தொகுப்புகள்

சனி, 25 ஜூன், 2016

சாப்பிட வாங்க: Caribbean Egg Wrap


 Caribbean Wrap
படம்: இணையத்திலிருந்து.....

பெரும்பாலான குடும்பங்களில் கணவன், மனைவி என இருவருமே வேலைக்குப் போகும் இந்த நாட்களில் வீட்டில் சமைப்பதை கடினமான ஒரு விஷயமாக நினைக்கிறார்கள். பெரும்பாலான நாட்களில் ஏதோ ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுகிறார்கள். இல்லையெனில் இணையம் மூலமாகவோ, அலைபேசிகளில் இருக்கும் App மூலமாகவோ அவர்களுக்குத் தேவையான உணவினை வீட்டுக்கு வரவழைத்துச் சாப்பிடுவது நிறைய பேருக்கு வழக்கமாக இருக்கிறது. இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். 

சரி அவர்கள் இணையம் மூலமே சாப்பிட்டு நிம்மதியாக இருக்கட்டும். யாரும் குறை சொல்லப் போவதில்லை. வீட்டில் ஒழுங்காகச் சமைத்து சாப்பிடும் என் போன்றவர்களையும் தெரியாமலேயே வெளியே சாப்பிடத் தூண்டுகிறார்கள்....  எப்படி என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்.

www.swiggy.com என்று ஒரு இணைய தளம். பெங்களூருவிலிருந்து செயல்படுகிறது.  இளைஞர்களால், இளைஞர்களுக்காகவே நடத்தப்படும் இணையதளம். பல உணவகங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, இவர்கள் தளம் மூலம், தங்களுக்குத் தேவையான உணவினை, தாங்கள் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் உணவகத்திலிருந்து எவரும் ஆர்டர் செய்ய முடியும். இவர்களது ஊழியர்கள் அந்த உணவினை உங்கள் வீடு தேடி வந்து கொடுத்து விடுவார்கள்.  உணவுக்கான கட்டணத்தினை நீங்கள் ஆர்டர் கொடுக்கும் போதே, Debit/Credit Card மூலம், swiggy தளத்திலேயே கட்டி விடலாம்.

இருந்த இடத்திலேயே உங்களுக்குப் பிடித்த உணவினை, உங்களுக்குப் பிடித்த உங்கள் ஊர் உணவகத்திலிருந்து வாங்கிக் கொள்ள வசதி தருகிறது இந்த இணைய தளம்.  நல்ல விஷயம். யாருக்குத் தேவையோ பயன்படுத்தட்டும்.  தவறில்லை..... 

ஆனால் என்னைப் படுத்தும் விஷயத்துக்கு வருகிறேன்.....  தினமும் பகலிலோ, இரவிலோ எனது மின்னஞ்சலுக்கு இவர்கள் தளத்திலிருந்து செய்தி வருகிறது. “வெங்கட், Swiggy தளத்தை பயன்படுத்தியதற்கு நன்றி. நீங்கள் கேட்டபடியே உங்களுக்கான உணவு இதோ வந்து கொண்டிருக்கிறது எனும் செய்தி. எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ள கீழே Track your order பட்டனும் இருக்கிறது! நான் கேட்ட உணவு என்ன என்பதையும் கீழே தருகிறார்கள்.  அப்படி வந்த மின்னஞ்சல்களின் புகைப்படங்கள் கீழே.






வாரத்திற்கு மூன்று நான்கு நாட்கள் இப்படி மின்னஞ்சல் வருகிறது.  ஹைதையின் கொத்தகூடா, கொண்டாபூரில் வசிக்கும் ஏதோ ஒரு வெங்கட் இந்த உணவினை வாங்க, தில்லியில் இருக்கும் இந்த வெங்கட்-டுக்கு மின்னஞ்சல் வருகிறது! அவரது மின்னஞ்சல் முகவரியும் எனது மின்னஞ்சல் முகவரியும் ஒரே மாதிரியாக, ஒரு எழுத்து மட்டும் மாற்றத்தோடு இருக்கும் என்பது எனது உணர்வு.  தனது பயனர் கணக்கை Swiggy தளத்தில் உருவாக்கும்போது அவர் தவறாக மின்னஞ்சல் முகவரியை தட்டச்சு செய்திருக்க வேண்டும் அல்லது Swiggy தளத்தில் ஏதாவது தவறு நடந்திருக்க வேண்டும்.

