தொகுப்புகள்

வியாழன், 27 அக்டோபர், 2016

தவாங்க் – பிரம்மாண்ட புத்தர் சிலை - அழகிய ஓவியங்கள்.....


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 61

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


பிரம்மாண்ட புத்தர் சிலை.....


தவாங்க் மோனாஸ்ட்ரி - வெளிப்புறத் தோற்றம்...

PTSO Lake-ல் சிறிது நேரம் இயற்கையை ரசித்தபடி இருந்த பிறகு தவாங்க் நகர் நோக்கி பயணத்தினைத் தொடர்ந்தோம். தங்குமிடம் செல்வதற்கு முன்பாக தவாங்க் நகரின் புகழ்பெற்ற Monastery பார்க்க வேண்டும் என்பது எங்கள் திட்டம்.  ஓட்டுனர் ஷம்புவும் புத்த மதத்தினைச் சேர்ந்தவர் என்பதால் அங்கே சென்று வர வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருந்தார்.  ஏரியிலிருந்து தவாங்க் Monastery வந்து வாகனத்தினை நிறுத்தி உள்ளே சென்றோம்.  அழகிய தோரண வாயிலைக் கடந்து உள்ளே வந்தோம். 


புத்தர் சிலை – வேறு கோணத்தில்.....


பிரார்த்தனை செய்தபடி நடக்கும் புத்தபிக்கு.....

மிகவும் பழமையான புத்த மதத்தின் வழிபாட்டுத் தலம் இது. இந்தியாவில் இருக்கும் புத்த மத வழிபாட்டுத் தலங்களில் மிகப் பெரியது இது தான். ஆசியாக் கண்டத்தில் இரண்டாவது பெரிய புத்த மத வழிபாட்டுத் தலமும் இது தான். முதலாம் இடத்தில் இருப்பது திபெத்தின் லாசா. கடல் மட்டத்திலிருந்து 3300 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் சுமார் 700 புத்தபிக்குகளும், 450 லாமாக்களும் வசிக்கிறார்கள். புத்தமதக் கொள்கைகளை பரப்பும் விதமாக பல்வேறு செயல்பாடுகள் இங்கே உண்டு. 17-ஆம் நூற்றாண்டில் Mera Lama Lodre Gyatso என்பவரால் அமைக்கப்பட்டது இந்த Monastery.  எப்படி அமைக்கப்பட்டது என்பதைப் பார்க்கலாமா.....


வெளிப்புறத்தில் பிரார்த்தனை உருளை.....

இப்படி ஒரு Monastery இந்தியாவில் அமைக்கப்பட வேண்டும் என்பது ஐந்தாம் தலாய் லாமாவின் விருப்பம். அந்த விருப்பத்தினை நிறைவேற்ற Mera Lama முடிவு செய்தார். ஆனால் எந்த இடத்தில் இந்த Monastery அமைப்பது என்பதை அவரால் முடிவு செய்ய இயலவில்லை.  பல இடங்களுக்குச் சென்று பார்வையிட்டாலும், இந்த இடத்தில் கட்டலாம் என்று அவரால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. சரி ஆண்டவன் விட்ட வழி – எங்கே கட்டவேண்டும் என்பதை ஆண்டவனே நமக்கு உணர்த்தட்டும் என முடிவு செய்து ஒரு குகைக்குள் சென்று அமைதியாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.  நீண்ட நேரத்திற்குப் பிறகு குகையிலிருந்து வெளியே வந்து பார்த்தால், வெளியே நிறுத்தி வைத்திருந்த அவர் குதிரை காணாமல் போயிருந்தது!


மோனாஸ்ட்ரி வெளியே நண்பர்களுடன்.....

நாமாக இருந்திருந்தால், ஆஹா, எவனோ குதிரையை ஆட்டையப் போட்டுட்டான் போல இருக்கே, என்று நினைத்திருப்போம்.  Mera Lama இதுவே ஆண்டவன் நமக்குத் தரும் ஒரு வித Signal – குதிரையைத் தேடுவோம் என முடிவு செய்து மலைப்பிரதேசம் முழுவதும் தேடியபடி அலைந்தார். குதிரையும் கிடைத்தது. அவரது குதிரை ஒரு மலை உச்சியில் நின்று கொண்டிருந்தது. குதிரை வழியாக Monastery அமைக்க தகுந்த இடத்தினை கடவுள் நமக்கு காட்டிக் கொடுக்கிறார் என, Mera Lama குதிரை நின்று கொண்டிருந்த அந்த மலை உச்சியை தேர்ந்தெடுக்கிறார்.  Tawang Monastery அங்கேயே அமைகிறது.  Tawang Monastery என்பதற்கு Horse Chosen என்ற அர்த்தமும் உண்டு!


ஒரு ஸ்தூபி.....

Tawang Monastery-க்கு திபெத்திய மொழியில் Gaden Namgyal Lhatse என்ற பெயரும் உண்டு.  இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? தேவலோக சுவர்க்கம்..... சுவர்க்கம் எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. என்றாலும் இது தான் சுவர்க்கம் என நாம் சொல்ல முடியுமா.....   அவர்கள் மொழியில் அவர்கள் அழைப்பதையும் நாம் ஏற்றுக் கொள்வோம்! இந்த இடம் புத்த மத குருவாக இருக்கும் தலாய் லாமாக்களின் வாழ்வில் முக்கியமான இடம் பெற்ற ஒன்று.  14-வது தலாய் லாமா திபெத்தில் இருந்து வெளியேறியபோது இந்த இடத்தில் தான் பாதுகாக்கப்பட்டார் என்பதும் செய்தி.




