தொகுப்புகள்

புதன், 31 டிசம்பர், 2014

சப்பாத்தியுடன் ஐஸ்க்ரீம் – What a combination!



கதைமாந்தர்கள் எனும் தலைப்போடு நான் சந்தித்த, சந்திக்கும் மனிதர்கள் பற்றி சில பதிவுகள் எழுதி இருப்பது உங்களுக்குத் தெரியும். அந்த வரிசையில் இன்று ஒரு ஸ்வாரசியமான மனிதர் பற்றி பார்க்கப் போகிறோம். இந்த மனிதர் ஒரு CRPF ஜவான்.  மதுராவினை அடுத்த [B]பர்சானா கிராமத்தினைச் சேர்ந்தவர். வெள்ளந்தியான மனிதர்.  அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.


பட உதவி: இணையம்....

எளிமையான இவருக்கு உணவு உண்பதில் அலாதி பிரியம். சர்வ சாதாரணமாக பல சப்பாத்திகளை எந்தவிதமான சப்ஜிகளோடும் உள்ளே தள்ளுவார். சப்பாத்தி சாப்பிடும் போது இவருக்கு எண்ணிக்கை எல்லாம் ஒரு பொருட்டில்லை. கொண்டு வந்து வைக்கும்போதே தனது கையால் அளந்து ஒரு ஜான் அளவு உயரத்திற்கு சப்பாத்திகள் இருந்தால் அந்த வேளைக்கு அது போதும் என்று சொல்பவர்! தொட்டுக்கொள்ள ஒரு சப்ஜியும் இல்லை எனில், வெங்காயம், ஊறுகாய், தயிர் போன்றவை இருந்தால் கூட போதும்!

ஒரு முறை அலுவலக நண்பர் வீட்டு திருமணத்திற்குச் சென்றிருந்தோம்.  பெரும்பாலான வட இந்திய திருமணங்கள் இரவு நேரத்தில் தானே! [B]பராத் என்று அழைக்கப்படும் மாப்பிள்ளை ஊர்வலம் வந்து சேர்ந்து சில நிகழ்வுகளுக்குப் பிறகு தான் இரவு உணவு.  நாங்கள் அனைவரும் உணவு உண்ணச் செல்லும்போது நள்ளிரவு 12 மணிக்கும் மேல்! பல சப்பாத்திகளை உள்ளே தள்ளிய பிறகு இவருக்குப் பிடித்த அனைத்து சப்ஜிகளும் காலியாகி இருக்க, தொட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை. ஆனாலும் இவரது பசி அடங்க மறுக்க, ஐஸ்க்ரீம் பார் ஒன்றில் பாதியை ஸ்லைஸ் செய்து அதனைத் தொட்டுக்கொண்டு இரண்டு மூன்று சப்பாத்திகளை உள்ளே தள்ளினார்!

ஒரு நாள் அலுவலகத்தில் சற்றே வியர்த்துக் கொட்டி, படபடவென்று வர இவரை உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.  அங்கே மருத்துவர்கள் இவருக்கு இருதய சிகிச்சை செய்து Pacemaker பொருத்தி இருக்கிறார்கள். உணவு முறைகளில் கட்டுப்பாடு தேவை என்று சொல்லி அனுப்ப, ஆனாலும் இவரது உணவு பழக்கங்களில் எந்தவித மாற்றமும் இல்லை.  சிகிச்சை முடிந்து நான்கு வருடங்களாகிவிட்டாலும் அதே அளவு உணவு தான்! எந்தவித தொந்தரவும் இல்லாது உலவுகிறார்.

செவ்வாய்க்கிழமைகளில் “பாலாஜிஎன்று அழைக்கப்படும் ஆஞ்சனேயருக்கு வட இந்தியாவில் லட்டு படைப்பது வழக்கம். அலுவலகத்தில் ஒவ்வொரு செவ்வாயும் எங்கள் அறையிலேயே ஒருவர் லட்டு கொண்டு வந்து ஆஞ்சனேயருக்கு படைத்துவிட்டு அனைவருக்கும் லட்டு தருவார்.  இவர் ஒரு தீவிர ஆஞ்சனேய பக்தர்.  தான் படைக்கும் லட்டுகளில் ஆஞ்சனேயர் படத்திற்கு முன் வைக்கும் நான்கைந்து லட்டுகளும் உண்ண இந்த ஜவானைத் தான் அழைப்பார்! அவரும் சர்வ சாதாரணமாக அனைத்து லட்டுகளையும் சில நொடிகளில் கபளீகரம் செய்து விட, பக்தருக்கு ஆஞ்சநேயரே நேரே வந்து சாப்பிட்ட மகிழ்ச்சியோடு இருப்பார்.

