தொகுப்புகள்

புதன், 25 ஜூன், 2014

கேள்வியின் நாயகனே........... – தொடர் பதிவு



பழைய சினிமா படம் ஒன்றில் நடிகர் சிவக்குமார் “கேள்விக்கென்ன பதில்....  என் கேள்விக்கென்ன பதில்என்று டூயட் பாடி இருப்பார். பூரிக்கட்டையால் அடி வாங்கிக் கொண்டே இருந்தாலும், இன்னமும் தைரியமுடனும் தெம்புடனும் இருக்கும், அமெரிக்காவில் வசித்தாலும் மதுரைத் தமிழன் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் நண்பர், சிவக்குமார் போலவே சில கேள்விகளை அவர் மனைவியிடம் கேட்காமல் [கேட்டால் எப்படியும் பூரிக்கட்டை பறக்கும் என்பது தெரிந்து வைத்திருப்பதால்] பதிவுலக நண்பர்கள் பத்து பேரைக் கேட்டுள்ளார். அந்த பத்து பேரும் இன்னும் பத்து பத்து பேரை பதில் சொல்லக் கேட்க, ஒரு சங்கிலித் தொடர் இப்போது பதிவுலகில் ஓடிக் கொண்டிருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.



கேள்வியின் நாயகனாகிய மதுரைத் தமிழன் முதல் முதலாக அழைத்த பத்து பேரில் நானும் ஒருவன். அவரது கேள்விகளும் எனது பதில்களும் இங்கே.....  பதில்களால் உங்கள் மனது சங்கடப்பட்டாலோ, கோபம் வந்தாலோ, சந்தோஷம் அடைந்தாலோ, மொத்தத்தில் நல்லதோ கெட்டதோ, எல்லாப் பெருமையும் மதுரைத் தமிழனுக்கே..... 

திருவிளையாடல் தருமி மாதிரி எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியும் என்று தப்பிக்க முடியாது செய்த நண்பர் மதுரைத் தமிழனுக்கு இன்னும் நிறைய பூரிக்கட்டை அடி கிடைக்க வாழ்த்தலாம் என்றாலும் எனது பூஞ்சையான மனது ஒப்புக் கொள்ள வில்லை!

வாங்க கேள்வி பதிலுக்குப் போகலாம்.

1.      உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கலப்படத்திற்கு நூறு வயது வாழ்வதெல்லாம் பகல் கனவு தான்.  அப்படி 100 வயது வாழ்ந்தால், 100-வது பிறந்த நாள் அன்று, ஒரு அனாதை இல்லத்திற்குச் சென்று, 100 கிலோவில் பிறந்த நாள் கேக் வாங்கி பிறந்த நாள் கொண்டாடி அந்த கேக்கினை எல்லா குழந்தைகளுக்கும் பங்கிட்டு கொடுத்து விடுவேன். இது வரை நான் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதே இல்லையே! அக்குழந்தைகளுக்கு அன்றைய உணவுக்கான செலவும் என்னுடையதாக இருக்கும்.

2.      என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?

இந்திய மொழிகளில் இன்னும் சில மொழிகளையாவது கற்றுக் கொள்ள வேண்டும் – இப்போதைக்கு குஜராத்தி.... தில்லியில் புதுசு புதுசா நிறைய குஜராத்தி வந்து சேர்ந்துட்டு இருக்காங்க! அவங்க பேசும்போது நம்மளை திட்டற மாதிரியே ஒரு உணர்வு!

3.      கடைசியாக  நீங்கள்  சிரித்தது எப்போது, எதற்காக?.

தினம் தினம் சிரிப்பா சிரிச்சுட்டு இருக்கேன்.....  இன்றைக்கு ஒரு ஜோக் படித்தேன்....  டீச்சர் [மைதிலி டீச்சர் இல்லை!] வகுப்பறையில் பாடம் எடுத்துட்டு இருக்காங்க. “ஒரு நாள் இந்த பூமியினை நாலா பக்கமும் தண்ணீர் சூழ்ந்து கொள்ளும், எல்லா உயிரினங்களும் அழிஞ்சு போயிடும். எல்லாமே சேதமாயிடும்அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. அப்ப ஒரு பையன் எழுந்து அவங்களை ஒரு கேள்வி கேட்டானாம் – “மிஸ்...  அன்னிக்கும் உங்க கிளாஸுக்கு வரணுமா? அவன் கவலை அவனுக்கு!  

