தொகுப்புகள்

வியாழன், 29 செப்டம்பர், 2016

ஏழாவது குறுக்கு சந்து...... - பவுடர் வாசனை


நேற்று அலுவலகத்தில் பரபரப்பான நேரம். சில வேலைகளை உடனடியாக முடித்து அனுப்ப வேண்டி, அனைவரும் வேலையில் மூழ்கி இருந்தோம். பொதுவாகவே அலுவலக தொலைபேசிக்கு நிறைய அழைப்புகள் வந்த வண்ணமே இருக்குமே..  ஒவ்வொரு அழைப்பாளரிடமும் பேசி அவர்களுக்கு விஷயங்களை புரிய வைப்பதற்கென்றே அழைப்பை எடுக்கும் நபர் தனியாக சாப்பிட வேண்டும். கேள்விகள், கேள்விகள், கேள்விகள் – இடை விடாத கேள்விகள்! சொல்லும் பதில்கள் அவர்களுக்குப் பிடித்திருந்தால் நன்றி சொல்வார்கள். பிடிக்காத பதில் என்றால் இன்னும் கிளைக்கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்!

இப்படி பரபரப்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது எனது அலைபேசியில் ஒரு அழைப்பு – சேமிக்காத எண்ணிலிருந்து. பெரும்பாலும் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வரும்போது, குறிப்பாக அலுவலத்தில் பணியிலிருக்கும் போது அழைப்பை ஏற்பதில்லை. ஒரு முறை முழுவதும் அடித்து ஓய்ந்தது. தொடர்ந்து இரண்டாம் முறையும் அழைப்பு வரவே, யாருக்கு என்ன பிரச்சனையோ, எதற்கு அழைக்கிறார்களோ என்று தோன்ற அழைப்பை ஏற்றுக் கொண்ட்டேன்.......

எதிர் முனையிலிருப்பவர், யார் பேசுகிறார் என்பதை எல்லாம் சொல்லவில்லை, “நான் ஏழாவது குறுக்கு சந்துக்கு வந்துட்டேன், இதுக்குப்புறம் எப்படி வரணும்?ன்னு கேட்கிறார்.  நான் எட்டாவது முட்டுச் சந்துக்குப் போங்கஎன்று சொல்ல நினைத்தேன்! ஆனாலும், உங்களுக்கு யார்ட்ட பேசணும், தப்பான நம்பருக்கு ஃபோன் பண்ணி இருக்கீங்கஎன்று கேட்க, எதிர் முனையிலிருந்து மீண்டும் அதே கேள்வி “நான் ஏழாவது குறுக்கு சந்துக்கு வந்துட்டேன், இதுக்குப்புறம் எப்படி வரணும்?

இரண்டாவது முறையும் பொறுமையாக, தப்பான நம்பருக்கு ஃபோன் பண்ணிட்டீங்க, நம்பர் செக் பண்ணுங்கஎன்று சொல்லி, அணைப்பைத் துண்டித்தேன்.  சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பு – அதே எண்ணிலிருந்து. இந்த முறையும் தப்பான நம்பர், நம்பர் செக் பண்ணுங்க என்று சொல்ல அவரோ ஏழாவது குறுக்குச் சந்தை விட மாட்டேன் என அடம்!.... சரி இணைப்பு சரியில்லை போலும், அதனால் நான் பேசுவது கேட்கவில்லை என விட்டு விட்டேன்....

அலுவலகத்தின் வேறொரு பாகத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால் அலைபேசியை எனது இருக்கையிலேயே வைத்துவிட்டு சென்று விட்டேன்.  திரும்பி வந்து பார்த்தால், அதே தெரியாத எண்ணிலிருந்து ஏழு மிஸ்டு கால்!

ஏழாம் குறுக்கு சந்திலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறாரோ......

உலக சுற்றுலா தினம் - எதையும் சமாளிப்போம்....

செப்டம்பர் 27 – உலக சுற்றுலா தினமாகக் கொண்டாடப்படுகிறது. பயணப் பிரியனான நான் அன்றைய தினத்தில் பயணம், சுற்றுலா பற்றி ஏதாவது பதிவு போட்டு இருக்க வேண்டும்.....  ஆனாலும் எழுதவில்லை – எழுத முடியவில்லை. நண்பர் துரை செல்வராஜூ அவர்கள் தளத்தில் உலக சுற்றுலா தினம் முன்னிட்டு மிகச் சிறப்பாக அவரது ஊரான தஞ்சையின் சிறப்புகளைப் பற்றி ஊர் சுற்றலாம்என்ற தலைப்பில் எழுதி இருந்தார்.  

