தொகுப்புகள்

சனி, 3 டிசம்பர், 2016

இரண்டாம் திருமணம் – நோ கா லிகாய் நீர்வீழ்ச்சி ….


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 72

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


Orange Roots உணவகத்தில் காலை உணவாக பூரி-சப்ஜி மற்றும் தேநீர் அருந்தி உரிமையாளரிடமும் பணியாளர்களிடமும் உணவின் தரத்தினைப் பாராட்டி, அங்கிருந்து புறப்பட்டோம். அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் சென்ற இடமும் ஒரு நீர்வீழ்ச்சி தான்.  அந்த நீர்வீழ்ச்சியின் பெயர் நோ கா லிகாய் நீர்வீழ்ச்சி.  இந்த நீர்வீழ்ச்சிக்கு பெயர்க்காரணம் கொஞ்சம் சோகமானது…..  அது என்ன காரணம் என்று பார்க்கலாம்! அதற்கு முன்னர் நீர்வீழ்ச்சியின் அழகைக் கொஞ்சம் ரசித்து விடுங்கள்.

 Noh Ka Likai Waterfalls

அகலமான நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி தான் இந்தியாவில் அதிக உயரமான இடத்திலிருந்து தரை நோக்கி வீழும் நீர்வீழ்ச்சி.  1115 அடி அதாவது 340 மீட்டர் உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சி இது.  அகலமும் அதிகம் தான்.  இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து இருக்கும்போது பார்த்தால் எத்தனை பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை மேலே இருக்கும் படத்தில் காணலாம். நாங்கள் பார்த்தபோது தண்ணீர் வரத்து இல்லை என்றாலும், அந்த பாறைகளைப் பார்க்கும்போதே பிரமிக்க வைத்தது.  நாங்கள் சென்றபோது எடுத்த படம் கீழே….




Noh Ka Likai Waterfalls

சரி நீர்வீழ்ச்சியின் பிரம்மாண்டத்தினைப் பார்த்து விட்டோம். இப்போது கதைக்கு வருவோம். 

இந்த பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி இருக்கும் மலைப்பகுதியின் மேலே உள்ள ஒரு கிராமம் ரங்க்ஜீர்த்தே [Rangjyrteh]. அந்த கிராமத்தில் வசித்து வந்த ஒரு பெண்மணி லிகாய். கா லிகாய் [பெயரின் முன்னர் கா எனச் சேர்த்தால் அந்தப் பெயர் கொண்டவர் பெண் எனத் தெரிந்து கொள்ளலாம்! இது khகாசி மொழி பயன்பாடு!] திருமணம் புரிந்து தன் கணவர் மற்றும் குழந்தையோடு வசித்து வந்தார். கணவருக்கு போர்ட்டர் வேலை – இரும்பை சுமந்து கொண்டு பக்கத்து ஊரான Sylhet சென்று சேர்க்கும் வேலை.  அப்படி இரும்பைச் சுமந்து பயணிக்கும் ஒரு பயணத்தில் கா லிகாயின் கணவர் இறந்து விட, சிறு குழந்தையோடு தனியானார் கா லிகாய்…. உணவுக்கும், குழந்தையை வளர்க்கவும் வேலை செய்தே ஆகவேண்டிய கட்டாயம் கா லிகாய்க்கு.


மகளுடன் நடந்து செல்லும் khகாசி இனப் பெண்மணி

தனது சிறு குழந்தையை அக்கம் பக்கத்து வீட்டு பெண்களிடம் விட்டுவிட்டு கணவர் பார்த்து வந்த வேலையையே பார்க்கத் துவங்கினார் கா லிகாய்.  எத்தனை நாள் தான் இப்படி இருப்பது, உனக்கும் ஆண் துணை தேவை, உன் குழந்தைக்கும் அப்பா ஸ்தானத்தில் ஒருவர் தேவை என கா லிகாய்க்கு அனைவரும் அறிவுரை கூற கா லிகாய் இரண்டாம் திருமணம் புரிந்து கொள்கிறார். திருமணம் புரிந்து கொண்ட பிறகு, தனது முதல் கணவன் மூலம் பிறந்த குழந்தை மீதும், இரண்டாம் கணவன் மீதும் பாசத்தைப் பொழிகிறாள் கா லிகாய்.

ஆனாலும், இரண்டாவது கணவனுக்கு, தன் மூலம் பிறக்காத குழந்தை மீது கா லிகாய் அன்பைப் பொழிவது பிடிக்கவில்லை.  அக்குழந்தையை வெறுத்தான்.  திருமணம் புரிந்து கொண்ட பிறகும் கா லிகாய் பணிக்குச் செல்வதை நிறுத்தவில்லை.  அப்படி ஒரு நாள் கா லிகாய் பணிக்குச் சென்ற சமயத்தில், குழந்தையை துண்டு துண்டாக வெட்டி, தலை, எலும்புப் பகுதிகளை தூர வீசிவிட்டு மாமிசத்தினை சமைத்து விட்டான்.  என்ன கொடுமையான மனிதன்.

