முகப் புத்தகத்தில் நான் – 12
கண்ணுக்கு
மை அழகு! – 27 ஆகஸ்ட் 2016
சமீபத்தில் எனது பெரியம்மாவின் வீட்டிற்குச் சென்றபோது
அங்கே மீன் வடிவத்தில் இந்த கண் மை வைக்கும் சிமிழ் பார்த்ததும் அதனை எனது மொபைல்
கேமராவில் படம் பிடித்துக் கொண்டேன். இந்த மாதிரி கண் மைச் சிமிழ்கள்
இப்போதெல்லாம் யாரும் பயன்படுத்துவது இல்லை. Eyetex கண் மை தான் பலரும் பயன்படுத்துவார்கள். அதற்கு முன்னர், எங்கள் அம்மாவின், பாட்டி காலத்தில்
இந்த கண்மையை வீட்டிலேயே தயாரிப்பார்களாம். அதற்காகவே கேமரா ரூம் என அழைக்கப்படும்
இருட்டறையில் தான் தயாரிப்பார்கள் என்று சொல்வார்கள்!
இப்போதெல்லாம் வீட்டில் தயாரிப்பது இல்லை, Eyetex கண் மையும் கொஞ்சம் கொஞ்சமாக வடிவம் மாறி பென்சில்
வடிவத்தில் வந்து விட்டது! கண் மையே இல்லாத போது கண் மை வைத்துக் கொள்ள பயன்படும் இந்தச்
சிமிழ் எங்கே! இந்தப் படத்தினை முக நூலில் பகிர்ந்து “இது என்ன தெரியுமா?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்” என்று கேட்டபோது பலரும் சரியான விடையைச் சொல்லி
விட்டார்கள்.... புன்னகை புரிய வைக்கும் சில
பதில்களும் வந்தன!
தமிழர்கள் மட்டுமல்ல, மலையாள நண்பர், ஜார்க்கண்ட் மாநில
நண்பர் என இந்தியாவின் வேறு வேறு மூலையிலும் இந்த வடிவில் கண் மைச் சிமிழ்
பயன்பட்டிருக்கிறது என்ற தகவலும் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது!
இது என்ன? – 28 ஆகஸ்ட் 2016
மேலுள்ள படத்தினைப் பாருங்கள்.... இந்த படத்தினை காலையில் பகிர்ந்து இது என்ன
என்று தெரிந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். மாலைக்குள் பல பதில்கள் – பெரும்பாலானவை உணவு
சம்பந்தமான பதில்களே! அனைத்தும் ஸ்வாரஸ்யமான பதில்கள் – குமுட்டி, அபிஷேகத்
தீர்த்தம் வைக்கும் பாத்திரம், பிரசாதம் வைக்கும் பாத்திரம், வெற்றிலை துப்பும்
பாத்திரம், ஹூக்கா, வெந்நீர் போடும் பாத்திரம், தண்ணீர் ஜக், காப்பிக்கொட்டை
அரைக்கும் இயந்திரம், காப்பி டிகாக்ஷன் ஃபில்டர், மூலிகை Hair Oil குவளை, ஸ்டீமர், Water Heater, தீர்த்தக்
குவளை, இட்லி புட்டு ஸ்டீமர், காஞ்சிபுரம் குடலை இட்லி செய்யும் பாத்திரம், கொழுக்கட்டை
செய்யும் பாத்திரம் – இப்படி பலப்பல பதில்களை யோசித்து சொன்னார்கள்!
நண்பர் ஒருவர், கூகிளாண்டவரிடம் கூட கேட்டு விட்டாராம்,
”யோவ்வ்... போய்ய்யா நீ... நானும்
கூகுள் முழுசும் தேடிட்டேன்... Titanic
கப்பல் கூட கெடச்சுடுச்சு....” என்று வெறுத்துப் போய் பதில் எழுதினார்.
மாலை வரை இப்படி பல விதமான சுவையான பதில்கள்.....
