தொகுப்புகள்

ஞாயிறு, 15 மே, 2016

விதைக்கலாம்.......... மரம் நடுவோம் வாங்க!

படம்: விதைக்கலாம் வலைப்பூவிலிருந்து....

அதிகாலை நான்கே முக்கால் மணிக்கு திருவரங்கத்திலிருந்து இன்றைய பயணம் துவங்கியது. ஆறு மணிக்கு திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை பேருந்துகள் நிற்கும் இடத்தில் அத்தனை மனிதர்கள், குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் நின்று கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை செல்லும் பேருந்துகள் சில மணி நேரமாக வரவில்லை போலும் – அதனால் நிலைமை கொஞ்சம் சூடாகத்தான் இருந்தது. பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப் பணியாளர்கள் மக்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள் – அதிலும் தேர்தல் சமயம் என்பதால் அரசியல் இழுக்கப்பட்டது...  அதிக சூடாகி நிலைமை கட்டுக்குள் இல்லாது போகும் என நினைத்த பலருக்கு, புதுக்கோட்டை செல்லும் 10 பேருந்துகள் வரிசையாக வர, அனைத்திலும் மக்கள் அமர்ந்து கொண்டுவிட பிரச்சனை தவிர்க்கப்பட்டது.

எனக்கு பேருந்து பயணங்கள் பிடித்தமானது என்றாலும், சில சமயங்களில் அடுத்த இருக்கையில் அமர்ந்து வரும் பயணி தொல்லை தருபவராக அமைந்து விடுவதுண்டு.  இன்றும் அப்படித்தான் ஆகவேண்டுமென முன்பே விதிக்கப்பட்டது போலும்! பக்கத்து இருக்கையில் அமர்ந்த இளைஞர் பேருந்து, நிலையத்தினை விட்டு வெளியே வருவதற்கு முன்னரே தூங்கி விட்டார் – சாய்ந்து தூங்க வசதியாக எனது தோள்களைப் பயன்படுத்திக் கொண்டார்! ரொம்ப நேரம் தலையை வைத்து அழுத்த என்னால் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை. அவ்வப்போது அசைந்து என் தோள் வலியை போக்க வேண்டியிருந்தது.  பக்கத்தில் அமர்ந்து நான் படும் அவஸ்தையை உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை அந்த இளைஞர்.

இந்தத் தொல்லையில், நண்பர் மது அவர்களை அழைத்து நான் வருவதாகச் சொன்ன நேரத்திற்குள் வரமுடியாது – ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தாமதமாகலாம் எனச் சொல்ல முடியவில்லை.  அதற்குள் விதைக்கலாம் அமைப்பு அமைய காரணகர்த்தாக்களில் ஒருவரான இளைஞர் மலையப்பன் அவர்களின் அழைப்பு. கீரனூர் தாண்டி பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது, 15 நிமிடங்களில் புதுக்கோட்டை வந்துவிடுவேன் என்று சொன்னேன். நான் பேசியது அந்த இளைஞருக்கு தாலாட்டு போல இருந்தது போலும் – நன்கு தூங்கினார் – என் தோள்வலியை அதிகப்படுத்தியது தெரியாமல்....

பேருந்து புறப்பட்டதிலிருந்தே பண்பலையில் பாட்டும் விளம்பரமும் மாறி மாறி வந்துகொண்டிருந்தது.  அதிகாலையில் கேட்ட ஒரு விளம்பரம் மண்டை காயவைத்தது..... “என்னங்க சொல்லாம கொள்ளாம பொண்ணு பார்க்க வந்துட்டீங்க, நான் ஒழுங்கா ஒப்பனை கூட செய்யாம இருந்தேன்என்று ஒரு பெண்மணியின் குரல் ஒலிக்க, ஆண் குரல் அடுத்ததாய் ஒலித்ததுநான் வரும்போது நீ பொம்மி நைட்டி போட்டு இருந்தியா, உன் தேர்ந்தெடுக்கும் திறன் எனக்குப் பிடிச்சது, அதனால தான் நான் உன்னை பிடிச்சு இருக்குன்னு சொன்னேன்! – என்ன விளம்பரமோ.....

பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் மலையப்பனை அழைத்து நான் இருக்கும் இடம் சொன்னேன். நண்பர் மதுவும் அழைக்க, அவரும், மலையப்பனும் வந்து சேர, அனைவருமாக இன்றைய விதைக்கலாம் நிகழ்வு நடக்க இருக்கும் இடத்திற்குச் சென்று சேர்ந்தோம். விதைக்கலாம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேனே அது என்ன அமைப்பு என்பதையும் சொல்லி விடுகிறேன்.

முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு அப்துல் கலாம் அவர்கள் மறைந்த சில நாட்களுக்குள் புதுக்கோட்டை இளைஞர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு தான் விதைக்கலாம் – புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஒவ்வொரு ஞாயிறும் குறைந்தது ஐந்து அல்லது அதற்கு அதிகமான மரக்கன்றுகள் நட்டு, அதற்கு சுற்றுவேலி அமைத்து அதைத் தொடர்ந்து பராமரித்தும் வருவது தான் அமைப்பின் முக்கிய குறிக்கோள்.  இந்த நல்லதொரு குறிக்கோளுடன் துவங்கப்பட்ட அமைப்பு இதுவரை 38 வாரங்களாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 400க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு அத்தனையும் நேரடிப் பராமரிப்பில் இருக்கிறது.




விதைக்கலாம் அமைப்பு பற்றி கேள்விப்பட்டதிலிருந்தே, தமிழகம் வரும் சமயத்தில் ஒரு ஞாயிறாவது புதுக்கோட்டை சென்று அவர்களின் நிகழ்வுகளில் பங்குகொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன்.  நெய்வேலியில் இருந்தவரை வீட்டைச் சுற்றி பெரிய தோட்டம் இருந்ததால் செடிகளோடும் மரங்களோடும் நெருங்கிய தொடர்பு இருந்தது. செடிகளை நட்டு, அவற்றை பராமரிப்பது, தண்ணீர் பாய்ச்சுவது, மரங்கள் கனி கொடுக்கும் சமயத்தில் அவற்றை மரத்திலேறி பறிப்பது, உண்பது என குதூகலமான நாட்கள் அவை. மரங்களோடு பேசியது கூட உண்டு! அது பற்றி எனது பக்கத்தில் நானும் மரங்களும் என ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.  



விதைக்கலாம் அமைப்பின் 38-ஆவது நிகழ்வு புதுக்கோட்டை நகரின் பூங்கா நகரில் உள்ள ஐயப்பன் மற்றும் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.  5 மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகளை முதல் நாளே அமைப்பின் இளைஞர்கள் தயார் நிலையில் வைத்திருக்க முதல் மரக்கன்றை அடியேனும், மற்ற நான்கு கன்றுகளை மற்ற நண்பர்களும் வைத்து பாதுகாப்பிற்காக வேலிகளை வைத்து தண்ணீர் ஊற்றி “விதைக்கலாம்பதாகையோடு அனைவரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். இன்றைய நிகழ்விற்கு புதுக்கோட்டை பதிவர்களான நண்பர் செல்வக்குமார் மற்றும் சகோதரி கீதா அவர்களும் வந்திருந்தார்கள்.



நிகழ்விற்குப் பிறகு அருகிலேயே இருக்கும் விதைக்கலாம் அமைப்பின் மூத்த உறுப்பினர் திரு மணிஷங்கர் அவர்களின் இல்லத்தின் மொட்டை மாடியில் அமர்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இன்று பிறந்த நாள் காணும் அமைப்பின் உறுப்பினர் ஷிவா அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி விதைக்கலாம் அமைப்பு தொடர்ந்து செயல்படவும் வாழ்த்துகள் சொன்னேன். இளைஞர் மலையப்பன் என்னுடன் பேருந்து நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தார். இன்றைய நாளில் நல்லதோர் செயல் செய்த மன நிறைவோடு அங்கிருந்து புறப்பட்டேன்.  

நல்லதோர் செயலைச் செய்து வரும் விதைக்கலாம் அமைப்பில் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் – என் சார்பிலும் உங்கள் சார்பிலும். அமைப்பு பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள நினைத்தால் மலையப்பனின் எதிலும் புதுமை வலைப்பூவில் படிக்கலாம்... விதைக்கலாம் அமைப்பிற்கும் ஒரு வலைப்பூ உண்டு.... விதைத்தவன் உறங்கலாம்..... விதைகள் உறங்காதுஎனும் அருமையான தலைப்பு  வாசகத்தோடு....  
வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து.....