சுவர் ஓவியங்கள்.....

சுற்றியுள்ள கிராமத்து மக்களின் உதவியுடன் இந்த தவாங்க் Monastery மிக அழகாக உருவாக்கப்பட்டது. இயற்கைச் சீற்றங்களிலும் அன்னியப் படையெடுப்புகளிலும் சில பகுதிகள் அழிந்துவிட்டாலும் இன்றைக்கும் அழகாக இருக்கிறது இந்த Monastery. உள்ளே மிகப் பெரிய புத்தர் சிலை இருக்கிறது. Mural என அழைக்கப்படும் சுவர் ஓவியங்கள் கோவிலின் பக்கச் சுவர்களில் அமைத்திருக்கிறார்கள். மிக அழகான ஓவியங்கள் அவை.  ஒவ்வொரு ஓவியத்தினையும் ரசித்து ரசித்து வரைந்திருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் படம் எடுத்துக் கொண்டோம். 


நான் அழகா இருக்கேனா.....

Monastery-க்கு சுற்றுலாப் பயணிகள் தவிர உள்ளூர் மக்களும் நிறையவே வருகிறார்கள். அப்படி வந்தவர்களின் ஒருவர் சிறு குழந்தையுடன் வந்திருக்க, அக்குழந்தை அழகழாக அலைபேசி மூலம் அம்மா எடுக்கும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.  அக்குழந்தையையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்!




சுவர் ஓவியங்கள்.....

ஆனால் சமீப காலமாக இந்த Monastery இயற்கைச் சீற்றங்களினால் அழிந்து விடுமோ என்ற அபாயம் இருந்து வருகிறது.  மலையுச்சியில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் பல முறை மலைச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.  அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஏரியும், மலைப்பகுதிகளில் அரிப்பு ஏற்படுத்தி ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பராமரித்தால் மட்டுமே இந்த வழிபாட்டுத் தலத்தினை காப்பாற்ற முடியும் என்று தோன்றுகிறது.




அருங்காட்சியகத்தில் இருந்த சில பொருட்கள்.....
17-ஆம் நூற்றாண்டு சமையல் பாத்திரங்கள்...

இங்கே ஒரு அருமையான அருங்காட்சியகமும் இருக்கிறது. பல வருடங்களாக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், சிலைகள், புத்தர் விக்கிரகங்கள் என பலவும் இங்கே காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பத்து ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு நம்மை அனுமதிக்கிறார்கள். புகைப்படக் கருவிகளுக்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை என்பதில் மகிழ்ச்சி!


வித்தியாசமாய் மூன்று முகங்களுடன் ஒரு கூஜா.....

எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்து, சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு தங்குமிடம் நோக்கி பயணித்தோம்.  அன்றைய தினத்தில் பலவித அனுபவங்கள் – அனைத்தையும் ஒரு முறை மனக்கண்ணில் மீண்டும் பார்த்தபடியே அமர்ந்திருக்க, தங்குமிடம் வந்திருந்தது. அடுத்த நாள் தவாங்கிலிருந்து புறப்பட வேண்டும் – வரும்போது கரடு முரடான சாலை வழியாக வந்ததில் உடல் முழுவதும் வலி! கௌஹாத்தி திரும்ப ஹெலிகாப்டரில் செல்வது என்பது எங்கள் திட்டமாக இருந்தது. அது செயல்படுத்தமுடிந்ததா இல்லையா என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து....

14 கருத்துகள்:

  1. >>> புகைப்படக் கருவிகளுக்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை..<<<

    ஆச்சர்யம் தான்..
    அழகிய படங்களுடன் - தவாங்க் மனதைக் கவர்கின்றது.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

      நீக்கு
  4. அருமை....

    நம்மைச் சுற்றியுள்ள அழகியலை காட்சிப்படுத்தும் தங்கள் பணி போற்றுதலுக்குரியது.

    தொடர்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் குணசீலன்.

      நீக்கு
  5. அழகான புத்தர் சிலைகள். அருஙகாட்சியகப் பார்வை. அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. இந்த வண்ண புத்தரை கேங் டாக்கில் பார்த்த மாதிரி இருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே வண்ணத்தில் பார்த்திருக்கலாம்... புத்தர் சிலைகள் பல இடத்திலும் இந்த வண்ணத்தில் உண்டு.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  7. அட புகைப்படம் எடுக்க கட்டணம் இல்லை என்பது வியப்பாக உள்ளது. படங்கள் அருமை. பல தகவல்கள்...தொடர்கின்றோம்

    பதிலளிநீக்கு
  8. பெரும்பாலான இடங்களில் புகைப்படக் கருவிக்கு கட்டணம் வாங்கி விடுகிறார்கள். இங்கே இல்லை என்பதில் மகிழ்ச்சி.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....