தொகுப்புகள்

செவ்வாய், 20 டிசம்பர், 2016

திரிபுரா – வங்க தேச எல்லையில்….



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 82

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

படம்-1: அரண்மனை அருகே கோவில்....

உஜ்ஜயந்தா அரண்மனை அருங்காட்சியகத்தில் பார்த்த விஷயங்களை சென்ற பகுதியில் பார்த்தோம். அருங்காட்சியகத்தினையும் அது அமைந்திருக்கும் உஜ்ஜயந்தா அரண்மனையின் அழகையும் பிரம்மாண்டத்தையும் நேரில் பார்க்க வேண்டும்.  அரண்மனையிலிருந்து வெளியே வந்து சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு நாங்கள் அடுத்ததாய் சென்றது ஒரு கோவில்!


படம்-2: அரண்மனை அருகே கோவில் - வேறு கோணத்தில்....

அரண்மனை இருக்கும் பகுதியிலேயே கோவில்களும் உண்டு.  உமாமகேஸ்வரி, லக்ஷ்மிநாராயணன், காளி மற்றும் ஜகன்நாத் ஆகிய கடவுளர்களின் கோவில்கள் இங்கே அமைந்துள்ளது. இந்தக் கோவில்களில் விழாக்காலங்களில் மிகவும் கோலாகலமாக பூஜைகள் நடக்கும் என்று எங்கள் ஓட்டுனர் ஷாந்தனு சொல்லிக் கொண்டிருந்தார்.  நாங்கள் சென்ற சமயத்தில் கோவில் பூட்டியிருக்க, வெளியிலிருந்தே மானசீகமாக ஒரு ஹாய் சொல்லி பிரார்த்தனை செய்தோம்.  புகைப்படமும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். 

படம்-3: வங்க எல்லையில் நண்பர்களுடன்.... 

திரிபுரா நகரத்தின் தலைநகரான அகர்தலாவிலேயே பங்களாதேஷ் எல்லை இருக்கிறது. இந்தப் பயணத்தில் ஏற்கனவே சீன எல்லைக்குப் போய் வந்தது பற்றி எழுதி இருக்கிறேன். இப்போது இன்னும் ஒரு நாட்டு எல்லைக்குச் சென்றோம். என்னதான் வெளி நாடுகளுக்குச் செல்ல இன்னும் வாய்ப்பு வரவில்லை என்றாலும் எல்லை வரையாவது சென்று வருவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது! இந்தப் பயணத்தில் இரண்டு எல்லைகளுக்கு பயணித்தோம். அதில் மகிழ்ச்சி தான்!

படம்-4: எல்லைப் பகுதியில் நண்பர் பிரமோத்....

பஞ்சாப் மாநிலத்தின் வா[g]கா எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்கும் சென்றதுண்டு.  அங்கே மாலை நேரத்தில் நடக்கும் கொடி இறக்க நிகழ்ச்சிகள் உணர்ச்சி பூர்வமாக இருக்கும். அங்கே சென்று அந்த நிகழ்வுகளைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தேச உணர்வு பிரவாகமாக ஊற்றெடுக்கும் என்பது நிச்சயம்.  அதே போல ஒரு நிகழ்வு வங்கதேச எல்லையிலும் தினமும் நடைபெறுகிறது.  ஆனால் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை இந்த தினசரி நிகழ்வு.

படம்-5: வங்க தேசம் போகலாம் வாங்க!

நாங்கள் அப்பகுதியில் இருந்ததால் அன்றைய மாலை கொடியிறக்க நிகழ்வுகளைப் பார்க்கலாம் என அங்கே சென்றோம்.  அங்கே சென்றபோது நிகழ்ச்சிக்கான ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார்கள். இந்தியப் பகுதியில் BSF வீரர்கள் இருக்க, வங்கதேசப் பகுதியில் அவர்களுடைய ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள்.  நமது பகுதியில் இருந்த ஒரு ராணுவ வீரரிடம் நிகழ்வு பற்றி விசாரிக்க ஒரு மணி நேரம் ஆகலாம், அதனால் வேறு எங்காவது சென்று வருவதென்றால் சென்று வாருங்கள் என்று சொன்னார். 

