இரயில் பயணங்களில் – 5
படம்: இணையத்திலிருந்து....
ரோம் நகரில் இப்படி படுத்தபடியே உணவு உண்ணும் வழக்கம் உண்டாம்!
ரோம் நகரில் இப்படி படுத்தபடியே உணவு உண்ணும் வழக்கம் உண்டாம்!
மீண்டும் தமிழகம் நோக்கி ஒரு பயணம் – இம்முறையும் அதே ராஜ்தானி விரைவு வண்டி – விரைவு என்பது பல சமயங்களில் இந்திய ரயில்களில் இருப்பதே இல்லை என்பது வேறு விஷயம். கடந்த வெள்ளி அன்று தில்லியிலிருந்து புறப்பட்டு ஞாயிறு காலை திருவரங்கம் வந்து சேர்ந்தேன். ஒவ்வொரு இரயில் பயணத்திலும் பல சுவையான அனுபவங்கள் கிடைக்கின்றன. இம்முறை கிடைத்த சில அனுபவங்கள் இந்தப் பதிவில் பார்க்கலாமா! மே! என்று நீங்கள் சொல்வது கேட்கிறது – அதாங்க பார்க்கலா மே! என்று சொல்வது தான்!
இம்முறை இருந்த ஆறு பேரில் ஐவர் தெலுங்கர்கள் – நான் மட்டுமே மறத்தமிழன்! கணவன் – மனைவி என இருவரும், கணவன் – மனைவி மற்றும் ஒரு வயதான பெண்மணி [அந்தப் பெண்ணின் அம்மாவாக இருக்க வேண்டும், மாமியாராக இருக்க முடியாது என்று அடித்துச் சொல்லும்படி இருந்தது நடவடிக்கைகள்] என இரு குடும்பங்கள்.
இதில் மூவர் குடும்பத்தினை முதலில் பார்க்கலாம்! தொந்தரவு அவர்களிடத்தில் தானே ஆரம்பித்தது!
சரியாக மூன்று ஐம்பத்து ஐந்திற்கு இரயில் புறப்பட்டது. சற்று நேரத்தில் ஒரு பாட்டில் தண்ணீரும், பிறகு தேநீர், சமோசா, மற்றும் சாண்ட்விச், ஒரு இனிப்பு எனக் கொண்டு வந்து தந்தார் சிப்பந்தி. அதை எல்லாம் உண்டு முடித்து பயணச் சீட்டு பரிசோதனை முடிந்த பிறகு மாலை ஐந்து மணி. அதற்குள்ளாகவே பயணம் அவர்களுக்கு அலுக்க ஆரம்பித்து விட்டது. குடும்பத்தில் இளையவர், படுக்க வேண்டும் என உட்கார்ந்திருந்தவர்களை எழுப்ப ஆரம்பித்தார். அதற்குள்ளா இரவிற்கு இன்னமும் அதிக நேரம் இருக்கிறதே என்று யோசிக்க, முணுமுணுவென தெலுங்கில் அனைவரையும் திட்ட ஆரம்பித்தார்.
”இதுக்குத் தான் ஃப்ளைட்-ல போகலாம்னு சொன்னேன்” என்று அவரது கணவருக்கும் திட்டு கிடைத்தது! கொஞ்ச நேரத்தில் மீண்டும் ஆரம்பித்தது அவரது கணைகள் – ஒரு வழியாக ஆறு மணிக்கெல்லாம் படுக்கைகளை விரித்து கீழ் படுக்கையில் படுத்துக் கொள்ள வேறு வழியில்லாது எனது படுக்கையான மேல் Berth-க்கு செல்ல வேண்டியதாயிற்று. எதிர்த்த மேல் Berth-ல் கால் வைத்து சற்றே சரிந்தபடி அமர்ந்து கொண்டேன் – என் உயரத்திற்கு மேல் Berth-ல் நேராக அமர்வது ரொம்பவே கடினம்.
தொடர்ந்து இப்படியே அமர்ந்து, கொண்டு வந்திருந்த புத்தகத்தில் ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
சிறிது நேரத்தில் வழக்கம் போல கடினமான எலும்புத் துண்டு போன்ற உருவத்துடன் Soup Sticks, வெண்ணை மற்றும் மிளகுத் தூள் கொண்டு வந்து கொடுத்தார். சில நிமிடங்களில் ஒரு சிறிய கப்பில் சுடச் சுட Soup-ம் வந்தது. கீழே இறங்கி நேராக உட்கார்ந்து அதைக் குடிக்கலாம் என்று நினைத்தால், பெண்மணி இப்போதும் அனந்தசயனத்தில்!
