தொகுப்புகள்

சனி, 10 செப்டம்பர், 2016

அட்டகாசமான முட்டைக்கோஸ் வருவல்

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 47

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

ஜஸ்வந்த் சிங், சேலா, நூரா சகோதரிகள், ராணுவ வீரர்களின் தியாகங்கள் ஆகியவற்றைப் பற்றி சென்ற இரண்டு பகுதிகளில் பார்த்தோம். ஜஸ்வந்த் கட் எனும் அந்த நினைவிடத்தில் 1962-இல் நடந்த சீனப் போர் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு அங்கிருந்து மீண்டும், தவாங் நோக்கிய எங்கள் பயணத்தினைத் தொடங்கினோம். தவாங் சென்று சேர்வதற்கு முன்னர் இன்னுமொரு வேலையும் இருக்கிறது! வழியே ஜங் எனும் இடத்தில் மதிய உணவிற்கான ஏற்பாடு செய்திருந்தார் அருணாச்சலப் பிரதேச நண்பர். ஆனால் நாங்கள் மதிய நேரத்தில் அங்கே சென்று சேர முடியவில்லையே....





ஜஸ்வந்த் கட் நினைவிடத்தில் இருந்தபோது ஜங்-கில் இருக்கும் அலுவலகத்திலிருந்து தொடர்ந்து அழைப்பு வந்தபடியே இருந்தது. அங்கிருக்கும் ஒரு தெரிந்த உயர் அதிகாரி எங்களுக்காக காத்திருந்தார். எனவே ஓட்டுனர் ஷம்புவிடம் விரைந்து ஜங் நோக்கி செல்லுமாறு சொன்னோம்.  அவரும் அந்த கரடு முரடான பாதைகளில் முடிந்த அளவு வேகமாக வாகனத்தினைச் செலுத்தினார். மாலை நேரம் ஆகிவிட்டதால் சூரியன் தனது கிரணங்களால் வானத்தில் ஓவியம் தீட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தான். பயணித்தபடியே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு ஜங் அலுவலகம் சென்று சேர்ந்தோம்.

அங்கே காத்திருந்த நண்பரின் நண்பரும் அந்தப் பகுதியில் அலுவலகத்தில் இருக்கும் உயர் அதிகாரியும் எங்களை வரவேற்று அவரது அலுவலகத்தின் உள்ளே அழைத்துச் சென்றார். தேநீரும் என்னவென்று தெரியாத ஒரு நொறுக்ஸும் தந்தார். ஒரு தட்டு நிறைய இருந்த அந்த நொறுக்ஸ் மிகவும் பிடித்திருக்கவே அவரிடமே கேட்க, அது முட்டைக் கோஸ் வருவல் என்று சொல்லி அசாம் பகுதி மக்கள் இதைச் செய்வார்கள் என்றும் இந்த வருவல் அவர் மனைவி செய்தது என்றும் சொல்லி, நன்றாக இருக்கிறதா என்றும் கேட்டார்.

தேநீரும் அந்த முட்டைக்கோஸ் வருவலும் மிகவும் நன்றாக இருப்பதாகச் சொல்லி, அதன் செய்முறை தெரிந்தால் சொல்லச் சொன்னோம்.  அவருக்குத் தெரியாது என்று சொல்ல, தெரியவில்லை என்றாலும் கிடைத்தபோது சாப்பிடுவோம் என அதைக் காலி செய்தோம்.  கோஸ் என்று தெரியாத அளவிற்கு அத்தனை மெலிதாக நறுக்கி அதை எண்ணையில் பொரித்து அதிக காரம் இல்லாது உப்பு சேர்த்து மிகவும் நன்றாக இருந்தது அந்த முட்டைக்கோஸ் வருவல். இதுவரை முட்டைக்கோஸை அப்படி சாப்பிட்டதே இல்லை. இனியும் சாப்பிடக் கிடைக்குமா என்பதும் தெரியாது.

