தொகுப்புகள்

திங்கள், 24 ஜூன், 2013

பிட்டூ – ஒரு பேட்டி



அணிவகுத்து சவாரிக்குக் காத்திருக்கும் குதிரைகள் 

பிட்டூ – ஒரு பேட்டி எனப் படித்தவுடன் என்னடா இது, தில்லியில் வெயில் கொஞ்சம் அதிகம் தானோ! சாப்பிடும் பிட்டுவைக் கூட விடாது பேட்டி எடுக்க ஆரம்பிச்சுட்டானே இவன்! இப்படியெல்லாமா பதிவு தேற்றணும்னு உங்க கற்பனைக் குதிரையை தட்டி விடாதீங்க! அந்த கற்பனை குதிரையை சீனுவோட காதல் கடிதம் போட்டிக்கு தட்டி விடுங்க!



பால்கி

சரி இந்த பேட்டிக்கதைக்கு வருவோம்!  மலைப் பிரதேசங்களில் உள்ள கேதார்நாத், அமர்நாத், வைஷ்ணவ் தேவி போன்ற கோவில்களுக்கு மலைப்பாதையில் நடந்து தான் செல்ல வேண்டியிருக்கும். இல்லையெனில் குதிரைகளில் அமர்ந்து கொள்ள குதிரைகளைப் பிடித்த படியே ஒருவர் வருவார். இப்போதைய உத்திராகண்ட் வெள்ளத்தில் பலியான குதிரைவாலாக்கள் எத்தனை பேர் என்பது இன்னும் தெரியவில்லை.

குதிரைகளில் உட்கார பயப்படும் வயதானவர்களை ஒரு இருக்கையில் அமர்த்தி முன்னே இருவரும் பின்னே இருவருமாக தூக்கிக் கொண்டு செல்பவர்களை பால்கி அல்லது டோலி என அழைப்பார்கள். இவை இப்பகுதிகளுக்குச் சென்று வந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் இது என்ன பிட்டூ......




பிட்டூ 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், ஜம்முவிலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது கட்ரா எனும் இடம். அங்கிருந்து கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து சென்றால் இருப்பது மாதா வைஷ்ணவ் தேவி கோவில். இக்கோவிலுக்கு நடந்து சென்று தரிசனம் செய்வது வட இந்தியாவில் மிகவும் பிரபலம். நடக்க முடியாதவர்கள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு குதிரைகளும், பால்கிகளும், சமீப காலமாக பாதி வழியான அர்த்குவாரியிலிருந்து பேட்டரி மூலம் இயங்கும் வண்டிகளும் இருக்கின்றன.

சிறு குழந்தைகள் குதிரைகளில் அமர பயப்படுவார்கள். இப்படி இருக்கும் சிறுவர்களையும் பயணிகளின் உடமைகளையும் தூக்கிச் செல்லவும் இங்கே ஆட்கள் உண்டு! இவர்களைத் தான் பிட்டூ என அழைக்கிறார்கள். குழந்தைகளை பாசத்தோடு தனது தோளில் உட்கார்த்தியபடியோ, மார்போடு அணைத்தபடியோ, தேயிலைக் கூடையை பின்னால் துணி கொண்டு கட்டிக்கொண்டபடியோ கீழே கட்ராவிலிருந்து மேலே கோவில் இருக்கும் பவன் வரை தூக்கிக் கொண்டு வருவார்கள்.

மேலே சொன்னபடி கட்ராவிலிருந்து மாதா வைஷ்ணவ்தேவி கோவில் வரை குழந்தைகளைச் சுமந்து வந்து தரிசனம் ஆகும்வரை காத்திருந்து மீண்டும் கீழே விடும் வரை உங்களுடனேயே இருப்பார் இந்த பிட்டூ. சாதாரணமாக நடக்கும்போதே கஷ்டப்பட்டு, மூச்சு முட்ட, கையில் ஒரு குச்சியின் துணை கொண்டு நாம் நடக்க, இவர்களோ முதுகில் சுமையோடு அனாயாசமாக நடந்து வருவார்கள். இப்படி நடந்து வந்த ஒரு பிட்டூவுடன் பேசிக் கொண்டே நடந்தேன்.

