தொகுப்புகள்

செவ்வாய், 3 ஜனவரி, 2017

ருக்கு அத்தை….


இரண்டு நாட்களுக்கு முன்னர் ”நிலாச்சோறும் புதுவருடக் கொண்டாட்டமும்” என்ற பதிவில் என் அம்மாவின் அத்தை எங்களுக்கெல்லாம் சாதம் பிசைந்து கைகளில் போடுவார்கள் என எழுதி இருந்தேன்.  ருக்கு அத்தை – அம்மாவின் அத்தை என்றாலும், எங்கள் வீட்டில் மட்டுமல்ல, எங்கள் வீட்டுக்கு வரும் பலருக்கும் அவர் அத்தை தான். அற்புதமான மனுஷி. வாழ்க்கையில் பலவித இன்னல்களை அடைந்திருந்தாலும் அயராது உழைத்து, அதுவும் அடுத்தவர்களுக்காகவே உழைத்து ஓடாய் தேய்ந்தவர்…..  அவரது வாழ்க்கையில் பார்க்காத சோகம் இல்லை என்றாலும் எல்லோரிடமும் அன்பும் பாசமும் காட்டுபவர்…..  அவரது வாழ்க்கை ஒரு பெரிய கதை.

பிறந்தது ஒரு பெரிய குடும்பத்தில் – வசதிகள் நிறையவே இருந்தாலும் கண்டிப்புடனும், கட்டுப்பாடுடனும் வளர்ந்தவர்.  ஒன்பது வயதில் திருமணம், பதிமூன்று வயதில் இரண்டு குழந்தைகள் – ஒரு மகள், ஒரு மகன்.  பதினாறு வயதில் கட்டிய கணவர் இறக்க, அந்த வயதிலேயே கைம்பெண் கோலம் – தலையை மொட்டையடித்து நார்மடி புடவை உடுத்த வேண்டிய கட்டாயம். கணவனின் இறப்பிற்குப் பிறகு சொந்த வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து விட்டார் – நிலபுலன்களை ஆண்கள் பார்த்துக் கொள்ள, வீட்டில் சமையல் வேலை, குழந்தைகளை பராமரிப்பது என அனைத்திற்கும் ருக்கு அத்தை தான்…. 

என்ன தான் தாய் வீடென்றாலும், சும்மா சாப்பிடக்கூடாது, வேலை செய்து தான் சாப்பிட வேண்டும் என்ற வைராக்கியம்.  சமையல் என்றால் இன்றைய நாட்களைப் போல மூன்று நான்கு பேருக்குக் கிடையாது.  ஒவ்வொரு வேளையும் 20-25 பேருக்காவது சமையல் செய்ய வேண்டியிருக்கும் – அதுவும் கோட்டை அடுப்பில்! இந்த காலம் போலவா கேஸ் அடுப்பு! அத்தனை பேருக்கும் சமையல், துணி துவைப்பது, வீடு சுத்தம் செய்வது என அத்தனையும் இவர் தலைமையில் தான். வீட்டில் சமையல் தவிர, இத்தனை பேருக்கும் தேவையான அப்பளம் இடுவது, நொறுக்குத் தீனிகள் செய்வது என ஓயாத வேலை.  இதைத் தவிர நிலத்திலிருந்து விளைந்து வந்த விளைச்சலை சுத்தம் செய்வது போன்ற வேலைகளும் உண்டு. 

இப்படி இருந்தவர் தனது மகள் மற்றும் மகனையும் வளர்த்து ஆளாக்கினார். மகளுக்குத் திருமண வயது வந்ததும், அவருக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணம் ஆன சில வருடங்களுக்குள் அவரது மகள் தரைக்கிணறு ஒன்றில் தவறி விழுந்து உயிர் போனது. மகனுக்கு அவ்வளவாக படிப்பு ஏறவில்லை.  அவரது தம்பி [எனது அம்மாவின் அப்பா] பார்த்து வைத்த வேலைகளிலும் நிலைக்கவில்லை. பிறகு சமையல் வேலை பார்த்து வந்தார். அவருக்கும் திருமணம் ஆனது – என்றாலும் அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லை – கருத்தரித்து, கருத்தரித்து சில மாதங்களிலேயே பிரசவம் ஆவதற்கு முன்னரே கலைந்து போகும். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல பலமுறை ஆனபிறகு குழந்தையே இல்லை.

