வியாழன், 15 நவம்பர், 2018

கதை மாந்தர்கள் – சாந்த்னி – மறக்க முடியாத இரவு



”ஹலோ… நான் சுரேந்தர் சிங், ஹெட் கான்ஸ்டபிள், எம்.பி. ரோடு தாணாவிலிருந்து பேசுகிறேன் – உங்க பேரு ….. தானே…. கொஞ்சம் தாணாவுக்கு வர முடியுமா?”

இந்த அழைப்பு வந்த அந்த இரவினை மறக்கவே முடியாது. என்ன ஆச்சு, எதுக்கு நம்மை காவல் நிலையம் அழைக்கிறார்கள்? என்ன ஏது என்று கேட்கக் கேட்க, கிடைத்த ஒரே பதில் தாணாவுக்கு வாங்க, என்பது தான்.

சில நாட்களுக்கு முன்னர் எழுதிய கதைமாந்தர்கள் - சாந்த்னி – எனக்கு தமிழ் கத்துக் கொடுங்களேன்… பதிவினை கீழ்க்கண்ட மாதிரி தான் முடித்திருந்தேன்.

”ஹாய், நான் சந்த்ரு…  சாந்த்னி உங்கள பத்தி நிறைய என்னிடம் சொல்லி இருக்கா, நானும் சாந்த்னியும் அடுத்த மாசம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். வீட்டுல பேசிட்டு இருக்கோம். அவங்க ஒத்துக்கலன்னா, கோர்ட் மேரேஜ் தான்.  நீங்க தான் சாட்சி கையெழுத்து போடணும் – சாந்த்னிக்காக!” என்றார். அவளின் Trade Mark குறும்புப் புன்னகையோடே, என்னிடம் கேட்டாள் சாந்த்னி – “எனக்காக நீங்க சாட்சி கையெழுத்து போடுவீங்க தானே!”

சந்த்ரு வீட்டில் பிரச்சனை இல்லை என்றாலும் சாந்த்னி வீட்டில் அத்தனை சுலபமாக ஒத்துக் கொள்ள வில்லை. “நம்மளோ பஞ்சாபி, அவங்களோ மதராஸி…, நம்ம பழக்க வழக்கத்துக்கும், அவங்க பழக்க வழக்கத்துக்கும் நிறைய வித்தியாசம், ஒத்து வராது. உனக்காக நல்ல பஞ்சாபி முண்டா [இளைஞர்களை முண்டா எனவும், பெண்களை குடி என்றும் அழைப்பார்கள் பஞ்சாபியில்”] பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என சாந்த்னியை ரொம்பவே வற்புறுத்தினார்கள். “மணந்தால் சந்த்ரு மட்டுமே” என்பதில் உறுதியாக இருந்தாள் சாந்த்னி.  சில நாட்கள் வேலைக்குக் கூட அனுப்ப வில்லை அவர்கள் வீட்டில். சாந்த்னியின் பிடிவாதத்தினால் வேலைக்கு அனுப்பினார்கள்.

வீட்டிலிருந்து அழைத்து வந்து அலுவலகத்தில் விட்டு, மீண்டும் மாலை அழைத்துச் செல்வார்கள். வேலைக்கு வந்த பின்னர் சந்த்ருவை தொடர்பு கொண்டு எங்கேயும் சந்திப்பார்களோ என்ற சந்தேகத்தில் அலுவலகம் முன்னர் சாந்த்னி வீட்டினர் எப்போதும் சுற்றிக் கொண்டிருந்தார்கள். வெளி கேட் இரண்டிலும் ஆட்கள் இருக்க, சந்த்ருவை சாந்த்னி சந்திக்க செய்த முயற்சி எல்லாம் தோல்வி. ஆனாலும் எப்படியாவது இந்த திருமணம் நடந்தே தீரும், நடக்க வேண்டும் என்பதில் இரண்டு பேருமே உறுதியாக இருந்தார்கள்.  நண்பர்கள் சந்த்ருவை தொடர்பு கொண்டு அலுவலகத்திற்குள் அவரை காருக்குள் அமர வைத்து, அழைத்து வந்தார்கள். திருமணத்திற்கான நாள் முடிவு செய்யப்பட்டது.

சாந்த்னி வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்யவே விரும்பினார்கள். குருத்வாரா அழைத்துச் சென்று அங்கேயே நிச்சயம் செய்ய முடிவு செய்திருந்தார்கள் – சாந்த்னியிடம் சொல்லாமலே. குருத்வாரா போகும் வழியில் தான் விஷயம் தெரிந்திருக்கிறது சாந்த்னிக்கு. அங்கேயே கார் கதவைத் திறந்து குதிக்கப் போவதாகச் சொல்லி போராட்டம் துவங்க, அன்றைய நிகழ்வினை கைவிட்டார்கள். சில நாட்களுக்குள் வீட்டினரின் எதிர்ப்பு மறையும் என்ற நினைவில் இருந்த சாந்த்னிக்கு அதிர்ச்சி. திருமண நாளை உடனே முடிவு செய்து, அடுத்த நாள் அலுவலகத்திற்கு வந்த பின் சந்த்ருவுடன் தொடர்பு கொண்டு முடிவு செய்த நாளுக்கு முன்னதாகவே திருமணத்தினை வைத்துக் கொண்டார்கள்.