படம்-6: வங்கத்திலிருந்து வரும் வாகனம்...

பார்க்க வேண்டிய இடங்கள் பக்கத்திலேயே வேறு எதுவும் இருக்கிறதா என்று ஓட்டுனர் ஷாந்தனுவிடம் கேட்க, அப்படி எதுவும் இல்லை என்று சொன்னார்.  சரி வந்தது வந்துவிட்டோம் காத்திருப்போம் என்று நினைத்தோம்.  வாகனத்தினை அதற்கான இடத்தில் நிறுத்தி பக்கத்தில் இருந்த ஒரு கடையில் தேநீர் அருந்தினோம். அப்படியே எல்லைப்பகுதி விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.  வங்கதேசத்திலிருந்து பல வாகனங்கள் – பெரும்பாலும் லாரிகளில் பொருட்கள் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.

படம்-7: வங்க தேச வாகனம் ....

இந்திய எல்லைக்குள் அவ்வாகனங்கள் வந்து உரிமத்தினைக் காண்பித்து எல்லைக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் பெரிய மைதானத்தில் வண்டியை நிறுத்துகிறார்கள்.  அவர்களுடைய வாகனத்தில் இருக்கும் பொருட்களெல்லாம் அங்கேயே இறக்கப்படுகிறது. இறக்கப்பட்ட பொருட்கள் இந்திய லாரிகளில் ஏற்றப்பட்டு இந்தியாவின் மற்ற பகுதிகளுக்குப் பயணிக்கிறது.  அதே போல இந்திய வாகனங்களும் வங்கதேசத்திற்குள் பயணிப்பதில்லை.  இங்கே வரை கொண்டுவந்து வைக்க, வங்கதேச லாரிகள் இந்தியாவிலிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு செல்கிறது.

ஒவ்வொரு நாளும் இப்படி வந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகம். அவற்றை எல்லாம் கவனித்து, அதில் வரும் ஆட்கள் இந்தியாவிலேயே தங்கிவிடாமல் திரும்பிச் செல்கிறார்களா என்பதையும் பார்த்துக் கொண்டே இருக்கிறது எல்லை காவல் வீரர்படை. வங்கதேசத்திலிருந்து வரும் லாரிகளை அழகாய் அலங்கரித்திருக்கிறார்கள். இந்திய லாரிகளிலிருந்து அவை சற்றே வித்தியாசமாக இருக்கின்றன. 

இப்படி தொடர்ந்து வாகனங்கள் வந்த வண்ணமே இருக்க, அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்ததில் பொழுது நன்றாக போயிற்று. சரி நேரம் ஆகிறது என எல்லைக்கு அருகே மீண்டும் செல்ல அங்கே BSF வீரர்கள் நடத்தும் ஒரு சிறிய கடை இருக்க, அங்கே தேநீர் அருந்தலாம் எனச் சென்றோம்.  அங்கே எங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது – உலகம் மிகச் சிறியது என்று தோன்ற வைத்த அனுபவம் அது! எங்கள் குழுவில் வந்திருந்த நண்பரைப் பார்த்த உடனே “நீ சசி தானே?” என்று கேட்டார் அங்கே இருந்த வீரர் ஒருவர்! 

அந்த அனுபவங்களும் மற்ற விவரங்களும் வரும் பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

20 கருத்துகள்:

  1. இரண்டு நாட்டு எல்லைகளும் அதனை காவல் காக்கும் வீரர்களும், லாரிகளின் அலங்காரங்களுமாய் இதையெல்லாம் நேரில் அனுபவிக்க கொடுத்து வைத்துள்ளீர்கள்இ. அனைத்தும் இனிமையான அனுபவம.

    லாரிகளின் முன்னால் இருக்கும் கம்பி போன்ற கூண்டுகள் விபத்து நேரம் லாரிக்கான காப்பரன் போலும்.

