புதன், 22 மார்ச், 2017

ஹனிமூன் தேசம் – அரசு தங்குமிடங்கள் – சில பிரச்சனைகள்

ஹனிமூன் தேசம் – பகுதி 5

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!


கிடுகிடு பள்ளத்தில் படகை தடாலென்று இறக்கும்போது...
 
த்ரில்லான ராஃப்டிங் பயணத்தில் மனசு குளிர்ந்திருந்தது; உடைகளும் தான்! பெரும்பாலான பள்ளங்களில் இறங்கும்போது வேண்டுமென்றே எங்கள் படகோட்டி கர்மா காற்றடித்த படகை தடாலென்று இறக்க, தெளித்த தண்ணீர் எங்கள் அனைவருடைய உடைகளையும் முழுதாக நனைந்திருந்தது. கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தொலைவு இந்தப் படகுப் பயணம்; எங்கள் வாகன ஓட்டி ஜோதி வண்டியை படகு இறக்கிவிடும் இடத்திற்குக் கொண்டு வந்துவிட்டார் என்பதால் தப்பித்தோம். 

பியாஸ் நதியும் அதன் ஓட்டமும்.....

படகு இறக்கி விடும் இடத்தில் துணி மாற்றும் அறைகள் உண்டு என்பதால் வண்டியிலிருந்து மாற்றுத் துணிகளை எடுத்து நனைந்த துணிகளை மாற்றிக் கொண்டு, நனைந்த துணிகளை சற்றே காயவைத்துக் கொண்டோம். நாங்கள் வந்த படகை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து ஜீப்பின் மேல் வைத்து கட்டிக் கொண்டிருந்தார்கள். நதியின் போக்கிலேயே படகோட்டி ஓட்ட முடியும். எதிர்த்திசையில் இந்த படகில் பயணம் செய்ய இயலாது – தண்ணீரின் வேகம் அப்படி! படகை ஜீப் மீது வைத்து மீண்டும் ராஃப்டிங் தொடங்குமிடமான பிர்டி செல்கிறார்கள். இது நாள் முழுவதும் நடக்கும்!


இயற்கை அன்னையின் கருணை தான் என்னே!...

எங்கள் குழுவினர் அனைவரும் தயாராவதற்குள் எங்கள் ராஃப்டிங் அனுபவத்தினை காணொளி எடுத்த நபரும் ”தகடு… தகடு…” என்று வர, அவருடன் சென்று அது வேலை செய்கிறதா எனப் பார்த்து வந்தேன்! கரையோரம் இருக்கும் சிறு கூடாரத்தில் ஒரு கணினி, பிரிண்டர் சகிதம் அமர்ந்திருக்கிறார் ஒருவர்! படம்/காணொளி எடுத்ததும், இங்கே வந்து கணினியில் இணைத்து, குறுந்தட்டில் சேமித்து நமக்குக் கொடுத்துவிடுகிறார்கள். நன்றாகவே எடுத்திருந்தார். அவருக்கு நன்றி சொல்லி, பேசிய கட்டணமும் கொடுத்து திரும்பி வந்தால், பசி வயிற்றினைக் கிள்ள ஆரம்பித்திருந்தது. 


என்னா லுக்கு? கொத்திப்புடுவேன் கொத்தி!
கரையோரம் அடைப்பில்....

நதி/நீர்நிலைகளில் குளித்தால் அதிக அளவு பசி எடுக்க ஆரம்பிக்கும். ராஃப்டிங் செய்ததிலேயே பசி எடுக்க ஆரம்பித்து விட்டது! நொறுக்குத் தீனிகளை உண்டு கொஞ்சம் பசியடக்கினோம்.  அடுத்ததாய் ஒரு முக்கிய வேலை இருந்தது – அது நாங்கள் ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் சென்று உடைமைகளை வைத்து, கொஞ்சம் ஓய்வெடுப்பது. எங்கள் குழுவில் இருந்த ஒருவர் மூலம் அரசின் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்தோம்.  குழுவில் அதிகம் பேர் என்பதால் இரண்டு இடங்களில் ஏற்பாடு செய்திருந்தார்.


கரையோரத்தில் இலையும் பூவும்...

