தொகுப்புகள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

மாதவம் செய்தவர்கள்


புதுக்கோட்டை சகோ கீதா அவர்கள் எழுதிய இக்கவிதையை நீங்களும் படித்திருக்கலாம். படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை படித்து விடுங்கள். மனதைத் தொட்ட கவிதை.



படிக்கும் பருவத்தில் பள்ளியில்
பதற்றமாய் இருக்கும்
வழியின்றி அருவருப்பின் உச்சத்தில்
சென்று மீள்வோம்..

பணியிடத்தில் அதற்கென்று இடமே
பார்த்திராத பொழுது மறைவிடங்கள்
நாடுவோம்..

பயணத்தில் படக்கென்று இறங்கி போகமுடியாது
பரிதவித்து அடக்கியிருப்போம்...
அதற்காக உள்ளே எதுவும் இறக்காது
ஆற்றுப்படுத்துவோம்...வயிறை...

நகரங்கள் கிராமங்கள்
எல்லாமே மாறுதலின்றி
ஒரே நிலைதான்....என்ன

கிராமங்கள் மறைவிடம்
கொடுக்கும்...

காலங்கள் மாறவில்லை
முப்பது வருடங்களாகியும்
என் சந்ததியும் அலைகின்றனர்..
எப்போதும் வீட்டுக்குள் அவசரமாய்த்தான்
நுழைவோம்...

இப்போதும் கூட்டங்களுக்குச் செல்லுகையில்
இருக்குமாவென சந்தேகத்தோடு சென்று
இல்லாது அலைவோம்...

மாதவம் செய்து பிறந்த பெண்கள்
நாங்கள்...


இன்றைக்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டை விட்டு வெளியே வரும்போது சந்திக்கும் அவலம் இது. நமது தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இதே நிலைமை தான்.  பல மாநிலங்களில் பயணித்திருக்கும் அனுபவத்தில் நான் பார்த்து வெட்கிப் போன ஒரு விஷயம் இது.

ஒரு முறை ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள தரம்ஷாலாவிற்கு தில்லியிலிருந்து பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன்.  கிட்டத்தட்ட 500 கிலோமீட்டருக்கும் மேல் தொலைவு – தில்லியின் பேருந்து நிலையத்திலிருந்து தள்ளி கழிப்பறை வசதி இல்லாத இடத்திலிருந்து தான் தனியார் பேருந்துகள் புறப்படும். ஆகையால் இப்பேருந்துகளில் பயணிப்பவர்கள் வீட்டிலிருந்து புறப்படும்போதே எல்லா வேலைகளையும் முடித்திருக்க வேண்டும். இரவு ஒன்பது மணிக்குப் புறப்பட்டால் நள்ளிரவு சமயத்தில் வழியே உள்ள உணவகத்தில் நிறுத்துவார்கள். அங்கே சென்றால் தான் கழிப்பறை வசதிகள். 

அதன் பிறகு எங்கும் நிறுத்துவதில்லை. காலை 07.30 மணிக்கு தான் தர்ம்ஷாலா சென்றடையும் அப்பேருந்து.  கிட்டத்தட்ட 07.30 மணி நேரம் எப்படித் தாங்குவது? ஆணோ-பெண்ணோ யாராலும் இயற்கை உபாதைகளை இத்தனை நேரம் அடக்குவது மிகவும் கடினம். நடுவே ஒரு இளம்பெண் ரொம்பவே முடியாமல், ஓட்டுனரிடம் வண்டியை கழிப்பறை வசதி உள்ள இடத்தில் நிறுத்தச் சொல்ல, அவ்விடத்திலேயே நிறுத்தினார் – அந்த இடம் – அத்துவானக் காடு – மலைப்பகுதி – அப்படியே ஓரமாப் போய்ட்டு வாஎன்கிறார். 

இங்கே இன்னும் ஒரு விஷயத்தினையும் சொல்ல வேண்டும் – வட மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் பெண்களை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை – குறிப்பாக ஹரியானா, உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில்! வட மாநிலங்களின் இந்த அவலம் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்...... உதாரணத்திற்கு ஒரு விஷயம் மட்டும்.....

