தொகுப்புகள்

வெள்ளி, 30 ஜனவரி, 2015

ஃப்ரூட் சாலட் – 123 – எல்லா இரவுகளும் விடியும் – கண்ணீர் - பரதம்


இந்த வார செய்தி:

எல்லா இரவுகளும் விடியும்!

தற்கொலைகளைத் தடுத்து நிறுத்தியதால், 'டிசைன் பார் சேஞ்ச்' என்ற சர்வதேச அமைப்பின் விருது பெற்ற ஆங்கில ஆசிரியர் ஆனந்த்:

"திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி மேற்கு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு, நான் ஆசிரியராக வந்தபோது, இந்த ஊர் குறித்து எந்த விஷயமும் தெரியாது. ரேங்க் கார்டில் கையெழுத்து போட, அப்பா, அம்மாவை அழைத்து வரச் சொன்ன போது, பல பிள்ளைகள் கண் கலங்கி அழுதனர்.

யாரைக் கேட்டாலும், அப்பா இல்லை அல்லது அம்மா இல்லை என, கூறினர்; அப்பா, அம்மா இருவரும் இல்லாதவர்களும் இருந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது, அனைவரும் தற்கொலை செய்து இறந்தது தெரிந்தது.

இனிமேல் இது தொடரக் கூடாதுன்னு முடிவு செய்து, அதற்கான முயற்சிகளில் இறங்கினேன்.ஆண்டு விழாவே கொண்டாடாமல் இருந்த இந்தப் பள்ளியில், 2013 ஜனவரியில், ஒட்டுமொத்தக் கிராமத்தையும் ஒன்று திரட்டி, உருக்கமான குடும்ப டிராமாவை, ஆண்டு விழாவில் அரங்கேற்றினோம்.

அப்பா - அம்மாவை இழந்த பையன், படிக்க வழி இல்லாமல் தெருத் தெருவாகப் பிச்சை எடுத்துப் பிழைப்பது தான் கதை. நாடகம் பார்த்த கிராம மக்கள் கதி கலங்கிப் போயினர். ஒரு அம்மா, நாடகம் நடந்து கொண்டு இருக்கும் போதே கதறி அழ ஆரம்பித்து விட்டார்; மூன்று குழந்தைகளின் தாயான அவர், தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டவர்.

மக்களின் மனமாற்றத்துக் கான துவக்கம், அந்த நாடகத்தில் இருந்தே ஆரம்பித்தது. ஊரில் இருந்த, 'டைமண்ட் பாய்ஸ்' இளைஞர் நற்பணி இயக்கத்திடம் பேசி, அவர்கள் மூலமாக என் மாணவர்களை, தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு கொண்டவர்களாக மாற்றினோம். மாணவர்களுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் வேஷம் போட்டு, 'எந்த மதமும் தற்கொலையை நியாயப்படுத்தலை'ன்னு எடுத்து கூறினோம்.

அத்துடன், மக்களின் மனம், பிரச்னைகள் பக்கம் திரும்பாமல் இருக்க, பிளாஸ்டிக் ஒயர்களால் பூ ஜாடிகள் செய்யக் கற்று கொடுத்தோம். 'நாம நல்ல பூ ஜாடி பண்றோம்' என்ற பெருமிதமும், அதற்கு கிடைக்கும் வருமானமும் அவர்களை மாற்றியது. இந்த உலகத்தில் எல்லாருக்கும் பிரச்னை இருக்கு. அதுக்கு, அன்பு தான் மருந்து; ஒருத்தருக்கொருத்தர் அன்பா, ஆதரவா, அக்கறையா இருக்கணும்ன்னு கற்றுக் கொடுத்தோம்.

ஊருக்குள் சிரித்த முகங்கள் தெரிய ஆரம்பித்தன.