அந்த அலுவலக உயர் அதிகாரியின் பெயரும் கொஞ்சம் வித்தியாசமானது. அந்த பெயரை தலைநகரில் சொன்னால் கெட்ட வார்த்தை! வடக்கிலும் பல பெயர்கள் இப்படி உண்டு. அந்த வார்த்தை தமிழகத்தில் கெட்ட வார்த்தை! ஒரு மாநிலத்தில் பேசும் மொழியின் சில வார்த்தைகள் அடுத்த மாநிலத்தில் வசவு வார்த்தையாக மாறி விடுகிறது! அவர் பெயர் சொல்லும்போது கொஞ்சம் தடுமாறித்தான் அவரிடம் பேசினேன். நான் தில்லியிலிருந்து வருகிறேன் என்று சொன்னதும் அவருக்கும் புரிந்து விட்டது என் தடுமாற்றம். இருந்தாலும் இரண்டு பேருமே சமாளித்துக் கொண்டோம்!

மதிய உணவே அவர் ஏற்பாடு செய்திருக்க, நாங்கள் அங்கே சென்று சேர்ந்த போது மாலையாகி விட்டது. அவரது அலுவலகத்திற்குச் சென்று அவரைச் சந்தித்த பின்னர் இரவு உணவினையாவது அவருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  மதியம் மோமோஸ் மட்டுமே சாப்பிட்டதால் இரவு உணவினை விரைவாக சாப்பிட்டு விடலாம் என முடிவு எடுத்தோம். உணவு ஏற்பாடு செய்திருந்தது அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஒரு தங்குமிடத்தில் என்பதால் அங்கே வாகனத்தில் சென்று சேரவும், மின்சாரம் போகவும் சரியாக இருந்தது.

மெழுகுவர்த்திகளின் ஒளியில் பெரிய மேஜையில் வரிசையாக சைவ, அசைவ உணவுகள் வைத்திருந்தார்கள். தேவையானவற்றை அவரவர்கள் எடுத்து சாப்பிடும்படி வைத்திருந்தார்கள் – Mini Buffet! அவரவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு இருக்கைகளில் அமர்ந்தோம். காலை சிங்ஷூவில் சாப்பிட்டதற்குப் பிறகு முழுமையான உணவு இரவு 6.45 மணிக்கு! நாங்கள் ஆறு பேர், எங்கள் ஓட்டுனர் ஷம்பு, அருணாச்சலப் பிரதேச உயர் அதிகாரி, அவரது உதவியாளர்கள் என அனைவரும் உணவினை ருசித்துச் சாப்பிட்டபடியே எங்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டோம். 

அந்த உயர் அதிகாரி தில்லி வரும்போது என்னைச் சந்திப்பதாகச் சொல்லி, அவரது தில்லி அனுபவங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.  தில்லி வரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவம்! வெகு சிலருக்கே தில்லி பிடித்திருக்கிறது – அவருக்கும் தில்லி பிடிக்கவில்லை! தில்லி பலருக்கும் கசப்பான அனுபவங்களையே தந்திருக்கிறது போலும்!

இரவு உணவினை சாப்பிட்டு முடித்த பிறகு அங்கிருந்து மீண்டும் புறப்பட்டோம். அங்கிருந்து தவாங் சென்று சேர்ந்த போது இரவு எட்டு மணி. எங்களுக்கு அங்கேயும் அருணாச்சலப் பிரதேச அரசின் தங்குமிடம் ஒன்றில் தான் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் அருணாச்சல நண்பர். நாங்கள் சென்று சேர்வதற்கும் அங்கே இருக்கும் இன்னுமொரு மலையாள நண்பர் வருவதற்கும் சரியாக இருந்தது! மூன்று அறைகளை எங்களுக்காக ஒதுக்கி இருந்தார்கள். வசதியான அறைகளில் எங்கள் உடைமைகளை வைத்து விட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டோம்.

அதன் பிறகு என்ன நடந்தது! கொண்டாட்டங்கள் தொடங்கின! அது பற்றிய விவரங்கள் அடுத்த பகுதியில்.....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து....

18 கருத்துகள்:

  1. அப்படி என்ன பெயர்?!!

    முட்டைகோஸை எண்ணெயில் பொரித்தால் மொறுமொறு என்று வருமா என்று பார்க்க வேண்டும்!