இந்தியாவினைப் பொறுத்த வரை, எனக்குத் தெரிந்து, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மக்கள் அதிகம் பயணம், குறிப்பாக சுற்றுலாக்கள் செய்கிறார்கள் – எங்கே சென்றாலும், எந்த ஊருக்குச் சென்றாலும், இம்மக்களை பார்க்க முடிகிறது. இவர்களைப் போலவே பெங்காலிகளும் நிறைய பயணம் செய்கிறார்கள். தமிழக மக்களும் பெங்காலிகளுடன் போட்டி போடுகிறார்கள். நான் பயணிக்கும் போது வெளிமாநிலங்களில் பல முறை தமிழகத்திலிருந்து சுற்றுலாவாக வந்துள்ளவர்களைப் பார்த்திருக்கிறேன்.  சிலரிடம் பேசியும் இருக்கிறேன்.

நேற்று வீட்டின் அருகே உள்ள சாலையில் நடந்து கொண்டிருந்தேன். கமகமவென்று பவுடர் வாசனைஎங்கிருந்தோ வந்தது. பொதுவாக இந்த ஊர் மக்கள் நாத்தமருந்து என நான் அழைக்கும் செண்ட் வாசனையோடு தான் அதிகம் வருவார்கள் – பவுடர் வாசனை நம் ஊருக்கே உரியது! பவுடர் வாசனை பற்றி வேறு சில நினைவுகள் உண்டு – அது பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன் – பவுடர் வாசனை தாக்கத்தில் யாருப்பா அது, இத்தனை பவுடரோட, அதுவும் ராத்திரி ஒன்பது மணிக்குஎன்ற எண்ணத்தோடு திரும்பினேன்.

காலில் செருப்பில்லாமல் ஒரு முதியவர், பேண்ட், டக் இன் செய்யாத சட்டை, முகம் மட்டுமல்லாது, காலர் பகுதி, கழுத்துப் பகுதி, சட்டையின் முதல் இரண்டு பட்டன்கள் திறந்திருக்க, நெஞ்சுப்பகுதி முழுவதும், ஒரு டப்பா நிறைய கொட்டிக்கொண்ட பவுடரோடு, என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். பார்க்கும்போதே நம்ம தமிழ்நாடு என்று தைரியமாகச் சொல்ல முடியும்! அந்தச் சந்தில் என்னருகே வந்து, கையை நீட்டினார். கையில் அச்சடித்துக் கொடுக்கப்பட்ட ஒரு சீட்டு – “Chugh Charitable Trust”  என முகவரியோடு அச்சடித்து இருந்தது. அந்தச் சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு தமிழில் கேட்கிறார் – இந்த சந்து தான்னு நினைக்கிறேன் – இந்த இடம் எங்க இருக்கு?என்கிறார்! அதுவும் அந்த இடத்திற்கு எதிரே நின்று கொண்டு!  அவருக்கு இதோ இருக்கு எனச் சொன்ன பின்னர், எந்த ஊருலேருந்து வந்து இருக்கீங்க?என்று கேட்டேன்.  சென்னையிலிருந்து என்று சொல்லி, வழி சொன்னதற்கு நன்றி கூட சொல்லாது மேலே நடந்தார்....

ஹிந்தி தெரிகிறதோ இல்லையோ, தமிழ் மட்டுமே தெரிந்த இவர் போன்ற பலரும் குழுவாக பயணித்து வந்து விடுகிறார்கள். இப்படி வரும் பெரும்பாலான பயணிகள் தங்கும் விடுதியான Chugh Charitable Trust வாசலில் நிரந்தரமாக இரு தரைக் கடைகள் – ஒன்று குழந்தைகளுக்கான துணி விற்கும் ஒரு முதியவர் – இன்னுமொன்று சைக்கிளில் வந்து துணிப்பைகள் விற்பவர்! இரண்டு பேரும் வட இந்தியர்கள்! அவர்களிடம் தமிழிலேயே பேசுகிறார்கள், பேசித் தள்ளுகிறார்கள் – வியாபாரிகள் எண்களை மட்டும் தமிழில் தெரிந்து வைத்திருக்கிறார்கள், விலையை தமிழிலோ ஆங்கிலத்திலோ சொல்ல, இவர்கள் தமிழிலேயே பேரம் பேசுகிறார்கள்......  ஒன்றிரு முறை நின்று வேடிக்கைப் பார்த்திருக்கிறேன்.