மாணவர்கள் மூலமாக சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதற்கான விருது இது. என் சிறு வயதில், என் அப்பா, அம்மா இறந்து விட்டனர். ஆதரிக்க பெற்றோர் இல்லாமல், தனியாக ஒரு குழந்தை வளர்ந்து ஆளாவது எவ்வளவு சவாலான விஷயம்ன்னு தெரியும். இப்போது, இந்த ஊர் மாறி இருக்கிறது. எல்லா இரவும் விடியும் என்பது, எங்கள் நம்பிக்கை; அதற்கு இந்த கிராம மக்களும் கியாரண்டி.

-    சொல்கிறார்கள் பகுதி, தினமலர்.

எத்தனை நல்ல விஷயம்நமது உயிரை மாய்த்துக் கொள்ள நமக்கு உரிமை இல்லை என்பதை புரிந்து கொண்டால் நிச்சயம் தற்கொலை முடிவுக்கு வர மாட்டார்கள். அவர்களை நல்வழிப்படுத்தும் இந்த ஆசிரியருக்கு இந்த வாரப் பூங்கொத்து.

இந்த வார முகப்புத்தக இற்றை:



இந்த வார குறுஞ்செய்தி:

கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்…. ஏனென்றால் கண்கள் உலகத்தைக் காட்டும்….  கண்ணீர் உள்ளத்தைக் காட்டும்!

ரசித்த பாடல்:

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பார்க்கிறேஎனும் பாடல் இந்த வார ரசித்த பாடலாக. பாடல் இடம் பெற்ற படம்ராமன் அப்துல்லா. நடிகர்கள்விக்னேஷ், ஈஸ்வரி ராவ்இசைஇளையராஜா. பாடகர்கள்அருண்மொழி, பவதாரிணி. பாடல் வரிகள்வாலி. படம் வெளி வந்த வருடம் – 1997.



ராஜா காது கழுதை காது:

திருவரங்கம் இரயில் நிலையம்சென்னை செல்லும் நோக்கத்தோடு பல்லவனுக்காக காத்திருந்தேன். நடைமேடை முழுவதும் சலசலப்புபெரும்பாலான பயணிகள் திருவரங்கத்திலிருந்து தான் இந்த இரயிலில் பயணிக்கிறார்களோ என்று ஒரு சம்சயம்

எதிரிலிருந்து ஒரு மூத்த கணவன்மனைவிமனைவி கணவனை நோக்கி சொன்னது:  ”ஊருக்குப் போகணும் ஊருக்குப் போகணும்னு சொல்லி அப்பப்ப இப்படி கிளம்பிட வேண்டியதுஆனா ஒரு வேலையும் செய்யறது கிடையாது. எல்லாத்தையும் நானே செய்ய வேண்டியிருக்குஇனிமே ஊருக்குப் போகணும்னு சொல்லிப் பாருங்க. அப்ப தெரியும் சேதி!

அதற்கு கணவனின் பதில்:  “சரி சரி….  எல்லாம் வீட்டில பேசிக்கலாம்!”

இந்த வார புகைப்படம்:

சென்ற வாரத்தில் ஓர் நாள் மகளின் பள்ளியில் ஆண்டு விழாஅப்போது சில கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்திருந்தார்கள்அங்கே பரதம் ஆடிய ஒரு பெண்ணின் புகைப்படம் இங்கே இந்த வார புகைப்படமாக!  [ஏற்கனவே முகப்புத்தகத்தில் பகிர்ந்து இருந்தாலும் இங்கே மீண்டும்முகப்புத்தகத்தில் என்னைத் தொடராத வலையுலக நட்புகளுக்காக!]



படித்ததில் பிடித்தது:

இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் ஒரு முறை கிராமங்களை சுற்றிப் பார்க்க குதிரையில் கிளம்பிச் சென்றார்.அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார்.

மன்னர் அவரிடம்,''மற்றவர்கள் எல்லாம் எங்கே?''என்று கேட்க, விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்த பெண், ''அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்,'' என்று சொன்னார்.

''அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை?'' என்று மன்னர் கேட்டார்.

அதற்கு அந்தப்பெண், ''மன்னரைப் பார்ப்பதற்காக ஒருநாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை. எனக்கு ஐந்து குழந்தைகள். அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. அதனால்தான் போகவில்லை,'' என்றார்.

