செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

கொல்கத்தா – விக்டோரியா நினைவிடம் – இந்திய மக்களின் செலவில்!


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 98

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

சற்றே இடைவெளிக்குப் பிறகு பயணத்தொடரின் அடுத்த பகுதிக்கு வருகிறேன்…. அதனால் சென்ற பதிவின் கடைசி சில வரிகள் உங்கள் நினைவூட்டலுக்காக….

பெரும்பாலும் ஆடுகளை மட்டுமே இங்கே பலி கொடுக்கிறார்கள். ஆட்டின் பின்பக்கத்தில் சிலர் ஆட்டைப் பிடித்துக் கொள்ள பெரிய கத்தியால் ஒரே வெட்டு… கழுத்தும் உடலும் தனியாகும். வெட்டிய பிறகு சில நிமிடங்கள் வரை துடிக்கும் உடலைப் பார்க்காமல் வெளியே வருவார்கள் அனைவரும் – ஆடு இறந்தது உறுதியான பிறகு அந்த ஆட்டின் தலை மீது சூடம் வைத்து காளிக்கு ஒரு ஆரத்தி…. அதன் பிறகு ஆட்டின் தலை பூஜாரிக்கு – உடல் பகுதி முழுவதும் பலி கொடுத்தவருக்கு… அதை அவர் கிராமத்து மக்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார். இப்படித்தான் மிருக பலி நடக்கும் என்பதை விவரித்து நண்பர் சொன்னதைக் கேட்டு சில நிமிடங்கள் ஆடிப்போயிருந்தேன் நான்.  கொடுமையான விஷயம்……

எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது இந்த காளி Gகாட் கோவில். காலை ஐந்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரையும், மாலை ஐந்து மணி மணி முதல் இரவு பத்தரை மணி வரையும் கோவில் திறந்திருக்கும். முடிந்த போது பார்த்து வரலாம். 

கோவில், கோவில் பகுதிகளில் இப்படி பல விதக் காட்சிகளைப் பார்த்து அங்கிருந்து புறப்பட்டோம்.  அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…..

இதோ அடுத்த பகுதிக்கு வந்துவிட்டோம்…..

விக்டோரியா மெமோரியல் ஹால்...

கொல்கத்தா நகர் என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது ராணி விக்டோரியாவின் நினைவிடம்.  நம்மை இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தினைச் சேர்ந்த ஒருவரின் நினைவிடமாக இருந்தாலும், இந்த கட்டிடத்தினுள் பல அரிய பொருட்களையும் சேமித்து வைத்திருக்கிறார்கள்.  கொல்கத்தா சென்றால் பார்க்க வேண்டிய இடங்களும் மிகவும் முக்கியமான இடத்தில் இருப்பது இந்த விக்டோரியா மெமோரியல்.  

கம்பீரமாக வீற்றிருக்கும் ராணி....

கட்டிடம் முழுவதுமே மார்பிள் கற்களால் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இந்த விக்டோரியா மேமோரியல் ஹால், 1901-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்து போன ராணி விக்டோரியாவின் நினைவாக அமைக்க முடிவு செய்தவர் அப்போதைய வைஸ்ராயாக இருந்த லார்டு கர்சன். 6 ஃபிப்ரவரி 1901 அன்று நடந்த ஒரு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. விக்டோரியா ராணியின் நினைவிடமாக மட்டுமல்லாது இந்தியாவின் பழம்பெருமையையும் பறைசாற்றும் அருங்காட்சியகமாகவும் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாம்…. இதில் ஒரு சூட்சுமமும், திட்டமும் உண்டு! அது….

விக்டோரியா மெமோரியல் ஹால் பகுதியில் அமைந்த பூங்காவும் நீர்நிலையும்...

இந்த நினைவிடத்தினைக் கட்ட தேவையான பணத்தினைத் திரட்ட Indian Memorial Fund என்ற ஒன்றை ஏற்படுத்தி மக்களிடமிருந்தே வசூல் வேட்டை நடந்தது. அப்படி வசூலிக்கப்பட்ட தொகை ஒரு கோடியே ஐந்து லட்ச ரூபாய்!  அதாவது 1901-ல் – இன்றைக்கு கிட்டத்தட்ட 116 வருடங்களுக்கு முன்னர்! அதன் இன்றைய மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்பதை உங்களுடைய கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்!  இங்கிலாந்து ராணிக்கு நினைவிடம் அமைக்க இந்திய மக்களிடமிருந்தே பண வசூல்! அப்போதைய வேல்ஸ் இளவரசரான ஐந்தாம் ஜார்ஜ் அவர்கள் 4 ஜனவரி 1906 அன்று அடிக்கல் நாட்ட, விக்டோரியா மெமோரியல் ஹால் கட்டி முடிக்க கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆனது!  1921-ஆம் ஆண்டில் மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது….

விக்டோரியா மெமோரியல் ஹால்...
வெளிப்புற மார்பிள் சிற்பங்கள்....