இப்படி தொடர்ந்து வேலை செய்து வர, கொஞ்சம் கொஞ்சமாக எனது அம்மா மற்றும் பெரியம்மாவிற்கு திருமணம் நடந்தது.  அவரது தம்பியும் [எனது அம்மாவின் அப்பா] இறந்த பிறகு எங்கள் வீட்டிலும் பெரியம்மா வீட்டிலும் தான் ருக்கு அத்தை இருந்தார்கள்.  மகன் வீட்டில் அத்தனை வசதி இல்லை என்பதால் அவருக்கு பாரமாக இருக்காமல் எங்கள் இருவரின் வீட்டில் தான் இருப்பார்.  அதுவும் சும்மா இருக்க மாட்டார்.  எந்த வீட்டில் அவர் இருந்தாலும், சமையல் கட்டு முழுவதும் அவர் வசம் தான். எங்கள் வீட்டில் அம்மாவுக்கு பிரசவ சமயத்தில் முழுவேலையும் அவர் தான். வீட்டில் உள்ள அனைவருக்கும் சமைத்து, பள்ளிக்குப் போகும் எங்களுக்கும், அலுவலகத்திற்குச் செல்லும் அப்பாவிற்கும் மதிய உணவு கட்டிக் கொடுத்து என மொத்த வேலையும் அவரிடம் தான். 

அவர் வீட்டில் இருந்தால் அவரைத் தவிர வேறு யாரையும் வேலை செய்ய விடமாட்டார். வீடு பெருக்குவதிலிருந்து, சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது என எல்லாம் அவர் தான். அடுத்தவர்கள் செய்தாலும் மீண்டும் ஒரு முறை செய்வார்! அவ்வளவு வேலை செய்தாலும், ஒரு வேளை தான் முழு உணவு – அதாவது ஒரு நாளைக்கு ஒரு முறை தான் உணவு! கைம்பெண்கள் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு அவருக்கு. வயதாக வயதாக கட்டுப்பாடுகளைக் கொஞ்சம் தளர்த்தி, இரவில் உப்புமா, பொங்கல், என ஏதாவது சாப்பிட வைத்தோம். 

சமையல் அத்தனை ருசியாக இருக்கும்.  குமுட்டி அடுப்பில் செய்யும் அரிசி உப்புமா, தவலை அடை, வற்றல்குழம்பு என அனைத்துமே பார்த்துப் பார்த்து செய்வார். செய்வது மட்டுமல்ல, பாசத்தோடு பரிமாறுவதும் அவரே. அவர் பரிமாறி சாப்பிட்டால் நிச்சயம் இரண்டு கை அதிகமாகத் தான் சாப்பிடுவோம்.  யாரையும் வயிறு காலியாக அனுப்பவே மாட்டார்.  வீட்டுக்கு யார் வந்தாலும் உணவளிக்காது அனுப்பவே மாட்டார். எங்கள் வீட்டினர் மட்டுமல்ல, யார் வந்தாலும் உணவளிப்பது அவருக்குப் பிடித்தமான விஷயம். 

சுத்தம் அதிகம் பார்ப்பவர் என்றாலும், எங்களை எல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார். நாங்கள் விளையாடிவிட்டு நேரே சமையலறை சென்று தண்ணீர் எடுத்துக் குடித்துவிட்டால் எங்களை செல்லமாகத் திட்டி, அத்தனை தண்ணீரையும் கொட்டிவிட்டு மீண்டும் பிடித்து வைப்பார்! அவர் எங்களுக்காக செய்து தரும் தின்பண்டங்கள் எத்தனை எத்தனை….  பொரிமாவு [அரிசி வறுத்து இடிப்பது], அப்பளம் செய்யும் போது அப்பள மாவு என எனக்கு தனியாக சாப்பிட கொடுப்பது அவர் வழக்கம்! பொரிமாவிலும் விதம் விதமாகச் சாப்பிடத் தருவார் – சில சமயம் வெல்லம் சேர்த்து, சில சமயம் மோர் சேர்த்து என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சுவை.