மன்னர் அவரது கையில் சில நூறு பவுண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு, ''உங்களது நண்பர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்க சென்றீர்கள். ஆனால் மன்னரோ என்னைப் பார்க்க வந்தார் என்று..'' என கூறிவிட்டு சென்றார்.

எதையும் தேடி செல்லாதே தகுதி இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும் !!!!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து….


புதன், 28 ஜனவரி, 2015

ஓட வைத்த கேசரி…..


இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ஒருவர் வீட்டில் சிறுமிக்கு பிறந்த நாள். மகளின் பிறந்த நாளுக்காக அம்மா கேசரி செய்து தந்தாராம்அதை எங்களுக்கும் கொடுத்தார்சிறிய பாத்திரத்தில் ஒரு மூடி போட்டு கேசரி என்று சொல்லிக் கொடுத்தார்பாத்திரத்தின் மூடியை விலக்கிப் பார்த்தேன்கேசரி இப்படித்தான் இருந்தது!



அடடாஇது என்ன பச்சை நிறத்தில் இருக்கிறதே? என்று யோசித்தேன்கேசரி என்று சொன்னார்களே, ஒரு வேளை பிஸ்தா பருப்புகளை அரைத்துச் சேர்த்து செய்திருப்பார்களோ, அதான் பச்சை வண்ணமோ என்று நினைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன்இல்லை கீரை ஏதாவது சேர்த்திருப்பார்களோ?

ஏற்கனவே இந்த மாதிரி கேசரி உண்டு பழக்கப்பட்ட எனது மனைவி, சாப்பிட்டு பாருங்கநல்லாவேஇருக்கும், என அந்த நல்லாவை கொஞ்சம் அழுத்தியே சொன்னார். சரி என்று கொஞ்சம் பச்சை கேசரியை எடுத்து வாயில் போட்டேன்பச்சைக் கலரில் ரவா உப்புமா சாப்பிட்ட ஒரு உணர்வுஎன்ன இது? என்று குழப்பத்துடன் மனைவியைப் பார்க்க அவர் சொன்னார் – “ரொம்ப நல்லா இருக்குல்ல?” என்று சிரித்தபடியே கேட்டு, ஒரு கதையும் சொன்னார்.

அச்சிறுமியின் தாய்க்கு நெய் அறவே பிடிக்காதாம். அதனால் நெய் வீட்டில் வாங்கவே மாட்டாராம். அவருக்குப் பிடிக்காது என்பதால், வீட்டில் உள்ளவர் எவருக்கும் பிடிக்கக் கூடாது என்று ஒரு உத்தரவு இட்டு விட்டார் போல! அதனால் கேசரி கூட நெய் சேர்க்காது ரிஃபைண்ட் எண்ணை தான் உபயோகிப்பாராம்முந்திரியை வறுக்கவும் எண்ணை தான்

போலவே கேசரிக்கு சாதாரணமாக பயன்படுத்தும் கேசரி பவுடர் தாய்க்குப் பிடிக்காது. அதனால் அவருக்கு மிகவும் பிடித்த பச்சை வண்ணத்தில் Food color சேர்த்து தான் கேசரி செய்வாராம். இப்படி கேசரியின் எந்த குணங்களும் இல்லாது இருக்கும் பச்சை கேசரியைத் தான் செய்வாராம்தனக்குப் பிடிக்காது என்று இப்படி ஒரு கேசரி செய்து, அது தான் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்றும் சொல்கிறார்முந்திரி போடாமல், சிறிது கடுகு தாளித்து, கருவேப்பிலை சேர்த்திருந்தால் நிச்சயம் உப்புமாவாகத் தான் இருந்திருக்கும்.

இப்படி ஒரு கேசரி சாப்பிட்டு ஓடாத குறையாக மீதி இருந்த பச்சை கேசரியிடமிருந்து தப்பினேன்இல்லையெனில் நான் தான் சாப்பிட்டு தீர்க்க வேண்டுமாம்! எதற்கு இந்த வீண் வம்பு!

