தொகுப்புகள்

திங்கள், 29 ஜூலை, 2019

அலுவலக அனுபவங்கள் – என் பெயர் ஜாலி



இவர் அவரல்ல.... படம் இணையத்திலிருந்து...


அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். வாரத்தின் முதல் நாள். வேலைக்கு/பள்ளிக்குச் செல்லும் பலருக்கு Monday Morning Blues என்று சொல்லக் கூடிய விஷயம் உண்டு! உங்களுக்கு? ஆனால் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். எந்த நாளாக இருந்தாலும் அவற்றை நல்ல நாளாக மாற்றிக் கொள்வது உங்கள் கையில் தான்! இந்த நாளை ஒரு நல்ல பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாமா?


[அது சரி… மேலே உள்ள பொன்மொழியைச் சொன்னவரின் பெயரை எப்படி உச்சரிப்பது? அறிந்தவர்கள் சொல்லலாமே!]

அலுவலகங்களில் நான் சந்தித்த பலர் எனக்குப் புதிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தவர்கள். இருபது வயது முடிந்திராத நிலையில் வேலைக்குச் சேர்ந்த போது எனக்கு அனுபவ அறிவு என்பது மிகக் குறைவு – இங்கே வேலைக்குச் சேர்ந்த பிறகு தான் விதம் விதமான அனுபவங்கள், விதம் விதமான மனிதர்கள் என பலவற்றையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். சந்தித்த பலரும் ஏதோ ஒரு விதத்தில் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அலுவலகத்தில் சிலர் செய்யும் விஷயங்கள் என்னை ரொம்பவும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. இதெல்லாம் கூட அலுவலகத்தில் செய்வார்களா? என்று எனக்குத் தோன்றியதுண்டு! குறிப்பாக ஒரு சிலரை இன்றைக்கும் நினைவு வைத்திருக்கிறேன்! அதில் சிலரை அவ்வப்போது இங்கே அலுவலக அனுபவங்கள் பதிவுகளில் அறிமுகம் செய்து வைக்க இருக்கிறேன்.

இன்றைக்கு ஒரு பெண்மணியின் கதையைப் பார்க்கலாம். நான் வேலைக்குச் சேர்ந்த சில வருடங்களுக்குப் பிறகு தான் இந்தப் பெண்மணி – பெயர் ஜாலி – இருந்த அதே அறையில் இருக்கும் மற்றொரு பிரிவில் நான் இருந்தேன். பஞ்சாபி பெண்மணி. எப்போதும் அமைதியாக இருப்பார். ஒவ்வொரு நாளும் முதல் முறை சந்திக்கும்போது ஒரு புன்னகை மட்டுமே காலை வணக்கத்திற்குப் பதிலாகக் கிடைக்கும். பெரிதாக எதுவும் அலங்காரம் செய்து கொள்ள மாட்டார் என்றாலும் அவரிடம் ஒரு நளினமும் அழகும் இருக்கும் – என்னை விட வயதில் மிகப் பெரியவர். நான் சேர்ந்த சில வருடங்களில் பணி ஓய்வு பெற இருந்தவர். எப்போதும் முகத்தில் ஒரு வித அமைதி தவழும். காலையில் அவரைப் பார்த்து வணக்கம் சொல்லி ஒரு புன்னகையை பதிலாகப் பெறுவது பலரின் வழக்கம்.

அறையில் உள்ளவர்களிடம் பெரும்பாலும் பேசுவது குறைவு. அவருக்கென்று இருக்கும் சில தோழிகள் உடன் மட்டும் கொஞ்சம் பேசுவார். நிறைய விஷயங்கள் குறித்த அனுபவங்கள் அவருக்கு உண்டு என்பது மட்டும் தெரிந்து இருந்தது எனக்கு. அவருடன் தொடர்ந்து பேசிப் பழகும் சிலர் என்னிடம் அவர் குறித்த அனுபவங்களை சொல்லியதுண்டு. அமைதி தவழும் அந்த முகத்திற்குப் பின்னே பெரும் சோகம் குடியிருந்தது எங்களுக்கெல்லாம் வெகு நாட்களுக்குப் பின்னரே தெரிந்தது. பழகிய உடன் ஒருவருடைய தனிப்பட்ட விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை. “ஹலோ, ஹலோ”, “நீங்க நல்லா இருக்கீங்களா, நான் நல்லா இருக்கேன்” என்பதான சாதாரண சம்பாஷணைகள் தான் பெரும்பாலும்.