எது எப்படியோ, தினம் தினம் இப்படி மின்னஞ்சல் மட்டும் வந்து, அதில் குறிப்பிடப் பட்டிருக்கும் உணவு வராமல் இருந்தால் என்ன செய்வது. “எப்ப வருமோ....என்று காத்திருக்காமல் சமையல் செய்து சாப்பிட வேண்டியிருக்கிறது! அதற்காகவே சமையல் செய்து முடித்த பிறகு தான் கணினியை திறப்பது என்று வைத்துக் கொண்டிருக்கிறேன் – குறிப்பாக மாலை வேளைகளில்!

சரி Swiggy-யிலிருந்து வரும் மின்னஞ்சலுக்கு ஒரு பதில் அனுப்பலாம் என்றால் அது no reply மின்னஞ்சல்! அதற்கு அனுப்பியும் ஒரு பயனும் இல்லை! தானியங்கி மின்னஞ்சல்! அதற்கு பதில் போகாது. போனாலும் அதை யாரும் பார்க்கப் போவதில்லை.... உணவினை ஆர்டர் செய்யும் ஹைதை வெங்கட் முகவரி மட்டுமே இருக்கிறது. அலைபேசி எண் இல்லை! மின்னஞ்சல் முகவரி என்னுடையது! எப்படி அவருக்கு சொல்வது....  இதற்காகவே ஒரு முறை ஹைதை செல்ல வேண்டும் போலிருக்கிறது!

சரி அந்த வெங்கட் தனக்குச் சொன்ன Caribbean Egg Wrap எப்படி இருக்கும் என்பதே தெரியாத இந்த வெங்கட், இணையத்தில் தேட கிடைத்த படம் தான் பதிவின் ஆரம்பத்தில் இருக்கு! அதைப் பார்த்து சாப்பிட்ட மாதிரி நினைச்சுக்கோங்க!  - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! :)

நமக்குன்னு எப்படியெல்லாம் வந்து மாட்டுது பாருங்க!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 கருத்துகள்:

  1. பாவம்..அவருக்கு போச்சா இல்லியா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் நான் தானே! அவருக்கு உணவு போக, எனக்கு மின்னஞ்சல் மட்டும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  2. உங்களுக்கு அப்படி வரும் மெயிலை ஸ்பேம் மெயில் போல்டருக்கு மூவ் பண்ணிவிட்டால் அது உங்களது இன்பாக்ஸிற்கு வராது அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Spam என்று ஒரு முறை மார்க் செய்தும் பார்த்தேன். மீண்டும் இன்பாக்ஸிக்கு வருகிறது. தேவையான சில மெயில்கள் ஸ்பாம் ஃபோல்டருக்கும் செல்வதுண்டு.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  3. உங்களுக்காச்சும் உணவுக்கான மின்னஞ்சல் அண்ணா...

    எனக்கு நம் நாட்டில் இல்லாத மொபைல் கம்பெனிக்காரன் பில் கட்டச் சொல்லி மாதாமாதம் மின்னஞ்சல் அனுப்புறான்.

    எந்தப் பாவியோ கட்டாமப் போட்டுட்டான் போல 5000, 6000ம்ன்னு பில் ஏறிக்கிட்டே போகுது...

    ஒருமுறை அந்த கம்பெனிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். நான் இருப்பது அபுதாபி... இது இந்தியாவில் இருக்கும் மொபைல் கூட இல்லை... பின்னே எனக்கு ஏன் அனுப்புறே... எவன் பயன்படுத்துகிறானோ அவனுக்கு அனுப்புன்னு கொஞ்சம் கோபமாக அனுப்பினேன்.