இப்படி இந்த பெண்மணியிடம் நிறைய சரக்கு இருக்கிறது! தேங்காய் பர்ஃபி, நெய் விடாது தேங்காய் எண்ணை விட்டு செய்வார்களாம்சேமியா பாயசம் செய்யும் போது சேமியாவினை நெய்யில் வறுக்காது, சேமியாவை அப்படியே தண்ணீரில் போட்டு வேக வைத்து, சர்க்கரை, பால் சேர்த்தால் பாயசம். மைசூர் பாகு நெய் விடாது செய்ய முடியுமா என்று இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்டால்டாவும் பிடிக்காது

தனால் செய்யும் சில இனிப்புகளும் எண்ணை விட்டு தான்  செய்வார்கள். இது போலவே ஒரு சில காய்கறிகள் தனக்குப் பிடிக்காது என்பதால் அந்த காய்கறிகளை வாங்குவதும் இல்லை, சமைப்பதும் இல்லை!  

பச்சை கேசரி கொடுத்து விட்டு இப்படி ஒரு யோசனையும் சொல்வார்களாம்அந்த யோசனை – “வேணும்னா நீங்க மேலே கொஞ்சம் நெய் விட்டு சாப்பிடுங்க!” அடடா என்னவொரு யோசனை!

அது சரி, கேசரி சுவையாகச் செய்வது எப்படி என எனக்குத் தெரியுமா என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் விதமாய் இங்கே குறிப்பு தருகிறேன்!

கேசரி செய்வதற்கு முக்கியமான தேவை ரவை, சர்க்கரை, கேசரி கலர், ஏலப்பொடி, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை  மற்றும் நெய்சரி தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டாயிற்றுஅப்படியே எடுத்து வைத்துவிட்டால் கேசரி தானாக வந்து விடுமா? கொஞ்சம் உழைக்கத் தான் வேண்டும்!

ஒரு சின்ன வாணலியில் [இப்போது ஹிந்தி தெரியாத மறத்தமிழர்கள் கூட கடாய் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்!] 2 தேக்கரண்டி நெய் விட்டு, உலர் திராட்சை, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை பொன் [அதாங்க தங்கம்!] நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதைத் தனியாக எடுத்து கைக்கு எட்டாத தூரத்தில்கொஞ்சம் தள்ளி வைத்த பின் [இல்லை என்றால் நம் கை சும்மா இருக்காது! கேசரில போட்டு தான் சாப்பிட வேண்டும் என எதுவும் ஆணை இருக்கா என்ன? சும்மாவே சாப்பிட்டு விடுவோமே!], வாணலியில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு ஒரு கப் ரவையைப் போட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்க வேண்டும்.

பிறகு அதில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்ரவை நன்கு வெந்ததும் ஒண்ணே முக்கால் கப் சர்க்கரை, சிறிதளவு கேசரி கலர் ஆகியவற்றை சேர்த்துக் கிளற வேண்டும். ஒட்டாமல் சேர்ந்து வரும் வரை இடையிடையே சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவும். வாணலியோடு இருக்கும் கேசரியை கொஞ்சம் நெய் சேர்த்து, ஏலப்பொடி தூவி இறக்கி வைத்து வறுத்து வைத்திருக்கும் உலர் திராட்சை, முந்திரியைக் கலந்தால் கமகமக்கும் சுவையான கேசரி ரெடி!

ரவையைச் பொன்னிறமாக வறுப்பதிலும் நீரை ஊற்றும் போது கெட்டிப் பிடிக்காமல் கிளறுவதிலும் தான் சூட்சமம் உள்ளது. போலவே, மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும் கேசரி நிறமூட்டியை சிறிதளவே பயன்படுத்த வேண்டும், அதிகம் போட்டால் கசந்து விடும்.

என்ன நண்பர்களே இன்றைக்கு உங்கள் வீட்டில் கேசரி உண்டா? இல்லை நீங்களும் பச்சை கேசரி செய்து பார்க்கப் போகிறீர்களா

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து……