்த்தேன்! நல்லாத் தான் வந்தது! சாப்பிட வாங்க பகுதி ஆரம்பிக்கப் போறதோ, இங்க பகிர்ந்துக்கப் போறதோ அப்போ தெரியாதே, அதனால ஃபோட்டோ எடுக்கல! Point to be noted!