கைகளும் கால்களும் முறுக்கேறிப் போய் வலிமையுடன் காணப்பட்ட அவர் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்களாக இதே தொழிலைச் செய்து வருகிறார். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மேலே சென்று கீழே இறங்குவதாகவும் அடுத்த நாள் கொஞ்சம் ஓய்வு எடுத்து மீண்டும் இரண்டு முறை ஏறி இறங்கினால் தான் வாழ்க்கை ஓடுகிறது என்கிறார். வைஷ்ணவ் தேவி கோவிலை நிர்வாகிக்கும் அமைப்பு இவர்களுக்கு வருடாந்திர உரிமம் கொடுக்கிறது. அது இருந்தால் தான் இந்தத் தொழிலையும் செய்ய முடியும்.

இவர்களுக்கு கூலியையும் நிர்வாகமே முடிவு செய்திருக்கிறது. 25 கிலோ வரை இருக்கும் பொருளையோ, குழந்தையையோ கட்ராவிலிருந்து பவன் [கோவில்] வரை [13 கிலோ மீட்டர்] தூக்கிக் கொண்டு செல்ல கட்டணம் 700 ரூபாய் மட்டுமே. ஒரு வழியெனில் 350 ரூபாய். இதுவே பவனில் [கோவிலில்] இருந்து பைரவ் மந்திர் வழியாக கட்ரா கொண்டு செல்ல ரூபாய் 400/- [இது இரண்டு கிலோ மீட்டர் தொலைவு அதிகம்].

எல்லாப் பயணிகளும் முழுவதும் கொடுத்துவிடுவதில்லை. பேரம் பேசுகிறார்கள். போட்டி அதிகம் என்பதால் சிலர் இதை விட குறைந்த கூலிக்கும் செல்கிறார்கள்.  கூட்டம் அதிகம் இருக்கும் நாட்களில் சில பிட்டூக்களும் அடாவடியாக அதிகமான கூலி கேட்கிறார்கள் எனச் சொல்லிக் கொண்டு வந்தார். இந்த வெயில் காலத்தில் இப்படி மலையேறுவது மிகவும் கடினம். அதுவும் வேர்வை மழையாக உடம்பிலிருந்து பெய்ய, வழியில் கிடைக்கும் தண்ணீர் மட்டுமே அருந்திச் செல்ல வேண்டிய கட்டாயம். உணவு அருந்தினால் தூக்கிக் கொண்டு நடப்பது சிரமம் என்கிறார்.

ஒரு வழிப் பயணம் முடிந்த பின் இரண்டு நான்கு பிஸ்கட்டும் ஒரு கோப்பை தேநீரும் மட்டுமே அருந்தி மீண்டும் சுமையோடு கீழே இறங்குகிறார்கள். கால்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவரது நரம்புகள் கெஞ்சுவது தெரிகிறது. பல்லாண்டு காலமாக இப்படி சுமையோடு நடப்பதால், நரம்புகள் முறுக்கிக் கொண்டு விடுகின்றன. தான் வாழ்வதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. பணத்திற்காக இவர்கள் படும் கஷ்டங்களைப் பார்க்கும்போது நாம் படும் கஷ்டங்கள் ஒன்றுமே இல்லை எனத் தோன்றுகிறது.

இத்தனை கஷ்டம் இருந்தாலும் இவர்களும் மகிழ்ச்சியாகத்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். போட்டி பொறாமை என இருந்தாலும், ஓய்வு எடுக்கும்போது குதிரை ஓட்டிகள், பால்கி வாலாக்கள், பிட்டூக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களது பாஷையான “டோக்ரி[Dogri] பாஷையில் இனிமையாக பாடியபடி கை தட்டியபடி ரசித்து உணவினை பகிர்ந்து உண்ணும் இவர்களைப் பார்த்தபடியே எனது பயணம் தொடர்ந்தது.  

அட பயணம் தொடர்ந்தது என்றால் எங்கே எனக் கேட்பவர்களுக்கு, சென்ற வியாழன் [20.06.2013] அன்று தில்லியிலிருந்து ஜம்மு – கட்ரா வழியாக வைஷ்ணவ் தேவி கோவிலுக்கும் வேறு சில இடங்களுக்கும் எனது கேரள நண்பர் பிரமோத் உடன் சென்று நேற்று [23.06.2013] காலை தான் திரும்பினேன். ஒரு முறை மலையில் ஏறி கீழே இறங்கிய எங்களுக்கே இப்போது வரை கால் முழுவதும் வலி. வாழ்நாளில் பாதி இப்படி மலையேற்றத்தினை அதுவும் சுமையோடு கூடிய மலையேற்றத்தினையே தொழிலாகச் செய்யும் பிட்டூக்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போடலாம்.....