ஹிந்தி தெரியாவிட்டாலும் தமிழை வைத்துக் கொண்டே “எதையும் சமாளிப்போம்என்று வந்து விடுகிறார்கள்.  சுற்றுலா மோகம், நிறைய இடங்களைப் பார்க்க வேண்டும் எனும் ஆசை அவர்களை இப்படி மொழி தெரியாத தூர தேசங்களுக்கும் வர வைக்கிறது...... ஒரே ஒரு மொழி தெரிந்த அவர்களைப் போன்றவர்களே, எதையும் சமாளிக்கலாம் என்று தைரியத்தோடு பயணம் செய்ய, இரண்டுக்கும் மேலான மொழிகள் தெரிந்திருந்தும் பயணம் செய்ய ஆசையே இல்லாது பலரும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.......

புது வருடம் ஆரம்பிக்கும்போது ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு Resolution வைத்திருக்கிறோம்  - இந்த வருடத்தில் இதைச் செய்வேன் என்று!  சுற்றுலா தினம் கொண்டாடும் இந்தச் சமயத்தில் நாமும் ஒரு Resolution வைத்துக் கொள்வோம் - வருடத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும் என்பது தான் அது! ஏற்கனவே வருடத்தில் நிறைய பயணம் செய்யும் நான் இப்படிச் சொல்வது சரி தானே!

ஆதலினால் பயணம் செய்வீர்!

வேறு சில எண்ணங்களோடு நாளைய பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

24 கருத்துகள்:

  1. அன்பின் வெங்கட்..

    தனித்துவமான பதிவுகள் மூலம் பல்வேறு சுற்றுலா தலங்களை -
    அழகான படங்களுடன் எங்களுக்கு அறிமுகம் செய்பவர் தாங்கள்...

    சுற்றுலா தினத்தில் - எனது தளத்தினைச் சுட்டிக் காட்டிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி..

    இந்த பதிவுக்கென - எடுத்து வைத்திருந்த படங்களைக் கொண்ட Usb Flash Drive எங்கோ சிக்கிக் கொண்டது.. அந்தப் படங்களைப் பதிவில் வழங்க முடியாததில் சற்றே வருத்தம்..

    >>> வருடத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும்!.. <<<

    எனது விருப்பமும் இதுவே!..
    நல்லதொரு பதிவு.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் - சில சமயங்களில் சேர்க்க முடியாமல் போய்விடுகிறது. இப்பதிவுக்கும் படங்கள் சேர்க்க இயலவில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  2. பயணம் இனிது.
    சுற்றுலா மனதுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியது.
    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் வரும் வட மாநில மக்கள் எண்ணிக்கை நீங்கள் சொல்வதை உறுதி செய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

      நீக்கு
  3. 'நம்பரை மாத்தி டைப் பண்ணி தவறானவர்களுக்குப் போன்போடுபவர்களின் இம்சை சமயத்தில் எரிச்சலாக இருக்கும். முதலிலேயே, 'எட்டாவது முட்டுச் சந்துக்குப் போங்க' என்று சொல்லியிருந்தால் அடுத்த 8 Callகளையும் தவிர்த்திருக்கலாம்.

    நீங்க ஓய்வு பெற்றபின்பு, வட இந்தியப் பகுதிகளுக்கு பல சுற்றுலாக்கள் organize பண்ணினீங்கன்னா, நிறைய குழுக்களை அழைத்துச்செல்ல முடியும். இதுல அங்க அங்க, தென்னிந்திய உணவை வழங்குபவர்களையும் arrange பண்ண முடியும். ஹிந்தி தெரியாம எங்க ரிமோட் இடங்களுக்கெல்லாம் சுற்றுலா செல்ல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எட்டாவது முட்டுச்சந்துக்கு போக சொல்ல மனசு வரலையே....

