தொகுப்புகள்

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

காசிரங்கா – காண்டாமிருகம் கொம்பு - காலை உணவு


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 34

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான Drop Down Menu.....

 



இத்தனை தடிமனான தோல் இருந்தும் அடிபட்டிருக்கிறது!

யானைச் சவாரி முடிந்து வெளியே வந்த எங்களை ஜிப்சி ஓட்டுனர் ராய் அவரது ஜிப்சியில் வனத்தின் மற்றொரு நுழைவாயில் நோக்கி அழைத்துச் சென்றார். வழியில் காலை உணவை முடித்துக் கொள்வது நல்லது என்று அவர் சொல்ல, எங்களுக்கும் பசிக்க ஆரம்பித்திருந்த காரணத்தால் வழியில் ஒரு சாலையோர சிறு உணவகத்தில் வண்டியை நிறுத்தினோம். மிகச் சிறிய உணவகம் – காலை நேர உணவாக பூரி சப்ஜி கிடைக்கும் என உணவகத்தில் இருந்த ஊழியர் சொல்ல, அதையே அனைவருக்கும் கொடுக்கச் சொன்னோம்.


எத்தனை மடிப்பு இதன் தோல்களில்!

ஓட்டுனர் ராயையும் அழைக்க, அவர் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டதாகச் சொல்லி ஒரு தேனீரும் பீடியுடனும் நிறுத்திக் கொண்டார். ஏற்கனவே பொரித்து வைத்திருந்த பூரியுடன் சப்ஜி – கொஞ்சம் சூடாக இருக்க அனைவருக்கும் ப்ளேட்களில் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார் ஒரு ஊழியர். சிறிய உணவகமகாக இருந்தாலும் சுவை நன்றாகவே இருந்தது. பூரி சுடச் சுட பொரித்துக் கொடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் சுவை கூடி இருக்கலாம்! பூரியையும் கொடுத்த சப்ஜியையும் ருசித்துக் கொண்டிருக்கும் வேளையில் காண்டாமிருகம் பற்றிய சில தகவல்களையும், குறிப்பாக கொம்பு குறித்த தகவல்களை பார்க்கலாம்....


குட்டி வால்!

ஆஃப்ரிகா, சுமத்ரா, தெற்கு ஆசிய நாடுகள் குறிப்பாக இந்தியா, நேபாள், வங்க தேசம் ஆகிய இடங்களில் காண்டாமிருகங்கள் வசிக்கின்றன. இந்தியாவில் அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா பகுதியில் தான் அதிக அளவில் காண்டாமிருகங்கள் இருக்கின்றன.

மூன்று வகையாக காண்டாமிருகங்களைப் பிரிக்கிறார்கள் – ஆஃப்ரிகா காண்டாமிருகம், இந்தியா காண்டாமிருகம் மற்றும் சுமத்ரா காண்டாமிருகம் என மூன்று வகை. இந்திய வகை காண்டாமிருகத்தின் எடை – ஆண் காண்டாமிருகம் 2500 – 3200 கிலோ வரை எடையும், பெண் காண்டாமிருகம் 2000 கிலோ வரையும் இருக்கும்.  இத்தனை எடை இருந்தாலும், அவை சாப்பிடுவது புற்கள் மற்றும் செடிகள் மட்டுமே!


எத்தனை ஃபோட்டோ எடுப்பீங்க! விலகிச் சென்ற காண்டாமிருகம்

வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் காண்டாமிருகங்கள் இருக்கின்றன. ஆஃப்ரிகா காண்டாமிருகங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு கொம்புகளும், இந்தியா வகை காண்டாமிருகங்களுக்கு ஒற்றைக் கொம்பும் இருக்கின்றன.

முடி மற்றும் நகங்கள் வளர்வதற்குக் காரணமான KERATIN தான் கொம்புகள் வளர்வதற்கும் காரணமாக இருக்கிறது. கொம்புகளின் நடுப்பகுதி Calcium மற்றும் Melanin கொண்டது. நடுப்பகுதி திடமாகவும், வெளிப்பகுதி மென்மையாகவும் இருக்கிறது. 20 செமீ முதல் 100 செமீ வரை கொம்புகள் வளர்கின்றன.


கொம்பு தெரியுதா?


ஆறு வயது வரை காண்டாமிருகங்களுக்குக் கொம்புகள் வளர்வதில்லை. அதன் பிறகு படிப்படியாக வளர்கிறது.  ஆண் மற்றும் பெண் காண்டாமிருகங்கள், இரண்டிற்குமே கொம்புகள் உண்டு! படிப்படியாக வளர்வதால், வயதான காண்டாமிருகங்களுக்கு கொம்புகள் அதிக நீளமாகவும் வயது குறைந்த காண்டாமிருகங்களுக்கு குறைவாகவும் இருக்கிறது. இந்திய வகை காண்டாமிருகங்களுக்கு கொம்புகளின் நீளம் குறைவாகவே இருக்கிறது. ஆப்பிரிக்க வகை காண்டாமிருகங்களின் கொம்புகள் அதிக நீளமாக வளர்கின்றன.


குட்டி மான்....


தனியே தன்னந்தனியே!

