திங்கள், 26 நவம்பர், 2018

கதை மாந்தர்கள் - கருப்பு இராமசாமி – வெள்ளை இராமசாமி - பத்மநாபன்




அந்த கருப்பு ராமசாமி இன்னும் என் கண்ணில்படவே இல்லை. ஒவ்வொரு தடவையும் எனது அக்காவின் ஊருக்குப் போகும் போதும் எங்கே அந்த கருப்பு ராமசாமி என்று தேடுவதே எனது முதல் வேலை. நான் ஏன் அவரைத் தேடவேண்டும் என்று தானே கேட்கிறீர்கள். அதைத்தான் சொல்ல வருகிறேன்.


அப்போது எனது நாலாவது அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். நம்ம தாடி சுயம்பு அண்ணன் ஏற்பாட்டில், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் தனது பையனுக்கு பெண் பார்க்க தம்பதி சமேதராக எங்கள் ஊருக்கு வந்தார். காலை முதல் மாலை வரை ஊரை வலம் வந்து இரண்டு மூன்று பெண்களைப் பார்த்து விட்டு ஒருவழியாக எனது சகோதரி, பையனின் உயரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று தீர்மானத்திற்கு வந்தார்கள். பையனுக்கும் பெண்ணுக்கும் பொருத்தம் பார்த்தார்களோ இல்லையோ இரண்டு வீட்டு பெரியவர்களுக்கும் பொருந்தி விட்டது. அவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர். எங்கள் தந்தையும் ஓய்வு பெற உள்ள ஆசிரியர். ஆமா! ஆமா! எங்க ஓய்வு! இன்னும் இரண்டு பொண்ணு இருக்கு. வயசுக்கு வந்த ஒரு பையனும் [நான்தான்], இருக்கான். அதுதான், ஓய்வு கொடுக்க வேண்டிய விஷயத்துக்கு சரியான சமயத்தில ஓய்வு கொடுக்கல்லேன்னா நாம ஓய்வு எடுக்க வேண்டிய நேரத்தில சரியா ஓய்வு கிடைக்காதுன்னு வள்ளுவரு சும்மாவா சொன்னாரு. என்னது! வள்ளுவரு இப்படி எங்க சொன்னாருன்னு கேக்கேளா. அவரு சொல்லாத விஷயம் உண்டா? எங்கயாவது சொல்லியிருப்பாரு.

சரி அத எதுக்கு இப்ப பேசிக்கிட்டு. நம்ம கதைக்கு வருவோம். கல்யாணத்துக்கு முன்னால் பெண்ணும் பையனும் பார்த்தார்களா என்று எனக்கு நினைவில்லை. எங்க அப்பா, என் பெரியத்தானிடம் பையனை பார்த்து வரும்படி கேட்டுக் கொள்ள, நானும் எனது பெரியத்தானும் பையனைப் பார்த்து வரலாம் என்று அவர்கள் ஊருக்கு வந்து இறங்கினோம். தெருவுக்குள் நுழைந்ததும் ஒரு பெண்மணி இன்னொரு பெண்ணிடம், ”நம்ம வாத்தியார் மகன் வெள்ளை ராமசாமியை பார்க்க வந்து இருக்கிறார்கள்” என்று கிசுகிசுத்தார். எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆஹா, நம்ம அக்காவை கட்டப் போகிறவர் நல்ல கலரா இருப்பார் போல. எங்க வீட்டிலும் இந்த அக்கா நல்ல கலருதான். (என்ன கலரு, பச்சையா, சிவப்பான்னு கேக்கப்படாது.) அப்போ சோடிப் பொருத்தம் சரியாத்தான் இருக்கும்ன்னு மனசுக்குள்ள ஒரு கணக்கு. உடன் வந்த பெரியத்தான் சொன்னார், ”பையனை ஊருக்குள்ள வெள்ளராமசாமின்னு   சொல்லுதாளே. ஆனா பையனின் அப்பாவைப் பாத்தா அவ்வளவு வெள்ளையா இருக்க வாய்ப்பிருக்க மாதிரி தெரியல்லையப்பா. அம்மா நிறமா இருக்கும் போல” அப்படீன்னாரு. அவருக்கு அவரைவிட ஸ்மார்ட்டா இந்தப் பையன் இருந்து விடுவானோன்னு கெதம் கெதமா இருக்கு. ஏன்னா, இவரை திருநெல்வேலில பார்க்கப் போய்ட்டு வந்த எங்க அப்பா பையன் ராஜா மாதிரி இருக்கார்ன்னு சொன்னது பின்னாளில் அவர் காதில் விழுந்ததில் இருந்து கெத்தா சுத்தி வந்த ஆளாச்சே.

