திங்கள், 6 மார்ச், 2017

கொல்கத்தா – பழசும் புதுசும் – எகோ பார்க்!



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 102

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


நீர் நிலையில் Cruise பயணம்

கொல்கத்தா என்றதும் எங்கே பார்த்தாலும் இருக்கும் மக்கள் கூட்டமும், அழுக்கும் மட்டுமே என்று நினைத்திருப்பவர்களில் நானும் உண்டு. கொல்கத்தா நகரம் என்றதுமே எல்லா இடங்களிலும் வெற்றிலைச் சாறை துப்பி சிவப்பாக வைத்திருப்பார்கள் என்று சொல்லுவது உண்டு! அந்தச் சிவப்பு பல வருடங்களாக அவர்களுக்குப் பழகிப் போன வண்ணம் என்றும் சொல்லலாம்.  பழைய கொல்கத்தா அழுக்காகவே இருக்க, புதிய கொல்கத்தாவை இழைத்து வைத்திருக்கிறார்கள்.  பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள், பூங்காக்கள் என அழகாய் இருக்கிறது.  அப்படி ஒரு பூங்காவிற்கு தான் நாங்கள் சென்றிருந்தோம்.

நீர் நிலை.....

அந்தப் பூங்கா Eco Park என அழைக்கப்படும் பூங்கா. சுமார் 480 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா 2012-ஆம் ஆண்டு தான் திட்டமிடப்பட்டு அமைத்திருக்கிறார்கள். மிகவும் நன்றாகவே பராமரிக்கிறார்கள். நடைபாதைகள், புல்வெளி, சைக்கிள் பாதைகள், நீர் விளையாட்டுகள் என பல விஷயங்கள் இங்கே உண்டு. குடும்பத்துடன் சைக்கிள் - இரண்டு பேர் அமர்ந்து பெடல் செய்யக்கூடிய Duo சைக்கிள்கள் வைத்திருக்க, அவற்றில் சைக்கிள் ஓட்டும் பல ஜோடிகளைப் பார்க்க முடிந்தது. படகுச் சவாரி, பலூன் சவாரி என நிறைய விஷயங்கள் – பெரும்பாலான குடும்பத்தினர் தங்களது பொழுதைப் போக்க இங்கே வந்து விடுகிறார்கள். 


பூங்காவில் நண்பர்களுடன்....

பூங்காவிற்குச் செல்ல நுழைவுச் சீட்டு உண்டு – 20 ரூபாய் மட்டுமே. காமிராவுக்கு தனியே கட்டணம் கிடையாது! நிறைய பூஞ்செடிகள், புல்வெளிகள் இருக்க, பலரும் செல்வி புள்ளைகளாக – செல்ஃபி எடுத்த வண்ணமே இருக்கிறார்கள்.  திங்கள் கிழமைகள் தவிர மற்ற எல்லா தினமும் மாலை நேரங்களில் [02.30 PM to 08.30 PM on week days and 12.00 Noon to 08.30 on Sundays and Holidays] திறந்திருக்கும் இந்தப் பூங்காவிற்கு பழைய கொல்கத்தாவிலிருந்து நிறைய மக்கள் வந்து போகிறார்கள். நாங்களும் இந்தப் பூங்காவிற்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்து மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.  எங்கள் பயணத்தின் கடைசி நாள் இன்று தான் என்பதால் – பதினைந்து தினங்களில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை மனதுக்குள் அசைபோட நல்லதொரு வாய்ப்பு.


பூங்காவின் வெளியே நடைபாதைக் கடைகள்....

Toy Train, Ice Skating, Archery, Baby Cycling, Bird Watching, Cruise, Duo Cycling, E-byke, floating pontoon, Laser Bumpi Boat, Paddle Boating, Roller Skates, Water Cycling, Water Zorbing, Speed Boat என பல விஷயங்கள் இங்கே உண்டு.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித குஷி தரும் விஷயம். குறிப்பாக குடும்பத்துடன் வருபவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் பிடித்த ஏதாவது ஒரு விளையாட்டு/பொழுதுபோக்கு இங்கே இருப்பதால் பொழுது நன்றாக போகும்.  நுழைவுச் சீட்டு 20 ரூபாய் மட்டுமே என்றாலும், இந்த பொழுது போக்கு அம்சங்களுக்கான கட்டணம் தனி என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.


நீர் நிலையில் இப்படி பயணம் செய்யலாம்!

இந்தப் பூங்காவினைச் சுற்றி நிறைய புதிய விஷயங்களை ஆரம்பித்திருக்கிறார்கள்.  குறிப்பாக Floating Musical Fountain, Butterfly garden, Bamboo Garden, Fruits Garden, Food Court, Tea Garden, Mask Garden, Formal Garden மற்றும் Wax Museum  என புதியதாக அமைக்கப்பட்ட விஷயங்கள் ஏராளம். நிறைய கட்டிடங்கள், அகன்ற சாலைகள் என புதிய கொல்கத்தா நன்றாகவே நிர்மாணித்து இருக்கிறார்கள். இவை அனைத்தும் தீதி என அழைக்கப்படும் மம்தா முதலமைச்சராக வந்த பிறகு நடந்த விஷயங்கள்.


தண்ணீருக்குள்ளும் சைக்கிள் ஓட்டலாம்! 

