தொகுப்புகள்

புதன், 16 நவம்பர், 2016

முகமூடிக்குள் தலைநகர் தில்லி….

 படம்: இணையத்திலிருந்து....

நாள் முழுவதும் புகைமண்டலத்துக்குள் தான் இருக்கிறது தலைநகர் தில்லி. அதுவும் கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவிற்கு புகைமண்டலம் தலைநகரைச் சூழ்ந்துள்ளது.  பொதுவாக டிசம்பர்-ஜனவரி மாதங்களில் Fog என பனிமூட்டம் இருப்பது தலைநகரில் சாதாரணமாக நடக்கக்கூடியது.  கடந்த சில வருடங்களாக தீபாவளி சமயத்திலிருந்தே Smog எனப்படும் புகைமூட்டமும் தலைநகரைச் சூழத் தொடங்கியிருக்கிறது.  அதிலும் இந்த வருடம் பல சாதனைகளை முறியடிக்கும் அளவிற்கு, அதுவும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இந்த அளவிற்கு புகைமூட்டம் இருந்ததில்லை எனச் சொல்லும் அளவிற்கு புகைமூட்டம். 

படம்: இணையத்திலிருந்து....

தீபாவளி சமயத்தில் மிக அதிகமான அளவில் வெடி/பட்டாசுகள் பயன்படுத்துவதால் மட்டும் இந்தப் புகைமூட்டம் இல்லை.  இந்த சமயத்தில் தான் பக்கத்து மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களது நிலத்தில் விளைந்த கோதுமையினை எடுத்த பிறகு அதன் காய்ந்த தழைகளைக் கொளுத்தி விடுவார்கள்.  எல்லா விவசாயிகளும் இம்மாதிரி கொளுத்தி விடுவது வழக்கமான ஒன்று. அந்தந்த ஊர் அரசாங்கம் இம்மாதிரி கொளுத்தி விடுவதை தடை செய்திருந்தாலும் விவசாயிகள் கொளுத்தி விடுவதை நிறுத்துவதில்லை. அவர்களுக்கு அது தான் சுலபமான வழி.

படம்: இணையத்திலிருந்து....

அந்தப் புகை வடமாநிலங்கள் முழுவதிலுமே காற்றின் வழியே பரவி தலைநகரின் போக்குவரத்து மாசு, தீபாவளி பட்டாசுப் புகை ஆகியவற்றுக்குப் போட்டியாக வந்து தலைநகர் வாசிகளை மூச்சுத் திணற வைக்கிறது.  குளிர் கால ஆரம்பம் என்பதால் இந்தப் புகைமூட்டம் மேலே செல்வதும் இல்லை.  கொஞ்சம் மழை பெய்தால் தான் இந்த புகைமூட்டம் விலக வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள். கடந்த வாரத்தில் சில நாட்கள் சூரியனே மூச்சு விடத் தடுமாறி தில்லிப் பக்கமே வரவில்லை! கொஞ்சம் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.



காலையில் வீட்டிலிருந்து அலுவலகம் புறப்படும்போது என்னதான் டெண்டிங், பெயிண்டிங் செய்து கொண்டு புறப்பட்டாலும், அலுவலகம் சேர்வதற்குள் ஏதோ கருப்பாக ஆகிவிட்ட உணர்வு பலருக்கும்! ஐஸ்வர்யா ராய் அளவிற்கு தன்னை நினைத்தவர்கள் எல்லாம் கருப்பாகி விட்டோமோ என நினைக்க வைக்கிறது இந்தப் புகைமூட்டம்.  அழகை விடுங்கள், பலருக்கு மூச்சுத் திணறல் பிரச்சனைகள் வருகிறது. குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு தில்லியின் தட்பவெட்பம் உகந்ததல்ல. இந்த Smog இருக்கும் மாதங்களில் அவர்கள் பாடு படும்பாடு சொல்ல முடியாதது…. 

படம்: இணையத்திலிருந்து....  

