அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, சமீபத்தில்
படித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
விமானத்தில் நானும் பெங்காலி நண்பரும்...
கடந்த
மாதம் 21-ஆம் தேதி பகிர்ந்து கொண்ட காஃபி வித் கிட்டு பதிவில் இரண்டு
வாரம் தமிழகத்தில் இருக்கப் போவதை எழுதி இருந்தேன். இரண்டு வாரங்கள் தமிழகத்தில்
இருந்து இதோ இந்த வாரத்தின் ஞாயிறில் [6 அக்டோபர்] தில்லி திரும்பி மீண்டும் வீடு –
சமையல் - அலுவலகம் – வீடு – சமையல் என்ற சுழலுக்குத் திரும்பியாயிற்று. இரண்டு
வாரங்கள் தமிழகப் பயணம் – திருச்சியை விட்டு வெளியே செல்லும் திட்டம் இருந்தது
என்றாலும் அது கைவிடப்பட்டது – செய்திருந்த முன்பதிவுகள் அனைத்தும் ரத்து செய்ய
வேண்டியதாயிற்று – வீட்டில் சில வேலைகள் என்பதால் பயணம் வேண்டாம் என மேலிடத்து
முடிவு! மேலிடத்து முடிவை ஏற்றுக் கொள்வது தானே என்றைக்கும் நல்லது! ஏற்கனவே
சொன்னபடி தில்லியிலிருந்து புறப்படும்போது அதே விமானத்தில் பெங்காலி நண்பரும்
என்னுடன் பயணித்தார்.
விமானப்
பயணத்தில் சின்னச் சின்ன சம்பவங்கள் – ஏதோ விளையாட்டில் பங்குபெற வரும் பள்ளிச்
சிறுவர்கள் – திரும்பத் திரும்ப விமானப் பணிப்பெண்களை அழைத்து தொல்லை தந்தார்கள் –
அனைத்தும் அவர்களுக்கு விளையாட்டு தானே. ஒரு பணிப்பெண் – ஒரு சிறுவனை கொஞ்சம்
மிரட்டினார் – இறக்கி விட்டு விடுவேன் என்று சிரித்தபடியே சொன்னார். நிறைய நேரம்
தூங்கினோம். விழித்திருந்த சமயத்தில் சக பயணிகளைக் கவனித்ததில் ஒரு
கைக்குழந்தையும் பெற்றோர்களும் – குழந்தைக்கு பெரிய சோடாபுட்டி கண்ணாடி –
பிறக்கும்போதே கண் குறைபாடு போலும் – சென்னை சங்கரா நேத்ராலயாவில் சிகிச்சைக்கு
வருகிறார்கள் எனத் தெரிந்தது. கண்ணாடியும் தலையுடன் சேர்த்துக் கட்டிய கயிறுமாக
அக் குழந்தையைப் பார்க்கும்போது வருத்தம் தான் மிஞ்சியது. கண் தெரியாமல் பிறந்து
அவதிப் படுவது எத்தனை கஷ்டம். நன்றாகத் தெரிந்து கொண்டிருந்த கண், பின்னர் தெரியாமல்
போவதும் கஷ்டம் தான் – அப்படி ஒருவரை இப்பயணத்தில் சந்தித்தேன் – அவரைப் பற்றி
பிறகு எழுதுவேன்!
சென்னை
விமான நிலையத்தில் சென்னையிலிருந்து எங்கோ பயணம் செய்ய காத்திருந்த சில
குடும்பங்களைப் பார்க்க முடிந்தது – ராஜா காதில் தானாகவே விழுந்த சம்பாஷணை ஒன்று
ஸ்வாரஸ்யம்! மனைவி:
என்னங்க, அங்கே பாருங்க, அழகுப் புனைவிடம்னு எழுதி
இருக்கு. என்னைக் கூப்பிட்டுப் போங்களேன்…”
அதற்கு கணவர் சொன்ன
பதில் தான் ஸ்வாரஸ்யம்! கணவர்: முதல்ல போர்டிங் பாஸ் பத்திரமா வச்சுக்கோம்மா… அது
இல்லைன்னா ரொம்பவே கஷ்டமாயிடும்! ஆஃபீஸ்ல க்ளைம் பண்ண முடியாது!” ஹாஹா… அவர்
கவலை அவருக்கு! LTC எடுத்துக் கொண்டு எங்கேயோ பயணம் செல்கிறார்கள் போலும்! அழகுப்
புனைவிடம் பற்றிக் கேட்டதுமே இப்படி ஒரு பதிலை நிச்சயம் எதிர்பார்த்து
இருக்கமாட்டார் அந்தப் பெண்மணி இல்லையா! ஹாஹா… எனக் கொஞ்சம் சத்தமாகவே சிரித்து
விட்டேன் போலும்! கொஞ்சம் முறைத்தார் – என்னை அல்ல! தன் கணவரைத் தான்!