குடும்பத்தினர் அனைவரும் அவரது கிராமமான [B]பர்சானாவில் இருக்க, இவர் மட்டும் இங்கே இருக்கிறார். தில்லியின் ஒரு காவல் நிலையத்தின் அருகே இருக்கும் காவலாளிகளுக்கான கொட்டகையில் இரவு நேரப் படுக்கை. அங்கேயே கிடைக்கும் உணவு தான். அலுவலக நேரத்தில் அலுவலக உணவகத்தில் தான். ஒரு நாள் மாலை, இவரது மேலாளர் இவரிடம் இரவு நேர உணவுக்கு உணவகத்தில் சொல்லச் சொல்ல, இவர் சொன்னது இருபத்தி ஐந்து சப்பாத்தி மற்றும் சப்ஜி. மேலாளர் அதைக் கேட்டு மயங்காத குறையாக, எதுக்கு இத்தனை என்று கேட்க, உங்களுக்கு மூன்று, மற்றவை எனக்கு! என்று சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் இவர்!

எப்போது எங்களது அறைக்கு வந்தாலும், கைகளைப் பிடித்து, ஒவ்வொரு விரலாக மஸாஜ் செய்து விடுவார். பத்து நிமிடத்தில் கைகள் இரண்டிலும் புத்துணர்ச்சி தந்துவிடுவார்! வாரத்தில் ஒரு நாளாவது இவரிடம் இப்படி கைகளை நீட்டி விடுவது எனக்கும் வழக்கமாகிவிட்டது!

எத்தனை வெயிலடித்தாலும், குளிர் அடித்தாலும், ஒரு சட்டை மட்டுமே அணிவார். பனியன் போடும் பழக்கமே இல்லை.  தில்லியின் கடும் குளிர் நாட்களில் மட்டுமே ஒரே ஒரு ஸ்வெட்டர் மேலே அணிந்து கொள்வார். அதுவும் அலுவலகம் வந்தபின்னர் கழற்றி வைத்துவிடுவார். குளிரும் வெயிலும் இவரை ஒன்றுமே செய்வதில்லை!

அலுவலகத்திற்கு வருவதும் திரும்புவதும் நடைப்பயணம் தான்! பேருந்துகளைப் பயன்படுத்துவதில்லை.  வழியெங்கும் இருக்கும் போக்குவரத்து/காவல் துறையினர் அனைவரும் இவருக்கு நண்பர்கள். அனைவருக்கும் வணக்கம் சொல்லி, அவர்களிடம் அளவளாவியபடியே செல்வது இவரது வழக்கம்.

சமீபத்தில் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே ஒருவருக்கு நெஞ்சு வலி வர அவரை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு வாயில் வரை வந்து இருந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரை மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்த்து காப்பாற்றினார். சமயோசிதமாகச் செயல்பட்ட இவருக்கு அலுவலகத்தில் Cash Award கொடுத்து பாராட்டுகளும் வழங்கினார்கள்.

இவரைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்! இருந்தாலும் இவரது மகன் திருமணம் பற்றிய ஒரு விஷயத்தினை மட்டும் சொல்லி முடிப்பது சரியாக இருக்கும் என்பதால் அதைச் சொல்லி முடிக்கிறேன்! மகனுக்கு திருமணத்திற்காக பெண் பார்த்துக் கொண்டிருந்தார்.  அவருக்கு பெண் வீட்டார் கார் கொடுக்கப் போவதாய்ச் சொல்ல, கிராமத்தில் கார் எதற்கு, அதற்கு பதிலாக ட்ராக்டர் கொடுங்கள், வயல் வேலை செய்ய தோதாக இருக்கும் என்று ட்ராக்டர் வாங்கிக் கொண்டார்!

இப்போதும் அலுவலக விடுமுறை நாட்களில் தனது வயலில் கடுமையாக உழைக்கும் இவருக்கு, எத்தனை சாப்பிட்டாலும் சுலபமாக ஜீரணித்துவிடுவது ஆச்சரியம் இல்லை!

இப்படி ஒரு கதைமாந்தரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.  உங்களுக்கு?

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

33 கருத்துகள்:

  1. வித்தியாசமான/அதிசயமான மனிதரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  2. உழைத்தால் உணவென்ன செய்யும்
    என்பதற்கு எடுத்துக் காட்டு இம்மனிதர்
    இவரின் புகைப் படத்தினையும் பெயரினையும் வெளியிட்டிருக்கலாம்
    நன்றி ஐயா
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலுவலகத்தில் புகைப்படம் எடுக்க இயலாது..... அவரது பெயர் ஷ்யாம் சுந்தர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  4. அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிறப்பான மனிதருக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. Niraya sappida yelloralum mudiyadhu. Sappida irundhum palar pala vidha noigalinal sapida mudivadhillai. Andha vagail ivar koduththu vaiththavar. Avarukku Andavan neenda aulai thandhu arul puriyattum.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  6. வித்தியாசமான மனிதர். நல்ல மனிதர். சுவாரஸ்யமான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. நிச்சயம் வித்தியாசமான மனிதர்தான் இவர்! பகிர்வுக்கு நன்றி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே!