4.      24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன?

தலைநகர் தில்லியில் நான் இருக்கும் பகுதியில் பவர் கட் என்பது கிடையாது. அப்படி 24 மணி நேரம் மின்சாரத் தடை இருந்தால், வியர்வை சிந்தி உழைத்ததாய் நினைத்தபடியே அமர்ந்து விடுவேன் – வியர்வை சிந்தி உழைச்சு ரொம்ப நாளாச்சுப்பா!

5.      உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?....

அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான் –

வாழ்க்கைப் பயணத்தினை நீங்கள் இருவரும் சேர்ந்து கடக்க வேண்டும் – உங்கள் பாதையில் ரோஜாப்பூக்கள் மட்டுமே இருக்கும் என்று சொல்ல முடியாது, இடையிடையே சில முட்களும் இருக்கலாம். அதைத் தாண்டிச் செல்வதில் தான் உங்கள் திறமை இருக்கிறது. எந்த விஷயத்திற்காகவும் உங்களுக்குள் சண்டையோ சச்சரவோ வந்து விடக்கூடாது – விட்டுக் கொடுத்தலில் இருக்கும் சுகம் வேறெதிலும் இல்லை.

6.      உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள்?

எங்கே பார்த்தாலும் குழந்தைத் தொழிலாளர்கள் – படிக்க வேண்டிய வயதில் கடுமையான வேலைக்கு வந்து விடுகிறார்கள்.  அவர்கள் பிரச்சனையைத் தீர்த்து வைக்க விரும்புவேன்.

7.      உங்களுக்கு ஒரு பிரச்சனை அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள்?

என் நட்பு வட்டத்தில் இருப்பவர்களில் – என் பிரச்சனைக்கு இது தான் தீர்வு என்று எவரால் நிச்சயமாக சொல்ல முடியுமோ – அவரிடத்தில்.  

8.      உங்களைப்பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

தவறான செய்தி பரப்பும் நபரிடம் அவரது தவறினை எடுத்துச் சொல்வேன்.  கேட்க மறுத்தால், அதைப் பற்றி கவலைப் படமாட்டேன். என்னை நன்கு புரிந்தவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும் என்பதால், தவறான செய்தி பப்பும் நபரை விட்டுவிடுவேன்.
9.      உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?

அந்த நேரத்தில் அவரது தேவை தனிமை மட்டுமே....  நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த சந்தோஷமான நினைவுகளை நினைத்துப் பார், அந்த நினைவுகளில் உன் மனைவி தொடர்ந்து இருப்பார், உன்னை விட்டு அகல மாட்டார் என்று சொல்லி அவரை தனிமையில் விடுவேன்.


10.  உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

வாசிப்பு, மெல்லிசை கேட்பது, சின்னச் சின்னதாய் வீட்டு வேலைகள், தூக்கம் என பெரிய பட்டியலே இருக்கிறது. எதைச் சொல்ல எதை விட!

ஆஹா பத்து கேள்விகள் முடிந்து விட்டதா! 

கேள்விக்கு பதில் சொல்வது கூட பெரிய வேலையாகத் தோன்றவில்லை. இந்த கேள்விகளை கேட்டு நானும் பத்து பேரை மாட்டி விட வேண்டுமாம்....  அது தான் கடினமான விஷயம்.  என் வலையுலக நட்புகள் பலர் ஏற்கனவே மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.....  ம்....  சென்னை பித்தன் ஐயாவின் வழியை நானும் தொடர்வது நல்லது என்று தோன்றுகிறது. 

கேள்விகளுக்கு பதில் சொல்ல நினைக்கும் நண்பர்கள் சொல்லலாம். பதிவினை முடிப்பதற்கு முன் கேள்விகள் பற்றி நண்பர் நெய்வேலி பாரதிகுமார் சொல்வதைச் சொல்லி இப்பதிவினை முடிக்கிறேன்....