திருமணம் புரிந்து சில வருடங்களுக்குப் பின்னர் தனது கணவருக்கு, முதலிலேயே வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்தது, அது இன்றைக்கும் தொடர்கிறது என்று தெரிந்தால்… அதுவும் தன்னால் எதையுமே செய்ய முடியாத சூழலில் இருப்பவராக இருந்தால்… அப்படியான ஒரு சூழலில் தான் அவர் இருந்தார். போதாக் குறைக்கு, அவருக்குக் குழந்தைகளும் கிடையாது. கணவர் பற்றித் தெரிந்த பிறகு அவருடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளவும் அவருக்குத் தோன்றவில்லை. அதனால் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனி வாழ்க்கை. கூட்டுக் குடும்பம் என்பதால் அந்தக் கூண்டினை விட்டு வெளியே வரவும் அவருக்கு இஷ்டமில்லை. தன் சோகத்தினை உள்ளேயே வைத்து வைத்து மருகி அமைதியாகிப் போனவர்.

இந்த விஷயங்கள் எனக்குத் தெரிந்த போது எனக்குள் அதிர்ச்சி. அவரைப் பார்க்கும்போதே மனதுக்குள் ஒரு வலி. அரசு வேலையில் இருக்கும் அவர் ஏன் கணவனைக் கண்டிக்கக் கூடாது, தனியே பிரிந்து வரக்கூடாது, என்றெல்லாம் எனக்கு நானே யோசித்துக் கொள்வதுண்டு. ஆனால் அவரோ இப்படி எதுவும் செய்யாமல் தனக்குள்ளேயே மருகிக் கொண்டிருந்தார். பணி ஓய்வுக்குச் சில வருடங்கள் இருக்கையில், பத்துப் பதினைந்து நாட்களாக அலுவலகம் வரவில்லை. பிறகு தான் தெரிந்தது – அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பது. பிறகு ஒரு நாள் காலை அலுவலகத்திற்குச் சென்ற போது அவர் இறந்து போன செய்தி வந்தது. எங்கள் அலுவலகத்திலிருந்து பலரும் அவருடைய வீட்டிற்குச் சென்று பிறகு அந்திமக் காரியங்களுக்காக சுடுகாடு சென்றிருந்தோம்.

வீட்டிற்குச் சென்ற போது ஒரு மரக் கட்டிலில் படுக்க வைத்திருந்தார்கள். அதே அமைதி ததும்பும் முகம் – முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை – என் எல்லாத் துயரங்களையும் என்னுள்ளே அடக்கிக் கொண்டு எப்போதும் முகத்தில் சேர்த்து வைத்திருக்கும் புன்னகையுடன் சென்று வருகிறேன் என்று சொல்வது போல இருந்தது எனக்கு. பொதுவாகவே இறப்பு என்னை அவ்வளவு பாதிப்பது இல்லை – வந்தவர்கள் இங்கேயே தங்கி விட முடியுமா என்ன – என்றைக்காவது ஒரு நாள் இறந்து தானே ஆக வேண்டும்? ஆனால் அந்தப் பஞ்சாபிப் பெண்மணி இறந்து போன போது கொஞ்சம் வருத்தம் வந்தது – அந்தப் பெண்மணிக்குச் சோகங்களை மட்டுமே தந்து சுகங்களைத் தர மறந்த அந்த கணவனைக் கண்டு ஆறுதல் வார்த்தைகள் சொல்ல எனக்கு மனமில்லை. அந்த ஆள் மீது ஒரு வித கோபம் மட்டுமே வந்தது. அந்தக் கோபம் அடுத்த நாள் இன்னும் அதிகரித்தது!