தனக்கென்று பெரிதாக ஆசை இல்லாதவர் – இரண்டே இரண்டு நார்மடி புடவை மட்டும் தான் வைத்திருப்பார். நெய்வேலியில் கிடைக்காது என்பதால் அம்மாவோ, அப்பாவோ விருத்தாஜலம் சென்று வாங்கி வருவார்கள் – அது கூட புதிதாய் இரண்டு வாங்கிக் கொண்டு வந்தாலும் முதல் புடவை முழுவதும் கட்ட முடியாத அளவு ஆனபிறகு தான் புதியது எடுத்து உடுத்துவார். ஒரு சிறிய இன்ஜெக்ஷன் பெட்டி [அப்போது எவர்சில்வரில் வரும்!] வைத்திருப்பார் – அதில் தான் யாராவது கொடுக்கும் பணத்தினைச் சுருட்டி சுருட்டி வைத்திருப்பார்.  அதிலும் எங்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்துவிடுவார்! அவரிடம் எனக்குத் தெரிந்து இருந்த ஒரே சொத்து ஒரு இரட்டை வட தங்கச் சங்கிலி.

மகன், மருமகள் என அனைவரும் இறந்து விட, இவர் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தார்…  ஒரு நாள் கூட உடம்பு சரியில்லை என படுத்தது இல்லை, மருத்துவமனைக்குச் சென்றதில்லை, மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொண்டதில்லை! பயங்கர தைரியசாலி. ஒரு முறை அறுவாமணையில் காய் நறுக்கும்போது விரல் வெட்டிக்கொள்ள, கொஞ்சம் சுண்ணாம்பு [வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு] வைத்து துணியினால் கட்டி சரியாயிடும் என தொடர்ந்து வேலை செய்தவர்! டேபிள் ஃபேன் இறக்கையில் ஒரு முறை கை மாட்டிக் கொண்டபோதும் அதே வைத்தியம் தான்…..

88 வயதில் இறக்கும் வரை எங்களுக்கு அவர் தான் எல்லாம். அவரைப் போல பாசம் காட்ட யாராலும் இயலாது.  கொஞ்சம் கோபம் உண்டென்றாலும், எங்கள் நல்லதற்காகத் தான் கோபப்படுவார். இறப்பதற்குச் சில நாட்கள் வரை எல்லா வேலையும் அவரே தான் செய்து கொண்டார். தன்னிடம் இருந்த இரட்டை வட சங்கிலியை விற்று, அவரது ஈமக்கடன்களைச் செய்ய வேண்டும் – அதற்குக் கூட நான் யாரிடமும் கடன்படக்கூடாது என்று சொன்னவர் ருக்கு அத்தை! அவரது வாழ்க்கை முழுவதுமே பிரச்சனைகளும் போராட்டங்களும் நிறைந்தது என்றாலும் அனைவரிடமும் அன்பு காட்டுவதில் அவருக்கு இணை அவர் தான்….

அவர் அவ்வப்போது முணுமுணுக்கும் பாடல் “ஏரிக்கரையின் மேலே போறவளே”! அவரது தோல் சுருக்கங்களைப் பிடித்து விளையாடுவது எங்களுக்குப் பிடித்த விஷயம், இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் அவரைப் பற்றி எழுதலாம்….   அந்த அற்புத மனுஷி இறந்து விட்டாலும் எங்கள் அனைவரின் மனதை விட்டு நீங்காதவர்…..  அந்த அற்புத மனுஷி போல வேறு யாரையும் இதுவரை பார்க்கவில்லை…. இனிமேலும் பார்க்க முடியுமா என்பது சந்தேகம் தான்…..

மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

43 கருத்துகள்:

  1. என் வாழ்வில் முக்கிய தாக்கம் ஏற்படுத்தியவரை நினைவுபடுத்தியது இப்பதிவு. அவர்களைப் போன்ற நல்லுங்களின் ஆன்மாக்கள் அவர்களால் வளர்க்கப்பட்டவர்களை என்றும் பாதுகாக்கும். அதனை நான் உணர்கிறேன். என்னை நெகிழவைத்துவிட்டது இப்பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளையும் மீட்டெடுக்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. சிறந்த மனுஷி ஒருவரைப் பற்றி அறியத் தந்திருக்கிறீர்கள். அந்தக் காலத்து மனுஷிகளுக்கே இயல்பான குணங்கள். நிலாச்சோறு நினைவூட்டிய மனுஷி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றும் நினைவிலிருந்து நீங்காதவர்......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. எனக்கு தெரிந்த ஓர் ஆச்சியை நினைவுபடுத்துகிறது உங்கள் பதிவு.
    சிறந்த மனுஷியைப் பற்றி பகிர்ந்ததற்கு நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க இப்பதிவு உதவியிருப்பதில் மகிழ்ச்சி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. எங்கள்2வீட்டிலும்2ஒரு2ருக்கு2அத்தை2இருந்தார்கள்2அவரை2நினைவுபடுத்தி2விட்டீர்கள்2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்லப்பா யக்ஞஸ்வாமி ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. ம்ம்ம்ம்ம்.... என்ற ஒரு வார்த்தையில் பல அர்த்தம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