எண்ணங்கள் சிருஷ்டிக்கப்படும்போது கேள்விகளும் முளைக்கின்றன. எனக்கும் அப்படித்தான். சில கேள்விகளுக்குப் பதில் தேட முயன்றிருக்கிறேன். சில பதில்களை கேள்வியோடு பொருத்தமுடியாது திணறியிருக்கிறேன். சில கேள்விகள் இன்னும் சில கிளைக்கேள்விகளை பிறப்பித்திருக்கின்றது. சில கேள்விகள் பதில்களில்லாமல் பேயாட்டம் போடுகின்றது. இருப்பினும் கேள்விகளோடு வாழ்தல் அர்த்தமுள்ள வாழ்க்கையென்றே எனக்குப் படுகிறது. 

மீண்டும் சந்திப்போம்....


நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

60 கருத்துகள்:

  1. //பத்து பத்து பேரை பதில் சொல்லக் கேட்க, ஒரு சங்கிலித் தொடர் இப்போது பதிவுலகில் ஓடிக் கொண்டிருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமே.//

    ஹாஹா, நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். :)))


    //அவங்க பேசும்போது நம்மளை திட்டற மாதிரியே ஒரு உணர்வு!//

    ஹிஹிஹி, கொஞ்சம் வேகமாப்பேசுவாங்க. அதனால் அப்படித் தோணுதோ? மத்தபடி அவங்க சண்டை என்றாலே காத தூரம் ஓடற டைப்! ஜாஸ்தி அடிதடி எல்லாம் பார்க்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  2. தலைப்பைப் பார்த்துட்டு ஓடோடி வந்தேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  3. பவர் கட் இல்லாத ஊரில் இருக்கின்றீர்கள்
    கொடுத்து வைத்தவர் ஐயா தாங்கள்
    பதில்கள் அருமை
    தம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியிலும் பவர் கட் உண்டு. நாங்கள் இருக்கும் இடத்தில் [தில்லியின் மையப் பகுதி] பவர் கட் இல்லை.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  5. மிகவும் பொறுப்பான சிறப்பான பதில்கள். பதில்களில் உங்கள் சமூக அக்கறை தெரிகிறது. பாராட்டுகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  7. எனக்கும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல அன்புக்கட்டளை வந்திருக்கிறது. விரைவில் பதில் அளிப்பேன். பதில்களை இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  8. // விட்டுக் கொடுத்தலில் இருக்கும் சுகம் வேறெதிலும் இல்லை.... // அனைத்து பதில்களும் அருமை...

    பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. பதில்களை ரசித்தேன் !
    #பழைய சினிமா படம் ஒன்றில் #
    படத்தின் பெயர் உயர்ந்த மனிதன் என்பதை பதிவுலக உயர்ந்த மனிதரான நீங்கள் மறக்கலாமா ?
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      சினிமா பற்றிய எனது அறிவு மிகக் குறைவே! :)))

      நீக்கு
  10. ///அவர் மனைவியிடம் கேட்காமல் [கேட்டால் எப்படியும் பூரிக்கட்டை பறக்கும் என்பது தெரிந்து வைத்திருப்பதால்] பதிவுலக நண்பர்கள் பத்து பேரைக் கேட்டுள்ளார்.///

    மதுரைத்தமிழனை நல்ல புரிஞ்சு வைச்சிருக்கீங்களே... டில்லியில் வசிக்கும் தமிழ்காரர்கள் ஸ்மார்ட்டான ஆட்கள்தான் என்பது உங்கள் பதில்களில் இருந்தே புரிகிறது பாராட்டுக்கள்.


    அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு மிக மிக நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ம்துரைத் தமிழன்.

      உங்கள் அழைப்பிற்கு நன்றி.

