தொகுப்புகள்

சனி, 25 பிப்ரவரி, 2017

கொல்கத்தா – இந்தியா அருங்காட்சியகம் – ஒரு பார்வை


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 99

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.



விக்டோரியா மெமோரியல் பார்த்த பிறகு நாங்கள் சென்றது கொல்கத்தா நகரில் உள்ள பழமையான அருங்காட்சியகம் – இந்தியா அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இது, மிகவும் பழமையானது – இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் – 1814-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.  இன்றைக்கு நாடு முழுவதும் சுமார் 400 அருங்காட்சியகங்கள் இருக்கின்றன என்று பார்க்கும்போது அதற்கு வித்திட்ட முதல் அருங்காட்சியகம் நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய இடம் என்பது புரியும்.  1814 – அதாவது இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே முதல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது!



வாசலில் புல்லாங்குழல் வியாபாரி ஒருவர் தனது மனதில் இருக்கும் இசையை குழலின் வழி வெளியேற்றி, கேட்பவர்களை தனது இசையால் மயக்கிக் கொண்டிருந்தார்.  Asiatic Society என்ற அமைப்பினால் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் பல தனிமனிதர்கள் வசம் இருந்த புராதானப் பொருட்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. பல வருடங்கள் கழித்து, அரசாங்கமே அருங்காட்சியகத்தினை எடுத்து நடத்த வேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டு, பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1 ஏப்ரல் 1878 ஆம் ஆண்டு, சௌரிங்கி பகுதியில் தற்போது இருக்கும் கட்டிடத்தில் இரண்டு விதமான காட்சியகங்களுடன் அரசாங்கத்தின் பொறுப்பில் வந்தது இந்தியா அருங்காட்சியகம்.



அருங்காட்சியகத்தின் உள்ளே சென்று பார்க்க தேவையான கட்டணத்தினைக் கொடுத்து, [கேமராவிற்கு தனிக் கட்டணம் உண்டு!] உள்ளே நுழைந்தோம். பல பிரிவுகளாகத் தடுத்து ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான விஷயங்களை காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். புராதனச் சிலைகள், நாணயங்கள், பொருட்கள் என ஒரு அறையில் இருந்தால், வேறு அறையில் பல்வேறு மிருகங்களின் எலும்புக்கூடுகள், அவற்றின் தலைப்பகுதி, பற்கள், நகங்கள் என தனித்தனியே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அழிந்து போன டைனசோர் எலும்புக்கூடு ஒன்றும் இங்கே உண்டு. 




அத்தனை பெரிய மிருகங்களின் முழு உருவ எலும்புக்கூடுகளைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது.  இத்தனை விஷயங்களை ஒரே இடத்தில் வைத்து பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். அதுவும் அழிவிலிருந்து பாதுகாப்பது தவிர, வரும் பார்வையாளர்களிடமிருந்தும் காப்பாற்றி வைக்க, அங்கிருக்கும் பணியாளர்கள் போராட வேண்டியிருக்கிறது.  தொடாதே என எழுதி வைத்தால், நிச்சயம் தொட்டுப் பார்க்க வேண்டும் என நினைக்கும் மக்கள் நிறையவே உண்டு இங்கே.  செல்ஃபி எடுக்கிறேன் பேர்வழி என எலும்புக்கூடை கட்டிப்பிடிக்க முயற்சி செய்தார் ஒரு இளைஞர்!



பல்வேறு பகுதிகள், பல தலைப்புகளில் சேகரித்து வைக்கப்பட்ட பொருட்கள் என முழு அருங்காட்சியகமும் பார்க்கக் குறைந்தது மூன்று மணி நேரமாவது உங்களுக்குத் தேவை. நின்று நிதானித்துப் பார்க்க வேண்டுமெனில் அரை நாளாவது அவசியமாக இருக்கும்.  எத்தனை எத்தனை சிலைகள், அதில் பல சேதப்படுத்தப்பட்ட நிலையில்.  பார்க்கும்போது நமக்கே கஷ்டமாக இருக்க, அந்தச் சிலைகளை செய்த சிற்பி இன்று பார்த்தால் நிச்சயம் ரத்தக்கண்ணீர் வடிப்பார்.  தலைகள் துண்டிக்கப்பட்டு, கை-கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கும் சிலைகளைப் பார்க்கும்போது மனதில் ஒரு வலி உண்டாவதை தடுக்க முடியவில்லை.





எகிப்து நாட்டின் புகழ்பெற்ற “மம்மி” ஒன்றும் இங்கே இருக்கிறது. இந்தியா தவிர வேறு சில நாடுகளின் பொருட்களும் இங்கே சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்பது சிறப்பு. அனைத்து அறைகளிலும் இப்படியான விஷயங்கள் நிறையவே உண்டு என்பதால் நின்று நிதானித்து ஒவ்வொன்றாக பார்க்க வேண்டியிருக்கும்.  உங்களுடைய விருப்பம் எந்த அறையில் இருக்கிறது என்பதை நுழையும்போதே கேட்டு வைத்துக் கொண்டால் அந்த இடத்திற்கு மட்டும் சென்று நிதானமாகப் பார்க்க முடியும். இல்லை என்றால் எல்லா அறைகளுக்கும் சென்று வரலாம்.




