தொகுப்புகள்

திங்கள், 22 ஜூலை, 2013

என்ன ஆனாலும் விடமாட்டேன்!

இது என்ன போன வாரம் திங்கக் கிழமை அன்னிக்கு “விடைபெறுகிறேன்அப்படின்னு தலைப்பு வைச்சு விடைபெற்ற தந்தி பத்தி எழுதியிருந்தது...  இந்த வாரம் “என்ன ஆனாலும் விடமாட்டேன்அப்படின்னு ஒரு தலைப்பு! எப்படியும் உங்களை எல்லாம் விடமாட்டேன் அப்படின்னு சொல்லப் போறாரா இன்னிக்கு.... இப்படி எல்லாம் குழப்பிக்காதீங்க! நான் நேரடியா விஷயத்துக்கு வந்துடறேன்....

சனிக்கிழமை அலுவலகத்திற்குச் சென்ற போது சக பணியாளர் ஒருவர் உடல் நிலை சரியில்லாது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சரி என்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும் வழியில் மருத்துவமனை சென்று அவரைப் பார்த்துவிட்டு வர முடிவு செய்தேன்.

அப்படி என்ன அவருக்கு உடம்புக்கு என நீங்களும் தெரிஞ்சுக்க வேணாமா? உணவுக்குழாயில் கேன்சர். சில மாதங்களாகவே அவருக்கு சிகிச்சைகள் நடந்து கொண்டிருந்தது. இப்போது ரொம்பவே முடியாது போக, அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்ய தொடங்கியிருந்தார்கள்.

அடாடா...  இப்படியும் ஒரு சோதனையா...  கேன்சர்னா சும்மாவா? இன்னும் எத்தனை நாளோ, தெரியலையே என்ற மனக்கலக்கத்தோடு அவரைப் பார்க்கச் சென்றேன். உள்ளே சென்றபோது அவரது மனைவி, மற்றும் மகள் உடனிருந்தார்கள்.  அவரை பார்த்து எப்படி இருக்கீங்க என்ற போது அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் அவரால் முன்போல பேச முடியவில்லை. கொஞ்சம் சிரமப்பட்டே பேசினார். அவரை பேச வேண்டாம் எனச் சொல்லி, அவரின் மனைவியிடம் இப்ப எப்படி இருக்கு? மருத்துவர் என்ன சொல்றார்?என்று விசாரித்தேன்.

“உணவுக்குழலில் புற்று நோய் என்பதால் அதை அகற்றி விட்டார்கள். மருந்து மாத்திரைகள், சிகிச்சை எனத் தொடர்கிறது. இனிமேல் ஆண்டவன் தான் காப்பாற்றணும்என்று சொல்லி ஒரு குழாய் வைத்து அதன் மூலம் தான் திரவ உணவு கொடுத்துக் கொண்டு வருவதாகவும் சொன்னார். கொஞ்சம் நேரம் பார்த்துக்கோங்க, மருந்து மாத்திரை வாங்கணும், நான் வாங்கிட்டு வந்துடறேன் எனச் சொல்லி வெளியே சென்றார்.

நானும் பரிதாபமாக முகத்தினை வைத்துக்கொண்டு அவர் அருகில் அமர்ந்து இருந்தேன். சைகை செய்து அழைக்க, அவர் அருகே சென்றேன். அப்போது அவர் கேட்டது.......

“வார்ட் பாய்கிட்ட சொல்லி ஒரு க்வாட்டர் வாங்கித்தரியா? என்னால குடிக்காம இருக்க முடியல!

“அட விளையாடறீங்களா, புற்றுநோய்னு அறுத்து வைச்சுருக்காங்க, சாப்பாடே இல்லாம, திரவமா குழாய் மூலம் போகுது, இதுல உங்களுக்கு க்வாட்டர் கேக்குதா?என்று கோபத்துடன் கேட்டேன்.

வாய் வழியா குடிச்சாலும், ரத்தத்துல கலந்து கிக் வரும், இப்படி குழாய் வழியா உள்ளே ஊத்திக்கிட்டாலும் கிக் ஏறும்...  பொண்டாட்டி மாத்திரை வாங்கிட்டு வரதுக்குள்ள ஊத்திக்கணும் சீக்கிரம் ஏற்பாடு பண்ணு, உனக்கு புண்ணியமா போகும்!”

“என்ன ஆனாலும் இந்தக் குடியை விடமாட்டேன்என அடம் பிடிக்கும் அவரை என்ன செய்யலாம்? குடும்பத்தினர் அனைவரும் இவரைப் பிழைக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது இவர் சாக வழி கேட்கிறார்......

