தொகுப்புகள்

புதன், 10 ஏப்ரல், 2013

ஓடையிலே ஒரு பாடம் – அப்பாதுரை [அன்னம் விடு தூது – 10]



அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் ஒரு க[வி]தையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். மூன்றாம் சுழி எனும் வலைப்பூவில் எழுதி வரும் நண்பர் அப்பாதுரை எழுதிய க[வி]தையினை இன்று பகிர்ந்துள்ளேன்.



அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் இது பத்தாவது பகிர்வு.



ஓடையிலே ஒரு பாடம்


பட உதவி: சுதேசமித்திரன் 1957






[பசுமையான சோலையில் பளிங்கு போல் ஓடை. பச்சைப்புல் கம்பளத்தில் பேரழகுப் பாவை. பாவையின் உடலிலோ பசலை. முகத்திலே வாட்டம். எங்கோ பார்த்த விழிகளில் ஏக்கம். ஓடையின் நடுவிலே பேடைகள். நீரிலே மின்னும் பாவையின் கன்னம். கன்னத்தின் மின்னல் கண்ட அன்னங்கள் இரண்டு மெள்ள அவளருகில் வந்தன. ஒரு அன்னம் பாவையை நோக்கிப் பாடுகிறது: ஆர்வத்துடன்..]

இனிமையான சோலையிதில்

 வனப்பிருந்தும் வரம்பிலா

 அழகிருந்தும் - பெண்ணே

தனிமையிலுன் தங்கமுகம்

 ஏங்குவதேன்? சோகம்

 தாங்குவதேன்?



[பேசும் அன்னமா? பாவை வியக்கிறாள். தன்னிலை சொல்ல விழைகிறாள். தயக்கத்துடன்..

என்ன சொல்வேன்நான்

 ஏங்குவதன் காரணம்

 ஏது சொல்வேன்?



[அன்னம் பெண்னின் அருகில் நீந்தி வருகிறது. ஆதரவுடன்..]

உச்சிமுதல் பாதம்வரை

 உன்னழகு ஓடுமே

 பொன்னழகு - பெண்ணே

 உன்னிலையை என்னிடம்

 சொல்லிவிடு ஒளிக்காமல்

 சொல்லிவிடு.



[அன்னத்தைப் பார்த்துப் பேசுகிறாள். பட்டின் மென்மையுடன்..]

இடிக்கும் செங்கனி

 மார்பிருந்தும் மார்பில்லையே?

 அணைக்கவொரு மார்பில்லையே?

நடிக்கும் முன்பனி

 இடையிருந்தும் இடையில்லையே?

 இணைக்கவொரு இடையில்லையே?

வடிக்கும் தண்டைக்

 காலிருந்தும் காலில்லையே?

 பிணைக்கவொரு காலில்லையே?

துடிக்கும் தாமரைச்

 செண்டிருந்தும் தண்டில்லையே?

 தாங்கவொரு தண்டில்லையே?



[அன்னத்தை நெருங்கி அமர்கிறாள். பட்டிலும் மென்மையுடன்..]

கன்னியான நாள்முதல் 

 காத்திருக்கிறேன் காதலுளம்

 பூத்திருக்கிறேன்.

என்மனதில் இடம்பிடிக்க

 ஒருவனில்லையே? பூப்பறிக்க

 வரவுமில்லையே?



[அன்னம் மகிழ்ச்சி மேலோங்கச் சிறகடிக்கிறது. உற்சாகத்துடன்..] 

தேனிருக்கத் தித்திப்பைத்

 தேடுவதேன்? பொன்மனம்

 வாடுவதேன்? மன்மதனாய்

நானிருக்க இன்னொருவன்

 நாடுவதேன்? பெண்ணே

 நாடுவதேன்?



[பாவை ஒழுக்கம் பிறழாமல் சிரிக்கிறாள். அன்புடன்..]

அன்னமே உன்மொழியால்

 மகிழ்ந்தேன் என்துயர்

 மறந்தேன். எனினும்

என்னினமும் உன்னினமும்

 வேறாகும். பெண்ணழகைச் 

 சேருவது ஆணாகும். 