      நீக்கு
  7. >>> யாரையும் வயிறு காலியாக அனுப்பவே மாட்டார். வீட்டுக்கு யார் வந்தாலும் உணவளிக்காது அனுப்பவே மாட்டார்.>>>

    இப்படித்தான் - பலரும் இருந்தார்கள் அந்தக் காலத்தில்..

    நான் கண்டிருக்கின்றேன்.. அத்தகையோர் கையால் உண்டிருக்கின்றேன்..

    எங்கள் அப்பாயியும் அப்படித்தான் வாழ்ந்து இறைவனோடு கலந்தார்கள்..

    அந்த அறம் இன்றைக்குத் தொலைந்து போய் விட்டது போலிருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அப்பாயி, எங்கள் அத்தை என இப்படி இருப்பவர்கள் குறைந்து விட்டார்கள் என்பது தான் சோகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  8. உங்கள் ருக்கு அத்தையைப்போல் தன்னலமற்றவர்களைப் காண்பது பொதுவாகவே அரிது. இன்றைய காலகடடத்தில் அரிதிலும் அரிது. (எல்லோருக்கும் ருக்கு அத்தை! உங்களுக்கு...?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கும் அத்தை தான்.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

      நீக்கு
  9. மனதை உருக்கும் பதிவு. அந்தக் காலச் சூழ்நிலையையும் படம்பிடித்துள்ளீர்கள். பிறருக்காகவே வாழ்ந்த எத்தனை ஜென்மங்களால் பலன் பெற்றவர்கள் நாம் எல்லோரும். அதிலும் 'கைம்பெண்' - அவர்கள் 40 வயது வரை கடப்பதற்கு எத்தனை துன்பங்கள் பட்டிருக்கவேண்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் 40 வயது வரை கடப்பதற்கு எத்தனை துன்பங்கள் பட்டிருக்க வேண்டும்.... உண்மை தான். நினைத்தாலே பதை பதைக்கிறது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. காட்டில் காய்ந்த நிலா. கண்ணீர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சித்ரா....

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    தங்களின் இந்தப் பதிவை படிக்கும் போது மனம் நெகிழ்ந்து அழுதே விட்டேன். ஏனெனில், எங்கள் பாட்டிக்கும் ( என் அம்மாவுக்கு அம்மா) இதே சங்கடங்கள் சில வித்தியாசங்களுடன். தங்கள் அத்தைப்பாட்டியின் உருவ ஒற்றுமையும், குணநலன்களும் என் பாட்டிக்கும் ஒத்துப்போவதால் மனம் நெகிழ்ந்து போனேன். இந்த மார்கழியில்தான் தன்னுடைய 89 ம் வயதில் அவர் எங்களை விட்டுப் பிரிந்தார்..(எங்கள் நினைவுகளிலிருந்து அல்ல. ) நானும் அவரைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். அந்த கால மனிதர்களுக்குதான் எவ்வளவு பொறுமை! தன்னுடன் இருப்பவர்களிடம் எவ்வளவு பாசம்! அவ்வளவு பாசத்துடன் உங்களை வளர்த்த பாட்டி உங்கள் நினைவுகளில் என்றும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்.பாசத்திற்கு இறப்பேது? பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... என் பதிவு உங்களுக்கும் உங்கள் நினைவுகளை மீட்டெடுத்து நெகிழ வைத்துவிட்டதா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  12. அத்தைகளையும் பாட்டிகளையும் தனியாக விடாத அந்தக் காலம்... பதிலுக்கு அவர்களும் குடும்பத்தில் பொறுப்புகளை ஏற்று அன்போடு அரவணைத்தவர்கள்... இந்தக் காலத்தில்? ஹ்ம்ம்... என் அத்தைகளை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்!! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில் கிளாஸ் மாதவி.....