கொல்கத்தா சென்றால் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த இந்தியா அருங்காட்சியகத்தினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  அருங்காட்சியகத்தின் பின்னர் அமைந்திருந்த ஒரு உணவகத்தில் தேநீர் அருந்தி மீண்டும் சில அறைகளைச் சுற்றிப் பார்த்த பிறகு நாங்கள் வெளியே வந்தோம்.  அங்கிருந்து எங்கே சென்றோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!
  
தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

குறிப்பு:  இங்கே சென்றபோது ஒரே ஒரு காமிராவுக்கு மட்டும் டிக்கெட் வாங்கலாம் எனச் சொல்லி, எனது காமிராவில் புகைப்படம் எடுக்காமல் விட்டோம்.  அதனால் நான் இங்கே புகைப்படம் எடுக்கவில்லை என்பதில் வருத்தமுண்டு! நண்பர் எடுத்த புகைப்படங்களில் பல ஒழுங்காக இல்லை! 

18 கருத்துகள்:

  1. இரசிக்கவும் பிரமிக்கவும் படங்களை தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம் ஜி....

      நீக்கு
  2. நிஜமான எலும்புக்கூடுகளா? இல்லை மாடல்களா? எப்படியிருந்தாலும் பிரமிப்பை ஏற்படுத்தவல்லன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  3. இந்தியாவின் முதல் அருங்காட்சியகம் பற்றி அறிந்துகொண்டேன். புராதன சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அறிவு நம்மவர்க்கு என்று தான் வருமோ? பார்வையாளர்களால் சேதப்படுத்துப்படுவது இந்தியா முழுமைக்கும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. கொல்கத்தா சென்றால் அவசியம் பார்க்க வேண்டும் எனத் தெரிந்து கொண்டேன். நன்றி வெங்கட்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி....

      நீக்கு
  4. இந்தியாவின் பெருமைகளில் ஒன்று கல்கத்தா அருங்காடசியகம். எனது பௌத்த ஆய்வின் போது இந்த அருங்காட்சியகத்திலிருந்து நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியுடன் பெற்று என் ஆய்வேட்டில் இணைத்துள்ளேன். இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா....

      நீக்கு
  5. பிரமிக்க வைக்கும் படங்கள்...
    அருமையான இடம் பற்றிய பகிர்வு அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  6. வணக்கம்
    ஐயா
    பிரமிக்கவைக்கும் படங்கள் படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்....

      நீக்கு
  7. கொல்கத்தா அருங்காட்சியகம் வியக்க வைக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்....

      நீக்கு
  8. தர்மமிகு சென்னையில் இதை செத்த காலேஜ் என்றும் சொல்வார்கள் ஹைதராபாதில் சலார் ஜங் ம்யூசியம் பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன் அவை எல்லாம் தனி ஒருவரின் சேமிப்பு என்பது கூடுதல் சுவாரசியம் பெங்களூரிலும் ஒரு ம்யூசியம் உண்டு விலங்குகளின் எலும்புக் கூடுசள் அசையும் வகையைச் சேர்ந்தது கல்கத்தா சென்றதில்லை அதுவே பிற காட்சியகங்களின் நினைப்பைத் தூண்டிற்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா....

      நீக்கு
  9. அருமையான விவரணம். அருங்காட்சியகம் அருமையாக இருக்கிறது. எலும்புக்கூடுகள் எப்படி இப்படிப் பதப்படுத்தப்பட்டா இல்லை எப்படி என்று வியக்க வைக்கின்றன..

    கீதா: அருமை ஜி!படங்களைப் பார்த்து வரும் போது ஏதோ வழக்கமான படங்கள் போல் இல்லையே. இத்தனைக்கும் கேமராவுக்குக் காசு உண்டு என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்....அப்புறம் படத்தை உற்றுப் பார்த்தால் தங்கள் பெயர் இல்லை...சரி இணையத்திலிருந்தோ என்று வந்தால் இறுதியில் தெரிந்துவிட்டது..தங்கள் கருவி இல்லை என்பது...ஆம் சில அவ்வளவு சரியாக வரவில்லை தான்...கேமரா கையிலிருந்தும் எடுக்காமல் போனால் வருத்தம் ரொம்பவே இருக்கும் ஜி. எனக்கு எனது சாதாரணக் கேமராவுக்கே நான் வருந்துவேன்....உங்கள் கேமரா இன்னும் ஷார்ப்பானது ஆயிற்றே!!! ..

    நிறைய தெரிந்து கொண்டோம் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....