பள்ளிகளுக்கு மூன்று நாள் விடுமுறை விட்டிருந்தார்கள். விடுமுறையை இன்னும் நீட்டிக்கலாமா என்ற யோசனையும் உண்டு. ஆனால் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் என்ன செய்ய முடியும். அவர்கள் எப்படியாக இருந்தாலும் சென்று தானே ஆகவேண்டும்.  தில்லியில் முகமூடி அணிந்த பலரை இப்போது பார்க்க முடிகிறது. அல்லது கைக்குட்டையால் மூக்கை முடியபடி தான் பலரும் உலவுகிறார்கள். போக்குவரத்து காவலர்கள், பாதுகாப்புப் பணியில் நாள் முழுவதும் வெளியிலேயே நின்று கொண்டிருக்கும் மற்ற காவலர்கள் ஆகியவர்களுக்கு அந்தந்த துறையே முகமூடிகளைத் தந்திருக்கிறது. மருந்து கடைகளில் விற்கப்படும் சர்ஜிகல் மாஸ்க் விற்பனை அதிகரித்து உள்ளது. 

படம்: இணையத்திலிருந்து....

ஒவ்வொரு வருடமும் இந்த மாதங்களில் புகைமூட்டம்/Smog பிரச்சனை உண்டு என்றாலும் இந்த வருடம் அதிகமாகவே இருக்கிறது.  எல்லா வருடங்களைப் போல தில்லி அரசாங்கமும் பழியை அடுத்தவர்கள் மேலே போடுவதில் குறியாக உள்ளது.  செயற்கை மழை பெய்வித்தால் இந்தப் புகைமண்டலத்தை அழிக்க முடியும் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சீனாவின் பீஜிங் நகரில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அப்படி மழை பெய்ய வைத்தார்கள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்தியத் தலைநகரில் இது நடக்குமா என்பது சொல்ல முடியாது! நீதிமன்றமும் ஹெலிகாப்டர் மூலமாக தண்ணீர் தெளியுங்கள் என சொல்லி இருக்கிறது.

படம்: இணையத்திலிருந்து....

ஆனாலும் இத்தனை மூச்சுத் திணறலோடும் தலைநகர் தில்லியின் மக்கள் வெளியே வந்து இன்னமும் அதிக புகையை தங்களது வாகனங்களிலிருந்து வெளியேற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஒரே வீட்டில் மூன்று கார் வைத்திருக்கும் நண்பர் வீட்டில், போவது ஒரே வழி என்றாலும் தனித்தனி வாகனங்களில் தான் போகிறார்கள். இவர் மாதிரி பலர் உண்டு. என் சுகத்தினை நான் எதற்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் எல்லோருக்குமே உண்டு. நாடு எப்படிப் போனால் எனக்கென்ன, நான் என்னுடைய எந்த சுகத்தினையும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கிறது.

படம்: இணையத்திலிருந்து....

Odd-Even என வாகனங்கள் செலுத்த கொண்டு வந்த தற்காலிகத் திட்டம் மீண்டும் கொண்டு வரலாமா என யோசனையில் இருக்கிறது தலைநகர் அரசு.  ஆனால் அதிலும் பலருக்கு சலுகைகள் உண்டு – இரண்டு சக்கர வாகனங்கள் எல்லா நாளிலும் ஓட்டலாம், அரசு வாகனங்கள், பெண்கள் தனியே ஓட்டிச் செல்லும் வாகனம் என பலரும் எல்லா நாட்களிலும் தங்கள் வாகனங்களைச் செலுத்தலாம் என்ற சலுகை இருப்பதால் இரண்டாம் முறையாக Odd-Even திட்டம் இருந்தபோது அத்தனை முன்னேற்றம் தெரியவில்லை என்று தான் சொல்கிறார்கள் நிபுணர்கள். அவர்களுக்கும் சலுகை தரக்கூடாது என நீதிமன்றம் சொல்லிக்கொண்டிருக்கிறது!

என்னவோ, மூச்சுத்திணறல் இருந்தாலும், எந்தப் பிரச்சனைகள் இருந்தாலும் தலைநகரில் தான் இருந்தாக வேண்டும் – வேறு வழியில்லை!