அவரது மகளும் மனைவியும் வந்துவிட, நான் அவருக்கு க்வாட்டர் வாங்கித்தராமலேயே வெளியேறினேன். அப்போது அவர் பார்வையினாலேயே என்னை எரித்துக் கொண்டிருந்தார். மருத்துவமனையை விட்டு வெளியே வர மழை வலுவாக அடித்துப் பெய்ய ஆரம்பித்தது. வேகமாய் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன்.

அங்கே ஒருவர் விழுந்து கிடந்தார். வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் ஒழுகுவது கூடத் தெரியாது கிடந்த அவர் அருகில் சென்றபோது அடித்துப் பெய்த மழையையும் மீறி ஒரு வாசம். வேறென்ன சாராய வாசம் தான்! சிலர் பக்கத்தில் நின்றிருந்த காவல்துறை அலுவலரிடம், அந்த ஆள் விழுந்து கிடப்பதைப் பற்றிச் சொல்ல, “அவன் தண்ணி அடிச்சுட்டு கிடக்காம்மா....  இங்கே தான் எதிர்லே வீடு. ஆள் விட்டு அனுப்பி இருக்கேன்எனச் சொல்லிவிட்டு “இதே வேலையாப் போச்சு இவனுக்குஎன்று சொன்னார்.  அப்போது இரண்டு பேர் வந்து பிணத்தினைத் தூக்குவது போல விழுந்து கிடந்த ஆளை தூக்கி ஒரு ஆட்டோவில் போட்டு அழைத்துச் சென்றனர்.

நான் செல்ல வேண்டிய பேருந்தும் வர, இந்த நினைவுகளோடே பயணம் செய்தேன். தன்னையே அழித்துக் கொள்வது மட்டுமல்லாது தனது குடும்பமும் அழிந்தாலும் பரவாயில்லை “நான் குடிப்பதை விடமாட்டேன்என நினைக்கும் இவர்களை என்ன செய்வது.......

திருந்தவே முடியாது என்ற பிடிவாதத்துடன் இருப்பவர்களை திருத்தவா முடியும்.....

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.
  

48 கருத்துகள்:

  1. கேன்சர் இந்த அளவிற்கு வந்த பின் அவன் அதிக நாள் வாழ இயலாது என்பது உண்மையே அதனால் அவனுக்கு ஹாஸ்பிடலில் சேர்த்து செலவு பண்ணுவதற்கு பதிலாக க்வாட்டர் வாங்கி கொடுத்து அவரை சீக்கிரம் அனுப்பிவிடுவதே அவர் குடும்பத்திற்கு நல்லது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீங்கள் சொன்னது போலவும் செய்யலாம்! ஆனால் செய்யத் தோணவில்லை.....

      நீக்கு
  2. சொல்லிச் சென்ற விஷயம் அதிகம்
    மனதைப் பாதித்தது
    அவர்கள் உண்மைகள் சொல்லிச் சென்றது
    சரிதானோ என்று கூடப் படுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  4. இவர்கள் திருந்த மாட்டார்கள்
    மதுரை தமிழனின் பார்வையே தனிதான்.
    சாராயம் பற்றிய ஜோதிஜி அவர்கள் எழுதிய பதிவை படித்துப் பாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  5. அளவாக குடித்து நன்றாக சாப்பிட்டு அலம்பல் சலம்பல் இல்லாமல் இருக்கிறவர்களும் இருக்கிறார்கள், இந்த மெகா குடிகாரர்கள்தான் டேஞ்சர், குடிக்காதே அளவா குடி என்று சொன்னதுக்காக சில நண்பர்களை இழந்தவன் நான்...!

    ரெண்டே நாள்ல ஐந்து லிட்டர் பிளாக் லேபல் விஸ்கியை குடித்தவனும் இருக்கான் நம்ம நண்பர்கள் லிஸ்டில்...என்னத்த சொல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ....

      நீக்கு
  6. உணவுக் குழாய் அகற்றிய பின் நெடுங்காலம் வாழ்தல் மிகக் கடினம். குடி மட்டுமல்ல எப்பழக்கத்துக்கு அடிமை ஆனாலும் சோழி முடிந்தது.. அதுவும் மது, மாது, புகை என்பவை எல்லாம் உயிரை வாங்காது விடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிரஞ்சன் தம்பி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  8. தமிழ்நாட்டில் இதுபோல் நிறையப்பேர் இருக்கிறார்கள்... அவரவராகத் திருந்தினால்தான் உண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாட்டில் இது போல நிறையப் பேர்.... :(

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  9. இங்கும் இது போல் "இருந்த" இரு உறவினர்கள் இப்போது "இல்லை..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ..???!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  11. இவர்களை எல்லாம் திருத்தவே முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  12. குடி வெறி கொண்டவர்களைத் திருத்துவது மிகவும் கஷ்டமே. இந்தக்கெட்ட பழக்கம் ஏற்படாதவாறு உஷாராக இருந்தால் மட்டுமே நல்லது.