சரி வேறு வழியில்லை என மேலேயே அமர்ந்து கொண்டு Soup-ஐ ஒரு வழியாக குடித்து முடித்தேன். உணவு உண்ணும் போது கண்டிப்பாக கீழே இறங்கி விட வேண்டியது தான் என்ற எண்ணத்துடன் அமர்ந்திருந்தேன். ஏழரை மணிக்கு உணவு வர, கீழே வரலாம் என்று பார்த்தால் கம்பளி போர்த்தியபடி அனந்த சயனத்தில் அந்தப் பெண். அவரது கணவன் எழுந்திரு, சாப்பிடலாம் என்று சொல்ல, நீங்க வேணா சாப்பிடுங்க, எனக்கு வேண்டாம் எனச் சொல்லி தொடர்ந்து கிடைநிலையிலேயே இருந்தார்.
”மத்தவங்க எல்லாம் சாப்பிடணும் எழுந்திரு” என்று சொல்ல, கண்களில் அப்படி ஒரு கோபக் கனல் – சிவபெருமான் மூன்றாவது கண்களைத் திறந்து எரித்து விடுவது போல பார்த்தார்.
”எழுந்திருக்க முடியாது, மத்தவங்களைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை?” என்று ஒரு மிரட்டல். ஒரு வேளை இது நடந்தது வீடாக இருந்திருந்தால் பூரிக்கட்டை பறந்திருக்கும் என்று தோன்றியது. எங்கே பஸ்மமாகி விடுவோமோ என்று அவரும் பம்மினார். கண்களாலேயே என்னை நோக்கி “வேற வழியில்லை! நீங்க அங்கேயே சாப்பிட வேண்டியது தான்!” என்று சொல்வது போல இருந்தது.
”என்னடா இந்த வெங்கட்டுக்கு வந்த சோதனை” என்ற நினைவுடன், சாப்பாடு தட்டினைப் பார்த்தேன் – வழக்கம்போல பனீர் சாம்பார் [அதாங்க சப்ஜி!], தண்ணீர் அதிகமுள்ள ஒரு தால், ஓரங்களில் வேகாத சப்பாத்தி, ஊசி போன்ற கூர்மையான வேகாத பாஸ்மதி சாதம், தயிர், ஊறுகாய் பாக்கெட்டில் – சாப்பிட்ட படியே அந்த ஊறுகாய் பாக்கெட் பிரிப்பதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டும்! எத்தனை காசு வாங்கினாலும் இப்படித் தான் இருக்கிறது இவர்கள் தரும் உணவு – அதைச் சமைப்பவர்களுக்கு ஒரு மாதம் முழுவதும் இது மட்டுமே சாப்பாடு, வேறு ஒன்றுமே தரமாட்டோம் என்ற தண்டனை தரவேண்டும் – இல்லையெனில் அன்னியன் படத்தில் வருவது போல கும்பிபாகம், கிருமி போஜனம் போன்ற ஏதாவது ஒரு தண்டனை தரவேண்டும்!
இப்படி இருந்த உணவினை சரிந்த நிலையிலேயே ஒரு மாதிரி சாப்பிட வேண்டியதாயிற்று. இப்படி படுத்துக் கொண்டு சாப்பிடுவது ஏதோ சர்க்கஸ் செய்வது போல இருந்தது எனக்கு. மேல் Berth-ல் இருந்து கொண்டு இப்படி சாப்பிடும்போது Watery உணவுகளை கீழே இருப்பவர்கள் மீது கொட்டாமல் சாப்பிட வேண்டுமே என்ற பயம் எனக்கு! ஆனாலும் இப்படி படுத்தும் அந்த பெண்மணியின் மேல் கொட்டியிருந்தாலும் நல்லது தான் என்று தோன்றுகிறது. சாப்பிட்டு முடித்த பிறகு தட்டினை சிப்பந்தியிடம் கொடுத்து விட்டு நாளை காலை எப்படியும் கீழே அமர்ந்து கொண்டு தான் சாப்பிட வேண்டும் என்ற முடிவோடு உறங்கினேன்.
மறுநாள் காலை கீழே வந்து அமர்ந்த பிறகு மேலே செல்லவே இல்லை. கொஞ்சம் நகர்ந்தாலும் உடனே படுக்கைகளை போட்டு படுத்துக் கொண்டு விடுகிறார்.
மதிய உணவு வரும்போதும் இப்படி படுத்து இருக்க, அவரைப் பார்த்து கண்டுகொள்ளாது இருந்தார். நேற்று நாகரீகம் கருதி பேசாது இருந்தேன். இன்று மீண்டும் படுத்துக் கொண்டே சாப்பிடும் எண்ணம் எனக்கில்லை என்பதால் நானே அவரிடம் சொல்லி விட்டேன் – “எழுந்து உட்காரும்மே! நான் சாப்பிடணும்!” எல்லாம் சாப்பிட்ட பிறகு படுத்துக்கிட்டே வந்துக்கோ!” என்று சொல்ல முணுமுணுத்தபடியே இருந்தார். அவரது கணவர் என்னிடம் ஒன்றும் சொல்லாததால் கணவருக்கும் திட்டு கிடைத்தது! நிச்சயம் வீடு சென்றதும் அவருக்கு மண்டகப்படி உண்டு!