அழகான கட்டிடக் கலை, உள்ளே இருக்கும் பலவித சரித்திரப் புகழ் சொல்லும் பொருட்கள், வித்தியாசமான கலைப் பொருட்கள், பழங்கால புத்தகங்கள் என பார்க்க வேண்டிய நிறைய விஷயங்கள் என கிட்டத்தட்ட 30000 பொருட்கள் இங்கே இடத்தில் உண்டு. கிட்டத்தட்ட 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த நினைவிடம் திங்கள் கிழமைகள், அரசு விடுமுறை தினங்கள் தவிர வருடம் முழுவதும் திறந்திருக்கும் இந்த இடத்தின் பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை.  இங்கே 21 பூங்காக்களும் அமைந்திருக்கின்றன. நினைவிடம் அமைந்திருக்கும் முகவரி 1, Queen’s Way, Kolkata. இங்கே உள்ளே சென்று பார்க்க நுழைவுக்கட்டணமும் உண்டு – இந்தியர்களுக்கு ரூபாய் 20, வெளிநாட்டவர்களுக்கு ஒரு பூஜ்ஜியம் சேர்த்து ரூபாய் 200/-. தவிர கேமராவிற்கும் கட்டணம் உண்டு!

விக்டோரியா மெமோரியல் ஹால்...
வேறு நுழைவாயில்!

விக்டோரியா மெமோரியல் ஹால் முன்னர் நண்பர்களுடன்... 


விக்டோரியா மெமோரியல் ஹால்...
வேறொரு கோணத்தில்....


விக்டோரியா மெமோரியல் ஹால்...
குறுக்கு வெட்டுப் பார்வையாக.....


விக்டோரியா மெமோரியல் ஹால்...
காத்திருக்கும் குதிரை வண்டிகள்....


விக்டோரியா மெமோரியல் ஹால்...
முன்புறத்தில் இருக்கும் இரட்டை சிங்கங்களில் ஒன்று!


விக்டோரியா மெமோரியல் ஹால்...
சுவர் சிற்பங்களில் ஒன்று....

விக்டோரியா மெமோரியல் ஹால்...
மார்பிள் சிற்பங்களில் ஒன்று.....


முழுவதும் பார்க்க நினைப்பவர்கள் அரை நாளாவது இந்த இடத்திற்காக ஒதுக்குவது நல்லது. கொல்கத்தா சென்றால் நிச்சயம் சென்று பார்த்து வரலாம்! விக்டோரியா மெமோரியல் ஹால் வாசலில் நிறைய குதிரை வண்டிகள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் – அதில் அமர்ந்து ராஜ பவனி வரலாம் – மனதுக்குள் உங்களை ராஜாவாகவோ, அல்லது ராணியாகவோ நினைத்துக் கொண்டு என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்! நாங்கள் சென்றபோது நிறைய குதிரைக்காரர்கள் எங்களை சூழ்ந்து கொண்டார்கள் – குதிரை ஒன்று எங்களைப் பார்த்து மிரள, எதற்கு அதைப்படுத்த வேண்டும் என, நாங்கள் எங்கள் வாகனத்தில் பவனி வந்தோம்!

ராணி விக்டோரியா மெமொரியல் ஹால் பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் எது, அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்……

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 கருத்துகள்:


  1. வழக்கம் போல அழகான நடையில் அறியாத தகவல்களை அழகிய போட்டோக்களுடன் சொல்லி சென்றவிதம் அருமை. பாராட்டுக்கள் வெங்கட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  2. உங்களின் படைப்புக்கள் நிச்சயம் ஒரு நாள் பிரபல நாளிதழ்களில் அல்லது வார இதழ்களில் தொடராக வந்து நீங்களும் பிரபல ந்பராக ஆகுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பாராட்டுக்கள் வெங்கட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மகிழ்ச்சி தருகிறது நண்பரே... பிரபலம் - ப்ராப்ளம்! :) இரண்டுமே சம்பந்தப்பட்டதல்லவா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  3. இங்கு பலரும் பதிவுகள் என்ற பெயரில் பலவற்றை கிறுக்கி கொண்டிருக்கிறோம் நான் உள்பட ஆனால் சிலரின் பதிவுகள்தான் மிகவும் தரமிக்கதாக நடையிலும் சரி சொல்ல வருவதிலும் சரி எழுத்து பிழைகள் இல்லாமல் மிகவும் கண்ணியமாக எழுதுவதாகிலும் சரி சிலபேர்தான் மனக்கண்ணில் வருகிறார்கள் அதில் நீங்கள்,ஜோதிஜி,கீதா(ஆஸ்திரேலியா) கரந்தையாரர் போன்றவர்கள் எப்போதும் முண்ணனியில் இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறந்த எழுத்துக்குச் சொந்தக்காரர்கள் பட்டியலில் எனக்கும் இடம் உண்டு என்று நீங்கள் சொல்வதைப் படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  4. அவ்வளவுதானா? உள்ளே என்னென்ன பார்த்தீர்கள் என்று சொல்லவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளே பார்த்த விஷயங்கள் எழுதவில்லை. நம்மை ஆண்டவர்கள், நம் பணத்திலேயே இதனைக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்ற ஒரு கோபமும் இருந்தது.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. படங்கள் அற்புதம்
    அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. விக்டோரியா மெமொரியல் ஹால் படங்கள் அனைத்தும் அருமை...