      நீக்கு
  11. ///அன்னிக்கும் உங்க கிளாஸுக்கு வரணுமா?” – அவன் கவலை அவனுக்கு///

    சிரிக்க வைத்த நகைச்சுவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  12. பதில்களால் நிறைந்த பதிவுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜ்ராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  13. குழந்தைகளுக்கு சொல்லும் அறிவுரை அருமை.
    பதில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    நானும் பதில் அளித்து இருக்கிறேன், அம்பாளடியாள் அழைப்புக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  14. அட்டகாசமான அருமையான பதில்கள் சார்! எப்படி இப்படி எல்லோரும் மிக அழகாக பதில் சொல்கின்றீர்கள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.....சிந்திக்கவும், கற்கவும், ரசிக்கவும் மிகவும் உபயோகமாக இருக்கின்றன! தங்களது நல்ல மனமும் பளிச்!

    நாங்களும் இது தொடர்பதிவு என்பதைத் தெரிந்து கொள்ளும் போது டூ லேட்.....நாங்கள் அழைக்க நினைத்தவர்கள் எல்லோரும் 10 பேருக்கு மேல் ஆனாலலும்....எல்லோரும் மதுரைத் தமிழனின் விரித்த வலையில்........அவரைப் பற்றியும் தாங்கள் எழுதியதை.......மிகவும் ரசித்தோம்....சிரித்தோம்....

    அருமையான பதில்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  15. விடைகளை பக்குவமாக வழங்கிய, அன்பின் வெங்கட்.. அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  16. அட... பல பதில்களில் என் சிந்தனை உங்கள் சிந்தனையோடு ஒத்துப் போயிருப்பது கண்டு வியக்கிறேன். அத்தனை பதில்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

      நீக்கு
  17. அனைத்து பதில்களும் அருமை. நானும் அந்த நகைச்சுவை துனுக்கை படித்து ரசித்து சிரித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  18. வாசிப்பு, மெல்லிசை கேட்பது, சின்னச் சின்னதாய் வீட்டு வேலைகள், தூக்கம் என பெரிய பட்டியலே இருக்கிறது. எதைச் சொல்ல எதை விட!

    தூக்கம் தூக்கம் தூக்கம் தூக்கம் ! my choice !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பதிலிலும் தூக்கம் தான் முதலில் எழுத வேண்டியது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  19. //அந்த நேரத்தில் அவரது தேவை தனிமை மட்டுமே.... ”நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த சந்தோஷமான நினைவுகளை நினைத்துப் பார், அந்த நினைவுகளில் உன் மனைவி தொடர்ந்து இருப்பார், உன்னை விட்டு அகல மாட்டார்” என்று சொல்லி அவரை தனிமையில் விடுவேன்.// சிறந்த பதில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  20. எண்ணங்கள் சிருஷ்டிக்கப்படும்போது கேள்விகளும் முளைக்கின்றன. எனக்கும் அப்படித்தான். சில கேள்விகளுக்குப் பதில் தேட முயன்றிருக்கிறேன். சில பதில்களை கேள்வியோடு பொருத்தமுடியாது திணறியிருக்கிறேன். //

    வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதையே தான் நீங்கள் சொல்கிறீர்கள்.
    ஆனாலும் கொஞ்சம் மாற்றி இருக்கிறீர்கள். converse என்று சொல்லுவோம் அல்லவா, அதுவே தான்.

    வேதம் சொல்கிறது:
    உங்களுக்கோ, எனக்கோ அல்லது யாருக்கோ எதுவோ சொல்லப்படவேண்டும் என்ற நிலை தோன்றும்போது உங்கள் மனதிலே (மூளையிலே ) அந்த பதிலுக்கான கேள்வி தோன்றுகிறது.
    உதாரணமாக,
    கீதையிலே பகவான் கிருஷ்ணன் அர்ச்சுனன் மனதில் எழும் கேள்விகள்
    கேட்டவை சில , கேட்கப்படாதவை பல, எல்லாவற்றிக்குமே பதில் அளிக்கிறார்.
    ஆக, பதில் ஒன்று ஏற்கனவே இருக்கிறது. அதற்கான கேள்வி தோன்றும் வரை, அதன் பதிலை புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவன் வரும் வரை, அந்த பதில் காத்து இருப்பது மட்டுமல்ல, அந்த கேள்வி கேட்பவனை நாடி வருகிறது

    என்றும் வேதம் சொல்கிறது.