அடுத்த நாள் பதிவு அலுவலகத்திற்குச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. அதற்கு முதல் நாள் தான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது தாணாவிலிருந்து [காவல் நிலையத்திலிருந்து!] தாணாவிற்குச் சென்று சுரேந்தர் சிங்-ஐத் தேடி பேச, வாருங்கள் போகலாம் என அவரது வாகனத்தில் அழைத்துச் சென்றார் – சென்ற இடம் – சஃப்தர்ஜங்க் மருத்துவமனை. மருத்துவமனையில் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மார்ச்சுவரியில் இருந்த இரண்டு சடலங்களைக் காண்பித்து இவர்கள் இருவரும் வாகனத்தில் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. விபத்து நடந்த இடத்திலேயே இருவரும் இறந்து விட்டார்கள். அவர்களிடம் இருந்த ஒரே பேப்பரில் உங்கள் எண் இருந்ததால் யார் என அடையாளம் காட்ட உங்களை அழைத்தேன் என்றார் சுரேந்தர் சிங்.

என்னதான் பல சடலங்களைப் பார்த்து, ஈமச் சடங்குகளில் கலந்து கொண்டாலும் இப்படி விபத்தில் இறந்தவரின் உடல்களை பார்ப்பது இரண்டாம் முறை. முதலாம் சடலத்தின் துணியை விலக்க, அங்கே இருந்தது சந்த்ருவின் உடல்.  சஃப்தர்ஜங் மார்ச்சுவரியில் இரண்டாவதாக இருந்த சடலத்தினை பார்க்க மூடியிருந்த துணியை விலக்கியபோது…..

கன்னக்குழியுடன் அங்கே சலனமின்றி மீளாத்துயிலில் இருந்தாள் சாந்த்னி.

மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திப்போம்…. சிந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

பின் குறிப்பு: ஏன் இருவரும் முன் நாளில் சந்தித்தார்கள், விபத்து எப்படி ஏற்பட்டது, அது உண்மையிலேயே விபத்தா இல்லை இங்கே நிறைய இடங்களில் நடக்கும் Honour Killing – ஆ? இது வரை பதில் கிடைக்காத கேள்விகள்.

40 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    அட்டகாசமான ஆரம்பம்....வெங்கட்ஜி ப்ளீஸ் கதை எழுதுங்க....உங்களுக்கு ரொம்பவே நல்லா வருது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கதை எழுதுங்க....// என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. சாந்தினி என்பதைப் பார்த்ததுமே அந்தக் கதைமாந்தரின் தொடர்ச்சி என்று பளிச் மூளையில்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. முதலில் தாணா என்பதைப் பார்த்ததும் தில்லி டு மும்பை அருகிலா என்று தோன்றியது அப்புறம் தான் பளிச் ஓ இது தில்லி எம் பி ரோடாச்சே என்று...

    மனம் என்னவோ போல் ஆகிடுச்சு வெங்கட்ஜி...இதை வாசிக்கும் போதே இப்படி என்றால் பழகிய உங்களுக்கு அன்று ரொம்பவே அதிர்ச்சியாக இருந்திருக்கும்...

    பின் குறிப்பில் குறிப்பிட்ட உங்கள் சந்தேகம்தான் எனக்குத் தோன்றியது விபத்தாக இருக்கது என்றே தோன்றியது....

    வருத்தமான பதிவு என்றாலும் ரொம்ப அழகா கதை போலச் சொல்லியிருக்கீங்க் வெங்கட்ஜி...இதையே நீங்க கதையா போட்டு அப்புறம் உண்மைச் சம்பவம்னு கொடுத்திருக்கலாமோனு தோனுது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹானர் கில்லிங்க்.... ஆகவே இருக்க வேண்டும்.

      பேரதிர்ச்சி தான் இந்த விஷயம் - இன்றைக்கு நினைத்தாலும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. துளசி கேட்டார் முதல் பகுதி வாசித்ததும்....வெங்கட்ஜி கதை எல்லாம் கூட எழுதுவாரா? எழுதறாரா என்று....அப்புறம் சொன்னேன் இல்லை அது உண்மைச் சம்பவம் கதை மாந்தர்கள் பகுதியில் வருவது என்று.....அவர் தொடர்கதை என்றும் நினைத்துவிட்டார் முதலில்...ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... அவருக்கும் சந்தேகம் வந்திருக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. குட் மார்னிங் வெங்கட். மனம் கனமாகி விட்டது முடிவு படித்ததும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம்.