இப்படி இரயிலில் பயணம் செய்யும் சிலருக்கு ஒரு எண்ணம் – Berth வசதியுடன் முன்பதிவு செய்துவிட்டால், படுத்துக் கொண்டே தான் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள் – அதான் காசு கொடுத்திருகோம்ல! படுத்துக்கிட்டே தான் வருவோம், அடுத்தவங்க பத்தி எனக்கு என்ன கவலை என்ற எண்ணம் – என்ன மனிதர்களோ – சென்னை வரை பயணச் சீட்டு வாங்கி இருந்தாலும் ஏனோ விஜயவாடாவிலேயே இறங்கினார்கள்.
விட்டது ஒரு தொல்லை என்ற எண்ணத்துடன் மீதிப் பயணத்தினைத் தொடர்ந்தேன்.
ஒரு தொல்லை இவர்கள் தந்தது – மற்ற தொல்லை – அது பற்றி பிரிதொரு பதிவில்! :)
என்ன நண்பர்களே, இன்றைய பதிவினை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்…..
நட்புடன்
வெங்கட்
திருவரங்கத்திலிருந்து….
நான் ரிடையர் ஆன பிறகு ரயில் பயணம் போவது அதிகம் இல்லை. ஆனால் உங்கள் பதிவைப் படிப்பதால் அந்தக் குறை இல்லை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
நீக்குஆமா நான் அடிக்கடி பயணம் போவதுண்டு வெங்கட் ஜி இதே தொல்லைதான்
பதிலளிநீக்குசாப்பாடு அட்சரசுத்தம் நீங்க சொன்னது போலத்தான். ஒரு கூடையில் ஃப்ளாஸ்கில் காஃபி, இட்லி, சப்பாத்தி, எல்லாம் கொண்டு போனாலும் மதிய சாப்பாடு விலைக்கு வாங்குவதுண்டு. இதேபோல எரிச்சலாகத்தான் இருக்கும். என்ன செய்வது.. ஹ்ம்ம்.
ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு வித அனுபவம் தான் சகோ....
நீக்குபல சமயங்களில் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கிறது.
ம்ம்ம்ம், ரயில் பயணம் சுகமாக இருந்தால் தான் இனிமையாக இருக்கும். இப்படியும் மனிதர்கள்! எத்தனை நாட்கள் இருப்பீங்க? முடிஞ்சப்போ தொலைபேசிச் சொல்லிட்டு வாங்க!
பதிலளிநீக்குமூன்று வாரங்கள். நடுநடுவே சில பயணங்கள். முடிந்த போது சொல்லிட்டு வரேன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
சுவையான இரயில் பயண அனுபவம். நானும் இதைப்போல எழுத நினைப்பதுண்டு. எனது சென்ற பதிவான 'யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்' என்ற தலைப்பில் முன்முறையாக எழுத முயற்சித்தேன். படித்துப் பார்க்கவும். த.மா.3.
பதிலளிநீக்குஇணைப்பு; http://kavipriyanletters.blogspot.com/2014/12/blog-post_30.html
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிப்ரியன் கலிங்கநகர்.
நீக்குதங்களது பதிவினையும் படிக்கிறேன்.
ஆம் பலருக்கு பொது இடம் என்கிற
பதிலளிநீக்குஸ்மரணையே பெரும்பாலும் வருவதில்லை
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
tha.ma 4
பதிலளிநீக்குதமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குஇங்கும் பூரிக் கட்டையா...? ஹிஹி...
பதிலளிநீக்குஎங்கும் பூரிக்கட்டை! எதிலும் பூரிக்கட்டை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
அட ராமா! இப்போதுபடுத்துக்கொண்டு சாப்பிடுவதில் எக்ஸ்பெர்ட் ஆகிட்டீங்களாமே:-))))
பதிலளிநீக்குரயில்பயணம் இனிது என்றாலும் சகபயணிகள் சரி இல்லைன்னா நரகம்தான்:(
ரயில் ஆசையில் ஒரு சமயம் சென்னை டு தில்லி வந்தப்ப.... ஒரு பஞ்சாபி குடும்பம் அதிலும் அந்தக் குழந்தைகள் படுத்தின பாட்டில் நம்ம கூப்பேவே அதிர்ந்து போச்சுல்லெ!