சென்னை
விமான நிலையத்திலிருந்து பெருங்களத்தூர் வரை ஊபர் – எப்போதும் போல ஓட்டுனரிடம்
பேச்சுக் கொடுக்க அவர் நெய்வேலி அருகே இருக்கும் சேத்தியாத்தோப்பைச் சேர்ந்தவர்
எனத் தெரிந்தது – பெயர் அஜித்! தல ரசிகர் போல! அம்மாவும் அண்ணனும்
சேத்தியாத்தோப்பில் இருக்க, இவர் மட்டும் ஒரு மாதத்திற்கு முன்னர் தான் சென்னைக்கு
வந்தாராம் – பிழைப்புக்காக தமிழகத்தின் தலைநகர் வருபவர்கள் எத்தனை எத்தனை பேர் –
வந்தாரை வாழ வைக்கும் சென்னை! பேசிக் கொண்டே வந்ததில் பெருங்களத்தூர் வந்திருந்தது.
அவருக்கு நன்றி சொல்லி கீழே இறங்க வண்டியை எடுத்து விட்டார்! எங்கள் இருவரது
பெட்டியும் டிக்கியில்! ரொம்பவே அவசரம் அந்த இளைஞருக்கு! வண்டியை நாங்கள்
இறங்கியதும் எடுத்ததால் தட்டி நிறுத்த வேண்டியிருந்தது! என்னப்பா இப்படி செய்யறியே
எனக்கேட்க கொஞ்சம் அசடு வழிந்தார். உடைமைகளை எடுத்துக் கொண்டு மீண்டும் நன்றி
சொல்லி அனுப்பினோம்!
பெருங்களத்தூரில்
ஒரு உணவகத்தில் தோசையும் பொங்கலுமாக உணவை முடித்துக் கொண்டோம். பெங்காலி
நண்பருக்கு அதுவே வயிறு நிரம்பி விட்டது என்று சொன்னார். தமிழகப் போக்குவரத்து
துறை நிறைய புதிய பேருந்துகளை வாங்கி விட்டிருக்கிறது போலும். திருச்சி வரையான
பேருந்து ஒன்றில் சுலபமாக இடம் கிடைத்தது. நிறைய இருக்கைகள் காலியாகவே இருந்தன. பேருந்தில்
பயணச் சீட்டு அதிகரித்ததிலிருந்தே மக்கள் இரயில் பயணத்தினை தான் அதிகம்
விரும்புகிறார்கள் எனத் தோன்றுகிறது – சென்னை – திருச்சி பல்லவன்/வைகை ரயில்களில்
150/- ரூபாய்க்கும் குறைவு. பேருந்தில் 250-க்கு மேல்! நானும் நண்பரும் பேருந்துப்
பயணத்தில் பல விஷயங்களை பேசிக் கொண்டே வந்தோம். ஹிந்தியில் பேசிக் கொண்டு வந்தது பலரையும்
திரும்பிப் பார்க்க வைத்தது. நடத்துனரிடம் புதிய பேருந்து பற்றிக் கேட்க, ”இதெல்லாம் நல்லாவே
இல்ல, பழைய பேருந்து தான் நல்லா இருந்தது – சீட்டுகளுக்கு நடுவே நல்ல இடம்
இருந்தது, புதுசு சரியில்லை, காசு நிறைய அடிச்சுட்டாங்க!” என்று
புலம்பினார்.
மாலைக்குள்
வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். நண்பரும்
என்னுடன் வீட்டிற்கு வந்து அடை சாப்பிட்டு காஃபியும் பருகிய பின்னர் அவர்
முன்பதிவு செய்திருந்த தங்குமிடம் செல்லத் தயாரானார். அவரை ஓலா ஆட்டோவில் அழைத்துச் சென்று அங்கே விட்ட
பிறகு நான் வீடு திரும்பினேன். இந்தத்
தமிழகப் பயணத்தில் திருச்சி தவிர வேறு எங்குமே செல்ல இயலவில்லை என்றாலும்
திருச்சியில் ஒன்றிரண்டு இடங்களுக்குச் சென்று வந்தோம். தமிழகப் பயணம் பற்றிய
மற்றும் சில விஷயங்கள் அடுத்த பதிவுகளில் வரும்! இன்றைக்கு பதிவில் சொன்ன
விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக
பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி
விமானத்தில் எடுத்த பஞ்சுபொதி படம் அருமை நான் இப்படி ஒவ்வொரு முறையும் எடுத்து விடுவேன்.