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெலிது மெலிதாக நறுக்கி பொரித்துப் பாருங்களேன்! :))

      பெயர் என்ன? :) சொல்ல வேண்டாம் என்று தானே சொல்லவில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அருமை! எனக்கு தில்லி பிடிக்கும். ஆனால் அங்கிருக்கும் ட்ராஃபிக்தான் பிடிக்காது. ஊருக்குள் வருமுன் இருக்கே அந்த ரப்பிஷ் டம்ப் குன்று... அங்கே ஆரம்பிக்கும் போக்குவரத்துத் தொல்லை குருகிராமம் வரை தொடர்கிறது பாருங்க..... அது நரகம். சில சமயம் 3 மணி நேரம்கூட ஆகிவிடுகிறது..... :-(

    முட்டைக்கோஸ் வருவல் செய்முறை கிடைச்சால் சொல்லுங்க. எங்களுக்கு இதுதான் இங்கே. முட்டைக்கோஸ் தின்னு தின்னு சமைச்சு சமைச்சு ஒரே போர்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லி ட்ராஃபிக் - கொடுமையானது - அதுவும் குருகிராமம் வாகனங்கள் வரிசை ரொம்பவே நீளம்.........

      வருவல் செய்முறை கேட்க வேண்டும் - அசாமி நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்க வேண்டும்! கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  3. முட்டைக்கோஸை வதக்கி பாஜியா, சுண்டல் போன்றவற்றின் மேல் தூவித் தருவாங்க, ராஜஸ்தான், குஜராத்தில் எல்லாம். :) இது சாப்பிட்டுப் பார்த்தாத் தான் தெரியும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அப்படி அல்ல! மெலிது மெலிதாய் நூல் போல நறுக்கி இருந்தார்கள் - அதன் பிறகு பொரித்து இருப்பார்கள் என நினைக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  4. மொழி, கலாச்சாரம் வித்யாசமான பகுதியில் பயணம். தொடர்கிறோம். எனக்கு உணவு விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்துகொள்வது கடினம். உங்கள் அனுபவத்தைப் படித்துத் திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான பகுதி தான். உணவு விஷயம் மட்டுமல்ல, பல விஷயங்களில் Adjust செய்து கொண்டால் தான் இம்மாதிரி பயணங்கள் செல்ல முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. #அங்கே இருக்கும் இன்னுமொரு மலையாள நண்பர் வருவதற்கும் சரியாக இருந்தது!#
    மலையாளிகள் இல்லாத இடமே கிடையாது போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  6. முட்டைகோஸ் பொரியல்...
    நான் முட்டைக்கோஸ் விட்டு நாலு வருசமாச்சு...
    மலையாளிகள் இல்லாத இடமும் இல்லை... தண்ணி அடிக்காத மலையாளியும் இல்லை போல... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். அவர்கள் இல்லாத இடமில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  7. முட்டைகோஸ் வறுவல் செய்து பார்க்க வேண்டும் மலையாளிகள் எண்டெர்ப்ரைசிங் மக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  8. முட்டைக்கோஸ் வறுத்ததுண்டு. ஆனால் நீங்கள் சொல்லியிருப்பதும் நான் செய்ததும் அதேதானா என்று தெரியவில்லை. துருவும் அந்த க்ரேட்டரில் மடிந்து ஃப்ரில் வைத்தது போல இருக்குமே அதில் துருவினால் நன்றாக மெலிதாக வரும். பொரியல் கூட சில சமயம் அப்படிச் செய்வதுண்டு. தண்ணீர் விடாமல் கொஞ்சம் கடலை மாவு, உப்பு, சிறிது காரம் கொஞ்சம் பெருங்காயம் போட்டு பிசறி வறுத்ததுண்டு. ப்ளெய்ன் என்றால் செய்து பார்க்க வேண்டும்...

    கொண்டாட்டம்....ம்ம்ம் என்ன என்று புரிந்து விட்டது ...ஜி தொடர்கின்றோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  9. முட்டைகோஸ் வருவல் கேள்விப்பட்டது இல்லை! செய்து பார்க்கத் தூண்டுகிறது! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....