அங்கே சென்ற பிறகு தான் தெரிந்தது – இரண்டு தங்குமிடங்களுக்கான இடைவெளி ரொம்பவே அதிகம் என்பது. குழுவினர் அனைவரும் ஒரே இடத்தில் தங்கினால் தான் நல்லது – அனைவரும் ஒரே இடத்தில் இருந்தால் பல விஷயங்களில் நல்லது. இல்லை என்றால் ஒரு இடத்திலிருந்து அடுத்த இடத்துக்குச் சென்று வருவதில் நேர விரயம் ஆகும் என்பது என் சிந்தனையாக இருந்தது.  சரி ஆனது ஆகட்டும் என ஒரு தங்குமிடம் நோக்கி வண்டியைச் செலுத்தினோம். இடத்தைச் சொல்லி பலரிடம் கேட்டுக் கேட்டு ஒரு குறுகிய பாதை வழியே அந்த தங்குமிடம் சென்று சேர்ந்தால், தங்குமிடத்தினை நிர்வாகம் செய்பவர் அங்கே இல்லை.


கிடுகிடு பள்ளத்தில்...



படகில் பயணித்தபோது எடுத்த மொபைல் கிளிக்!...

அலைபேசி மூலம் அழைத்துக் கொண்டே இருக்க, அவர் எடுக்கவே இல்லை! சரி தங்குமிடம் எப்படி இருக்கிறது என்று பார்க்கச் சென்றால் தூசி படர்ந்து இருந்தது. பெருக்கி பல நாட்கள் ஆகியிருக்கும் போல! பல ஊர்களில் அரசின் தங்குமிடங்களில் தங்கி இருக்கிறேன் – நன்றாகவே பராமரித்து இருப்பார்கள் – இங்கே ரொம்பவே மோசம். ஏற்பாடு செய்தவருக்கு ரொம்பவே கஷ்டமாகிவிட்டது! இந்த இடத்தில் தங்குவது சரியாக இருக்காது என அனைவருக்கும் தோன்ற, ஏற்பாடு செய்த மற்ற இடத்தினைப் பார்க்க யாருக்கும் தைரியமில்லை.  நேரம் ஆகிக் கொண்டிருக்க, என்ன செய்வது என்ற குழப்பம்.


வீதி உலா செல்லும் கிராம தேவதை....


வீதி உலாவில் உற்சாக நடனமாடும் இளைஞர்கள்....

பயணம் ஆரம்பிக்கும்போது நாங்கள் மணாலியில் தங்குவது என்றும் அங்கே ஒரு தங்கும் விடுதியை ஓட்டுனர் ஜோதி மூலம் ஏற்பாடு செய்ய நினைத்திருந்தோம் – அவர் எப்போது சென்றாலும் தங்குமிடம் என்பதால் அவருக்கு அந்த விடுதியின் நிர்வாகி நன்கு பழக்கப்பட்டவர் என்றும் ஏற்பாடு செய்கிறேன் என்றும் சொல்லி இருந்தார். அரசின் தங்குமிடம் ஏற்பாடு செய்திருந்ததால் அவரிடம் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டோம்.  இப்போது குலூ வந்த பிறகு ஏற்பாடு செய்திருந்த இடம் பிடிக்காததால், ஜோதியிடம் சொல்லி மணாலி தங்குமிட நிர்வாகியிடம் பேசச் சொன்னேன். 


சாலையோர பாத்திரக் கடையில்...
சோலே-குல்ச்சா பாத்திரம்!

வேறு வழியில்லை – ஒரே இடத்தில் தங்க வேண்டும் என்பது மட்டுமல்ல, தங்குமிடம் நன்றாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு. இரண்டாவதாக ஏற்பாடு செய்திருந்த இடத்திற்குச் செல்லவே இல்லை! இரண்டாவது இடத்தில் சிலரும், வேறு இடம் தேடி அங்கே சிலரும் தங்குவதற்கு பதில் நேராக மணாலி சென்று, அங்கேயே தங்க முடிவு செய்ய வேண்டியதாயிற்று. அனைவரும் மனதில் குழம்பியபடி இருக்க, முடிவு எடுக்கும் பொறுப்பினை என்னிடம் விட்டுவிட்டதால் வண்டியை நேராக மணாலி விடச் சொன்னேன் ஜோதியிடம். 


முதுகுச் சுமையோடு நடக்கும் ஹிமாச்சலப் பெண்கள்...