திரும்பிவரும் ட்ரெய்ன் டிக்கெட்டை கேன்ஸல் செஞ்சு ஃப்ளைட்டுலே சென்னை வந்தோம்.
எந்தப் பயணமாக இருந்தாலும் சக பயணிகள் சரியில்லை எனில் கடினம் தான்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
திருந்தாத ஜென்மங்களுடன் பயணிப்பது கஷ்டம்தான் :)
பதிலளிநீக்குத ம 1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஇப்படியும் மனிதர்கள் :).
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குசாப்பாடு, சக மனிதர்கள் சுகமாக அமையாவிட்டாலும் அனுபவம் ஒரு பதிவுக்குத் தெரியாதே... அந்தப் பெண்ணுக்குத் தேங்க்ஸ் சொல்லிடுங்க வெங்கட்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஉங்கள் பயண அனுபவங்கள் இப்படிச் சுவாரஸ்யமாக அருமையான ரசிக்கும் படி பதிவுகளாக வருகின்றதே...(என்ன ஒரு சுயனலம் பாருங்க!!!) "அந்தக் கஷ்டம் எனக்குத்தானே தெரியும்" என்று சொல்லும் உங்கள் வாய்ஸ் கேட்கின்றது.....ஹஹஹ் ம்ம்ம் இப்படி அனுபவங்கள் எங்களுக்கும் நேர்வதுண்டு...ஆனால் பயணங்கள் குறைவு....
பதிலளிநீக்கு(எங்களில் கீதா தான் அடிக்கடிப் பயணம் மேற்கொள்பவர்....!!!)
மிகவும் ரசித்தோம்...பதிவை...ஆனா நீங்க பாவம் ...அந்த மனிதரும்தான்...மனைவியிடமிருந்து செமையா கிடைச்சுருக்கும்...
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!.
நீக்குபயணங்கள் இனிமையானவை என்றாலும் சில சமயங்களில் இப்படிப்பட்ட மனிதர்களிடம் மாட்டிக் கொண்டு விடுகிறோம்! :(
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
துளசி சொல்வது போல் பயணம் செய்யும் போது சகபயணி சரியில்லை என்றால் நம் பாடு கஷ்டம் தான்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குரயில் பயணம் அனுபவம் படிக்க சுவராஸ்யமாக இருக்கிறது எனக்கு இந்த மாதிரி பதிவுகள் அதிகம் பிடிக்கிறது காரணம் இது போன்ற அனுபவங்கள் இங்கு கிடைப்பது மிக அறிது பொது வாகனங்களில் பயணிக்கும் போது பல வித அனுபவங்கள் கிடைக்கிறது பல பதிவர்கள் என்ன எழுதுவது என்று தெரியவில்லை என்பார்கள் அவர்கள் பயணம் செய்யும் போது செல்போனை அணைத்து விட்டு சுற்றி கண்களையும் காதையும் திறந்து வைத்தால் அமுதசுரபி போல எழுத விஷயங்கள் வந்து கொண்டே இருக்கும்.
பதிலளிநீக்குவெங்க்ட் ஆனால் இது போன்ற பதிவுகளை அதிகம் எழுதாதீங்க அப்படி எழுதினால் நான் இங்கு அடிக்கடி வந்து படித்து போக வேண்டி இருக்கும்
நீங்களும் வந்து கருத்திட்டால் மகிழ்ச்சி தான் மதுரைத் தமிழா...
நீக்குஇந்தப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் இன்னும் சில பதிவுகள் வெளி வரலாம்!
ரயில்வே விதிப்படி இரவு எட்டு மணியில் இருந்து காலை 6 மணிவரைதான் படுக்கையாக பயன்படுத்த வேண்டும் அந்த நேரம் தவிர மீதி நேரம் சீட்டாகதான் உபயோகப்படுத்த வேண்டும் இப்போது அந்த விதிகள் மாற்றப்பட்டனவா என்று தெரியவில்லை
பதிலளிநீக்குஇருக்கும் விதிகளை மீறினால் தானே நாம் இந்தியர்கள்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் உண்மையிலேயே வேலையாக இரயில் பயணம் செய்கிறீர்களா? இல்லை இந்த மாதிரி அனுபவங்களை எல்லாம் தெரிஞ்சுக்கிறதுக்காக இரயில் பயணம் செய்கிறீர்களா?
பதிலளிநீக்குநல்ல சந்தேகம் தான் உங்களுக்கு! :) எப்போதாவது பயணம் செய்வது தான்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
சுவாஸ்யமான பதிவு. பட்டவனுக்கில்ல தெரியும் என்று நினைப்பீர்கள் உண்மைதான். பலவிதமான மனிதர்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.
நீக்குஇரயில் பயண அனுபவம் சுவராஸ்யமாக இருக்கிறது மிகவும் ரசித்தோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா....
நீக்கு