பணிக்குச் சென்று திரும்பிய கா லிகாய், வீட்டில் பார்த்தால் தனது குழந்தையைக் காணவில்லை. கணவனையும் காணவில்லை. சரி எங்காவது விளையாடிக் கொண்டிருப்பாள் என உள்ளே நுழைய, சமைத்து வைத்த உணவின் வாசம் அவளை ஈர்க்கிறது. நல்ல பசியோடு இருந்த அவள், மாமிசத்தோடு உணவை உண்கிறாள். உணவு நன்றாக இருந்தாலும், தான் சாப்பிடும் மாமிசம் என்ன என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.  சாப்பிட்டு முடித்ததும் வழக்கமாக போட்டுக் கொள்ளும் க்வாய் [khகாசி மொழியில் பாக்கு!] வைத்திருக்கும் கூடையை எடுக்கப் போனவள் அதிர்ச்சியில் உறைகிறாள்.

அக்கூடைக்கு அருகே தனது குழந்தையின் துண்டுபட்ட விரல்கள் கிடக்கிறது.  தன் கணவன் செய்த கொடுமையான செயல் புரிகிறது. தானும் தனது ஆசைக் குழந்தையின் மாமிசத்தையே உண்டு இருப்பதும் தெரிய khகாசி மொழியில் WAIT என அழைக்கப்படும் கத்தியோடு, அலறியபடியே ஓடுகிறாள். எதிர்பட்ட அனைவரும் என்ன ஏது என்று தெரியாமல் விழிக்க, வேகமாக ஓடிய கா லிகாய் நீர்வீழ்ச்சியின் உச்சியிலிருந்து குதித்து உயிரை விடுகிறாள். Khasi மொழியில் நோ [Noh] என்றால் குதிப்பது.  கா லிகாய் அந்த நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதால் இந்த நீர்வீழ்ச்சியின் பெயர் Noh Ka Likai Falls.

படிக்கும்போதே மனது பதறுகிறது அல்லவா…. எத்தனை கொடுமையான எண்ணம் கொண்டவனாக இருந்திருக்கிறான் அந்த இரண்டாம் கணவன். என்னைக் கேட்டால் நீர்வீழ்ச்சியில் இருந்து வீழ்வதற்கு முன்னர் அந்த இரண்டாம் கணவனையும் போட்டுத் தள்ளி இருக்கலாம் கா லிகாய்….

நீர்வீழ்ச்சிக்கு அருகிலேயே ஒரு பதாகையில் இந்த பெயர்க்காரணத்தினை சுருக்கமாக எழுதி வைத்திருக்கிறார்கள். பதாகையில் பார்த்ததிலிருந்தே மனதுக்குள் ஒரு சோகம். எப்படி மனது வந்தது அந்த இரண்டாம் கணவனுக்கு? அவன் மனிதனா மிருகமா? மனித ரூபத்தில் ஒரு மிருகமே தான். இந்த எண்ணங்களோடு நாங்கள் எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். எங்கே சென்றோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மகா கொடூரம்... அங்கே நின்று அந்த பதாகையைப் படித்தபோது மனது பதைபதைத்தது.... மனித உருவில் ஒரு மிருகம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. Kodooram......kodooram. Need veezhchi arumai entru vasithu vara....antha inbam illamal poi vittathu.....aruviyai rasikka mudiyamal.....ungaluku Innum manam vethanaiyaga irundirukkum....

    Mannikavum.ji. Tamil font.velai.seiyavillai....athan ippadi...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைத்துப் பார்க்கும்போதே உடலில் ஒரு நடுக்கம். எப்படி மனது வந்ததோ....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
    2. Antha kayavani mirugathai kontrupotirukka vendam....manam aaravillai...

      நீக்கு
    3. மனம் ஆறவில்லை. அதுவே தான்...

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  3. அருவியின் அழகில் லயித்த மனம் -
    அருவிக்கான பெயர்க் காரணத்தை அறிந்ததும் - அதிர்ந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரணம் தெரிந்ததும் எங்களுக்கும் அதிர்ச்சி தான்... அவ்விடத்தில் அதிக நேரம் இருக்க மனம் ஒப்பவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. அதே தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. நான் அந்தப் பெண்ணாக இருந்திருந்தால் அந்த மிருகத்தைக் கொன்றிருப்பேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  6. பதபதக்க வைக்கும்கதை
    கதையாயினும் கூட
    மனம் தாங்கவில்லை
    அற்புதமான நீர்வீழ்ச்சிக்குப்பின்னே
    இப்படி ஒரு கதை என்பதுதான்
    எத்தனை முரண்
    படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையாக இருந்திருந்தால் கூட மனசு ஒப்பவில்லை. உண்மையாக இருந்திருந்தால்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. இங்கே பிள்ளைக் கறி புராணம்தான் உண்டு ,அங்கே உண்மையாகவேவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. கொடுமையே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. என்ன கொடூரம்... கொடுமை அண்ணா...
    அவனைக் கொன்று விட்டு மரித்திருக்கலாம்... அந்த நாய் உயிருடன் இருந்திருக்கே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  11. அருவியில் மயங்கினேன்.
    பெயர் வந்தது கொடுமைசம்பவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் வந்தது கொடுமை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....