மணாலியில் அவர் சொன்ன இடத்தில் இடம் இருந்தாலும், இல்லை என்றாலும் அங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம் என்பது என் எண்ணம். மணாலியில் நிறைய தங்குமிடங்கள் உண்டு என்பதை இணையத்தில் பார்த்திருந்ததால், “எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம்” என்ற தைரியத்தில் எடுத்த முடிவு! அது நல்ல முடிவாகவே இருந்தது! ஜோதி சொன்ன இடத்தில் சென்று பார்த்த உடனேயே அனைவருக்கும் அந்த இடம் பிடித்து விட்டது! நான் எடுத்த முடிவு நல்ல முடிவு என்று எனக்கும் திருப்தி! பாவம் அரசு தங்குமிடம் ஏற்பாடு செய்த நண்பருக்கு தான் மனது கஷ்டமாகி விட்டது. ”பரவாயில்லை விடுங்க” என்று நாங்கள் சொன்னாலும், இப்படி இருக்கும் என எதிர்பார்க்கவில்லை என புலம்பியபடியே வந்தார் பாவம். மணாலி அனுபவங்கள் அடுத்த பகுதியில்….

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜு அருணாச்சலம் ஐயா.

      நீக்கு
  2. திடீரென ஏற்பாடு செய்ததாலும் அந்தத் தனியார் தங்குமிடம் காஸ்ட்லியாக இருந்திருக்கும்! எப்படியோ வசதி கிடைத்தால் சரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற சுற்றுலா தலங்களில் தங்குமிடங்களின் வாடகை எப்போதும் அதிகமாகவே இருக்கும். முன்னரே பார்த்து வைத்தாலும்! அதுவும் சீசன் என்றால் கேட்கவே வேண்டாம். எங்களுக்கு கிடைத்த தங்குமிடம் வெகு அழகு! சொல்கிறேன்..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஆகா
    தங்களோடு நாங்களும் பயணிக்கிறோம் ஐயா
    காத்திருக்கிறேன்அடுத்த பகிர்விற்காக
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. இடங்களெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. நிச்சயம் காணவேண்டிய இடம்.

    இலையும் பூவும் படத்தில் அரசியல் இல்லையே? ஏன்னா, ரெண்டு ரெண்டு இலை சேர்ந்தமாதிரி, நடுவில் மஞ்சள் தாமரை மலர் மாதிரி என் கண்ணுக்குத் தோன்றியது.

    அந்த சோலே அலுமினியப் பாத்திரமும் நம்ம ஊர் பழங்காலத்து பீங்கான் ஊறுகாய் ஜாடியை ஞாபகப்படுத்திவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  7. அழகான பயணக் குறிப்புகள்! தொடர்கிறோம் வெங்கட்ஜி!

    கீதா: மணாலியில் நீங்கள் எங்கு தங்கினீர்கள் என்பதை அறிய ஆவல் ஜி! குலூ ஒரு விதத்தில் எனக்குப் பிடித்திருந்தது என்றால் மணாலி ரொம்பப் பிடித்திருந்தது. நாங்கள் சென்ற சமயம் ஆப்பிள் ஃபெஸ்டிவல் வேறு நடந்தது. ஆப்பிளில் வித விதமான உணவு வகைகள்..காந்தார் அனார்/ஆஃப்கானிஸ்தான் அனார் அங்கு குறைந்த விலையில் விற்றுக் கொண்டிருந்தார்கள். மாம்பழம் கூட!! இன்னும் பல வகை பழங்கள்...உணவுகள் என்று கடை வீதி அருகில் க்ரவுண்டில்....மற்றும் அவர்களது நடனம் எல்லாம் பார்க்க முடிந்தது...எழுதலாம் என்றால் என் மகன் இன்னும் படங்களை அனுப்பவில்லை...

    அங்கு நடுவில் ஒரு பார்க் உண்டே மிக அழகாக இருக்கும். அந்தப் பார்க்கின் எதிர்ப்புறம் சந்து வழியாகச் சென்றால் ஒரு புத்த விஹார் உண்டு அதுவும் அழகாக இருக்கும். அப்புறம் இடும்பா டெம்பிள், மற்றும் சில கோயில்கள் எல்லாம் பார்த்தோம். 4 நாட்கள் முழுவதும் தங்கியிருந்தோம். அருமையான இடம்...ட்ரெக்கிங்கும் போனோம். அழகான இடம்...மீண்டும் உங்கள் தொடர் பல நினைவுகளை எழுப்புகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பயண அனுபவங்களையும் எழுதுங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  8. அருமையான காட்சிகளும் கண்ணோட்டமும்

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....