    சில பதில்களை கேள்விகளுடன் பொருத்துவதில் சிரமம் என்று சொல்வதும் .சரியே.

    reductio de absurdum என்றும் இதை .சொல்லலாம்

    கேள்வி கேட்பவன் ஒரு hypothesis லிருந்து புறப்படுகிறான்.
    அவன் மனதில் இருக்கும் மையப்புள்ளியைப் பொருத்தே வினா அமைகிறது.

    கேட்பவனின் communication skill ம் இன்னொரு பிரச்னை.

    என் மனதில் இருக்கும் கேள்வியை சரியாக நினைத்தது போல் எடுத்துரைக்க முடியவில்லை என்றும் சில சமயம் .நினைப்போம்

    அந்த கால கட்டத்திலும் வரும் பதில் கேள்வியின் அமைப்பை மாற்றும் .

    யோவ். !! விடுய்யா ...அப்படின்னு ஓடறீங்க இல்ல..

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் நீண்ட கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.....

      நீக்கு
  21. பதில்கள் சற்றே நீளமாக இருந்தாலும், வாழ்வியல் அனுபவம் சார்ந்த நல்ல பதில்கள். நகைச்சுவைத்துணுக்கு உண்மையிலேயே சிரிக்க வைத்தது. ஒரு பள்ளியில் சுற்றுலாப் போனார்கள் மலையேறி “இது தற்கொலை முனை.. பார்த்து வாங்க“னு சொன்ன வாத்தியார் தவறி விழுந்திடடாராம். பயலுக கத்தினாங்களாம் “டேய் வாத்தியார் விழுந்துட்டார்ரா.. நாளைக்குப் பள்ளிக்குடம் லீவுடா!” ஆனா அந்தக் கொடுமைக்கார வாத்தியார் ஒரு கொம்பப் பிடிச்சுத் தொங்கிக்கிட்டே, “நா உயிரோட தான்டா இருக்கேன்..நாளைக்குப் பள்ளிக்கூடம் உண்டு” ன்னாராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்ன நகைச்சுவையும் அருமை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.

      நீக்கு
  22. அண்ணா எல்லா விடைகளும் சூப்பர்:)
    அதிலும் நாலு ஹ்ம்ம்:((
    [மைதிலி டீச்சர் இல்லை!] என்னை வைச்சு காமெடி, கீமிடி பண்ணலைல !@!
    நானே கன்பீஸ் ஆய்ட்டேன்:))த,ம 10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி....

      நீக்கு
  23. வணக்கம்
    ஒவ்வொரு பதிலும் மிக அருமையாக உள்ளது அதிலும் சமூக அக்கறை நிறைந்துள்ளது வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  24. நல்லா தான் நல்லதைத்தான் உங்க பதில்களில் சொல்லியிருக்கீங்க..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  25. பதில்கள் அனைத்தும் நன்கு யோசித்து சொல்லப்பட்டிருக்கின்றன... அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      விடுமுறை இனிதே கழிந்திருக்கும் என நம்புகிறேன்...

      நீக்கு
  26. அருமையான பதில்கள் நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  27. கேள்வி பதில் தொடர் சுவையாகப் போய்க் கொண்டிருக்கிறது. அந்தப் பதிவுகளைப் படிப்பதெ சுகானுபவம். உங்கள் பதில்களும் அப்படியே. எண்ணங்களைப் பிரதிபலிப்பது உங்களையே பார்ப்பது போல இருக்கிறது. நட்புகள் வளர இது போல இண்டர் ஆக்ஷன் தேவை. வாழ்த்துகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  28. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  29. கொஞ்ச நாட்களுக்குமுன் டில்லியிலும் பவர்கட் என செய்தித்தாளில் படித்தேன்.

    ரோஜாவும் முள்ளும் இருந்தால்தான் சுவாரஸியமாக இருக்கும். ஒன்று மட்டுமே இருந்தால் சீக்கிரமே போரடிச்சிடும். பதில்கள் அனைத்தும் நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....