பதிலளிநீக்குஎதற்காக பெருங்களத்தூர் வந்து பேருந்தில் ஏறினீர்கள் ? அங்குதான் சிவாநந்தா குருகுலம் இருக்கிறது ஜி
திருச்சி உலா பற்றி அறிய அவா.
ஆமாம் கில்லர்ஜி... தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள் எல்லாம் பெருங்களத்தூரில் நின்றே செல்லும். எனவே அங்கு ஏறுவது எளிது.
நீக்குசிவானந்தா குருகுலம் காட்டாங்கொளத்தூரில் இருக்கிறது. பெருங்களத்தூர்-வண்டலூர்-ஊரப்பாக்கம்-காட்டாங்கொளத்தூர்.
நீக்குபஞ்சுப் பொதிகள் இம்முறை அதிகம் என்று தோன்றியதால் படம் எடுத்தேன் கில்லர்ஜி. CMBT-யிலிருந்து புறப்படும் பேருந்துகள் தாம்பரம் வராது. தாம்பரத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் வழியில் எல்லா ஊர்களிலும் உள்ளே சென்று செல்லும் என்பதால் தாமதமாக திருச்சி செல்லும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆமாம் ஸ்ரீராம். கோயம்பேடு வரை சென்றாலும் இதே வழியே தான் திரும்ப வேண்டும். நேர விரயம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆமாம் நெல்லைத் தமிழன். முன்பெல்லாம் அப்பா வருடாவருடம் தீபாவளிக்கு முன் அங்கே சென்று பணமும் துணிகளும் கொடுத்து வருவார். காட்டாங்குளத்தூரில் தான் குருகுலம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இரக்கமற்ற மனிதர்கள்! நல்ல வாசகம். குட்மார்னிங்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் ஸ்ரீராம். இரக்கமற்ற மனிதர்கள்.... அதேதான்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆமாம்... வழக்கமாக நான் பார்க்கும் படங்களை விட இந்தப் படத்தில் சற்று அதிகமாகவே பஞ்சுப்பொதிகள் தெரிகிறதுதான்!
பதிலளிநீக்குபூமியில் விளையவேண்டிய பஞ்சுகள் காய்ந்து கருக
நீக்குஅவையெல்லாம் வானத்தில் விளைந்தனவோ
யாருக்கும் உபயோகம் இல்லாமல்?
அதிகம் என்பதால் தான் இம்முறை படம் எடுத்தேன் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
யாருக்கும் உபயோகம் இல்லாமல்..... மழை பொழிய இம்மேகக் கூட்டம் வேண்டுமே நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கைக்குழந்தைக்குக்கண்ணாடியா? கொடுமை. ஆனால் தெரியாமலே போவதைவிட அது பெட்டர். பள்ளிக்குழந்தைகள் விமானத்தில்... சுவாரஸ்யம்தான். இந்த சாகசப்பயணம் அவர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
பதிலளிநீக்குகைக்குழந்தை கண்ணாடி - ஆமாம் ஸ்ரீராம். பார்க்கவே கஷ்டமாக இருந்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஓ... தமிழகத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் முடிவு செய்து வைத்திருந்தீர்களோ... சரிதான்.வீட்டு வேலையே சரியாய் இருந்திருக்கும்.
பதிலளிநீக்குஆன்மீகச் சுற்றுப்பயணம் இல்லை ஸ்ரீராம். வீட்டு வேலை முக்கியம் என்ப்தால் பயணம் செய்யவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குதில்லி திரும்பியாச்சா!
வாசகம் செம...ரசித்தேன் ஆனால் கூடவே மனதும் கொஞ்சம் கஷ்டப்பட்டது பாவம் இப்படியானவர்கள் என்று.
கீதா
இனிய காலை வணக்கம் கீதாஜி. ஞாயிறு அன்று தில்லி திரும்பினேன்.
நீக்குவாசகம் - இப்படியும் பல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதில் வருத்தம் தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பஞ்சுப்பொதிகளை நிறையப் பார்த்திருந்தாலும் படமெல்லாம் எடுத்தது இல்லை. சின்னக் குழந்தைகளுக்கு முதல் விமானப் பயணமோ? எதிர்பாராப் பயணத்தால் அவங்களுக்கு ஆச்சரியமும், புது அனுபவமுமாக இருந்திருக்கும். குட்டிப் பயல் கண்ணாடி போட்டிருப்பதைப் பற்றிப் படித்தால் வருத்தமாக இருக்கிறது. திருச்சிப் பயணம் நல்லபடியா முடிந்து இருப்பிடம் திரும்பியதுக்கு வாழ்த்துகள். குடும்பத்தோடு செலவிடவும் நேரம் வேண்டுமே!
