தொகுப்புகள்

வெள்ளி, 23 அக்டோபர், 2015

ஃப்ரூட் சாலட் – 149 – DuggAmar - பெண்களுக்கு சக்தி - காபியும் பழையதும் – செல்ஃபோனை தொலை! -

இந்த வார செய்தி:



கணவனை இழந்த பெங்காலி பெண்களை விருந்தாவனில் விட்டுவிடுவது காலம் காலமாக நடந்து வரும் ஒரு கொடுமை. அப்படி 50 பெண்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்திருக்கிறார்கள் தில்லியின் ஆராம்பாக்[g] பகுதி துர்கா பூஜா சமிதியினர். எல்லா வருடமும் வித்தியாசமான Theme வைத்து பூஜா பந்தல் அமைப்பது இவர்களது வழக்கம்.  இந்த வருடத்தின் Theme Dugg Amar – Empowering women.

பத்து சாதனை பெண்மணிகளின் புகைப்படங்களும் அவர்களது சாதனைகளையும் பந்தலின் இரு பக்கங்களிலும் வைத்திருக்கிறார்கள்.  சாதனைப் பெண்மணிகளாக காண்பிக்கப்பட்டவர்களில் அன்னை தெரேசா, மேரி கோம், கல்பனா சாவ்லா, சுதா சந்திரன், பன்வாரி தேவி ஆகியவர்களும் இருக்கிறார்கள்.



மா துர்காவினைக் கொண்டாடும் அதே வேளையில் உண்மையில் பெண்களுக்கு எதிரான அநீதிகள் எத்தனை எத்தனை? பந்தலின் வெளியே இவற்றிற்கு எதிரே போராடும் போர்குணம் பெண்களுக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஒரு பெரிய பொம்மையை வைத்திருக்கிறார்கள். ஒரு கையில் கத்தியும், மறுகையில் வில்லும் வைத்திருக்கும் பெண்ணின் சிலையின் கீழே ஒரு பெண் – அவளை நோக்கி நீளும் பல கைகள் என அமைத்திருந்தார்கள்....

25 வருடங்களுக்கு மேலாக துர்கா பூஜை கொண்டாடும் இந்த சமிதியினர் இந்த வருடத்தில் மதுரா மற்றும் விருந்தாவன் பகுதியில் தனித்து விடப்பட்டிருக்கும் 50 விதவைகளை துர்கா பூஜையை சிறப்பிக்க அழைத்து வந்திருக்கிறார்கள். தங்களது வாழ்வில் பல கஷ்டங்களை எதிர்த்து போராடி வரும் இவர்கள் தானே உண்மையான துர்கா எனச் சொல்கிறார்கள் விழா சமிதியினர்.  முழு விவரமும் இங்கே இருக்கிறது. 

விழா ஏற்பாடுகளை கவனித்து வரும் குழுவினருக்கு பாராட்டுகளும் பூங்கொத்துகளும்....

டிஸ்கி: மேலுள்ள படங்கள் நான் எடுத்தவை. பந்தலில் எடுத்த மற்ற படங்கள் நாளை மறுநாள் வெளியிடுவேன்..... 

இந்த வார முகப்புத்தக இற்றை:

காய் விடுவதையும் பழம் விடுவதையும் விரல்களிலேயே வைத்திருக்கிறார்கள் குழந்தைகள்.....  நாம் தான் மனதினில் வைத்திருக்கிறோம்.....

இந்த வார குறுஞ்செய்தி:




இந்த வார ஓவியம்:


சுந்தன், உபசுந்தன் என்னும் சகோதர அசுரர் இருவர் மிகவும் ஒற்றுமையாக இருந்து தேவர்களுக்கு இடுக்கண் இழைத்து வந்தனர். அவர்களைப் பிறரால் வெல்லுவது அரிது என்றெண்ணிய அமரர், திலோத்தமை என்னும் அணங்கை அனுப்பினர். இரு சகோதரர்களும் அவளைக் கண்டு காமுற்றனர். “இருவரில் ஒருவரை நான் மகிழ்விப்பேன். உங்களிடையே உள்ள இகலில் யார் வெல்கிறார்களோ அவனே என் காதலன்என்றாள் அந்த ஆரணங்கு. அவள் விழிக்கடையில் சொக்கிய இருவரும் ஒருவரோடு ஒருவர் போரிட்டு அழிந்தார்கள். தேவர்கள் போர் செய்யாமலேயே வென்றார்கள்.  திலோத்தமையின் அழகே அந்த வெற்றியை அவர்களுக்கு அளித்தது. சுந்தோபசுந்தர் போரிடுதலை வரைந்தவர் ஸ்ரீமாதவன்.  படம் – 1951 ஆம் ஆண்டு கலைமகள் தீபாவளி மலரிலிருந்து.

