ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 100
இந்தப்
பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின்
சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற
தலைப்பின் கீழே இருக்கிறது.
The Grate Banyan Tree....
பாலம்.....
இந்தியா அருங்காட்சியகம் பார்த்த பிறகு
நாங்கள் சென்ற இடம் Acharya Jagdish Chandra Bose Botanic Garden. கொல்கத்தா என்று
சொன்னாலும், இந்த பூங்கா இருக்கும் இடம் ஹௌரா பகுதியில் தான் இருக்கிறது. கொல்கத்தா பகுதியிலிருந்து புதிய தொங்கு பாலம் வழியாக
பல சாலைக் காட்சிகளைப் பார்த்தபடியே நாங்கள் பூங்காவிற்குச் சென்ற போது மதிய நேரம். வழியில் எங்காவது சாப்பிடலாம் என ஓட்டுனரிடம் சொன்னபோது
வண்டியை சாலையோரத்தில் நிறுத்தி ஏதோ ஒரு சாலையோர உணவகத்தில் சாப்பிடச் சொன்னார். பார்க்கும்போதே
எங்களுக்கு அந்த இடமும் சூழலும் பிடிக்காமல் போக, எதிர் புறத்தில் இருந்த ஒரு கடையில்
கொஞ்சம் நொறுக்குத் தீனி சாப்பிட்டு லஸ்ஸி குடித்து மதிய உணவை முடித்துக் கொண்டோம்.
வழியில் பழுதாகி நின்ற ட்ராம்....
அங்கிருந்து புறப்பட்டு பூங்காவிற்குச்
சென்றால் வெளியே வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நடந்து தான் செல்ல வேண்டும். பூங்கா
அமைந்திருப்பது மிகப் பெரிய பரப்பளவில்! கொஞ்சம் நஞ்சமல்ல அதன் பரப்பளவு – 109 ஹெக்டேர்
பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் பூங்காவும்
ஆகும். பல நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட 12000 வகைகளுக்கு மேலான மரங்கள், செடிகள்
என இங்கே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேலென இருக்கும் இந்த இடத்திற்குள்ளே
பல நீர்நிலைகளும் உண்டு. மரங்கள், நீர்நிலைகள் ஆகியவை இருக்கும்போது பறவைகளுக்குப்
பஞ்சமா என்ன…. வருடா வருடம் இங்கே வரும் பறவைகள் எண்ணிக்கை அதிகம் தான்.
இத்தனை மரங்களும் நீர்நிலைகளும் இருந்தாலும்,
இந்தப் பூங்காவிற்கு வரும் பலரும் பார்க்க நினைப்பது இங்கே இருக்கும் பிரம்மாண்டமான
ஆலமரத்தினை தான். The Great Banyan என அழைக்கப்படும்
இந்த ஆலமரத்தின் வயது 250 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று சொல்கிறார்கள். வயது தவிர, உலகிலேயே பரப்பளவில் மிக அதிக இடத்தினைக்
கொண்டது இந்த ஆல மரம் என்றும் சொல்கிறார்கள்.
ஆலமரத்தின் விழுதுகள் பல இடங்களிலும் வேறூன்றி இருந்தாலும் முதல் முதலாக இருந்த
தண்டுப் பகுதி இப்போது இல்லை – 1925-ஆம் ஆண்டே அதன் தண்டுப் பகுதி அகற்றப்பட்டு விட்டது.
இரண்டு மிகப்பெரிய புயல்களில் சிக்கிய
இந்த மரத்தின் தண்டுப் பகுதியில் பூஞ்சை பிடிக்க அதனால் தான் அதை 1925-ஆம் ஆண்டு அகற்றி
இருக்கிறார்கள். இப்போது, மண்ணில் புதைந்து
மரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் விழுதுகளின் எண்ணிக்கை மட்டுமே 3618! மொத்த மரத்தின்
சுற்றளவு மட்டுமே 450 மீட்டர்! அதாவது கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் அளவு பரந்து விரிந்திருக்கிறது
இந்த ஆலமரம்! Great Banyan என்ற பெயர் பொருத்தமானது தானே!
இந்த மரத்தின் பரப்பளவு கிட்டத்தட்ட
15665 சதுர மீட்டர்! இந்த கணக்கெல்லாம் எடுத்தது 31 மே 2013 – அதாவது நான்கு வருடங்களுக்கு
முன்னர்! இந்த நான்கு வருடங்களில் மேலே சொன்ன அளவுகள் அனைத்துமே அதிகமாகி இருக்க நிறையவே
வாய்ப்புண்டு. எவ்வளவு நேரம் நின்று அங்கே
அந்த ஆலமரத்தினைப் பார்த்துப் பிரமித்து நின்றிருப்போம் என்று சொல்ல முடியவில்லை. அவ்விடத்தினை
விட்டு அகலவே மனதில்லை. இவ்வளவு பெரிய மரத்தில்
எத்தனை பறவைகள் வந்து போகும், ஒவ்வொரு பறவைக்கும் இருக்கும் கதை, எந்தெந்த தேசத்திலிருந்து
வந்திருக்கும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டே அங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம்.
கின்னஸ் புத்தகத்திலும் இந்த ஆலமரத்திற்கு
ஒரு இடம் உண்டு என்பதையும் அங்கே தகவல் பலகையில் எழுதிப் போட்டிருக்கிறார்கள். பூங்காவின்
மற்ற பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகள், பல்வேறு மரங்கள் என அனைத்தையும் சுற்றி வந்து
பார்க்கிறார்களோ இல்லையோ, இங்கே வரும் அனைவருமே பார்க்க விரும்பும் ஒன்று இந்த
Great Banyan Tree தான். நாங்கள் சென்றிருந்தபோதும்
நிறைய சுற்றுலாப் பயணிகளைப் பார்க்க முடிந்தது.