பதிலளிநீக்குபஞ்சுப் பொதிகள் - பெரும்பாலும் நானும் விமானத்தில் படம் எடுப்பதில்லை. நிறைய என்று தோன்றவே எடுத்தேன்.
நீக்குசின்னப் பிள்ளைகளுக்கு முதல் விமானப் பயணமா என்று தெரியவில்லை கீதாம்மா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விமானத்தில் குழந்தைகள் ஹா ஹா என்றாலும் சேவை செய்யும் பெண்களுக்குக் கொஞ்சம் கடுப்பாகி இருக்கும்.
பதிலளிநீக்குசில ஓட்டுநர்கள் கொஞ்சம் அவசரமாக என்றால் ஒரு சிலர் நம்மை நினைவு படுத்தி சாமான்களை எடுக்கவும் உதவுகிறார்கள்.
நண்பர் குறித்து ஆதியும் சொல்லியிருந்த நினைவு பதிவில்...காஃபி ஃபில்டர்! இந்த நண்பர்தானே ஜி?!!
கீதா
சேவை செய்யும் பெண்களுக்கு நிச்சயம் கஷ்டம் தான் கீதாஜி.
நீக்குஓட்டுனர்கள் - சிலர் இப்படியும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் தானே....
ஆமாம் அதே நண்பருக்குத் தான் காஃபி ஃபில்டர்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எல்லா பயணத்திலும் பதிவு எழுத விஷயங்களை திரட்டுவதிலேயை உங்கள் கவனம் செல்வது தெரிகிறது. கருமமே கண்ணாயினார்!
பதிலளிநீக்கு/எல்லா பயணத்திலும் பதிவு எழுத விஷயங்களை திரட்டுவதிலேயே உங்கள் கவனம்// ஹாஹா... அப்படியெல்லாம் இல்லை ஜோசப் ஐயா. பார்க்கும் விஷயங்கள் மனதில் தங்க, பதிவு எழுதும்போது அப்படியே பயன்படுத்திக் கொள்வது தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
தமிழகப் பயணம் சிறப்பாக முடிந்தது கண்டு மகிழ்ச்சி. எங்க ஊருக்குத்தான் வந்து உங்க ஊருக்கு பஸ் ஏறியிருக்கீங்க.
பதிலளிநீக்குஆமாம் உங்கள் ஊரே தான் நெல்லைத் தமிழன்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பஞ்சுப்பொதிகளாய் மேகங்கள்...மிகவும் ரசனையான புகைப்படம்.
பதிலளிநீக்குபடம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இருவாரங்கள் தமிழகத்தில் இடையே சுற்றுலா விரைந்திருக்கும் நேரம்.
பதிலளிநீக்குஇடையே சுற்றுலா - போக இயலவில்லை மாதேவி. வீட்டில் வேலை என்பதால் சுற்றுலா திட்டம் கைவிடப்பட்டது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எது செய்தாலும் குறை காணும் மனிதர்களும் இருக்கிறார்கள்தானே உங்கள் நிகழ்ச்சி நிரலில் பெங்க ளூர் எப்போது
பதிலளிநீக்குபெங்களூர் பயணம் - அங்கே வருவதாக இருந்தால் நிச்சயம் சொல்வேன் ஜி.எம்.பி. ஐயா. தோழி ஒருவரும் நீண்ட நாட்களாக அழைத்துக் கொண்டிருக்கிறார். பார்க்கலாம் எப்போது வர இயல்கிறது என!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பயணப்படங்கள் அருமை. வீட்டில் அனைவரும் நலம் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநவராத்திரியில் பல பதிவுகளை விட்டுவிட்டேன். மீண்டும் பதிவுகளில் பயணிக்க
,என் பயண ஏற்பாடுகள் நேரத்தைக் கட்டிப் போடுகின்றன.
நலமே வாழ வாழ்த்துகள் வெங்கட்.