ஒருவழியாக வீட்ட கண்டு பிடிச்சு போகும்போது இருட்ட ஆரம்பித்து விட்டது. அப்போ பவர்கட் சமயம். எலக்ட்ரிக் லைட்ட நம்பி இலையைப் போடாதேன்னு சொலவடையே உருவாயிருந்த நேரம். நாங்க போயிருந்த நேரம் கரண்ட் இன்னா வாரேன்னு போயிற்று. பையன் வீட்டில் இல்லை. அருமையான விவசாயி. தொழில் கல்வி முடித்து விட்டு விவசாயமே சரிப்பட்டு வரும் என்று முடிவு செய்து அதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர். வீட்டு விவசாயப் பொறுப்பு இவரோடது. காலையில் வண்டி மாட்டுடன் போனவர் இன்னும் வரவில்லை. எனக்கோ மனசுக்குள்ள நினைப்பு ஓடுது, இந்த சிம்னி விளக்கு வெளிச்சத்தில் மாப்பிள்ளை பையனை சரியாப் பார்க்க முடியுமா தெரியலையேன்னு. கரண்ட் இன்னும் வந்த பாடில்லை. அப்போது சல் சல்லுன்னு வண்டிச் சத்தம் கேட்டதுமே, ராமசாமி வந்துட்டான்னு அவரோட அப்பா சிரிச்சாரு. இவர் அப்படியே வண்டியை பின்னால களத்தில கொண்டு நிறுத்தி மாடுகளுக்கு தண்ணி வைக்கச் சொல்லி குரல் கொடுத்து விட்டே உள்ளே வந்தார்.

கரண்ட் இன்னும் வரவில்லை. சிம்னி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் அவருடைய நிறத்தை கணிக்க முடியவில்லை. அவரது சட்டை போடாத உடம்பு வியர்வையில் பொதுநிறமா தக தகன்னு மின்னுது. கொஞ்சம் குள்ளமா இருந்தாலும் கிண்ணுன்னுதான் இருந்தாரு. பின்னே வயலிலும் தோப்பிலும் ஓடி ஓடி உழைக்கிற உடம்பாச்சே, சும்மாவா. அப்போ பளீர்ன்னு லைட்டு வந்தது. ஓ....! இவர்தான் இந்த ஊர் வெள்ளை ராமசாமியா! வெறும் ராமசாமின்னே சொல்லி இருக்கலாம்.

எப்படியோ, எல்லாம் நல்லபடியாக முடிந்து திருமணம் சிறப்பாக நடைபெற்றது. மறுநாள் மறுவீடு. பெரிய வேன் பிடித்து மாப்பிள்ளையின் வீடு சென்று இறங்கினதும் மாப்பிள்ளையின் தம்பியிடம் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் வைத்தேன். இந்த வெள்ளை ராமசாமி இங்க இருக்காரு. அந்த கருப்பு ராமசாமி எங்க இருக்காரு. அவரை மட்டும் காட்டிருங்க. பின்னே எனக்கு பெருவிருப்பம் இருக்காதா, இவர்தான் வெள்ளை ராமசாமின்னா கருப்பு ராமசாமி எப்படி இருப்பார் என்று பார்க்க.

வருடங்கள் பலவாயிற்று. இப்போது அந்த அக்காவிற்கு மூன்று ஆண்மக்கள். மூணு பயலுகளுட்டயும் கேட்டுப் பார்த்து விட்டேன் கருப்பு ராமசாமியைக் காட்டச் சொல்லி. மூத்த பயல் கூலாகச் சொல்கிறான், மாமா!  நானே அந்த ஆளைப் பார்த்து வருடக்கணக்காச்சு.  பகல் வேளையில் கருப்பு ராமசாமி வேலைக்குப் போய் விடுவார். இராத்திரி இருட்டில் கண்ணுக்கு தெரிய மாட்டார். இதுல நான் உனக்கு கருப்பு ராமசாமியை எங்க இருந்து காட்ட. ஆனாலும் என்ன, நம்பிக்கைதானே வாழ்க்கை. கருப்பு ராமசாமி ஒருநாள் காட்சி தராமலா போய் விடப் போகிறார்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

பத்மநாபன்
புது தில்லி



குறிப்பு:  18-ஆம் தேதிக்குப் பிறகு பதிவுகள் வெளியிடவில்லை. இதோ மீண்டும் ஒரு பதிவுடன் - பத்மநாபன் அண்ணாச்சியின் எழுத்தில்....

30 கருத்துகள்:

  1. ஹா.. ஹா.. ரசித்தேன் ஜி
    பத்மநாபன் ஸாருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. வெகு சரளமான நடையில் நல்ல கதை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையல்ல் நிஜம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி.

      நீக்கு
  3. எழுத்தைப் பார்த்தபோது நம்வெங்கட்டின் எழுத்துபோல இல்லையே என்றிருந்தது கடைசியில் பார்த்தால் பத்மநாபன் என்று இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பில் மட்டுமன்றி லேபிளும் கொடுத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. பத்மநாபன் அவர்கள் கதை மாந்தர்கள் நன்றாக இருக்கிறது.
    சொல்லி சென்ற விதம் அருமை.