    தங்களின் கதைமாந்தரை கண்டேன். அவருடைய உடல் உழைப்புக்காக அதிக உணவு தேவைபடுகின்றதோ, என எண்ண வைக்கிறார்.ஆனாலும், பிறருக்கு வலிய சென்று
    உதவும் மனப்பான்மையுள்ள அவருக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்தமைக்கு தங்களுக்கு நன்றிகள்!

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    இனிய இப்புத்தாண்டில் அனைவரும் அனைத்து வளங்களைப் பெற இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  9. மனுசனாப்பொறந்தா இந்த மாதிரி சாப்பிடக் கொடுத்த வைத்திருக்கோணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  10. உழைப்பும் உதவியும் பிணைந்த வாழ்வு... வியக்கிறேன், வணங்குகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்....

      நீக்கு
  11. தில்லி ரயிலில் ஒருவர் நாலைந்து பச்சைமிளகாயைக கடித்தபடி அரை டசன் சப்பாத்தியை உள்ளே தள்ளியதைத் திடுக்கிட்டுக் கண்களில் நீர் மல்கப் பார்த்திருக்கிறேன். இந்த ஜவானின் ஊர்காரரோ என்னவோ? உங்களுக்கு மூணு மிச்சம் எனக்கு... சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹரியானா மாநிலத்தவர்களும் பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் வைத்துக்கொண்டே சப்பாத்திகளை சாப்பிட்டு விடுவார்கள்! அப்படி ஒருவரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை.

      நீக்கு
  12. ஒரு சிறப்பான ஒருவரை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அவருக்கு வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

      நீக்கு
  13. வித்தியாசமான கதை மாந்தர் அறிமுகம் அருமை!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும் நட்புடனும்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் மற்றும் கீதா ஜி!

      நீக்கு
  14. அண்ணா, உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மைதிலி.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  15. நாங்கள் ஜெய்பூருக்குப் போய் இருந்தபோது தங்கி இருந்த விடுதியில் தங்குபவர்களின் தேவைக்கேற்பவே உணவு சமைப்பார்கள். ஒரு முறை தொட்டுக் கொளள எளிதாக என்ன செய்யமுடியும் என்று நாங்கள் கேட்டதற்கு அச்சார்( ஊறுகாய்) என்றாரே பார்க்கலாம். முன்பெல்லாம் ஆனந்த விகடனில் characters என்னும் பகுதி வரும். அதை நினைவு படுத்தியது இந்தப் பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  16. முதலில் சில பல வரிகளைப் படிக்கும்போது அவரைப் பற்றி, என்னடா இவ்வளவு உள்ளே தள்ளுகிறாரே... வயிற்றுக்குள் மில் வைத்திருப்பாரோ என்று தோன்றியது. ஆனால் ஒவ்வொருவருக்கும் அவரால் முடிந்த அளவு மட்டுமே உள்ளே தள்ள முடியும். அதன் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். இரண்டு சப்பாத்தி மாத்திரம் சாப்பிட்டால் அவர் சூப்பர், 20ஐத் தள்ளினால் பகாசுரன் என்று சொல்லுவதெல்லாம் தவறு என்று தோன்றியது. அவரது உழைப்பைப் பற்றியும் கோடி காண்பித்ததுதான் பதிவைத் தனித்ததாகத் தோன்ற வைக்கிறது. ஆந்திராக்காரர்கள், தயிரில் மிளகாய் பொடியை (பச்சை மிளகாய் பொடி. இட்லி பொடி அல்ல) கலந்து சாப்பிடுவதைப் பார்த்து எனக்குக் கண் எரிந்திருக்கிறது... அவரவர் வயிற்று எஞ்சின் அப்படி.

    பதிலளிநீக்கு
  17. மிகவும் ரசித்த கதை மாந்தர். 20+ சப்பாத்திகள் சாப்பிடும் அளவுக்கு கெப்பாசிட்டி இருக்கே. பல நேரங்களில் அவுக் அவுக் என உள்ளே தள்ளுவதால் பசி அடங்குவதில்லை, மெதுவாக மென்று உண்டால் குறைவான உணவே போதுமே. அவர் நல்ல குணமும் கவர்ந்தது. பல் இருக்கறவர் பகோடா சாப்பிடறார். நல்ல ஜீரண சக்தி.

    பதிலளிநீக்கு
  18. அது சரி. சப்பாத்தியைத் துண்டுகளாக்கி ஜீனி போட்ட பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டிருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....