நிறைய நேரம் அங்கே அமர்ந்து கதைகள் பேசி அந்த நாளை இனிமையாகக் கழித்துக் கொண்டிருந்தோம்.  அடுத்த நாள் கொல்கத்தாவிலிருந்து கேரள நண்பர்கள், திருவனந்தபுரத்திற்குப் புறப்பட, நான் மட்டும் தலைநகர் தில்லி புறப்பட வேண்டும். பதினைந்து நாட்கள் பயணம் முடியப்போகிறதே என்ற வருத்தம் இருந்தது.  இனிமையான பயணமாக இருந்தாலும் முடிவுக்கு வந்தாகத்தானே வேண்டும். அடுத்த நாள் புறப்படுவதால், வீடு திரும்பும் கேரள நண்பர்கள் வீட்டிற்கு ஏதாவது இனிப்பு வாங்க வேண்டும் என்று சொல்ல, பெங்காலி நண்பரை அழைத்தேன். 


ஏலேலோ ஐலேசா...  

மேற்கு வங்கம் இனிப்புக்குப் பெயர் போனதாயிற்றே… வங்காளிகள் இனிப்பு இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். அதிகாலை நேரத்தில் கூட இனிப்பு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் இனிப்பு சாப்பிடுபவர்கள் அவர்கள்.  இனிப்புக்குப் பெயர்போன ஊரிலிருந்து வீடு செல்லும் போது வாங்கிச் செல்லாமல் இருப்பது நல்லதல்லவே! நேராக நண்பர் சொன்ன கடைக்குச் சென்று தேவையான இனிப்பு வகைகளை வாங்கிக் கொண்ட பின்னர் நேரே தங்கி இருக்கும் இடத்திற்கு வந்தோம்.   

தங்கும் விடுதிக்கு அருகே இருந்த உணவகத்தில் இரவு உணவு முடித்துக் கொண்டு, விடுதிக் காப்பாளரிடம் அடுத்த நாள் காலையில் எங்களுக்கு விமானநிலையம் செல்ல வண்டி தேவை என்பதைச் சொல்லி, அறைக்கான வாடகையும் கொடுத்து உறங்கச் சென்றோம். அடுத்த நாள் என்ன நடந்தது என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

24 கருத்துகள்:

  1. தங்களின் பயணம் நிறைவிற்கு வந்தது
    எமக்கெல்லாம் வருத்தமளிக்கிறது ஐயா
    இப்பயணம் நீளக்கூடாதா என்ற ஏக்கம் வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணங்கள் முடியும் போது மனதில் ஒரு வருத்தம் வரத்தான் செய்கிறது..... இந்தப் பயணத்திற்குப் பிறகு சென்ற பயணங்கள் உண்டு. அதைப் பற்றியும் எழுத வேண்டும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. இன்னும் ஏதோ சஸ்பென்ஸ் இருக்கு போலவே....! பெங்காலி ஸ்வீட் நன்றாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சஸ்பென்ஸ்! இருக்கலாம்! பெங்காலி ஸ்வீட் நன்றாகவே இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மம்தா வருகைக்குப் பின் இவ்வளவுமா? ஆச்சர்யம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நல்லவையும் உண்டு. கெட்டவையும் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. ம்ம்ம்ம்.... எனக்கும் பிடிக்கும் என்றால் ஓரளவுக்கு மேல் சாப்பிட முடிவதில்லை! சாப்பிடுவதும் இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. பயணச் செய்திகள் நன்றாக இருக்கு. அங்கும் ஹால்திராமில்தான் ஸ்வீட்ஸ் வாங்கினீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹல்திராம் எதற்கு? அதைவிட நல்ல கடைகள் அங்கே நிறைய உண்டு - Branded கடை இல்லை என்றாலும் சுவையும் தரமும் அதிகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    2. நெல்லைத் தமிழன் ஹல்திராம் இடையில் அமெரிக்காவில் தடை செய்திருந்தார்கள். இப்போது என்னாயிற்று என்று தெரியவில்லை. ஆனால் ஹல்திராம், பி/பைக்கனேரி போன்ற ப்ராண்டட் ஐயும் விட வெங்கட்ஜி சொல்லியிருப்பது போன்று குடிசைத் தொழில் போன்று சிறிய கடைகளில் மிகவும் தரத்துடன் சுவையாக நன்றாக இருக்கிறது.

      கீதா

      நீக்கு
    3. குடிசைத் தொழில் போல செய்யும் பல கடைகள் அதுவும் பல வருடங்களாக இருக்கும் கடைகள் இங்கே சில உண்டு...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  7. இதைப்படிக்கும் போது கொல்கத்தா போன அனுபவம் இல்லையே என்னும் வருத்தமுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    பயணஅனுபவம் பற்றி சொல்லி விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  9. eco பார்க்...அழகு...அருமை..

    செல்வி புள்ளைகளாக.....இப்பொழுது எல்லா இடத்திலும் பார்க்கலாம்..இந்த செல்வி புள்ளைகளை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  10. கண் முன்னே கவிதைகளாய் காட்சிகள்..

    வங்கத்தின் இனிப்பைப் போல பதிவு!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  11. அருமையான பயணம் முற்றும் பெறுகிறது என்றாலும் வெங்கட்ஜி உங்கள் பயணங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்!!

    கீதா: மேற்சொன்ன கருத்துடன் சமீபத்திய ஒரு நாள் பயணங்கள் குறித்து எழுத நினைத்து எழுதாமல் இருக்கிறேன் அதற்கான நேரம் வாய்க்கவில்லை இன்னும். பல பணிகள்! பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பயணம் பற்றியும் படிக்கக் காத்திருக்கிறேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....