34 கருத்துகள்:

  1. உங்களை இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...குழந்தை ரோஷ்ணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. நன்றி..நண்பரே..தங்கள் வருகை இன்று உவப்பாய் இருந்தது...
    விதைக்கலாம் அமைப்பை நீங்கள் பாராட்டுவதும் பொருத்தமானதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.....

      நீக்கு
  3. எதிலும் புதுமை,வலைப்பூ சென்று
    படித்தேன் நண்பரே மரம் வளர்க்க
    ஆர்வத்தை தூண்டும் பதிவுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

      நீக்கு
  4. அனைவருக்கும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  5. புதுகை நண்பர்களின் பணி போற்றுதற்குரியது.அவ்வப்போது நண்பர் கஸ்தூரி ரங்கன் அவர்களின் பதிவுகள் மூலமாக விதைக்கலாம் அமைப்பின் செயல்பாடுகளை அறிந்து வருகிறேன். அவர்களுக்கு வாழ்த்துகள். நிகழ்வில் கலந்து கொண்டதோடு அதை பதிவ்க்கித் தந்தமைக்கு உங்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
    2. அய்யா நீங்களும் ஒருமுறை விதைக்கலாம் நிகழ்விற்கு வர வேண்டும்

      நீக்கு
  6. நல்ல செயல்களுக்கு ஊக்கம் தரும் என் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

      நீக்கு
  7. மரம் நடுதல் நல்ல விஷயம். அதிலும் நாம் நட்டு வைத்த மரக்கன்றுகளை சில வருடங்கள் கழித்து வளர்ந்த மரங்களாகப் பார்க்கும் போது ஏற்படும் சந்தோஷத்தை சொல்ல இயலாது. நானும் அன்று அங்கு வருவதாக இருந்தேன். வர இயலாமல் போய் விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ தாங்களும் வருவதாக இருந்தீர்களா? இம்முறை உங்களை இதுவரை சந்திக்க இயலவில்லை. அடுத்த முறை சந்திப்போம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
    2. உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்

      நீக்கு
  8. அருமையான தொண்டு. பங்கேற்ற விதத்தைச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  9. ‘விதைக்Kalam’ நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்! தகவலைப் பகிர்ந்த தங்களுக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  10. விதைக்KALAM குழுவில் கலந்து கொண்டமைக்கு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. அருமையான பணி. விதைக்கலாம் அமைப்பினர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். நீங்களும் மரம் நட்டு வந்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      நீக்கு
  12. \\விதைத்தவன் உறங்கலாம்..... விதைகள் உறங்காது\\ சத்தியமான வார்த்தைகள். விதைக்கலாம் அமைப்பின் அருமையான முயற்சிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி வெங்கட். பதிவின் இடையில் பொம்மி நைட்டிக்கு விளம்பரமா :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுமையான விளம்பரம் அது.... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  13. அருமையான பதிவு! புதுக்கோட்டை நண்பர்கள் எப்போதும் பாராட்டுக்குரியவர்கள் தான். அவர்களுடனான தங்களின் பங்களிப்புக்கு வாழ்த்துகள்!
    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  14. விதைக்கலாம் நிகழ்விற்கு நீங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சியையும் உந்துதலையும் தருகிறது ... அடுத்தமுறை நீங்கள் இங்கு வரும்போதும் நிச்சயம் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் ... விதைக்கலாம் இன்னும் விருட்சமாக நண்பர்கள் அனைவரும் உங்கள் ஆலோசனைகளையும் அதே சமயம் நீங்களும் உங்கள் அருகாமையில் மரங்களை நட்டு நம் அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் ... விதைக்கலாமை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறந்த பணியில் ஈடுபட்டிருக்கும் உங்கள் குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். உங்கள் பணி மேலும் தொடரட்டும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

      நீக்கு
  15. விதைக்கலாம் பற்றி மலையப்பன் அவர்களின் வலைப்பூவைத் தொடர்வதால் அறிந்தோம். தங்கள் பக்கத்திலும் இப்போது இந்த் நிகழ்வினைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. நல்ல நிகழ்வு. விதைக்கலாம் குழுவினரின் சிறந்த பணி வளர வாழ்த்துகள்! பாராட்டுகள் குழுவினருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....