      நீக்கு
  13. என் அம்மாவீட்டுத் தாத்தாவின் தங்கை ஒருவர் இருந்தார் அவர் பிறவியிலேயே குருடு கூட. நான் ஒரு கதை கற்பனையில் எழுதி இருக்கிறேன் பார்வையும் மௌனமும் என்னும் தலைப்பில் சுட்டி /http://gmbat1649.blogspot.in/2012/07/blog-post_19.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவினை இதோ படிக்கிறேன்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  14. ருக்கு அத்தையைப் பற்றி காலையிலேயே வாசித்துவிட்டோம். கருத்திட முடியவில்லை.

    கண்களில் நீ நிறைந்துவிட்டது. எனது அக்கா வாய் பேச முடியாதவர். பேசும் திறன் அற்றதால் செவியும் கேட்காது. அதனால் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை விட அவருக்கு வந்தவர் எல்லாருமே இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்ததால் என் அக்க அந்தக் காலத்திலேயே தைரியமாகத் திருமணமே வேண்டாம் என்று இருந்துவிட்டார். எங்கள் பெற்றோர் என்னுடன் தான் இருந்தார்கள். அவர்கள் இறந்த பிறகு என்னுடனேயே இருக்கிறார். எங்கள் வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரேதான் செய்வார். என் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது எல்லாமே அவர்தான். வேறு யாரேனும் கொடுத்தால் அவருக்குக் கோபம் வந்துவிடும். தானே தான் எடுத்துக் கொடுக்க வேண்டும். வீடு பெருக்கித் துடைப்பதிலிருந்து, சமையல் எல்லாம் அவரேதான். ஆல் இன் ஆல். என் இரண்டாவது மகனை அவருக்குத் தத்துக் கொடுத்தது போன்று அவருடனேயே தான் படுத்துக் கொள்வான். மகன் போல..உரிமையுடன் எங்களைக் கோபித்துக் கொள்வார். ஆனால் நாங்கள் யாரும் அதைத் தவறாகவும் எடுத்துக் கொள்ள மாட்டோம். ..எங்கள் எல்லோருக்குமே எங்கள் அக்கா அன்னையைப் போல! கீதா எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதால் அவரது மொழி கீதாவிற்கு நன்றாகப் புரியும். அவரைப் பற்றி எங்கள் தளத்தில் கூட கீதா எழுதியிருந்தார்...அவரது புகைப்படம் கொடுத்து. என் குழந்தைகள் அவர்களது அத்தையை அனுபவிப்பது போல நீங்கள் உங்கள் அத்தைப்பாட்டியை மிகவும் அனுபவித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. அற்புதமான மனிதப் பிறவியைப் பற்றி இங்கு எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி.

    கீதா: ஜி முதலில் கருத்திற்கு முன் நீங்கள் அப்படியே உங்கள் அத்தைப்பாட்டியைப் போல அப்படியே!!!!அதே ஜாடை!!! வெங்கட்ஜி இன் ப்ளாக் அண்ட் வொயிட்!!!!!

    மனதில் ஒரு சொல்லவொணா தாக்கத்தை ஏற்படுத்திய பதிவு என்றால் மிகையல்ல. என் பாட்டி அப்பா வழிப் பாட்டியைச் சற்று நினைவூட்டியது. நிலாச் சோறு...கையில் சாதம் இடுதல் எல்லாமே...அவருடன் இருந்தது 5 ஆம் வகுப்புவரை. என் அம்மாவும் தன் அண்ணன் குழந்தைகளுக்கு இப்படித்தான் இருந்தார். குடும்பச் சூழல் காரணமாக எங்களுடனும், அப்பாவுடனும் தன் அம்மாவீட்டிற்கே வந்துவிட்டதால்..அம்மா அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொள்வார்..அதனால் இன்றும் என் மாமா குழந்தைகள், அத்தை குழந்தைகள் அனைவரும் என்னுடன் மிகுந்த பாசப்பிணைப்பில் இருக்கிறார்கள்....எல்லோரும் ஒரே வீட்டில் வளர்ந்ததால்....அதற்கடுத்து நான் குறிப்பிட நினைத்தது துளசியின் அக்காவைப் பற்றி....அவரே அதைச் சொல்லிவிட்டார். எனக்கும் என் பாட்டி, அத்தைகள் என் அம்மாவை என்று பல நினைவுகளை மீட்டெடுத்துவிட்டது வெங்கட் ஜி!!!! ருக்கு அத்தை அறுபுதமான மனுஷி. இவரைப் போன்று இருந்தால் குடும்பத்தில் பாசத்திற்குக் குறைவிருக்காது என்பது மட்டுமின்றி அடுத்த தலைமுறைவரை அந்தப் பாசமும் நேசமும் துளிர்விட்டுப் பரவிடும்!!! வீட்டுக்கொரு ருக்கு அத்தை வேண்டும்!!!! ஏனென்றால் இவரைப் போன்றவர்கள் ஆலமரம்!!!!!வேரூன்றி, ஆழமாகப் பரந்து பரவிடும் விழுதுகள்!!!!