இந்த வார காணொளி:

உங்க கிட்ட இருக்க அலைபேசி கேமரா மூலம் எல்லாவற்றையும் புகைப்படம்/காணொளி எடுக்கும் வழக்கம் உண்டா?  பலருக்கு இது போன்ற பழக்கம் உண்டு!  கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்..... உங்களுக்கும் இப்படி நடக்கலாம்! :)


எதைப் பார்த்தாலும் செல்போனை கையில் எடுத்து போட்டோ எடுத்தா, இது தான் கதி!
Posted by Sridhar Murugaiyan on Tuesday, August 26, 2014



இந்த வார விளம்பரம்:

தொலைக்காட்சியில் வரும் சீரியல்களைப் பார்த்து கண்ணீர் விடுபவர்கள் நிறையவே உண்டு.... அவர்கள் இந்த வீடியோவினை நிச்சயம் பார்க்க வேண்டும். மற்றவர்களும் பார்க்கலாம்.... தவறில்லை!



படித்ததில் பிடித்தது:

காபியும் பழையதும்....

புலவர் காபி சாப்பிடுவதில்லை. கல்கத்தாவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். ஏதாவது சிலேடை பாடுகின்றேன் என்றார். “எங்கே, காபிக்கும் பழையதுக்கும் சிலேடை சொல்லுங்கள்என்று சீதாபதி என்ற அன்பர் கேட்டார். உடனே புலவர் சிலேடையைத் தொடங்கினார்.

காலை உணவாகிக் கைப்பிசைய நல்லதாய்ப்
பாலருந்தி வேண்டாத பான்மையால் – சீலமிகு
சீதா பதியென்னும் செம்மலே காபியினை
ஓதாய் பழையதென்று.

கைப்பு இசைய நல்லதாய் – [காபி] கசப்புச் சேரச் சேர நல்லதாகி; கைப் பிசைய நல்லதாய் – [பழையது] கையால் பிசையப் பிசைய நல்லதாகி.

பால் அருந்தி வேண்டாத பான்மையால் – [காபி] பாலை மாத்திரம் உண்பவன் வேண்டாத பான்மையால்; பாலர் உந்தி வேண்டாத வேண்டாத பான்மையால் – [பழையது] சிறு பிள்ளைகள் தூவென்று தள்ளி விரும்பாத தன்மையால்!
-   1951 ஆம் ஆண்டு கலைமகள் தீபாவளி மலரிலிருந்து.

யார் அந்த புலவர் என்பது தெரியாது. எழுதியவரும் யாரென்று தெரியாது. ஆனாலும் படித்தபோது பிடித்தது! அதனால் இங்கே! :)

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

26 கருத்துகள்:

  1. இவாசெ, இ, குசெ , காணொளி, பபி எல்லாவற்றையும் ரசித்தேன். :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இந்த வார செய்தி, முகப்புத்தக இற்றை: குறுஞ்செய்தி, காணொளி அனைத்தும் மிக அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  3. இரண்டு காணொளிகளும் அருமை. சிலேடைக் கவிதையை இரசித்தேன்.பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  4. #யார் அந்த புலவர் என்பது தெரியாது. எழுதியவரும் யாரென்று தெரியாது. #
    திரு ,கி வா ,ஜ எழுதியதைப் போன்றுள்ளது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலேடை என்றாலே நினைவுக்கு வருபவர் கி.வா.ஜா. அவர்கள் தான். ஆனாலும் நிச்சயமாக அவர் தான் எழுதி இருக்கிறார் என்று சொல்ல இயலாததால் அப்படி குறிப்பிட்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  5. வெண்பாவில் தொடங்கி காணொளிகளும் மிகவும் அருமைங்க. உங்க தேடல் ரசனைக்குரியது . வாழ்த்துக்கள் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா...

      நீக்கு
  6. பிருந்தாவனம் பற்றி படித்துள்ளேன். இந்த வருடத் தலைப்பினை அறிந்தேன், புகைப்படத்துடன். வழக்கம்போல பழக்கலவை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. முதலாவது செய்தி மனதைப் பிசைகிறது!
    இந்தக் காலத்திலும் இப்படியும் இருக்கின்றார்களா?.. வருத்தமே!

    ஏனையவை அத்தனையும் சிறப்பு! நல்ல செய்திகள்!
    வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி ஜி!

      நீக்கு
  8. கவிதைக்கு ஒரு சபாஷ்!
    காணொளிகள் கச்சிதம்.
    வத்தல் செய்தி குருஞ்செய்தியா இல்லை குறும்புச் செய்தியா வெங்கட்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறுஞ்செய்தி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

      நீக்கு
  9. நல்ல செய்திகளுடன் - ஃப்ரூட் சாலட் அருமை..

    சீரியல் கண்ணீர் - முன்பே கண்டிருந்தாலும் மீண்டும் காணும்போது நகைச்சுவை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  10. சிலேடைப் பாடல் முன்னாட்களில் படித்து ரசித்தது... அழகான பாடல். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  12. வணக்கம்
    ஐயா

    அனைத்து தகவலும் சிறப்பு... வாழ்த்துக்கள் ஐயா த.ம6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  13. முகப்புத்தக இற்றை அருமை. குறுஞ்செய்தி ஹஹஹ் குறும்புச் செய்தியோ...

    ஓவியம் அழகு. நீங்கள் எடுத்தப்படங்கள் மிக அழகு...விளம்பரம் மிக மிக அழகோ அழகு...சிரிப்பை வரவழைத்தது...

    காணொளி வரவில்லை எரர் வருகின்றது...

    சிலேடை மிகவும் ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....