      கொஞ்சம் கனமான முடிவு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. ஸ்ரீராம், வெங்கட்ஜி ய கொஞ்சம் கதை எழுதச் சொல்லுங்க ப்ளீஸ்....இப்படி நல்லா எழுதிட்டு....ஜாம்பவான் அது இது என்று ஏதேதோ தன்னடக்கத்தில் சொல்கிறார்....

    உங்களுக்கு நேரம் டைட் தான் தெரியுது....நானே பல சமயங்கள்ல பதிவு கதை எல்லாம் எழுத திணறுகிறேன்....அப்ப உங்களுக்கு வேலை டென்ஷனுக்கு இடையில் எவ்வளவு சிரமமா இருக்கும்னு புரியுது....இருந்தாலும் நல்ல முகூர்த்தம் பார்த்து தொடங்குங்க ஜி....!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோட் தி பாயிண்ட் வெங்கட்.... பதினைந்து நாட்கள் உங்களுக்கு டைம்....!!!!

      நீக்கு
    2. தன்னடக்கம் இல்லை ஜி. உண்மையே அது தான். இங்கே பல ஜாம்பவான்கள்....

      தங்கள் அன்பிற்கு நன்றி.

      நேரம் - அது ஒரு பெரிய பிரச்சனை. இப்போது கூட பதிவுகள் எழுத முடியவில்லை. Scheduled பதிவுகள் வெளியான பிறகு பதிவுகள் வெளியிடவில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    3. நோட்டட் தி பாயிண்ட் ஸ்ரீராம்...

      பதினைந்து நாட்கள் - ரொம்பவே குறைவான நாட்கள் யுவர் ஹானர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. எனக்குப் பொறாமை... இதையே 'எபி'க்கு அனுப்பி, அங்கு வந்திருக்கலாமே என்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் வெங்கட்ஜி இதை அப்படியே எபிக்கு அனுப்பியிருக்கலாம் ஏன்னா கதையாகவே தான் இரு க்கு....நல்லா இருந்திருக்கும்...

      கீதா

      நீக்கு
    2. அடடா.... உங்கள் பக்கத்திற்கு வேறு பதிவு எழுதி அனுப்ப முயற்சிக்கிறேன் ஸ்ரீராம் விரைவில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. ஆஹா நீங்களுமா கீதா ஜி!. வேறு பதிவு எழுதி அனுப்ப முயற்சிக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. விரைவில் வேறு பதிவு எழுதி அனுப்ப முயற்சிக்கிறேன்.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. கதையோ, உண்மை நிகழ்வோ எதுவாக இருந்தாலும் முடிவு அதிர்ச்சி தந்தது. இரு தரப்புப் பெற்றோர்களுக்கும் எவ்வளவு மன வருத்தம் ஏற்பட்டிருக்கும். காதலுக்காக இப்படியா உயிர் துறக்கணும்! ரொம்பவே வேதனைப்பட வைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களாக எடுத்த முடிவு இல்லை கீதாம்மா... ஹானர் கில்லிங்-ஆகவே இருக்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  9. நிகழ்வின் முடிவு மனம் கனத்து விட்டது ஜி

    தொடர்ந்து கதை எழுதுங்கள் திகில் தொடரே எழுதலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. இதை படித்து முடிக்கும் போது மனம் கனத்து போனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. சில மலர்கள் திடீரென்று பறிக்கப்பட்டுவிடுகின்றன. விதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.ஜி.ஜி. சார்.

      நீக்கு
  13. என் மனதில் பட்டதை இறுதியில் வினாவாக முன்வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  14. நல்லவேளை முந்தைய இடுகையை முன்னமே படிக்கவில்லை. காத்திருந்து அடுத்த பாகத்தைப் படிப்பது பிடிப்பதில்லை.

    நல்ல ஃப்ளோ. கதை எழுதும் திறமை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  15. இந்தக் கதையைப் படித்தபோது, தமிழக கார் பந்தய வீரருக்கும் சந்தேகத்துக்கு இடமான முறையில் முழுக் காரும் தீப்பிடித்து மனைவியோடு இறந்தது ஞாபகத்துக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. முக்காலே முணு வீசம் அது ஒரு honour killing ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம் வட இந்தியாவில் இவை அதிகம் என்றே தோன்று கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  17. சாந்தினியின் திருமணத்தைப் பற்றி எழுதப் போகிறீர்கள் என்று ஆசையோடு படிக்க ஆரம்பித்தேன்.கடைசியில் இப்படியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....