    மன்னிக்கவும் இனி வராதுன்னு பதில் அனுப்பினான்... தொடர்ந்துக்கிட்டுத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ஏர்டெல் Landline bill ஒன்று வந்து கொண்டிருந்தது. நான்கைந்து முறை அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய பிறகு வருவது நின்றது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  4. இதுவும் ஒரு விளம்பர யுக்தியோ என்னவோ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது! :) விளம்பரமாக இருக்காது என நினைக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. வெங்கட் ஜி எங்கள் ஐடிக்கும் இது போன்று ஹை என்று போட்டு துளசிதரன் என்று பேர் சொல்லியும் இன்சுரன்ஸ் மெயில்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது போல பேரே வாயில் நுழையாத என்னவோ சொல்லி பில் தொகை போட்டும் வருகின்றது. ஸ்பேமில் போட்டாலும் ஒன்றிரண்டு அங்கு சென்றாலும் இன் பாக்ஸிற்குத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. சிலவற்றை மெயில் அனுப்பி நிறுத்த முடிந்தது. சில நீங்கள் சொல்லுவது போல் நோ ரிப்ளை மெயில்கள்.

    கீதா: எனக்கு இப்படி யாஹூவிற்கு வருவதுண்டு. ட்ராவல்ஸ், இன்சுரன்ஸ், ஒரு சில பில்கள் என்று. காட்டமாக பதில் அனுப்பியதுண்டு. சாரி மெயிலகள் வரும் இனி வராது என்று சொல்லி என்றாலும் சிலது வருகின்றது. இப்போது அலுத்துவிட்டது. டெலிட் செய்துவிடுகிறேன்...வேறு வழி...

    சில ஃபோன் கம்பெனிகளும் இப்படி அனுப்புகின்றன. நம் ஐடியை சில இணையங்களில் பதிவதால் என்னதான் அவர்கள் இது வெளியிடப்படாது என்று சொன்னாலும் எப்படி நமது மொபைல் நம்பர்கள் பல மார்க்கெட்டிங்க் க்ரூப்பிற்குக் கிடைக்கின்றதோ அது போல இதுவும் கிடைக்கிறது அவர்களுக்கு...என்றும் தோன்றுகின்றது..மொத்தத்தில் ப்ரைவசி தொலைகிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல சமயங்களில் இப்படி தொல்லை இருந்து கொண்டே தான் இருக்கிறது. என்றாலும் இணையத்தின் பக்கம் வராமல் இருக்க முடியாது...... :)

      தங்களது வருகைக்கும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  6. இணைய சேவையை உபயோகிக்காத உங்களுக்குஇது ஒரு திருகுவலி. தவிர்க்க முடியாவிட்டால் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதானோ.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருகுவலி தான்..... சரி மத்தவங்க என்ன சாப்பிடறாங்கன்னு தெரிஞ்சுக்க வசதி இருக்குன்னு நினைச்சுட்டு டெலீட் பண்ணிடறது வழக்கமாயிடுச்சு...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  7. காலக்கொடுமைதான் வேறென்ன...திங்கிறவன் திங்க திருப்பாலைக்குடியான் தண்டம் கட்டுவதா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை - உணவு பற்றிய தகவலும் பில் தொகையும் மட்டும் வருவதோடு நின்றது. காசு கொடு என்று கேட்காமல் விட்டிருக்கிறார்களே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. நண்பர் வெங்கட் அவர்களுக்கு இது ஒரு சீரியசான மின்னஞ்சல் சமாச்சாரமாகவே நான் நினைக்கிறேன். ஏன் எனில் இருவருக்கும் ஒரே இமெயில் எனும்போது, அடுத்த முனையில் இருப்பவர் வில்லங்கமான ஆளாக இருந்தால் பிரச்சினை எந்த ரூபத்தில் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. உடனே கவனிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருடைய மின்னஞ்சலுக்கும் என் மின்னஞ்சலுக்கும் ஒரு எழுத்து வித்தியாசம் இருக்கலாம். முன்பு இப்படி நடந்திருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  9. கஸ்டமரை பிடிக்க வேண்டுமென்றே இப்படி செய்வார்கள் ,ஜாக்கிரதை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  10. Swiggy என்று கூகிளில் தேடினால் சென்னையிலும் அவர்கள் இருக்கிறார்கள் போல் இருக்கிறதே.
    Address: 3rd Floor,, Temple Tower, Anna Salai, CIT Nagar West, CIT Nagar, Chennai, Tamil Nadu 600035 Phone:044 6000 6600