    இங்கேயும் ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி யுடனான சுவிஸ் நாட்டின் எல்லைகளை கடந்திருக்கின்றோம்.அங்கே உணர முடியாத ஏதோ ஒன்று இவ்விடங்களில் ஒளிந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாரிகளின் முன் இருக்கும் கம்பி, காப்பரண் தான். மேலே கூண்டு போன்ற அமைப்பும் இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  2. வித்தியாசமான வங்கதேச லாரிகள்...

    பயணத்தில் ஒரு இனிய சந்திப்பை அறிய ஆவலுடன் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. நீங்கள் இன்னும் எல்லை தாண்டவில்லை என்று சொல்கிறீர்கள்! சந்தோஷம்!!!!

    நண்பரின் நண்பர் அங்கு இருந்தாரா? இனிய அனுபவம்தான். நம் லாரிகளை அவர்கள் எல்லைக்குள் விடமாட்டார்கள். நாம் மட்டும் இவா க்களா?!!நீங்கள் இன்னும் எல்லை தாண்டவில்லை என்று சொல்கிறீர்கள்! சந்தோஷம்!!!!

    நண்பரின் நண்பர் அங்கு இருந்தாரா? இனிய அனுபவம்தான். நம் லாரிகளை அவர்கள் எல்லைக்குள் விடமாட்டார்கள். நாம் மட்டும் இவா க்களா?!!நீங்கள் இன்னும் எல்லை தாண்டவில்லை என்று சொல்கிறீர்கள்! சந்தோஷம்!!!!

    நண்பரின் நண்பர் அங்கு இருந்தாரா? இனிய அனுபவம்தான். நம் லாரிகளை அவர்கள் எல்லைக்குள் விடமாட்டார்கள். நாம் மட்டும் இவா க்களா?!!

    :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு முறை வந்திருக்கிறதோ? :)

      அவர்கள் வண்டியும் எல்லையைத் தாண்டிய உடன் இருக்கும் மைதானத்தில் தான் நிற்கும். அதைத் தாண்டிச் செல்ல அனுமதி இல்லை. போலவே அதில் இருக்கும் ஓட்டுனர் மற்றும் உதவியாளரும் உள்ளே வர முடியாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. சோனார் பங்ளா!.. என்று கத்திக் கொண்டிருக்கின்றான் காலையிலிருந்து ஒருவன்..

    இங்கே பதிவில் வங்க தேச எல்லை..

    வங்கதேசம்.. அவனைப் பொறுத்தவரைக்கும் தாயகம்.. தங்கதேசம்!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோனார் பங்க்ளா.... தங்க தேசம் - அவரவர்களுக்கு அவரவர் தேசம் சொர்க்கம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. சங்கர் பட லாரிகள் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  6. வட மாநிலங்களில் லாரிகள் வித்தியாசமாய் இருக்கும் வங்க லாரிகளும் அதேபோல் எல்லையில் பணி புரியும் பி எஸ் எஃப் ஜவான்கள் கண்களில் எண்ணையை ஊற்றிக் கொண்டுதான் இருப்பார்களோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  7. அருமையான அனுபவங்கள். வித்தியாசமான வங்க தேச லாரிகள். உங்கள் அனுபவங்களும் வித்தியாசமானவை. வாகா பார்த்தாச்சு, என்றாலும் இந்தக் கிழக்குப் பகுதிக்கு அதிகம் போனதில்லை. கல்கத்தா போனதில் வாழ்க்கையே வெறுத்துப் போச்சு! :) பல நாட்கள் கழித்து வருகிறேன். நிறையப் பழைய பதிவுகள் படிக்கணும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்கத்தா போனதில் வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. :) கொஞ்சம் கடினமான இடம் தான். நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது!

      நிறைய பழைய பதிவுகள்.... முடிந்த போது படியுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  8. வாசிக்கும் போதே ஆஹா இப்படி இரு நாட்டு எல்லைகள் அருகில் செல்லும் அனுபவம் எத்தனை சுவாரஸ்யமாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் என்று உணர முடிகிறது. மிக மிக இனிமையான அனுபவம்தான் இல்லையா ஜி..மிகவும் அனுபவித்து வாசித்தோம் ஜி!

    அடுத்த நிகழ்வுகளை அறிவதில் ஆர்வத்துடன் தொடர்கின்றோம் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....