அடுத்த நாளே அலுவலகத்திற்கு வந்து இருந்தான் – ர் என அழைக்க என மனமில்லை - அந்த சர்தார்ஜி! என்ன விஷயம் என்று கேட்க, மனைவியின் GPF சேமிப்பில் இருந்த பணம், Gratuity, Family Pension, Leave Salary என அனைத்தையும் பெறுவதற்கான படிவங்களை வாங்கிக் கொண்டு கையெழுத்துப் போட்டுச் செல்லலாம் என வந்தானாம் அந்த ஆள்! கொள்ளி வைத்த அடுத்த நாளே இப்படி வந்து கேட்க எப்படித்தான் மனம் வந்ததோ? முதல்ல காரியம் எல்லாம் முடியட்டும், உங்களை அழைக்கும்போது வந்தால் போதும் என்று, கொஞ்சம் கோபமாகவே சொல்லி அனுப்பி வைத்தார்கள் அலுவலகத்தில். அன்றைய நாள் முழுவதுமே அந்தப் பெண்மணியின் புன்னகையும் அவரை மகிழ்வுடன் வைத்திருக்காத அந்த பணப்பேயையும் நினைவிலிருந்து அகற்ற முடியவில்லை.

இல்லற வாழ்வில் அவருக்குக் கிடைக்கப்போகும் துன்பங்களைப் பற்றித் தெரிந்தோ தெரியாமலோ, அவரின் பெற்றோர் “ஜாலி” என்று பெயர் வைத்தனரோ? பெயரிலாவது ஜாலியாக இருக்கட்டுமே என்று… மனதிலிருந்து அகலாத அவரின் நினைவுகளுடன் இப்போதும்…

என்ன நண்பர்களே, இந்த நாளின் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

  1. ஜாலியின் வாழ்வு காலையில் மனதை கனக்க வைத்து விட்டது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போது அவரை நினைத்தாலும் மனது கனத்துப் போகும் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட்.

    பழமொழியைச் சொன்னவர் அம்பிகாவின் தாத்தாவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம். அம்பிகாவின் தாத்தா... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதிவு பிடித்திருந்ததா என்று கேட்கிறீர்கள். பதிவு மனதில் கனத்தை ஏற்றி வைத்தது. இது மாதிரி முரண்பட்ட பெயர்கள் மனதில் இன்னும் வலியை அதிகரிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனது கனக்கும் விஷயம் தான். முரண்பட்ட பெயர் இன்னும் வலியை அதிகரிக்கிறது.... உண்மை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அவரின் அந்த ட்ரேட்மார்க் புன்னகை அவரின் பண்பட்ட குணத்தைக் காட்டியிருந்திருக்கிறது. புண்பட்ட மனதை மறைத்திருந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்பட்ட குணம்... புண்பட்ட மனம்... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    இன்று காலை நெட் படுத்தியதில் பதிவு வெளியான நேரத்தில் வர இயலாமல் அப்புறம் வந்து கில்லர்ஜியின் பதிவு மனதைக் கலங்க வைக்க...திங்கவுக்குப் போய் பொடியில்..ஹிஹிஹி

    அருமையான தொடக்கம் வெங்கட்ஜி..

    //எந்த நாளாக இருந்தாலும் அவற்றை நல்ல நாளாக மாற்றிக் கொள்வது உங்கள் கையில் தான்! இந்த நாளை ஒரு நல்ல பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாமா?//

    சூப்பர் வாசகம்.! ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதாஜி.

      நெட் பதுத்தல் - சில சமயம் இப்படிதான். கஷ்டமாகி விடுகிறது.

      வாசகம் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வெங்கட்ஜி பதிவு பிடித்ததா? நீங்கள் எழுதிய அழகாக எழுதியிருக்கிறீர்கள் ஆனால்... பதிவு மனதைக் கனக்க வைத்துவிட்டதே!

    ஜாலி என்ற பெயர் ஆனால் வாழ்க்கையோ மிக மிக சோகம் நிறைந்த வாழ்வு. வெளியில் சொல்லாமல் மனதிற்குள்ளேயே புழுங்கியதுதான் அவரை வெகு சீக்கிரம் அழைத்துக் கொண்டுவிட்டது போலும். பாவம் பெண்மணி...

    இப்படியும் கணவன் இருக்கிறான் பாருங்கள். இவனுக்கு எல்லாம் ர் அவசியமே இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதை கனக்கச் செய்யும் பதிவுதான்....

      வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள் புழுங்கியது அவரது முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்பது நிஜம்.