பெரும்பாலான வட இந்திய கிராமங்களில் வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. பெண்கள் அதிகாலையிலோ அல்லது இரவு நேரத்திலோ, தங்கள் வீடுகளிலிருந்து வயல்வெளிப்பக்கமாக தண்ணீர் எடுத்துக் கொண்டு செல்வார்கள். கும்பலாகத் தான் செல்வார்கள் என்றாலும், சில தவிர்க்க முடியாத சமயங்களில் தனியாகவும் செல்ல வேண்டியிருக்கும். அப்படித் தனியாக செல்லும் பெண்களை அந்தக் கிராமத்திலுள்ள சில காமுகர்கள் வேட்டையாடி கற்பழிக்கும் கொடுமைகள் பல முறை நடந்திருக்கிறது. பெரும்பாலும் இந்த விஷயங்கள் வெளியே வருவதே இல்லை. அப்படியே வந்தாலும், காப்என அழைக்கப்படும் பஞ்சாயத்துகளிலேயே பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் – காமுகர் கிராமத்துக்கு இத்தனை பணம் கொடுக்க வேண்டும், அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது போன்ற கேவலமான தீர்ப்பாகத் தான் இருக்கும் அந்த காப் பஞ்சாயத்தின் தீர்ப்பு....... கேட்கும்போதே கோபம் கொப்புளிக்கிறது என்றாலும் ஒன்றும் செய்வதிற்கில்லை – அதிலும் அரசியல், பணபலம் என விகாரமாக பல்லிளிக்கும் நிலை...

பேருந்து விஷயத்திற்கு வருவோம்....  அந்த இளம்பெண், கழிவறை வசதி இருக்கும் இடத்தில் நிறுத்தச் சொன்னால் இப்படி நட்டநடுக்காட்டில் நிறுத்தினால் எப்படி என்று கஷ்டத்துடன் ஓட்டுனரிடம் சொல்ல, “போறதுன்னா போயிட்டு சீக்கிரமா வா, எல்லாருக்கும் நேரமாவுது பாரு!என்கிறார் அந்த ஓட்டுனர் திமிராக. அந்த இளம்பெண்ணோ தனியாக வந்திருக்க, வேறு வழியில்லாமல் கீழே இறங்க, வேறொரு பெண்ணும் துணைக்கு இறங்கினார்.  ஆண்களில் சிலரும் வேறு பக்கத்துக்குச் செல்ல, தன் நிலையைக் குறித்த ஒரு பதட்டத்துடன் தலையைக் குனிந்தபடி திரும்பினார் அந்த இளம்பெண்.  அந்த ஓட்டுனரிடம் வழியில் கழிவறை வசதி உள்ள இடத்தில் நிறுத்தாமல் இப்படி நட்டநடுக்காட்டில் நிறுத்துவது சரியா? என்று நானும் நண்பர்களும் கேட்க, ‘இப்பகுதிக்குப் புதுசா? இங்கே அப்படி வசதிகள் ஒண்ணும் கிடையாதுஎன்று திமிராகவே பதில் சொன்னார். நானும் விடாமல், பெட்ரோல் பம்புகளில் கழிவறை வசதி இருக்குமே அங்கே நிறுத்தலாமே என்றால் அதற்கும் திமிராகவே பதில் வந்தது.....

இது இப்படி இருக்க, சமீபத்தில் தமிழகம் வந்தபோது சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பள்ளி ஒன்றை பேருந்திலிருந்து காண முடிந்தது. அரசுப் பள்ளி அது – சுற்றிலும் சுவர் இருக்க, நடுவே சிறியதாய் பள்ளி – நன்கு வளர்ந்திருக்கும் புதர்களைத் தாண்டி சுவர் ஓரமாக கழிவறை – பெண்கள் பயத்தோடு அந்த புதர்களைத் தாண்டி செல்வதைப் பார்க்க முடிந்தது. இருக்கும் கழிவறையையும் சரியான முறையில் பராமரிக்காத பள்ளியை என்ன சொல்ல......

இங்கே இப்படி என்றால், சென்னையின் விமான நிலையம் அதை விட மோசமாக இருக்கிறது.  வாயில் எண்கள் 7-10 அருகே இருக்கும் பெண்களுக்கான கழிப்பறை மூடி இருக்க, அங்கே ஒரு பதாகை – கழிவறை பயன்படுத்த கீழ் தளத்துக்குச் செல்லுங்கள் என எழுதி இருக்கிறது. விமானத்திற்குள் செல்லுமுன்னர் கழிவறை பயன்படுத்த நினைத்தால் அதோகதிதான் – இரண்டு மூன்று வயதான பெண்மணிகள் ரொம்பவே திண்டாடினார்கள் – விமான நிலைய அதிகாரிகளைத் திட்டியபடியே சென்றனர் அந்த வட இந்தியர்கள் – கூடவே தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் திட்டு!

பெண்கள் பகுதி இப்படி என்றால், ஆண்களுக்கான கழிவறை இன்னும் மோசம் – திறந்திருந்ததே என்று உள்ளே போனால், அங்கே தண்ணீர் குளமாக நின்று கொண்டிருக்கிறது. அதிலும் நீச்சல் அடித்து ஒருவர் உள்ளே சென்று கழிவறையில் அமர்ந்திருக்கிறார் – அவருக்கு என்ன அவசரமோ?  அவர் உள்ளே உட்கார்ந்திருப்பது தண்ணீரில் பிம்பமாகத் தெரிகிறது – எல்லோருக்கும் ஃப்ரீ ஷோ! பராமரிப்பவர்களைத் தேடினால் யாருமே இல்லை! விமானநிலைய அதிகாரியைப் பார்த்து புகார் அளிக்கலாம் என்றால், நான் புறப்படவேண்டிய விமானத்திற்கான அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  எனவே தில்லி திரும்பியதும், ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன். இது வரை ஒரு பதிலும் வரவில்லை!

அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் செய்ய வேண்டிய முதல் வேலை – கழிப்பறை வசதிகள் – அதுவும் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும்....  மக்களும் அந்த வசதிகளை தம் வீடுகளில் எப்படி பயன்படுத்துவார்களோ அதே போல பயன்படுத்த வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு கழிப்பறைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது கூடத் தெரிவதில்லை! இந்த அடிப்படை வசதிகள் இல்லாமல் கஷ்டப்படுவது – குறிப்பாக பெண்கள் படும் கஷ்டங்கள் வரும் காலத்திலாவது அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

எத்தனை காலம் தான் இப்படியே இருக்கப் போகிறோம்......

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

24 கருத்துகள்:

  1. உண்மையிலேயே வேதனையான விஷயம். ஆண்களுக்கே சங்கடமான விஷயம் என்றால், பெண்களுக்கு எப்படி இருக்கும்? தமிழ்நாட்டுக்குள்ளேயே பேருந்துகள் இரவில் நிற்கும் இடங்களில் இலவசக்கழிப்பறை என்று எழுதி இருப்பார்கள். ஆனால் ஐந்து ரூபாய், 10 ரூபாய் என்று நோக்கம் போல அங்கு ஒருவர் வசூலித்துக் கொண்டிருப்பார். பணம் வசூலித்தால் சில கடமைகள் உண்டு. ஆனால் பணம் கட்டியிருக்கிறேன் என்று எதையும் நாம் கிளெய்ம் செய்ய முடியாது! அவ்வளவு மோசமாக இருக்கும் அந்த இடங்கள். உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது ஊரில் இரவு நேரங்களில் பேருந்து நிற்கும் இடங்கள் - அவற்றின் கழிவறைகள் மஹா மோசம்..... காசும் வாங்கிக் கொண்டு பராமரிப்பும் செய்யாமல் பணம் பறிப்பது மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.....

      நிறைய மாற்றங்கள் தேவை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. Unmai Yana nilai ...sako.....ithai matramal....yethu valarchi indiyavil

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. நான் குடும்பத்துடன் வெளியில் செல்லும் போது எனக்கும் இதே பயம் தான். ஓட்டல் சாப்பாடு, பயணம், காலநிலை ஆகிய காரணங்களால் நம் உடல் சிறிது சங்கடம் குடுக்கும். அதிலும் பக்கத்தில் ஏதும் கழிப்பறை இல்லை என்று தெரிந்தால் அப்போதே முட்டிக்கொண்டு வருவதுபோல் இருக்கும். கடந்தமுறை ஊட்டி சென்று அவஸ்த்தைப்பட்டேன். மிகக் கேவலம். கோயம்பேடு பேரூந்து நிலையத்தில் போய் பாருங்கள். வாந்தி வரும். வேறு வழியில்லாமல் உபயோகப் படுத்தவேண்டியதாயிருக்கிறது நம் நாட்டில் பொது இடங்களில் கழிப்பறைகளும் சுகாதாரமும் அமைக்கப்பட வேண்டும். விஜயன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன் ஜி!

      நீக்கு
  4. ஒவ்வொருவருக்கும் வேதனையான விஷயம் இது.. பலநூறு பேர் கூடும் சென்னை விமான நிலையத்தின் வெளியிலுள்ள கழிவறையின் நிலைமை கேவலம்..

    தஞ்சையிலிருந்து புறப்பட்டு விடியற்காலை தாம்பரத்தில் இறங்கும் போது - அங்கே சாலை ஓரத்தில் இருக்கும் கழிவறை சொல்லும் தரமன்று..

    எதிர்ப்புறம் ரயில்வே ஸ்டேஷன் சென்றால் கொஞ்சம் வசதியாக இருக்கும்.. ஆனால் நேரப்படிதான் திறப்பார்கள்.. கடந்த பிப்ரவரியில் குவைத் திரும்பும் போது - ஏதோ பராமரிப்பு பணி என்று மூடி வைத்து விட்டார்கள்..

    பல இடங்களிலும் இதே பிரச்னை தான்.. இதைப் பற்றி அரசு ஊழியர்களுக்குத் தெரியும்..

    என்றைக்குத் தீர்ப்பார்கள் - இந்தப் பிரச்னையை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றைக்குத் தீர்ப்பார்கள் - இந்தப் பிரச்சனையை...