    இன்று மேல் மட்டத்தில் உள்ள பலரும் கூட விளையாட்டாக, பொழுதுபோக்காக பார்ட்டி / விழாக்கள் என்று கொஞ்சமாகக் குடித்துப்பழ்கி வருகிறார்கள்.

    அதுவே ஒருநாள் அவர்களை குடிக்கு அடிமையாக்கி விடும் ஆபத்துக்கள் உள்ளன.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  13. ’டாஸ்மாக்’ காரங்களுக்கு புது ஐடியா வந்துவிடப் போகிறது. க்ளுக்கோஸ் ட்ரிப் போல ட்ரிப் ஏத்தறமாதிரி ப்ராண்ட் அறிமுகப்படுத்தி விடப் போறான். சைட் டிஷ் தேவையிருக்காதுல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  14. சும்மா ஜாலிக்கு, பார்ட்டிக்கு, துக்கம் மறக்க, தூக்கம் வர என்றெல்லாம் தொடங்கியதன் விளைவு தானே இது...:((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  15. திருந்தாத ஜென்மங்கள் சார்...

    எப்படியாவது பிழைக்கட்டும் என்று மனைவி மக்கள் கண்ணீரோடு... இந்த ஆளுக்கு தண்ணி கேக்குது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  16. சாகக் கிடக்கும்போது கூட இப்படியா? பாவம் மனைவியும் குழந்தைகளும் இவர் பிழைக்க வேண்டுமென்று தவம் கிடக்க இவருக்கு குடிக்க ஆசையா?
    வியப்பு+வருத்தம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியப்பு + வருத்தம்..... அதே உணர்வு தான் எனக்கும் இருந்தது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      நீக்கு
  17. அவர் குடிக்காமல் இருந்தால் நுர்று வருடம் வாழ்வாரா...?

    என்னங்க நீங்க...? சிறையில் துாக்கு தண்டனைக் கைதிக்குக் கூட
    கடைசி ஆசையைக் கேட்டு நிறைவேற்றுகிறார்கள்.

    சாகப் போகும் உயிர்!! அவருக்குத் தான் தெரியும்
    அவர் உடலில் உள்ள வலி. பாவம்.

    அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்
    என்பதே என் கருத்து.
    நாளை இறந்துவிட்டால்.... சொல்லக்கூடாது தான்.
    இருந்தாலும், அப்படியானால்... அவரின் ஆசையை
    நிறைவேற்ற வில்லையே என்ற கவலை உங்களுக்கு வராது பாருங்கள்.

    (எனக்குத் தெரிந்த ஒருவர் குடிகாரர். எப்பொழுதும் வீட்டில் மனைவியிடம் இதனால் சண்டை.
    இறந்து விட்டார். இப்பொழுது அவர் மனைவி அவருக்கு பாட்டில் பாட்டிலாக வைத்துப் படையலிடுகிறாங்க,,,)

    கருத்து தவறெனில் இந்தச் சின்ன பிள்ளையை
    மன்னித்துவிடுங்கள் நாகராஜ் ஜி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வாங்கித் தராமல் இருந்துவிட்டால் மட்டும் அவர் குடிக்காது இருந்துவிடப்போகிறாரா? ஒரு விஷயம்.... சரக்கு அடிப்பவர்களை எந்த ஊரில் வேண்டுமானாலும் விடுங்கள் - மொழி தெரியவில்லை என்றால் கூட சரக்கு எங்கே கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு வாங்கிவிடுவார்கள்.... அதனால் எப்படியும் இவர் வாங்கிக் கொண்டிருப்பார்....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  18. வருத்தமாக இருக்கிறது அவரின் குடும்பத்தைப் பார்த்து.. சிலரைத் திருத்த முடியாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

      நீக்கு
  19. தன் குடும்பத்தினரை நினைத்து பார்க்காத மனிதரை நினைத்தால் என்ன மனிதர் இவர் என நினைக்க தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  21. இப்படி நிறைய இருக்காங்க நம்ம ஊர்களில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

      நீக்கு
  22. குடி புகை பழக்கங்கள் இருப்பவர்களில் சில, நோய் ஏதேனும் வந்தால் உடனே பயந்து போய் நிறுத்திவிடுவார்கள். பலர் இப்படி போல! சிலர் சொல்லிருக்கமாதிரி, கேட்டதை வாங்கிக் கொடுத்து சீக்கிரம் ‘அனுப்பி’ வச்சா, குடும்பத்தினராவது நிம்மதியா இருப்பாங்க. :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா....

      நீக்கு

  23. பொறுப்பற்ற இம்மாதிரி மனிதர்கள் இருப்பதை விடப் போய்ச் சேர்வதேமேல். பாவம் அவன் குடும்பத்தினர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  24. இந்தநிலையிலும் குடிக்க நினைப்பவரை என்னசெய்வது திருந்தாத மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....