உன்மனமும் உன்குணமும்   

 கொண்டவனை உன்போல

 நல்லவனை - உடனே

என்னழகைக் காணும்வழி

 நானறியேன் ஏதும்செய

 வகையறியேன்.



[அன்னம் பாவையை நெருங்குகிறது. தயக்கத்துடன்..]    

முன்னம் பெற்ற சாபத்தால்

  முகமிழந்தேன் என்மனித 

  வடிவிழந்தேன். ஆனால்

அன்னம் என்று பாராமல்

  ஓரழகி உனைப்போல்

  பேரழகி - என்னிரு

கன்னத்தில் முத்தமிட்டால்

  குமரனாவேன் அரசிளங்

  குமரனாவேன். 



[பாவை வியக்கிறாள். ஒரு கணம் தயங்கிப் பின் அன்னத்தின் முகத்தை ஏந்துகிறாள். ஆசையுடன்..]

விழிமூடி நான்தருவேன்

 சிறுமுத்தம் உனக்காக

 ஒருமுத்தம்.

பழிபோக நான்தருவேன்

 பெருமுத்தம் உனக்காக

 மறுமுத்தம்.



[அன்னம் உருமாறவில்லை. பாவை அரண்டு போகிறாள். அன்னம் பெரிதாகச் சிரிக்கிறது. கேலியுடன்...]

உன்போல அப்பாவி

 வரவேண்டும் இன்னுமிங்கே

 வரவேண்டும் - கண்மூடி

என்சொல்லைக் கேட்டுமுத்தம்

 தரவேண்டும் இன்னும்பல

 தரவேண்டும். நன்றாகச்

சிந்திக்கும் அறிவிருந்தால்

 பெண்ணே அறிவிருந்தால்

உந்தேடல் உன்கையில்

 என்றறிவாய். காத்திருந்தால்

 கவலைமிஞ்சும் போய்வருவாய்.



[அன்னம் சிறகடித்துப் பறக்கிறது. பாவை பாடம் கற்றாளா?]




என்ன நண்பர்களே க[வி]தையினை ரசித்தீர்களா? பகிர்வுக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! எழுதிய நண்பர் அப்பாதுரை அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!





அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....



நட்புடன்



வெங்கட்.
புது தில்லி.



டிஸ்கி: நேற்று நான் பகிர்ந்த மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 4 – குகனின் வழித்தோன்றலுடன் ஒரு பேட்டி ஏனோ தொடர்பவர்களின் டாஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை.  முடிந்தால் அதையும் படித்து விடுங்கள்!
 

42 கருத்துகள்:

  1. அசத்தல்! அப்பா ஸாருக்கு மட்டும்தான் இப்படி வித்தியாசமான கோணங்கள் எல்லாம் தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை கணேஷ்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. உற்சாகத்துடன்.சிறகடிக்கிறது. க[வி]தை ...!

    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  3. அச்சோ. துரையின் கவிதையில் அன்னமும் ஏமாற்றுகிறதே.
    பேசும் அன்னம் இருந்த காலத்தில்
    பேதைகள் வரம் பெற்றார்கள்.

    இப்போது அன்னமும் குரல் இழந்தது.
    பெண்ணும் தூதிழந்தாள்.

    அன்னமனைய பெண்ணே உனக்கும் வருவான் ஒருவன்.
    ஓடம் வரும் திசையைப் பார்.:

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  4. அவருக்குள் ஒளிந்திருக்கும் வி(ந்)த்தைகள் எத்தனையோ...?

    நீங்கள் சொல்வது போல் க(வி)தையை ரசித்தேன்...

    அவருக்கு வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. உரையாடல் கவிதை அருமை !!! வாழ்த்துகள் அப்பாதுரை அவார்களே !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மணி.