மீண்டும் அடுத்த திங்களன்று வேறு ஒரு சுவையான பதிவுடன் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 கருத்துகள்:

  1. அசுர உழைப்புதான்! தினம் இரண்டு முறை மலை ஏறி இறங்கி வருவதில் கூடுதலாக புண்ணியமும் அவர்கள் அக்கவுண்ட்டில் ஸ்டாக் ஆகும்தானே...! வித்தியாசமான ஒரு விஷயத்தை அறியத் தந்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

      நீக்கு
  2. ஒரு நாளைக்கு இரண்டு முறையா... ஆச்சரியம் தான்.. அனால் அவர்களுக்கு பழகிப்போயிருக்கும்... பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  3. ///அதுவும் வேர்வை மழையாக உடம்பிலிருந்து பெய்ய, வழியில் கிடைக்கும் தண்ணீர் மட்டுமே அருந்திச் செல்ல வேண்டிய கட்டாயம். உணவு அருந்தினால் தூக்கிக் கொண்டு நடப்பது சிரமம் என்கிறார்.///

    இப்படி ஒரு மனிதனை கஷ்டத்திற்கு உட்படுத்தி கடவுளை தரிசனம் செய்தால் கடவுள் அவர்கள் கேட்டதை தந்துவிடுவாறா என்ன? என்ன கொடுமை நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரைக் குற்றம் சொல்வது அவர்கள் உண்மைகள்.... அந்தப் பகுதிகளில் வேலை வாய்ப்புகள் இல்லை. அதனால் இந்தத் தொழில்.

      கடவுள் கேட்டதை தருகிறாரா இல்லையா என்பதற்கெல்லாம் நான் போகப் போவதில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

      நீக்கு
  4. வியப்பு தான்... பிட்டூக்களுக்கு உடல் உறுதியை விட மன உறுதி அதிகம் போல...

    (தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      ஒவ்வொரு பதிவினையும் தமிழ்மணத்தில் இணைத்து வாக்கும் அளிப்பதற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. //வாழ்நாளில் பாதி இப்படி மலையேற்றத்தினை அதுவும் சுமையோடு கூடிய மலையேற்றத்தினையே தொழிலாகச் செய்யும் பிட்டூக்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போடலாம்....//

    ரொம்பவும் சரியான வார்த்தைகள். சுமையோடு நாலு தப்படி நடக்கறதுக்குள்ளயே நமக்கு மூச்சு வாங்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  6. எனக்கு அவங்களை போன்றவர்களை பார்க்கும்போது பாவமா இருக்கும்..., நம்மால நமம் பிள்ளாஇயே தூக்கிட்டு போக முடியலியே.., ஆனா, அவங்க நம்மளாஇயே சுமக்குறாங்களேன்னு!! ம்ம்ம் எல்லாம் இந்த ஒரு ஜான் வயிற்றுக்காகத்தானே சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் ஒரு ஜான் வயிற்றுக்காகத்தானே.... முற்றிலும் உண்மை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  7. வலி மிகுந்த பயணம் மனதை சுமையாக்கிவிட்டது நண்பா ........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை சரளா.

      நீக்கு
  8. ”பிட்டூ” என்ற எழுத்துக்களுக்கு மேல் காட்டியுள்ள, குதிரை சவாரி செய்யும் குழந்தை, அப்படியே இன்றைய ’அநிருத்’ போல டிட்டோவாக இருக்கிறான். ;))))) மிகவும் ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றி, வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  9. வாழ்நாளில் பாதி இப்படி மலையேற்றத்தினை அதுவும் சுமையோடு கூடிய மலையேற்றத்தினையே தொழிலாகச் செய்யும் பிட்டூக்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போடலாம்.....


    கனக்கும் வாழ்க்கைப் பயணம் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  10. நாங்களும் போகவர நடந்தே போய் வந்தோம்.

    //பேட்டரி மூலம் இயங்கும் வண்டிகளும் இருக்கின்றன.//

    கொஞ்சம் தூரம் தான் பேட்டரி வண்டி போகும்.

    //உத்திராகண்ட் வெள்ளத்தில் பலியான குதிரைவாலாக்கள் எத்தனை பேர் என்பது இன்னும் தெரியவில்லை.//

    எங்களைகேதார்நாத்துக்கு சுமந்து சென்ற டோலி வாலாக்கள் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். குதிரைவாலாக்கள் மற்றும் முதுகில் தூக்கி செலவர்கள் உண்டு எல்லோரும் எப்படி இருக்கிறார்களோ என்று கவலையாக இருக்கிறது.1000 குதிரையாவது இருக்கும் குதிரை கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

      நீக்கு
  12. வைஷ்ணோ தேவி தரிசனம் நன்றாக கிடைத்ததா? பிட்டூக்கள் படும் பாட்டை பார்த்து மனது கனக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான தரிசனம். அவ்வளவாக கும்பல் இல்லாததால் நின்று நிதானமாக தரிசிக்க முடிந்தது.....