    அருமையான பதிவு வெங்கட்ஜி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட பின்னூட்டம் இப்பதிவு உங்கள் இருவர் மனதிலும் நினைவுகளை மீட்டெடுத்ததை உணரச் செய்தது. ஒவ்வொரு வீட்டிலும் இப்படி சிலர் இருந்திருக்கிறார்கள். அவர்களின் தியாகமும், உழைப்பும், அவர்கள் காட்டிய பரிவும் பாசமும் மறக்க முடியாதவை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  16. முகப்புத்தகத்தில் வந்த கருத்துரைகள் - ஒரு சேமிப்பாக இங்கேயும்...

    Sreemathi Ravi உங்கள் அத்தையைப் புகைப்படத்தில் பார்க்கும் போது , உன் எழுத்தை வாசிக்கும் போது அந்த காலகட்டதுக்கே போனது போல இருக்கிறது .

    என்னையும் மல்லிகாவையும்
    நடனமாடச் சொல்லி ரசிப்பார் .
    நாங்கள் பாடும் பாடல்களை ஈடுபாட்டுடன் கேட்பார் .

    ஒருமுறை நானும் மல்லிகாவும் "குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டபின்" பாடலுக்கு நடனமாடியது ஞாபகம் இருக்கிறது .

    அவரால்தான் நான் "ஏரிக்கரை மேலே" பாட்டை ரசிக்க நேர்ந்தது .

    அந்த மாதிரி நல்ல மனிதர்களை , சுயநலமில்லாத சொக்கத் தங்கங்களை இந்த நாளில் பார்ப்பது அரிது .

    உன்னுடைய வசீகரமான எழுத்து அவர்களை தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறது .

    Well done . !!

    Venkataraman Nagarajan பல முறை ஏரிக்கரையின் மேலே பாடச் சொல்லி கேட்டு ரசித்திருக்கிறோம் இல்லையா..... அது ஒரு கனாக்காலம். இப்போதைய குழந்தைகளுக்கு இம்மாதிரி கிடைப்பது கடினம். உனக்கும் அத்தையை நினைவில் இருக்கச் செய்தது அவரது அன்பு மட்டுமே என்பதில் சந்தேகமில்லை.

    Sreemathi Ravi ஆமாம் . அவர்கள் அரிசி அப்பளம் இடும் போது அப்பளத்து மாவு கேட்டு தொந்தரவு செய்ததும் , பிரண்டையை வேலியில் தேடியதும் ஞாபகம் இருக்கிறது .

    Venkataraman Nagarajan அந்த அப்பளத்து மாவிற்குத் தான் எத்தனை ருசி.... :) அதுவும் என்அப்பா திட்டுவார் என்று, அவருக்குத் தெரியாமல் நமக்கு கொடுப்பார் அத்தை! :)

    Sreemathi Ravi வா ! எங்கிருந்தாவது அந்த நாட்களை மீண்டும் கொண்டு வருவோம் .

    நான் , நீ , மல்லிகா , ராஜி , (சின்னி) , உன் அம்மா , உன் பெரியம்மா அனைவரும் மீண்டும் சந்தித்து நேரம் போவது அறியாமல் பேசிக்கொண்டிருக்க வேண்டும் போல இருக்கிறது .

    நல்ல நினைவுகள் மட்டுமே இப்போதைய ஆறுதல் .

    Venkataraman Nagarajan தமிழகம் வர வாய்ப்பிருந்தால் சொல் ஸ்ரீமதி. நானும் வருகிறேன். முடிந்தால் இந்த வருட லீவில் அனைவரும் சந்திக்கலாமே....

    Sreemathi Ravi Yes. Sure . Very much wish to . For now I will keep my fingers crossed .
    Unlike · Reply · 1 · Yesterday at 8:17am


    MT Prasad great memories..