      நீக்கு
  7. கவிதையில் உள்ள வரிகளும் சொல்ல வந்துள்ள கருத்தும் மிகவும் பாராட்டுக்குரியவைகள்

    பூங்கொத்து பெற்றுள்ளவருக்குப் பாராட்டுக்கள் + வாழ்த்துகள். தங்களுக்கு என் நன்றிகள், வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  8. என்ன ஒரு மாற்றுச்சிந்தனை... அற்புதம். அழகான சொற்கட்டு. அருமையான நயமுடன் சிறப்பாக இருக்கிறது. கவிஞர் ஐயாவுக்கு என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    அருமையான கவியை எமக்கும் இங்கு பகிர்ந்த சகோதரரே உங்களும் என் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. வியக்க வைத்தது வித்தியாசமான சிந்தை . நன்றிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  11. பாவை நல்ல பாடம் கற்று இருப்பாள்.
    தூதுக்கு இனி யாரையும் நம்பக் கூடாது என்று.

    இப்போது அன்னமும் குரல் இழந்தது.//

    வல்லி அக்கா சொன்னது போல் பாவையை ஏமாற்றியதால் அன்னம் குரல் இழந்து விட்டதோ!
    அப்பாதுரை சாரின் கற்பனை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  12. //கண்மூடி
    என்சொல்லைக் கேட்டுமுத்தம்
    தரவேண்டும் இன்னும்பல
    தரவேண்டும்.//

    ஐயையோ .....

    இன்னும் பல அப்படின்னா என்ன என்ன?
    சொல்லுங்க சொல்லுங்க...தலை வெடிச்சுடும் போல இருக்கு


    லிப் லாக் எல்லாம் தமிழ் சினிமா படங்களுக்கு உள்ளே தான் வந்து விட்டது என்று நினைத்தேன்.
    அதை விட இன்னும் பல .....


    தமிழ் வலைக்குள்ளவும் வந்து விட்டது.


    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

      நீக்கு
  13. வித்யாசமான கற்பனை மிக அருமை ஆசிரியருக்கு வாழ்த்துகள் பகிர்ந்த உங்களுக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

      நீக்கு
  14. நல்ல கவிதை .இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே..

      நீக்கு
  15. நல்ல கவிதை. வெங்கட். இன்னுமொரு இசை தொகுப்பையும்யும் , வித்யாசமான பாடகரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் எனது பதிவில். நேரமிருந்தால் பாருங்கள்.
    http://eliyavai.blogspot.com/2013/04/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

      நிச்சயம் பார்க்கிறேன்.

      நீக்கு
  16. க[வி]தை ரசித்த/பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
    வாய்ப்புக்கு நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      எங்கே காணோமே என, உங்கள் பக்கத்தில் தகவல் சொல்ல நினைத்திருந்தேன்!

      நீக்கு
  17. லிப் லாக் எல்லாம் தமிழ் சினிமா படங்களுக்கு உள்ளே தான் வந்து விட்டது என்று நினைத்தேன்.
    அதை விட இன்னும் பல .....


    தமிழ் வலைக்குள்ளவும் வந்து விட்டது:;))))))))))))))))))))))))))))))))))))))) சுப்பு சார்!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நல்லதை எடுத்துக் கொள்வோம், கெட்டதை விட்டுவிடுவோம்! :)

      நீக்கு
  18. mika pidiththathu...!

    appathura avarkalukku mikka nantri!

    nalla muyarchikku ungalukkum nantri anne..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  19. தங்களிற்கு ஓர கவிதை ( போட்டோ வரிகள்.) மின்னஞ்சலில் அனுப்பினேன் கிடைத்ததாகத் தகவல் இல்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் ஒரு முறை அனுப்பி விடுங்களேன்......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

      நீக்கு
  20. அடடா! ஆன்டி-க்ளைமாக்ஸ் ஆகிவிட்டதே!
    தவளை இளவரசனின் கதை நினைவுக்கு வந்தது. கடைசியில் அன்னம் சாமர்த்தியசாளியாகி விட்டது!
    உன்தேடல் உன் கையில்....எல்லோருக்கும் நல்ல பாடம்!
    பாராட்டுக்கள் துரை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு

  21. [அன்னம் உருமாறவில்லை. பாவை அரண்டு போகிறாள். அன்னம் பெரிதாகச் சிரிக்கிறது. கேலியுடன்...]
    நல்ல ட்விஸ்ட் வித்தியாசமாக இருக்கிறது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சங்கீதா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....