மூச்சு விடத் திணறிக்கொண்டிருக்கும் தலைநகரிலிருந்து…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

20 கருத்துகள்:

  1. செய்திகளைப் பார்க்கவும், படிக்கவும் வேதனையாக உள்ளது. நரக வாழ்க்கை என்பது இதுதானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ந[ர]கர வாழ்க்கை.... உண்மை தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. கஷ்டமான காலகட்டம்தான். வருடா வருடம் இது ஒரு தொல்லையாகிப் போகிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருடா வருடம் இதே தொல்லை - இந்த வருடம் இன்னும் அதிகம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இப்போதுதான் தெரிகிறது, நீங்கள் அடிக்கடி டெல்லியை விட்டு வெளியிடங்களுக்கு பயணம் செல்வதின் ரகசியம்.
    நானும் செய்தியில் படித்தேன். இதுவொரு கொடூரம்தான். நீங்கள் சொல்வதுபோல் கெஜ்ரிவால் அரசு கூட விவசாயிகள் மீதுதான் பழி போடுகிறது. நெல் பயிரைப்போல் கோதுமையை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்க முடியாது என்றே நினைக்கிறேன். அதனால்தான் விவசாயிகள் கொளுத்தி விடுகிறார்கள். ஆனாலும் தலைநகரை இப்படி மாசு சூழக்கூடாது. அதற்கு ஏதாவது வழியை அரசு செய்தே ஆகவேண்டும். அப்போதுதான் சுற்றுச்சூழல் சீர்படும். மக்களும் நிம்மதி பெறுவார்கள்.
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... அடிக்கடி தில்லி விட்டு வெளியிடங்களுக்குச் செல்ல இது காரணமல்ல! :)

      ஏதாவது வழி செய்தாக வேண்டும்..... இதைத் தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

      நீக்கு
  4. 1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சில நாட்கள் இவ்வாறு புகை மண்டலம் இருந்தது. அப்போது ஒரு நாள் ஜனக்புரியிலிருந்து, தௌலகுவான். ரிங் ரோட் (தற்போது வந்தேமாதரம் சாலை) வழியாக கரோல் பாக்கிற்கு மோட்டார் சைக்கிளில் செல்ல எனக்கு 1.00 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. மிகவும் கஷ்டப்பட்டு வண்டியை ஓட்டி சென்றது இப்போது நினைவுக்கு வருகிறது. எப்படித்தான் இப்போது சமாளிக்கிறீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல வருடங்களுக்கு முன்னரே இம்மாதிரி நிலை இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். தில்லியும் இது போன்ற பிரச்சனைகளும் பிரிக்க முடியாதவை போலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. so sad... //நாடு எப்படிப் போனால் எனக்கென்ன, நான் என்னுடைய எந்த சுகத்தினையும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கிறது. // hmmmm...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  7. பெங்களூரிலும், இந்த அளவுக்கு இல்லைனாலும், புகை மாசு நிறைய. சமூக எண்ண மாற்றம் வேண்டும். தனிப்பட்ட நலனை மாத்திரம் பார்த்தால், எதைத்தான் அரசாங்கம் செய்யமுடியும்? நல்லவேளை, குழந்தைக்கு இந்தப் பிரச்சனை இல்லை என்று மனதைத் தேத்திக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசாங்கம் மட்டுமல்ல சமூக எண்ணங்களில் மாற்றம் வேண்டும் என்பது உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. என்ன செய்வது பொதுநல எண்ணங்கள் எல்லோர் மனதிலும் வரவேண்டும் அப்பொழுதுதான் எதையும் செய்ய முடியும் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுநல எண்ணங்கள் அனைவருடைய மனதிலும் வர வேண்டும். அது வந்தால் நலம்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. இந்த ஆண்டு ஸ்மாக் அதிகம்தான் என்று சொல்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகம் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  10. இவ்வருடம் ஸ்மாக் அதிகம் சைனாவிலும்....

    பேசாமல் நம் சினிமா டைரக்டர்களை வர வழைத்து ஒவ்வொரு ஏரியாவாகப் பிரித்துக் கொடுத்து மழை சீன் எடுக்கச் சொல்லிவிட வேண்டியதுதான்...!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழை சீன் எடுக்கச் சொல்லிவிட வேண்டியதுதான்! :) நல்ல ஐடியா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....