    எங்கள் ஊர் (திருநெல்வேலியில்) பக்கம் மாநிறம் என்பதற்கு மாசிவலை என்பார்கள். கருப்புக்கு கருப்பட்டிகணக்க இருப்பார்கள் என்பார்கள்.

    சினிமாவில் நடிக்கும் ஒரு நடிகரை ஒருவரை வெள்ளை சுப்பையா என்பார்கள். கருப்பு சுப்பையாவும் இருப்பார் போல! அதுதான் இவரை இப்படி குறிப்பிட்டு கூப்பிட்டு இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருப்பு சுப்பையாவும் இருப்பார் போல.... இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

    பதிலளிநீக்கு
  9. கதையும், எழுதிய விதமும் மிக நன்றாக இருந்தன; திரு. பத்மநாபனுக்கு வாழ்த்துகள். பகிர்ந்தமைக்கு திரு. வெங்கட்டிற்கு நன்றி. 70-களில், கோவையில் எங்கள்கள் தெருவில் இருந்த இரண்டு விளையாட்டுத் தோழர்களின் ஞாபகம் மீண்டோடி வந்தது. கிருஷ்ணசாமி என்ற தத்தம் தாத்தாக்களின் சந்ததி நாமம் ஏற்ற இருவரின் பெயர்களும் தோல் நிறம் கொண்டு இவ்வாறு மறுவின: வெள்ளை கிச்சன், கறுப்பு கிச்சான் !!! விளிப்பெயருக்கொத்து நல்ல வெள்ளை, மிகையான கறுப்பு என்றபடி எளிதில், துளிசந்தேகம் இல்லாமல் கண்டதும் எந்த கிச்சான் என்று அறியும்படி இருந்தனர் என்பது விசேஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது முதல் வருகை சந்திரகுமார் ஜி!

      கிச்சான் - இப்படி அழைக்கும்போது நட்பின் ஆழம் அதிகரிக்கிறது எனத் தோன்றும் எனக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சந்திரகுமார் ஜி. தொடர்ந்து சந்திப்போம்....

      நீக்கு
  10. ரசனையான கற்பனை. நடையை மிக ரசித்தேன். எழுத்துத் திறமை ரசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாச்சி கவிதைகள் கூட எழுதுவார். தொடர்ந்து எழுத வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. எடுத்துச் ணொல்லிப் பாராட்ட பல வரிகள்... ஆனால் மொபைலில் இருந்து அடிப்பதால் முடியவில்லை. அதனால் பொதுவாக மொத்தமாகப் பாராட்டி விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் இருக்கிறீர்கள் போலும். பயணம் சிறக்க வாழ்த்துகள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. ஹாஹா... தட்டச்சு இப்படித்தான் சில சமயங்களில் படுத்திவிடும். ஒரு உதாரணம் நினைவுக்கு வந்தது - என் பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. செம ஸ்வாரஸ்ய நடை. ரொம்ப ரொம்ப ரசித்தேன் மக்கா பப்புநாபா!!! ஹா ஹா ஹா ...

    எழுத்து அப்படியே அதனூடே பயணிக்க வைக்கிறது.

    //”நம்ம வாத்தியார் மகன் வெள்ளை ராமசாமியை பார்க்க வந்து இருக்கிறார்கள்”// இதை ஊர் பாஷைல சொல்லிருக்கலாமோ!! வட்டார மொழிய இன்னும் கொஞ்சம் கூட கலந்து வரலாமோ...முதல்ல எல்லாம் நிறைய இருந்தா மாதிரி தோனிச்சு...

    பரிமளிக்க வேண்டிய எழுத்தாளர். கருப்பு ராமசாமிய பாத்தா எங்களுக்கும் இங்ஙன சொல்லுவியளா...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருப்பு ராமசாமிய பாத்தா எங்களுக்கும் இங்ஙன சொல்லுவியளா.... ஹாஹா...

      இப்பதிவு படித்த பத்மநாபன் அவர்களின் சகோதரி, கருப்பு இராமசாமி ஊரை விட்டு வேறு ஊருக்கு குடிபெயர்ந்த்ததைச் சொல்லி இருக்கிறார். இன்னும் பார்க்கலை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  14. ஜி உங்க சிம்லா தொடர் விட்ட ப்குதிகள் இன்னும் வாசித்து முடிக்கலை...முடிக்கனும்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிம்லா தொடர் - விடுபட்ட பகுதிகளை முடிந்த போது படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  15. வாய்ப்பளித்தமைக்கும் கருத்தளித்தமைக்கும் அனைவருக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த கட்டுரைக்காகக் காத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....