      ர் அவசியமே இல்லை.... உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. உங்கள் இந்த பதிவு ஆழ்ந்த வருத்ததையும் உணர்ச்சி இல்லாத அந்த மனிதர் மேல் கோபத்தையும் ஏற்படுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  8. இவரைப் போல, மனதில் பல சோகங்களை வைத்துக்கொண்டு வாழ்கின்ற, பல நண்பர்களை நான் சந்தித்துள்ளேன். அவர்களைப் பார்த்து வியந்துபோவேன். இவர்களைப் போன்றோருக்கு இறைவன் ஏதோ ஒரு அபரித சக்தியைக் கொடுத்துள்ளானோ, எப்படி இவ்வாறு இருக்கின்றார்கள் என்று நினைப்பதுண்டு. இவரும் அவ்வகையில்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் போன்றவர்களை பார்த்து வியப்பு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  9. ஜெயிலுக்கு முதல்ல போறவங்க, சில நாட்கள் ரொம்ப கஷ்டப்படுவாங்க. செய்யாத தவறுக்குப் போனவங்க தன்னிரக்கப் படுவாங்க. அப்புறம் மெதுவா, இது விதி என்பதை உணர்ந்து அமைதியாகி அந்தச் சூழ்நிலையை அனுசரித்து நடக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

    நான் படித்த இதனை, ஜாலி அவர்களின் வாழ்க்கை நினைவுபடுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. வேதனைகள் அவரை பேசாமடந்தையாக்கி விட்டதோ!
    ஜாலி பெயரில் மட்டும்.

    எனக்கு ஆசிரியராக இருந்தவருக்கும் இப்படிபட்ட கணவன் கிடைத்தான் முதல் தேதியில் சம்பளம் கொடுத்த போது 50பைசா குறைந்து விட்டது என்று அடித்த அடி இப்படியும் ஒரு பணப்பேயா? என்று எல்லோரும் பேசிக் கொண்டோம். அது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அளவு கடந்த வேதனை சிலரை மௌனமாக்கி விடும் சகோ

      நீக்கு
    2. ஆசிரியர் பணப்பேய் கணவன் - இப்படியும் சிலர். :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
    3. அளவு கடந்த வேதனை மௌனமாக்கி விடும் என்பது உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. வருத்தம் தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. இப்படி ஒரு நல்ல பெயரை வைத்துக் கொண்டு,
    மனம் முழுக்க வருத்ததைச் சுமந்த பெரிய மனுஷி.

    அந்த அம்மாவின் சொத்துக்களை அவரை மாதிரி வாழ்விழந்தவர்களுக்குக் கொடுத்திருக்கலாம்.

    மிக மிக வருத்தம் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் முழுக்க வருத்தம் சுமந்த நல்ல மனுஷி..... இவர்கள் போன்றவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு பாடம் தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  13. மனம் கணக்க வைத்த பதிவு. இறந்து பிறகும் முகத்தில் ஒரு புன்னகை என்று எழுதியிருந்தீர்கள். தனக்கு வாழ்வில் சோகத்தை தவிர வேறு எதுவும் தராத இயற்கையை வெற்றி கொண்ட புன்னகையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இயற்கையை வெற்றி கொண்ட புன்னகையோ?// இருக்கலாம் பானும்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. தனது மனக்குறையை வெளிக்காட்டாது சாந்தமாக இருப்பதுவும் ஒருவித தவம்தான்.

    மனக்குறை உள்ளவர்கள் மற்றவர் மேல் பாய்ந்து விழுவதைதான் பெரும்பாலும் கண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாந்தமாக இருப்பதுவும் ஒரு வித தவம் தான்... உண்மை மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. வருந்த வைத்த பதிவு. ஜாலி என்பது பெயரில் மட்டுமே. வாழ்க்கையில் இல்லை. இவ்வளவு கஷ்டங்களைக் கொடுத்த பின்னரும் அந்த மனைவியின் பணத்துக்காக அலையும் கணவனை என்ன சொல்லுவது! ஆனால் இப்படியும் இருக்கிறார்கள் தான். ஆனாலும் இந்தப் பெண்மணி விவாகரத்து கோரி வெளியே வந்திருக்கலாமோ என்னும் எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை! தைரியம் இல்லையோ? :((((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணத்திற்காக அலையும் நபர்கள் இங்கே அதிகம்!

      விவாகரத்து கோரி வெளியே வந்திருக்கலாமோ? அதற்கான மனோதைர்யம் திருமதி ஜாலியிடம் இல்லை என்றே தோன்றுகிறது.

      சுட்டி மூலம் இங்கே வந்து கருத்துரைத்ததில் மகிழ்ச்சி. இப்படி சுட்டிகள் தருவதும் ஒரு விதத்தில் நல்லது தானே! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....