பூங்காவின் ஊழியர்கள் இந்த மரத்தினை ரொம்பவும் சிரத்தை எடுத்து பாதுகாக்கிறார்கள்
என்பதையும் பார்க்க முடிந்தது.
முழு பூங்காவினையும் சுற்றி வந்ததில்
எங்காவது அமர்ந்து கொண்டால் போதும் என்று இருந்தது எங்களுக்கு! ஆனாலும், அமர்வதற்கு
சரியான இடம் இல்லை. நீர்நிலைகளுக்கு அருகில் புல் தரைகளும், சில இருக்கைகளும் இருந்தாலும்,
பெரும்பாலான இடங்களில் காதல் ஜோடிகள் அமர்ந்து கொண்டு மூக்கை மூக்கை உரசிக் கொண்டிருக்க,
நாங்கள் – நாங்கள் என்பது இங்கே ஐந்து பேர் – அனைவரும் ஆண்கள் – அங்கே சென்று அமர்ந்தால்
சரியாக இருக்காது என்பதால் எங்கும் அமரவில்லை.
ஆலமரத்தின் அருகே அமர்ந்து கொள்ளலாம் என்றால், அங்கே ஏதோ பராமரிப்பு வேலை என
எல்லாவற்றையும் தோண்டிப் போட்டிருந்தார்கள்! சரி இவ்வளவு நடந்தாயிற்று, இன்னும் கொஞ்சம்
நடந்து வாகனம் நிறுத்துமிடத்திற்கு வந்து வாகனத்திற்குள் அமர்ந்து கொள்ளலாம் என முடிவு
செய்து விட்டோம்.
நாங்கள் பூங்காவிலிருந்து புறப்பட்டு
அடுத்ததாய் சென்ற இடம், அது என்ன இடம்…. அடுத்த பகுதியில் சொல்கிறேன்……
தொடர்ந்து பயணிப்போம்.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
டிஸ்கி: இந்தத் தொடரின் 100-வது பகுதி! இன்னும் சில பதிவுகளில் இத்தொடர் முடியும்!
ஆலமரம் வியப்பைத் தருகிறது ஐயா
பதிலளிநீக்குஇதுபோன்ற ஒரு ஆலமரத்தின் கீழ்தானே புத்தருக்கு ஞானம் பிறந்தது
புத்தருக்கு ஞானம் பிறந்த இடத்தில் இருப்பது போ அல்லது பீப்பல் என அழைக்கப்படும் அரச மரம்..... புத்த கயாவில் இருக்கிறது. இங்கே இருப்பது ஆலமரம். அங்கே இருக்கும் மரத்திற்கு இன்னும் வயது அதிகம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
சொல்லிய கருத்தும் ஒவ்வொரு படங்களும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குஅசர வைக்கும் ஆலமரம்...!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஇதுக்குதான் இந்த மாதிரி பார்க்கிற்கு செல்லும் போது மனைவியை கூட அழைத்து செல்லும் என்பது அப்போதுதான் கால் வலிக்கும் போது காதலர்கள் போல நீங்களும் உட்கார்ந்து முக்கை உராசிக் கொண்டு இருக்கலாம்
பதிலளிநீக்குஆஹா.... அப்படி மனைவி கூட போகும்போது கூட இப்படி இருக்க முடியாது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருமை.
நீக்குஆலமரம் பிரமிப்பா இருக்கு. அதன் தாய் மரத் தண்டு இருந்த பகுதின்னு எதையும் போட்டுவைக்கலையா? எப்படியும் தாய்மரம் எங்க இருந்ததுன்னு இடம் இருக்குமே.
பதிலளிநீக்குஅப்படி குறிப்பேதும் இல்லை. அவ்வளவு பெரிய மரத்தில் முக்கியத் தண்டு இருந்த இடம் எது எனக் கண்டுபிடிக்கத் தோன்றவும் இல்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
அருமையான பகிர்வு, அழகான படங்களுடன். 450 மீட்டரா..? 250 மீட்டர் சுற்றளவிலான பெரிய ஆலமரம் ஒன்று பெங்களூரில் உண்டு: http://tamilamudam.blogspot.in/2014/10/blog-post_28.html
பதிலளிநீக்குஆமாம் 450 மீட்டர் சுற்றளவு..... கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருந்தது! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
சென்னை தியாசாபிகல் சொசைட்டியில் அடையாறில் ஒரு பழைய ஆலமரம் இருந்தது கேள்விப்பட்டிருக்கிறேன் இந்த தகவல் புதியது
பதிலளிநீக்குஆமாம் அடையார் ஆலமரம் என்றே அழைப்பார்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
பிரமிப்பாக இருக்கிறது! தகவல்கள் அனைத்தும் அருமை ஜி! புகைப்படங்கள் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன..
பதிலளிநீக்குகீதா: மேற் சொல்லப்பட்ட கருத்துடன்... ஜி நானும் சென்னை அடையார் ஆலமரத்தைப் பற்றி விரைவில் பதிவு வெளியிட எண்ணியுள்ளேன்...எழுத நேரம் இல்லாமல் போகிறது.....நல்ல பகிர்வு ஜி! க்ரேட் பான்யனையும் பார்க்க வேண்டும்....
அடையார் ஆலமரம் பற்றிய உங்கள் பதிவு படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!