அது சரி, உண்மையா என்னதான்யா அது? அதைச் சொல்லவே
மாட்டியா? “விடை எப்ப போடூவீங்க்!” என்றும் ஒரு நண்பர் கேட்டிருந்தார். விடையை மாலையில் எழுதினேன். அந்த விடை இது தான்.....
திருப்பராய்த்துறையில் இருக்கும் பராய்த்துறை நாதர் –
பசும்பொன் மயிலாம்பிகை கோவிலில் வைத்திருந்த பொருள் இது. சுமார் 100-150 லிட்டர்
எண்ணை பிடிக்கும் அளவில் பெரிய பாத்திரம். கார்த்திகை தீபம் சமயத்தில் இதில் எண்ணை
நிரப்பி, அதில் எட்டு/பதினாறு முழ வேட்டியை திரியாகப் பயன்படுத்தி, இதன்
பக்கவாட்டில் இருக்கும் துளை வழியே திரி வெளியே கொஞ்சம் நீட்டிக் கொண்டிருக்க,
அந்த தீபத்தினை ஏற்றுவார்கள். பல மணி நேரம் நின்று எரியும் இந்த விளக்கு!
இந்த மாதிரி பொருட்கள் பலவற்றை இழந்து கொண்டிருக்கிறோம்
என்பது தான் வருத்தமான விஷயம்!
கல்லுரல் [ஆட்டுக்கல்] – 30 ஆகஸ்ட் 2016
இரண்டு நாட்களுக்கு முன்னர் திருவரங்கத்து வீதி ஒன்றில்
நடந்து கொண்டிருந்தபோது சாலையோர சாக்கடை அருகில் மாடு ஒன்று நின்று கழுநீர் குடித்துக்
கொண்டிருந்தது. எதில் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அது ஒரு
கல்லுரல்.... சற்றே தொலைவு நடந்த பிறகு,
மற்றுமொரு வீதியில் ஒரு வீடை இடித்துப் புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள். அந்த
வீட்டில் தரையில் பதித்திருந்த கல்லுரலை பெயர்த்து குப்பையோடு குப்பையாக
போட்டிருந்தார்கள்.
இந்த இரண்டையும் பார்த்தபோது கொஞ்சம் வருத்தமாகவே
இருந்தது. எத்தனை முறை இந்த கல்லுரல் பயன்படுத்தி இட்லி, தோசைக்கு மாவு
அரைத்திருப்பார்கள், எத்தனை முறை உலக்கை வைத்து இதில் பொருட்களை இடித்துப்
பொடித்திருப்பார்கள். நமது உணவுக்காக இதனை எவ்வளவு பயன்படுத்தி இருந்தாலும், இப்போதெல்லாம்
இதைப் பயன்படுத்த யாருமே தயாராக இல்லை....
மின்சாரத்தில் இயங்கும் கிரைண்டர்கள் வந்தபிறகு இந்த கல்லுரல்களை யாரும்
கண்டு கொள்வதில்லை என்றாலும், இப்படி வீதியில் எறிந்து விட்டதைப் பார்க்கும்போது கொஞ்சம்
மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. முதலாவது கொஞ்சம் நிம்மதி – ஏதோ ஒன்றுக்குப் பயன்படுத்துகிறார்களே!
இன்னமும் வீட்டில் இந்த மாதிரி கல்லுரல்களைப்
பயன்படுத்துபவர்கள் யாரும் உண்டா? இந்தக் கல்லுரலில் அரைத்து இட்லி, தோசை செய்தால்
எத்தனை ருசி...... ஒரே ஒருவர் மட்டும் இன்னமும் இந்த மாதிரி கல்லுரலைப் பயன்படுத்துவதாக
எழுதி இருந்தார் – அதனால் மகிழ்ச்சி!
என்ன நண்பர்களே, என்னுடைய சமீபத்திய முகப்புத்தக
இற்றைகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.