    அன்றே ஒரு கோடியே ஐந்து லட்ச ரூபாய்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. படங்கள் அனைத்தும் அருமை! பார்க்க வேண்டிய இடம் கலைக்காக, அதுவும் நம் நாட்டுக் கலைஞர்களாகத்தான் இருந்திருப்ப்பார்கள் அவர்களுக்காகப் பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் பெரிய தொகை....அதுவும் இந்தியப் பணத்தில்...வசூல்வேட்டை..அக்கிரமம்..எனவே கோபமும் எட்டி பார்க்கிறது.தொடர்கிறோம் ஜி..

    கீதா: இதே கருத்துதான்... முதல் பாரா மட்டும் வாசிக்கவில்லை. வாசிக்கும் மனமில்லை. ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  8. நம்முடைய பணத்தில்.. நம்முடைய உழைப்பில்.. நம்முடைய ரத்தத்தில்.. -

    இதைத் தான் ஊரான் வீட்டு நெய் என்று சொல்லி வைத்தார்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  9. அனைத்து புகைப்படங்களும் அழகு! அதுவும் அந்த தாயும் மூன்று குழந்தைகளும்! தாயின் காலடியில் அமர்ந்து அண்ணாந்து பார்க்கும் அந்தக்குழந்தையின் முகத்திலுள்ள‌ உணர்வுகளை எத்தனை அழகாய் வடித்திருக்கிறான் அந்த சிற்பி! அருமையான ஒரு சிற்பத்தை ரசிக்கக்கொடுத்திருக்கும் உங்களுக்கு அன்பு நன்றி வெங்கட்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!....

      நீக்கு
  10. புகைப்படங்கள் அருமை! சொல்ல வேண்டிய விஷயத்தை வார்த்தைகள் குறைவாகவும், படங்கள் நிறையவும் கூறின. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  11. அவசரமானதொரு மாலைப்பொழுதில் கல்கொத்தாவை பார்த்த ஞாபகம் வருகிறது. அடுத்தமுறை போனால் விக்டோரியாவைப் பார்க்கவேண்டும். இப்போதைய விக்டோரியாவான மம்தா அம்மையாரையும் பார்க்கவேண்டும்.
    -இராய செல்லப்பா நியூஜெர்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

      நீக்கு
  12. பார்க்கவேண்டிய இடம்.

    நம் வரிப்பணத்திலேயே கட்டிய கட்டிடம், நம்ம ஊர்லதானே கட்டியிருக்காங்க. இதிலென்ன தவறு. அப்படிப்பார்த்தால், மக்கள் வரிப்பணத்துலதானே எல்லா சமாதிகளையும், சிலைகளையும் அந்த அந்த ஆட்சியாளர்கள் அமைக்கிறாங்க. அதுல ஒண்ணாவது நமக்கு உபயோகமா? இல்லைதானே.

    ஆங்கிலேயர்கள் ஆண்ட போது, இடங்களை அப்போதிருந்த குறு'நில ஆட்சியாளர்கள், ஜமீந்தார்களிடமிருந்து கவர்ந்து, அந்த இடங்களிலிருந்து நிறைய வருமானம் வரவைத்து ( நிறைய இடங்களைப் பயிர் விளையும் பூமியாக்குவது. அதற்கு பாசன வசதி அமைப்பது என்று. அப்புறம் அதுவாகவே நிறைய வரி வருமானத்தைக் கொண்டுவந்து சேர்க்கும்) அதில் பெரும்பாலானவைகளை தன் நாட்டிற்கு அனுப்பினார்கள். அதுல நமக்கு அட்வான்டேஜ், அவர்கள் கிளம்பும்போது கிடைத்த infrastructure. (உண்மையிலேயே அவர்கள் போல் நம்மால் இன்றுவரை ஒரு பாலமாவது கட்ட முடிந்ததா? நிஜமா சிந்தித்துப்பார்க்கணும். அவர்கள் கட்டும்போது ஒவ்வொன்றும் நூறாண்டைக் கடந்து நிற்க வேண்டும் என்று நினைத்து அருமையாகக் கட்டியிருக்கிறார்கள். நாம் கட்டிய ஒன்றாவது (சுதந்திரத்திற்குப் பிறகு) அந்த எஞ்சினீயரிங் ஸ்டைல்ல நூறாண்டைக் கடந்து நிற்கக்கூடியதாகக் கட்டியிருக்கிறோமா?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. விக்டோரியா ஹால் சரித்திர பாடத்தில் ஒரு வார்த்தையில் படித்து விட்டுப் பொய் விட்டேன் . அது உள்ளே இவ்வளவு விஷயங்களா ?பிரமிப்பாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  16. மெமோரியலில் மேலே உள்ள சிலை மூன்று டன் எடையுள்ளதென்றும் அது காற்றடிக்கும் திசையில் சுற்றும் கேள்விப்பட்டுள்ளேன். அது உண்மையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காற்றடிக்கும் திசையில் சுற்றுமா என்பது தெரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  17. அருமை ! படங்கள் சின்ன அளவு என்றாலும் பளிச் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....