      சுற்றுலா organize செய்வது கொஞ்சம் கடினமான வேலை - நமக்காகச் செய்வதற்கும் அடுத்தவர்களுக்காகச் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. வருடத்தில் ஒரு முறையாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும் / இது வரை நீங்கள் எழுதிய பதிவுகளில்குடும்பத்தோடு சென்றதாகவே தெரியலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடும்பத்துடன் சென்ற பயணங்கள் பற்றி எனது மனைவி எழுதி இருக்கிறார் - அவர் பக்கத்தில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  5. இருந்தாலும் அவரை ஏழாவது சந்திலிருந்து மீட்டு இருக்கலாம் ஜி
    அன்பின் துரை ஜி அவர்களின் பதிவைப்படித்தேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீட்டிருக்கலாம்..... ம்ம்ம்ம்

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. வருடத்திற்கு ஒரு முறை சுற்றுலா
    நம்மை புதுப்பித்துக் கொள்ள
    அவசியம் செல்லத்தான் வேண்டும் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. அதுதானே சுற்றுலா என்றால்
    பதிவர்களில் அதிகம் நினவுக்கு வருவது
    நீங்களும் துளசிகோபால் அவர்களும்தான்
    நீங்கள் சுற்றுலா தினத்தில் பதிவு போடாமல்
    இருக்கிறீர்களே என நினைத்தேன்
    என் குறைத் தீர்த்தமைக்கு நன்றி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  8. அருமையான பதிவு சார், புதியதை தேடுபவர்களுக்கே பயணத்தில் ஆர்வம் இருக்கும். கேரளாவில் டீ கடை வைத்திருக்கும் ஒருவர் தன் மனைவியுடன் உலகின் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அவரை பற்றிய 10 நிமிடகுறும்படம் இந்த இணைப்பில் ( https://www.youtube.com/watch?v=GdDl_YFfhwc ) காண கிடைக்கிறது. ஏன் பயணம் செய்கிறார், எப்படி பயணம் செய்கிறார், தான் பார்க்கும் வேலை மற்றும் அனுபவங்களையும் இங்கு பகிர்ந்துகொள்கிறார். பயணம் செய்ய நினைப்பவர்கள் மட்டும் அல்ல அனைவருமே பார்க்க வேண்டிய ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதொரு காணொளி. அவருக்கு இருக்கும் அளவுக்கு பயண ஆசை இல்லாவிட்டாலும், குறைந்த பட்சமாவது ஆசையும், அந்த ஆசையைச் செயல்படுத்தும் எண்ணமும் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சோமேஸ்வரன்.

      நீக்கு
    2. தமிழில் நான் படித்ததில் பயணத்தை பற்றிய மிக சிறந்த கட்டுரை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
      http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/article5146919.ece

      நீக்கு
    3. நன்றி சோமேஸ்வரன். நானும் படித்தேன்.

      நீக்கு
  9. ஏழாவது குறுக்குச் சந்து...
    பாவம் இப்படித்தான் பலர் நம்பரை மாற்றிப் போட்டுவிட்டு அதை சரி பண்ணாது மீண்டும் மீண்டும் அடிப்பார்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  10. ஹஹஹஹஹஹ் ஏழாவது குறுக்குச் சந்து!!! சுற்றுலா பயணம் ஆம் வருடத்தில் ஒரு முறையேனும் போக வேண்டும்...செல்வதுண்டு. குடும்பத்துடன்...

    கீதா: மேலே உள்ள துளசியின் கருத்துடன்..எனக்கும் இப்படியான அழைப்புகள் வந்து தொல்லப்படுத்துவதும் உண்டு. அவர்களையும் குற்றம் சொல்ல முடிவதில்லை...எண்ணைத் தவறாக அடித்திருக்கலாம்...அதைச் சரி பண்ணத் தெரியாமல்....எனக்கு இப்படி அடிக்கடி ஹிந்தியில் அழைப்புகள் வரும். நான் எனக்குத் தெரிந்த ஹிந்தியில் அடித்துவிட்டாலும் மீண்டும் மீண்டும் வரும்...

    சுற்றுலா / பயணம் மிகவும் பிடித்த ஒன்று...ஆதலால் பயணம் செய்வீர் உங்கள் கருத்திற்கு எனது கையும் உயர்கின்றது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  11. ji pl do not expect old people to thank you for your help....
    i recollect that my grandfather who was in fine shape had lost all his ....
    and just live.... let us all help senior citizens in all ways....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகை..... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Nat Chander

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....