      பயணம் பற்றிய மற்ற தகவல்கள் பின்னர் சமயம் கிடைக்கும் போது வெளியிடுகிறேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி [B]பந்து ஜி!

      நீக்கு
  13. நாங்கள் பத்ரிநாத் போயிருந்தபோது கூட இந்த மாதிரி ஆட்களைப் பார்த்தோம். அந்த மலைப்ரதேசத்தில் நம் கனத்தை நாம் தூக்கிக் கொண்டு நடப்பதே பெரிய பாடு. இவர்கள் எப்படி இப்படி அயராது உழைக்கிறார்களோ என்ற வியப்பும்,அதே சமயம் பரிதாபமும் ஏற்பட்டது.

    வித்தியாசமான பேட்டி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

      நீக்கு
  14. கடவுளே!... வண்டியில் ஆட்களை இருத்தி குதிரைக்குப் பதில் தாங்களே இழுத்துப் போவார்களே ரிக்‌ஷான்னு சொல்வார்களென நினைக்கிறேன். எத்தனையோ வருடங்களுக்கு முன் இலங்கை தலை நகரத்தில் வாழ்ந்த சமயம் பாடசாலைக்கு பிள்ளைகளை இவர்கள் இப்படி இழுத்து வருவதைப் பார்த்திருக்கின்றேன். இழுத்துவருவதென்றால் பிரதான வீதியால் இழுத்துக்கொண்டு ஓடுவார்கள். காலில் போட்டிருக்கும் செருப்பு தேய்ந்து போயிருக்கும். காலில் சாக்குத்துணி சுற்றியிப்பார்கள். தார்வீதி காலில் சுடாமல் இருக்கட்டும் என. அவர்களைப் பார்த்தலே அப்பவே எனக்கு அழுகையாக வரும். மனுசனை மனுசன் இழுப்பதா என...

    நீங்கள் சொல்வது மலையில் தூக்கிக்கொண்டு ஏறுவது. ஹையோ... நினைக்கவே முடியவில்லை அந்த பிட்டூக்களை...:(
    அறிந்து கொண்டோம் உங்கள் பகிர்வினால்.
    மிக்க நன்றி சகோ!

    த ம.7

    பதிலளிநீக்கு
  15. 22 வருட தில்லி வாழ்க்கையில் இது வரை மூன்று முறை வைஷ்ணவ் தேவி சென்றிருக்கிறேன் இளமதி. ஒவ்வொரு முறை இங்கே செல்லும்போதும், பிட்டூக்கள், குதிரைகளின் கூடவே ஓடி வரும் மனிதர்கள், மனிதர்களை பால்கியில் உட்காரவைத்து தூக்கி வரும் நபர்கள் என அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் மனதில் சோகம் அப்பும். பிறகு சமாதானமும் செய்து கொள்வேன் - இவர்களை நிராகரித்தால் உணவுக்கு வழி.....

    ஆனாலும் நான் கஷ்டம் தரக்கூடாது என இதுவரை இவர்களைப் பயன்படுத்தியது இல்லை. மொத்த பயணமும் நடைப்பயணம் தான்....

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இளமதி.

    பதிலளிநீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  17. அவர்கள் இதைச் சுகமான சுமையாக நினைக்கிறார்களோ...
    இதுதான் தொழில் என்று வந்தபிறகு நாம் என்ன சொல்ல இருக்கிறது.

    செய்யும் தொழிலே தெய்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  18. நானும் பிட்டூ வாக மாறி என் குழந்தையை முதுகில் சுமந்து 13 கி.மீ + 13 கி.மீ நடந்து வைஷ்ணவ் தேவியை தரிசனம் செய்தேன். 1997-ம் வருடம் - மார்ச் மாதத்தில். அந்த யாத்திரையை நினைவுக்குக் கொண்டு வந்தது உங்களின் இந்த பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பொன்சந்தர்.... தொடர்ந்து சந்திப்போம்!

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  20. படித்த நினைவு இருக்கிறது ஆனால் என் கமெண்ட் இல்லை இதில். ஆச்சர்யம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....