தொகுப்புகள்

புதன், 22 ஜூன், 2016

திறந்தவானே குளிர்பதனம்! பாறைக்கல்லே பஞ்சுமெத்தை! - படமும் கவிதையும்

[படம்-6 கவிதை-1]

படமும் கவிதை வரிசையில் இந்த வாரம் ஆறாம் வாரம்.  நான் எடுத்த புகைப்படம் ஒன்றிற்கு தலைநகர் தில்லியில் இருக்கும் எனது நண்பர் பத்மநாபன் [எனது பதிவுகளில் ஈஸ்வரன் எனும் பெயரில் கருத்துகள் எழுதுவது இவர் தான்!] அவர்கள் எழுதிய கவிதையோடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

புகைப்படம்-6:



எடுக்கப்பட்ட இடம்:  தலைநகர் தில்லியில் இருக்கும் கூவம் – அதாங்க யமுனை ஆறு – மழைக்காலங்களில் ஹரியானாவின் “ஹத்னிகுண்ட்அணையிலிருந்து உபரி நீரை திறந்து விட யமுனையில் வெள்ளம் வந்து விடும்! ஆற்றின் இரு கரைகளிலும் வாழும் குடிசை மக்கள் சாலைக்கு வந்த் விடுவார்கள். அப்படி வெள்ளம் வந்த சமயத்தில் யமுனையில் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் இரும்பு பாலத்தின் அருகே எடுத்த புகைப்படம்.....

படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  தில்லியின் பெரும்பாலான ரிக்‌ஷா ஓட்டுனர்கள் – கிழக்கு உத்திரப் பிரதேசம் அல்லது பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்தவர்கள் – நாள் வாடகைக்கு ரிக்‌ஷாவினை ஓட்டி இரவு அந்த ரிக்‌ஷாவிலேயே சாலை ஓரத்தில் படுத்து உறங்கும் பலர் உண்டு....  இவர்களுக்கென குடிசையோ, சொந்தமே தலைநகரில் இல்லை. வருடத்தின் ஒன்பது மாதங்கள் இங்கே கஷ்டப்பட்டு உழைத்து தீபாவளி-ச்சட் பூஜா சமயத்தில் கிராமத்துக்குச் செல்லும் உழைப்பாளிகள்.....  மழை வந்து பிழைப்பைக் கெடுத்த ஒரு நாளில் உண்ண உணவின்றி, பசி மயக்கத்தில் படுத்து உறங்குகிறாரோ என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது!

புகைப்படத்திற்கு நண்பர் பத்மநாபன் எழுதி அனுப்பிய கவிதை இதோ.....

கவிதை-1:

திறந்தவானே குளிர்பதனம்! பாறைக்கல்லே பஞ்சுமெத்தை!!

வங்கிக் கணக்கினிலே வரவு வைக்க ஏதுமில்லை!
பங்குச் சந்தையினால் பாதிப்பும் எனக்கில்லை!
வாசல் திறந்து வைத்து காத்திருக்கும் உறவுமில்லை!
வசையோடு இசைபாடும் இல்லத்துணை ஏதுமில்லை!
ஒன்று பெற்றால் போதுமென்ற உத்தரவும் எனக்கில்லை!
சிந்தை குழம்பி நிற்கும் சிக்கலொன்றும் எனக்கில்லை!

தாலாட்டுப் பாட்டு சொல்ல தண்ணீர்ச் சாலைஉண்டு!
வாலாட்டி உறவு சொல்ல வாயில்லா ஜீவனுண்டு!
அன்றாடம் காய்ச்சி நான்! ஆகாயம் சொந்தமுண்டு!
நின்றாடும் மரம் வீசும் சாமரமும் எனக்குண்டு!
என்றும் இன்பம்தரும் உழைத்த களைப்புமுண்டு!
உழைத்த வரவினிலே உண்ட நிறைவுமுண்டு!

வீடெடுத்து ஓய்வெடுக்கும் ஏக்கம் எனக்கில்லை!
ஏடெடுத்து படிக்காத ஏக்கம்தான் எனக்குமுண்டு!
படுத்து உறங்க ஒருபாயில்லா ஏக்க மில்லை!
இடுக்கண் வருகையிலே யாருமில்லா ஏக்கமுண்டு!
மனதினிலே உறுதியுண்டு! உழைப்பின்மேல் பக்தியுண்டு!
நினைத்த பொழுதினிலே நல்லுறக்கம் வருவதுண்டு!
நினைத்த பொழுதினிலே நல்லுறக்கம் வருவதுண்டு!

     பத்மநாபன்......

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் ஆறாம் படமும் நண்பர் பத்மநாபன் அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? தொடர்ந்து புதன் கிழமைகளில் படமும் கவிதையும் பதிவுகள் வெளிவரும். நான் எடுத்த புகைப்படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் [ venkatnagaraj@gmail.com ] அனுப்பினால் நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

30 கருத்துகள்:

  1. #நினைத்த பொழுதினிலே நல்லுறக்கம் வருவதுண்டு!இதை விட வாழ்க்கைக்கு வேறென்ன வேண்டும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  2. மிக மிக அருமை. வாழ்வை இந்தக் கவலையுமில்லாமல் எதிர்கொள்ள முடிந்தவர். சித்தர். நண்பர் பத்மநாபனின் கவிதை அபாரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. படமும் அருமை கவிதையும் அருமை ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. ஏழை உழைப்பாளிகளுக்கு எப்போதுமே கஷ்டம்தான்.... ப்ச் :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்டம் தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  6. கவிதை அருமை. பணக்காரர்களுக்கு தூக்க மருந்து சாப்பிட்டால் தான் தூக்கம் வரும். பலருக்கு ஏ.சி வேண்டும். குறைந்த பட்சம் ஃபேன் வேண்டும். இவர் எதுவும் இன்றி நிம்மதியாய் உறங்குகிறார்.
    சுதா த்வாரகாநாதன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  7. வாழ்வை அதன் நிலையிலேயே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வெகு சிலருக்கே இருக்கிறதுகவலை இல்லா மனிதன் . ஆற்று நீரிலும் பாது காப்பு....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  8. கவிதையும் படமும் அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  9. என்ன சொல்வது.. மனம் கனக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  10. படமும் கவிதை வரிகளும் அருமையாக இருக்கிறது...
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

      நீக்கு
  11. கவிதை பொருத்தமாக இருக்கின்றது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
    2. படமும் கவிதையும் மிக மிக அருமை. இந்தத் தூக்கம் தூங்கி எத்தனை நாளாகிறது.
      கொடுத்துவைத்தவர் உழைப்பாளி.மிக நன்றி வெங்கட்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  12. கவி எழுத வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் பல. கவிதையை படித்து வாழ்த்தியோருக்கும் வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  13. ம்ம்ம் எங்கு படுத்தாலும், எந்த இடத்தில் படுத்தாலும், எப்போது படுத்தாலும் உறங்கும் நிலைமை என்பது வரம்! அப்படிப்பட்ட நிச்சலனமற்ற மனம்! படமும் கவிதையும் அருமை! அட்டகாசமாகப் பொருந்துகிறது! வாழ்த்துகள் இருவருக்குமே தங்களுக்கும் நண்பருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கம் வருவது வரம்.... உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  14. படமும் கவிதையும் அருமை. திரு பத்மநாபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....