      நம் எல்லோருடைய மனதிலும் இதே கேள்வி தான். பதில் தான் கிடைப்பதில்லை.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. அவரது கவிதையை முன்னரே படித்துவிட்டேன். தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. உலகமயமாக்கல், தொழில்நுட்பம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இதற்கொரு முடிவு கண்டபாடில்லை. வேதனையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. தூய்மை பாரத திட்டம், கழிப்பறை இல்லை என்று பெண் திருமணத்தை நிறுத்தினாள் என்பது போன்ற விளம்பரங்கள் ஆனால் இன்னும் சரியான கழிப்பறை வசதி எங்கும் இல்லை, இருந்தாலும் அதை பயன்படுத்த மாட்டேன் என்கிறார்கள் நம்மவர்கள். பழமுதிர்சோலையில் கோவிலுக்கு அருகாமையில் கழிப்பறை கட்டி இருக்கிறார்கள் , மிகவும் சுத்தம் என்று சொல்ல முடியாது இருந்தாலும் அவசரத்திற்கு பயன்படுத்தலாம்.
    ஆனால் மக்கள் மரங்களுக்கு இடையே போகிறார்கள் மக்களிடமும் விழிப்புணர்வு தேவை.
    கீதா அவர்களின் கவிதையை முகநூலில் படித்தேன். நன்றாக எழுதி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      நீக்கு
  7. இந்த தர்ம சங்கடத்தை நானும் பலமுறை அனுபவித்திருக்கிறேன். கடந்த வாரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தபோது பேருந்தை ஒரு ஒதுக்குப்புறமாக நிறுத்திவிட்டு ஆண்கள் மட்டும் சிறுநீர் கழிக்க இறங்க எங்களுடன் வந்த பெண்களில் ஒருவர் 'எங்களை பத்தி யாருமே நினைக்க மாட்டீர்களா..!' என்று கேட்க பெண்கள் பாதுகாப்பாக சிறுநீர் கழிக்க ஒரு இடத்தை தெரிவு செய்து கொடுத்து ஆண்கள் திரும்பினார். ஆனால் பெரும்பாலும் பெண்களுக்கு இப்படிப்பட்ட கரிசனங்கள் கிடைப்பதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
    அருமையான மற்றும் தேவையான பதிவு.
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

      நீக்கு
  8. விமான நிலையத்தில் (சென்னை) நீங்கள் சொன்னது சரிதான். இந்தியாவைத் தவிர எல்லா இடங்களிலும் கழிப்பறை facility நன்றாகத்தான் இருக்கிறது. (ஆனானப்பட்ட பிலிப்பைன்ஸிலும் எல்லா பெட்'ரோல் ப(B)ங்குகளிலும் கழிப்பறை இருக்கிறது. ஒரு வசதியும் பண்ணாமல், ரோட்டில போறான் என்று சலித்துக்கொள்வதில் என்ன பயன்? நீங்கள் சொன்னதுபோல், பெண்கள் பாடுதான் திண்டாட்டம்.

    93ல துபாய் சென்றபோது, ஆபீசில் இருந்த கழிப்பறை (one or two per floor, which will have facility for at least 10-12 at a time) பார்த்து அசந்துவிட்டேன். அவ்வளவு சுத்தமான பராமரிப்பு. நாம எங்கேயோ 50 வருடத்துக்கு முன்னால இருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. கவிதையின் வரிகள் சமூகத்துக்கு சவுக்கடியானது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. இதைப் பற்றிச் சொல்லி வேதனைப்படத்தான் முடிகிறது. எங்குமே சுத்தமான கழிப்பறைகளில்லை. படு மோசமாக இருக்கின்றன. சமீபத்தில் ஈசியார் ரோடில் மரக்காணத்தை சமீபிக்கும் இடத்தில் புதிய ஹோட்டல் பெரியதாக வந்திருக்கிறது அங்கு கழிப்பறை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது புதிது என்பதால் இருக்கலாம்...போகப் போகத்தான் தெரியும். ஆனால் இந்தியா முழுவதுமே என்று சொல்லலாம் கொடுமையான விஷயம் இது. நிறைய அனுபவித்துள்ளோம். குடும்பத்துடன் செல்லும் போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  11. கீதா அக்காவின் கவிதை அருமை...
    அவர் தளத்திலும் வாசித்தேன்...
    நல்ல கட்டுரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  12. ji the very sad part is that young women are abducted and gang raped when they set out to answer nature call in the nights...
    one such rape and murder had occured in our tamil nadu tanjore district a few months back....
    in tambaram area chennai one young man was raped and killed by FOUR transcegenders.... when he approached a bush to answer nature call ,,, this happened a year back...

    பதிலளிநீக்கு
  13. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Nat Chander.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....