    Krishnamurthy Kalyanaraman நான் நெய்வேலிக்கு பள்ளி லீவில் சென்ற போது ருக்கு அத்தையுடன் பழகிய அநத நாட்கள் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.என்ன ஒரு உபசரிப்பு .முகம் கோணாமல் மிகவும் புன் சிரிப்போடு பழகும் அநத குணம் ..சாப்பாடு பரிமாறும்போது போதும் போதும் என்று நான் சொன்னாலும் "என்னடா ரொம்ப கொஞ்சமா சாப்பிடற !சின்ன வயசு .இன்னும் நிறைய போட்டுக்கோ "என்று பாசத்துடன் மிரட்டிய அநத பண்பாடு !இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை .அத்தை சமைத்த சாப்பாட்டு ருசியை இது வரை யாரும் சமைத்ததும் இலலை இனி சமைக்க ருக்கு அத்தை பிறந்து வர போவதும் இல்லை
    கனத்த மனத்துடன்
    கிருஷ்ணமுர்த்தி சித்தப்பா


    Sreemathi Ravi உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா என்று தெரியாது .
    ஆனால் எனக்கு உங்களை நன்றாக நினைவிருக்கிறது .
    நீங்கள் பாடிய
    "இளமையெனும் பூங்காற்று " பாடலை மறக்க முடியாது .
    ஒருமுறை உங்களை அப்துல் ஹமீது நிகழ்ச்சியில் பாட்டுக்கு பாட்டு என நினைக்கிறேன்...தொலைக்காட்சியில் பார்த்தேன் .

    Venkataraman Nagarajan ஆமாம் சித்தப்பா, நீங்கள் எல்லாம் ருக்கு அத்தையிடம் பாசத்தினை நிறையவே பார்த்து அனுபவிக்க முடிந்ததே.... அனைவருக்கும் உபசரிக்கும் அந்த நல்ல மனுஷி போல கிடைப்பது அரிது.....

    Venkataraman Nagarajan Sreemathi Ravi சித்தப்பா இப்போதும் பாடுகிறார். அவர் நடித்தபடி எம்.ஜி.ஆர். பாடல்களை பாடச் சொல்லிக் கேட்பது இப்போதும் நடக்கிறது! ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே” சந்திரபாபு பாடலை மறக்க முடியுமா :)

    Sreemathi Ravi Yes. We had wonderful times whenever he visited .
    And also we were eager to hear tales about your chithi Usha before they got married .

    Sreemathi Ravi உயிருள்ளவரை உஷா என்று கலாய்ப்போம்

    Venkataraman Nagarajan :) Yes. the love stories! Two years back, when Radhika Sundar got married, we all teased chithappa and chithi. உயிருள்ளவரை உஷா....

    பதிலளிநீக்கு
  17. அன்பான இரும்பு மனுஷி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  18. வீட்டுக்கு இருந்த ருக்கு அத்தைகள் இனி பிறப்பார்களா என்பது சந்தேகம்தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  19. ருக்கு அத்தை அனைவர் மனங்களிலும். ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  20. Hi i do had the privilege of taking food from Rukku Athai in my child hood when we were at C 14.Pondychery Road. Great women, excellent redition, god bless. VK Narayanaswamy

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எங்கள் வீட்டிற்கு வந்த பலருக்கும் இந்த அனுபவம் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாராயணஸ்வாமி ஜி!

      நீக்கு
  21. இவ்வளவு பேருடைய இனிய நினைவுகளை கிளறியிருக்கிறது உங்கள் பதிவு. திருமதி ருக்மணி அவர்கள் வாழ்ந்த விதம்... விட்டுச்சென்ற நினைவுகள். இதுதான் சுவர்கமோ? இப்படி நினைவுகளில் வாழ்வதுதான் மறுவாழ்வோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராகவேந்திரன்....

      நீக்கு
  22. கண்களில் நீரை வரவழைத்து விட்டது உங்கள் பதிவு. எங்கள் வீட்டிலும் என் அப்பாவின் அத்தை ஒருவர் இருந்தார். அவருக்கு குழந்தைகள் கிடையாது என்பதைத் தவிர பெரும்பாலும் உங்கள் அத்தை போலத்தான். நம் நாட்டில் அப்போது ஒரு வீட்டிற்கு ஒரு அத்தை இப்படி இருந்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை படித்த பெரும்பாலானவர்களுக்கு தங்கள் உறவினர்களை நினைத்துப் பார்க்க வைத்திருக்கிறது இப்பதிவு. உங்களுக்கும்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....