காண்டாமிருகத்தின் கொம்புகளில் மருத்துவ குணம் இருப்பதாக வியட்னாம், சீனா போன்ற சில நாடுகளில் நம்பிக்கை இருக்கிறது. மேலும் அதன் கொம்புகள் நகைகளாகவும், கத்தி போன்ற ஆயுதங்களுக்குப் பிடிகளாகவும் செய்யப்படுகின்றன.  இதனால் கொம்புகளுக்காகவே பல காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகின்றன. காண்டாமிருகத்தின் கொம்புகள் அதிக விலையில் விற்கப்படுகின்றன. அதற்காகவே கொலை செய்யப்பட்டு கொம்புகள் பல்வேறு நாடுகளுக்குக் கடத்தபடுகின்றன. தற்போதைய நிலவரப்படி, ஒரு கிலோ எடையுள்ள காண்டாமிருகத்தின் கொம்பு ஒரு லட்சம் US $ வரை விலை போகிறது!


கழுகும் கிங்ஃபிஷரும்!

கொம்புகளை அரைத்து பொடியாக ஆக்கி அதை முகர்வதை வியட்னாம் மக்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அது அவர்களுக்கு ஒரு Status Symbol! கொம்புகள் புற்றுநோய்க்கு மருந்தாகவும் பயன்படுவதாக சிலருக்கு நம்பிக்கை உண்டு!


நீர்நிலையும் நீர்பறவையும்

இந்தியாவிலும் இப்படி காண்டாமிருகங்களை, அதன் கொம்புகளுக்காகவே கொலை செய்யத் துடிக்கும் கும்பல்கள் உண்டு. மனிதன் தன் தேவைகளுக்காக, அதுவும் குரூரமான தேவைகளுக்காக இறைவனின் படைப்புகளில் பலவற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறான்..... என்று தணியுமோ இவர்களின் தாகம்.....


காட்டுச் சேவல்...

யானைச் சவாரி செய்தபோது பார்த்த பெரும்பாலான காண்டாமிருகங்களுக்கு அத்தனை பெரிய கொம்புகள் இல்லை – பெரும்பாலானவை வயதில் குறைந்தவை என்பதால் போலும். வனத்தின் நடுப்பகுதிகளில் மட்டுமே வயதான காண்டாமிருகங்கள் இருக்கும் போலும். யானைச்சவாரியில் அதிக தூரம் பயணிக்க முடியாது என்பதால் பாகர்கள் அழைத்துச் செல்லவும் மாட்டார்கள். 


என்னையா ஃபோட்டோ புடிக்கறீக!

காண்டாமிருகம் பற்றி பல தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. நாங்களும் காலை உணவினை முடித்துக் கொண்டு அடுத்த பயணத்தினைத் துவங்க தயாராகி விட்டோம். அடுத்த பயணம் எங்கே?  அதுவும் வனத்தினுள் தான். இம்முறை வனத்தினுள் ஒரு காட்டு யானையிடம் மாட்டிக்கொண்டோம்....  பயங்கரமான அனுபவம் அது. அது பற்றி வருகின்ற பதிவில் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


16 கருத்துகள்:

  1. காண்டாமிருகத்தைப் பற்றிய தகவல்கள் சிறப்பு..

    காட்டு யானையை விரட்டியடித்த (!) செய்திக்கு - ஆவல்!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  2. 'நல்லா இருந்தது உங்கள் காண்டாமிருகம் பார்த்த அனுபவம். நிறைய நெட் ஜியோ போன்ற சேனல்கள் பார்ப்பதால், இடுகையை ரிலேட் செய்ய முடிந்தது. காட்டுச் சேவலை இப்போதுதான் பார்க்கிறேன். இதைப் பற்றி புகழ் பெற்ற ஆங்கில நாவலில்தான் வாசித்திருக்கிறேன். (popylon, henry shariar)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. பதிவுக்கு மேட்டர் திரட்ட நீங்கள் பட்ட சிரமத்தை விட போட்டோ எடுக்க நீங்கள் பட்டிருக்கக்கூடிய கஷ்டம் நன்கு புரிகிறது . Hats off to you !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  4. புகைப்படங்கள் அனைத்தும் ஸூப்பர் ஜி
    காட்டுச்சேவல் மிகவும் அழகு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. காண்டாமிருகங்கள் காண அழைத்துச்சென்றமைக்கு நன்றி. தங்களின் ரசனைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. இயற்கையை அழிப்பதில் மனிதனுக்கு நிகர் இல்லை! பாவம் காண்டா மிருகங்கள்! தகவல்கள் வியக்க வைத்தன! படங்கள் வழக்கம்போல சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  8. அருமையான தகவல் ஜி காண்டாமிருகம் குறித்து. அறியாத தகவல்கள். ம்ம்ம்மனிதனின் சுயநல புத்தி என்றுதான் தணியுமோ. இப்படிக் கொம்பிற்காகக் கொன்று சம்பாதிக்கின்றார்களே....இறைவனின் படைப்புகளை ரசிப்பதை விட்டு இப்படிக் குரூரமாகச் செய்கிறார்களே..

    துரத்திய யானை !ஆ! இதோ வாசிக்கச் செல்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....