வீட்டில் அனைவருமே நலம் வல்லிம்மா... உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபயண அனுபவங்கள் நன்றாக இருந்தது. பஞ்சு பொதிகள் நிறைந்த மேகங்கள் மிக அழகாக இருக்கின்றன. அப்போதைய பதிவில் தாங்கள் தமிழகம் வரப்போவதைப் பற்றி படித்தேன் அதற்குள் திரும்பவும் டெல்லி பயணம் நாட்கள் வேகமாக ஓடி மறைகின்றன. அனைத்து செய்திகளும் சுவாரஸ்யமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நாட்கள் வேகமாக ஓடி மறைகின்றன... ஆமாம் - இப்போது தான் தமிழகம் வந்தது போல் இருந்தது - நாட்கள் வேக வேகமாக ஓடுகின்றன கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விமானத்திலிருந்து எடுத்த படம் மிக அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅக்குழந்தைகளுக்கு முதல் விமானப்பயணம் என்று தெரிகிறது. அந்த உற்சாகமாக இருந்திருக்கும்.
இனி தொடர்ந்து வர இயலும் என்று நினைக்கிறேன்.
துளசிதரன்
/விமானத்திலிருந்து எடுத்த படம் மிக அழகாக இருக்கிறது/ மகிழ்ச்சி துளசிதரன் ஜி!
நீக்கு/இனி தொடர்ந்து வர இயலும் என நினைக்கிறேன்/ ஆஹா நல்லது துளசிதரன் ஜி. தொடர்ந்து எழுதவும் பதிவுகளை வாசிக்கவும் முடிந்தால் மகிழ்ச்சி தானே...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய பதிவுக்கான 'கரு'வைத் தரும் வாய்ப்பாக அமையும். அதுபோலவே இந்த பயணமும் புதிய பதிவைத் தரும் என நம்புகிறேன். தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஒவ்வொரு பயணமும் ஒரு புதிய பதிவுக்கான கருவைத் தரும் வாய்ப்பாக அமையும்.... உண்மை தான் வே. நடனசபாபதி ஐயா. ஆனாலும் பதிவாக எழுதுவது சில சமயங்களில் முடிவதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆட்டோ வாசகம் உண்மையை சொல்கிறது.
பதிலளிநீக்குவிமானத்தில் எடுத்த படங்கள் நன்றாக இருக்கிறது.
விமானத்தில் மாணவர்கள் செய்த குறும்பும் விமான பணிபெண்ணின் செல்ல மிரட்டலும் சிரிப்பை வரவழைத்தது.
சிறு குழந்தையின் பார்வை குறைபாடு கவலை அளித்தது.
//விமானத்தில் மாணவர்கள் செய்த குறும்பும்...// நாமும் அவற்றை எல்லாம் செய்திருப்போம் என்றாலும் சில சமயங்களில் பொறுத்துக் கொள்ள முடியவில்லை இல்லையா கோமதிம்மா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
>>> இதெல்லாம் நல்லாவே இல்ல, பழைய பேருந்து தான் நல்லா இருந்தது – சீட்டுகளுக்கு நடுவே நல்ல இடம் இருந்தது, புதுசு சரியில்லை, காசு நிறைய அடிச்சுட்டாங்க!.. <<<
பதிலளிநீக்குஉண்மை.. உண்மை...
வைகை விரைவு வண்டியில் கூட நவீன வசதியுள்ள பெட்டிகள் என்று இணைத்து அசதியையும் இடைஞ்சலையும் உண்டாக்கியிருக்கின்றார்கள்...
ஒருவேளை பழைய இருக்கைகளில் பயணித்த நமக்கு இப்படித்தான் இருக்குமோ!..
தற்காலக் கூட்டம் இதனைக் கொண்டாடுகின்றது...
எப்படியோ அந்த இருக்கைகளில் பயணிப்போர்களுக்கு நலம் வாழட்டும்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.
நீக்குபஞ்சுப் பொதிகள்...எல்லா பயணத்திலும் இந்த காட்சிகளை மறக்காமல் எடுத்துவிடுவேன் ...
பதிலளிநீக்குஅழகிய காட்சிகள் ..
உங்களின் திருச்சி பயண காட்சிகளை காண காத்திருக்கிறேன் ...எங்கு சென்றாலும் நம்மிடம் என்னும் போது ஒரு மகிழ்ச்சி தானே வருகிறேதே ..
பஞ்சுப் பொதிகள் - நான் பெரும்பாலும் படம் எடுப்பதில்லை அனுப்ரேம் ஜி.
நீக்குநம்மிடம் செல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம் தான். இன்னும் சில விஷயங்கள் எழுத உண்டு என்றாலும் சில நாட்களாக எழுத இயலவில்லை - பிடுங்க வேண்டிய ஆணிகள் அதிகமாகி விட்டது! :) விரைவில் எழுதுவேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.