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை மட்டுமல்ல, ஹைதை, தில்லியிலும் அவர்கள் கிளைகள் உண்டு. பெங்களூரு தலைமை அலுவலகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  11. படிப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், உங்களுக்கு இது பெரிய தொல்லையாக இருந்திருக்கும், இல்லையா? எங்களுக்கு நாங்கள் பெங்களூரு வந்த புதிதில் ரத்னமாலா பிரகாஷ் இருக்கிறா என்று தினமும் நாலைந்து போன் கால்கள் வரும். அப்படி யாரும் இங்கு இல்லை என்று சொன்னால் 'ஏன் இப்படி பொய் சொல்லுகிறீர்கள், நீங்கள் தானே அவர்?' என்பார்கள். ரொம்பவும் தாங்கமுடியாமல் போய் நாங்கள் அவரது புதிய எண்ணைக் கண்டுபிடித்து போன் செய்பவர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தோம். ஒருமுறை அவருக்கு (அவர் பிரபல பாடகி!) போன் செய்து இதுபோல என்று சொன்னோம். ரொம்பவும் சர்வ சாதரணமாக அப்படியா என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொல்லை தான். உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது நன்று. இப்படியும் சிலர்....

      தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

      நீக்கு
  12. எனக்கு மெடிக்கல் லேபில் இருந்து blood டெஸ்ட் ரிசல்ட் மின்னஞ்சலில் வந்தது. பெயர் ஒன்றே. ஆனால் வயது விலாசம் வேறு.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... உங்களுக்கு Blodd Test Result-ஆ?....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. காசு குடுக்காமயே சாப்பிட்டாச்சா ?
    எனக்கும் இது மாதிரி அமேசான் கம்பெனியிலிருந்து இது போல விடாமல் அடிக்கடி " மெசேஜு வருகிறது . "Thaks for ordering " " It has been delivered . நானும் பணம் செலவழிக்கவில்லை . பொருளும் வீட்டுக்கு வருவதில்லை .
    ஓஹோ .. இது தானா விஷயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசு கொடுக்காமலேயே பார்த்தாச்சு! சாப்பிடலை! :)

      அட உங்களுக்கு அமேசான் தளத்துல இருந்தா? :)0

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  14. சிலருடைய ராசி அப்படி என்று வைத்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராசி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  15. கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா, எனக்குத்தான் இந்த கொடுமை நடக்குதுன்னு நினைச்சேன். எனக்கு என்னன்னா, டியர் மிஸஸ் ரேணுகா பத்மநாபன் என்று போட்டு E mail வருது. யார் அந்த ரேணுகா-ன்னு வீட்டுல அடி வாங்க வேண்டியிருக்குது. நான் எங்க போய் ரேணுகாவத் தேடுறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இது பெரிய கதையா இருக்கே..... ரேணுகா கதை இதுவரைக்கும் என் கிட்ட சொல்லவே இல்லையே நீங்க! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  16. விலைப்பட்டியலைப் பார்த்தாலே சாப்பிட முடியாது போல! :) சாம்பார் சாதம் 358ரூபாயா? கடவுளே! அந்தப் பணத்துக்கு சாமான்கள் வாங்கினால் கிட்டத்தட்ட முப்பது பேருக்கு சாம்பார் சாதம் பண்ணிடலாமே! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பேருக்கு 358/-.... :) நாலு ஸ்பூன் தயிர் சாதம் வச்சுட்டு, சரவணபவன்ல 100 ரூபா வாங்கிடறாங்களே.... அது மாதிரி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு


  17. நல்ல வேளை அவர் முன்பே உணவுக்கான தொகையை செலுத்திவிட்டதால் உங்களுக்கு Bill வரவில்லை. அந்த வகையில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்! எனக்கும் இது போல் யாருடைய Tata Sky கணக்கு விவரம் ஒவ்வொரு மாதமும் வந்துகொண்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா உங்களுக்கு டாடா ஸ்கை விவரங்களா.... ஒவ்வொருவருக்கும் இப்படி ஏதோ ஒன்று வந்தபடியே தான் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....